பொங்கல் பரிசு தொகுப்புக்கு `டோக்கன்' வழங்கல் தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 3, 2023

பொங்கல் பரிசு தொகுப்புக்கு `டோக்கன்' வழங்கல் தொடக்கம்

சென்னை,ஜன.3- பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட ரூ.1,000 ரொக்கம், தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்குவ தற்கான ‘டோக்கன்’ இன்று (ஜன. 3) முதல் நியாயவிலைக் கடை ஊழியரால் வீடு வீடாகச் சென்று விநியோகிக்கப்பட உள்ளது.

இந்த ஆண்டு பொங்கல் விழாவை வரும் 15ஆம் தேதி கொண்டாடப் படுகிறது. இதையொட்டி, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிப்போருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.1,000 ரொக்கம், தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதற்காக ரூ.2,430 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. மொத்தம் 2,19,33,342 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்கான வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட் டுள்ளன. சென்னையில் உணவுப் பொருள் வழங்கல் இணை ஆணை யர்களும், அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர்களும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகப் பணிகளை கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரும்பு கொள்முதலைப் பொறுத்த வரை, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு, அரசு நிர்ணயித்த விலையில் கரும்பு கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட உள்ள பொருட்களுக்கான கொள்முதல் பணிகளை சில தினங்க ளுக்கு முன் கூட்டுறவுத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

பொங்கலுக்கான பரிசுத் தொகுப்பை வாங்க ஒரே நேரத்தில் குடும்ப அட்டை தாரர்கள் நியாயவிலைக் கடைகளில் குவிவதைத் தடுக்க ஜன. 3ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கப்படும் என்றும், ஜன. 9ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்ததும், டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரம் வாரியாகப் பொருட்களை வழங்க வேண்டும் என்றும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

குறிப்பாக, தெருவாரியாக உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை அடிப்படையில், தினமும் 200 முதல் 250 குடும்ப அட்டைகளுக