மத அடிப்படையில் கருநாடக அரசு ஹலால் இறைச்சிக்கு தடை காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 20, 2022

மத அடிப்படையில் கருநாடக அரசு ஹலால் இறைச்சிக்கு தடை காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு

 

பெங்களூரு, டிச.20- கருநாடகாவில் ஹலால் இறைச்சிக்கு தடை விதிக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவை நடப்பு குளிர்காலச் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கொண்டு வர பாஜக அரசு முடிவெடுத்துள்ளது.

கருநாடகாவில் ஹலால் இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவ அமைப் பினர் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக யுகாதியின்போது ‘ஹலால் இறைச்சியை புறக்கணிப்போம்' என்ற முழக்கத்தை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக பாஜக எம்எல்சி ரவிக்குமார், கருநாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டுக்கு அண்மையில் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், ‘‘இந்திய உணவுப் பாது காப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம் சான்றளிக்கும் உணவை தவிர வேறு எந்த அமைப்பும் சான்றளிக்கும் உணவையும் விற் பனை செய்ய அனுமதிக்கக்கூடாது. குறிப்பாக ஒரு குறிப்பிட்ட மதத்தை முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ள‌ஹலால் உணவுகளுக்கு தடைவிதிக்க வேண்டும்'' என குறிப்பிட்டிருந்தார்.

கருநாடக முதலமைச்சர் பசவராஜ்பொம்மை அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோ சனை நடத்தினார். அப்போது ஹலால் இறைச் சிக்கு தடை விதிக்கும் மசோதாவை நடை பெற்றுக் கொண்டிருக்கும் குளிர்கால கூட்டத் தொடரிலே அறிமுகப் படுத்த முடிவெடுக் கப்பட்டுள்ளது.

இதையடுத்து பாஜக எம்எல்சி ரவிக்குமார் முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது இந்த மசோதாவை பாஜக எம்எல்சிரவிக்குமார் தனி நபர் மசோதாவாக கொண்டு வர முடிவெடுக்கப் பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து முதல மைச்சர் பசவராஜ் பொம்மை கூறுகையில், ‘‘சிலர் அதிகாரப்பூர்வமற்ற சான்றிதழை முன் வைத்து இறைச்சி சந்தையை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதனால் பெரும்பான் மையான வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களிடம் இருந்து சந்தையை முழுமையாக மீட்கும்வகையில் சட்டமசோதா கொண்டுவர முடிவெடுத்துள்ளோம். அதனை நடப்புத் தொடரில்  நிறைவேற்ற இருக்கிறோம்'' என்றார்.

 இதுகுறித்து கருநாடக மாநிலகாங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறுகையில், “பாஜக அரசு ஹலால் மசோதா கொண்டு வந்தால் நாங்கள் அதனை எதிர்ப்போம். வாக்காளர்களை மதரீதியாக பிளவுப் படுத்தும் நோக்கில் இந்த மசோதாவை அரசு கொண்டு வருகிறது. அதனை பேரவையில் நிறைவேற்ற விட மாட்டோம்'' என்றார்.


No comments:

Post a Comment