* சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, பகுத்தறிவு இவையே இந்த ஆட்சியின் அடிப்படைக் கொள்கை
* நீட் விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் தேவை!
* பொருளாதாரத்தில் நலிந்த உயர் ஜாதி இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு ஏற்காது கல்வி, சமூகநீதி, பெண்கள் வளர்ச்சி, தொழில் வளம் உள்ளிட்ட துறைகளில் பெரும் அளவு முன்னேற்றம் காணப்படும்
* பெரியார், அம்பேத்கர், காமராசர், அண்ணா, கலைஞர் கோட்பாடுகளைப் பின்பற்றும்
*'திராவிட மாடல்' ஆட்சி இது
சென்னை, ஜன.9, பெரியார், அம்பேத்கர், காமராசர், அண்ணா, கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளைப் பின்பற்றி பார் போற்றும் திராவிட மாடல் ஆட்சியை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது என்றும், சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, பகுத்தறிவு இவ்வாட்சியின் அடிப்படைக் கொள்கைகள் என்றும் கல்வி தொழில் வளர்ச்சி முதலியவற்றில் முன்னணியில் நிற்கும் என்றும், நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்பு தல் தேவை என்றும் E.W.S.அய் ஏற்க மாட்டோம் என்றும் சட்டமன்றத்தில் இன்று (9-1-2023) ஆளுநர் தன் உரையில் குறிப்பிட்டார். உரை வருமாறு:
தமிழ்நாடு முதலிடத்தில்
கடந்த 50 ஆண்டுகளாக, பல்வேறு துறைகளில் தமிழ்நாடு நமது நாட்டில் உள்ள மாநிலங்களில் முன்னோடி மாநிலமாக பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. 1960களில், இந்தியாவின் மற்ற பெரிய மாநிலங்களோடு ஒப்பிடும்போது, சமூக, பொருளாதார, கல்வி, மருத்துவக் குறியீடுகளில் பின்தங்கி இருந்த தமிழ்நாடு, இன்று அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக உயர்ந்து நிற்பதற்கு முழு முதற்காரணம், இக்காலகட்டத்தில் சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, பகுத்தறிவு ஆகிய கொள் கைகளை அடித்தளமாகக் கொண்டு இங்கு கட்டமைக்கப்பட்ட மிகச்சிறந்த ஆட்சிமுறையே.
அனைவரையும் உள்ளடக்கிய இந்த வளர்ச்சிக் கோட் பாட்டின் விளைவாகவே, பிரதமரின் பொருளாதார ஆலோ சனைக் குழு அண்மையில் மாநிலங்களின் வளர்ச்சி நிலை குறித்து ஆய்வு செய்து வெளியிட்டுள்ள சமூக வளர்ச்சிக் குறியீட்டு அறிக்கையில் (Social Progress Index) புள்ளிகளைப் பெற்று, இந்தியாவின் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. சமுதாயத்தில் ஒடுக்கப் பட்டோர், விளிம்பு நிலையில் உள்ளோர், பிற்படுத்தப்பட்டோர் போன்றோருக்கு அதிகாரமளித்து, அவர்களின் நலன் காத்துள்ள இந்த திராவிட வளர்ச்சிப் பாதையில் இந்த அரசு மேலும் உத்வேகத்தோடு தொடர்ந்து பீடுநடை போடும்.
திராவிட மாடல்
இந்த வளர்ச்சிப் பயணத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அயராத உழைப்போடும், அக்கறையோடும் இந்த அரசை வழிநடத்தி வந்துள்ளார்கள். இந்த வகையில், அண்மையில் இந்தியா டுடே' பத்திரிகை நடத்திய ‘மாநிலங்களின் நிலை' என்ற ஆய்வு, சிறப்பாகச் செயல்படும் பெரிய மாநிலங்களில் முதன்மை மாநிலம் தமிழ்நாடு என்று முடிவு செய்துள்ளது. இந்தச் சாதனை, நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆற்றல்மிக்க தலைமைக்கும், சமூகநீதியையும், அனை வரையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்ட திராவிட மாடல்' ஆட்சிக்கும் அளிக்கப்பட்டுள்ள நற்சான்றிதழாகும்.
மாண்டஸ் புயலையும் வடகிழக்குப் பருவ மழையையும் மிகச் சிறப்பாகக் கையாண்ட இந்த அரசிற்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்மொழி அலுவல் மொழி
"வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்" என்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கொள்கை நிலைப்பாட்டுடன் செயல்படும் இந்த அரசு, தமிழ்மொழியின் உரிமையைக் காக்க அனைத்து நடவடிக் கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
அலுவல்மொழிப் பயன்பாடு தொடர்பாக, தமிழ் உள் ளிட்ட மாநில மொழிகளின் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சிகளுக்கு எதிராக ஏற்கெனவே இந்த மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து மாநில மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.
‘முதல்வரின் முகவரி'
பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து நல்லாட்சியை வழங்கிட இந்த அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகின்றது. நடப்பாண்டில், ‘முதல்வரின் முகவரி' திட்டத்தின் கீழ், இதுவரை பெறப்பட்டுள்ள 17.70 இலட்சம் மனுக்களில், 16.28 இலட்சத்திற்கும் மேலான மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது திருப்திகரமான முறையில் தீர்வுகள் காணப்படுவதை உறுதி செய்திட, கண்காணிப்புப் பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் பரப்புரைக் கழகம்
உலகெங்கும் விரவியுள்ள தமிழர்களுக்குத் தமிழ் மொழியைக் கற்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தவும், தமிழ்ப் பண்பாட்டினைப் பேணிக்காக்கவும், ‘தமிழ்ப் பரப்புரைக் கழகம்’ உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், அயலகத் தமிழர்களுக்கும் தாய்த் தமிழ்நாட் டிற்கும் ஒரு பாலமாக இயங்குவதற்கும், அவர்களின் நலனைக் காப்பதற்கும் ‘அயலகத் தமிழர் நலவாரியம்’ அமைக்கப்பட்டுள்ளது. இம்முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஆண்டுதோறும் ஜனவரி 12 ஆம் நாள் 'அயலகத் தமிழர் தினமாக' இந்த அரசால் அறிவிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது.
இலங்கையில்...
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினாலும் உணவுப் பற்றாக்குறையினாலும் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் 174 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிசி, பால் பவுடர், உயிர்காக்கும் மருந்துகள் ஆகியவற்றை இந்த அரசு வழங்கியது.
நம்ம நியாய விலைக் கடை
மக்களுக்கு சீராகவும் சிறப்பாகவும் சேவைகளை வழங்கும் எழில் கூடங்களாக பொது விநியோகக் கடைகளை மாற்றியமைத்திட, இந்த அரசு, நம்ம பகுதி நம்ம நியாய விலைக் கடை' என்ற புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது.
பசுமை காலநிலை நிதியம்
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான பெருந்திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், 1,000 கோடி ரூபாய் மதிப்பில் பசுமை காலநிலை நிதியத்தை' (Green Climate Fund) அரசு அமைத்துள்ளது.
மக்களைத் தேடி மருத்துவம்
அதிகரித்து வரும் தொற்று அல்லாத நோய்களின் பாதிப்பை போக்கும் வகையில், மக்களின் வீட்டிற்கே சென்று கட்டணமின்றி மருத்துவச் சேவைகளை வழங்குவதற்காக மக்களைத் தேடி மருத்துவம்' என்ற முன்னோடித் திட்டத்தை இந்த அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், இதுவரை 1.01 கோடி மக்கள் தங்கள் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுப் பயனடைந்துள்ளனர்.
இன்னுயிர் காப்போம்
தமிழ்நாட்டில் விபத்து நேர்ந்த முதல் 48 மணி நேரத்தில் அவசர மருத்துவச் சேவையை அனைவருக்கும் கட்டணமின்றி வழங்குவதற்காக, நாட்டிலேயே முதன்முறையாக இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 என்ற உன்னதத் திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
மாநிலமெங்கும் உள்ள 679 மருத்துவமனைகளில் இதுவரை 1.35 இலட்சம் விபத்துக்குள்ளானவர்களுக்கு 120.58 கோடி ரூபாய் மதிப்பிலான சிகிச்சைகள் எவ்விதக் கட்டணமுமின்றி வழங்கப்பட்டுள்ளன.
‘நீட்’
நீட் தேர்வு முறையானது, கிராமப்புற ஏழை மாணவர்களை மிகவும் பாதிப்பதாகவும், மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதை கருத்தில் கொண்டு, இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக, நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்களின் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, அந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விலக்கு அளிப்பதற்கான சட்ட முன்வடிவை இந்த சட்டமன்றத்தில் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இச்சட்டம் குறித்து கோரப்பட்ட விளக்கங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த சட்ட முன்வடிவிற்கான ஒப்புதலை விரைந்து வழங்க இந்த அரசு வலியுறுத்துகிறது.
இல்லம் தேடி கல்வி
கோவிட் பெருந்தொற்றினால் ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்ய, நாட்டிற்கே முன்னோடியாக, மாபெரும் கற்றல் திட்டமான ‘இல்லம் தேடிக் கல்வி' திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.
‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டம்'
தரமான உயர்கல்வியை வழங்கி, நாட்டின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான ஆற்றல்மிக்க மனிதவளத்தை உருவாக்க இந்த அரசு முனைந்துள்ளது. அந்த வகையில், பெண்களின் உயர்கல்விக்கு வித்திடவே ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டம்' என்ற முன்னோடித் திட்டத்தை இந்த அரசு தொடங்கியுள்ளது. நடப்புக் கல்வி ஆண்டில், இத்திட்டத்தின் மூலம், அரசுப் பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயின்று, உயர்கல்வி பயிலும் 1,28,780 மாணவிகள் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
புதுமைத் திறன்
உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் புதுமைத் திறன் உச்சிமாநாடு, 'UMAGINE' முதன்முறையாக சென்னையில் வரும் மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், கல்வியாளர்கள், தொழில்நுட்பத் துறை முன்னோடிகள் ஆகியோரை ஒரே தளத்தில் ஒருங்கிணைத்து தொழில்நுட்பத் துறைக்கு புதிய உத்வேகத்தை இம்மாநாடு ஏற்படுத்தும்.
புத்தொழில்
நம் நாட்டிலேயே முதன்முறையாக பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினரின் புத்தொழில்களுக்கு உதவ, 30 கோடி ரூபாய் சிறப்பு நிதி அரசால் ஒப்பளிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைவரையும் உள்ளடக்கிய புத்தொழில் சூழல் மாநிலத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெரியார் நினைவு சமத்துவபுரம்
மக்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் சகோதர உணர்வுடனும் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரம்' திட்டத்தை இந்த அரசு மீட்டெடுத்து வருகின்றது. முதற்கட்டமாக, 149 சமத்துவபுரங்களில் 190 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொண்ட புதுப்பிக்கும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன.
கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டி, மாமல்லபுரம் அருகே புதிய துணை நகரம் ஒன்று அமைக்கப்படும். இச்சாலையும் நான்குவழிச் சாலையாகத் தரம் உயர்த்தப்படுவதால், சென்னை பெருநகரப் பகுதியின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அச்சாணியாக இத்திட்டம் விளங்கும்.
மகளிர் அனைவருக்கும் கட்டணமில்லாப் பயணம்
சாதாரண நகரப் பேருந்துகளில் ‘மகளிர் அனைவருக்கும் கட்டணமில்லாப் பயணம்’ என்ற புரட்சிகரமான திட்டத்தின் மூலம், மாநிலத்தில் பெண்களிடையே பொருளாதார மேம்பாடு மட்டுமன்றி சமூக எழுச்சியும் ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் 36 இலட்சம் பயணங்கள் செய்து மகளிர் பயனடைந்து வரும் இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பெண்ணும் சராசரியாக மாதத்திற்கு 888 ரூபாய் அளவிற்கு சேமிக்கின்றனர் என்று மாநில திட்டக்குழுவின் ஆய்வு தெரிவித்துள்ளது.
இடஒதுக்கீடு
தமிழ்நாட்டில் சமூகத்தில் சமூகநீதியை நிலைநாட்டி, பின்தங்கியுள்ள மக்களின் முன்னேற்றத்தினை உறுதி செய்யும் வகையில், சிறப்பான இட ஒதுக்கீட்டு முறையை தமிழ்நாடு அரசு பின்பற்றி வருகிறது. பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது சமூகநீதிக் கொள்கைக்கு எதிராக உள்ளதால், தற்போது நமது மாநிலத்தில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையே தொடரும் என்ற கொள்கைக் கோட்பாட்டில் இந்த அரசு உறுதியாக உள்ளது.
சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி, பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகின்றது என ஆளுநர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment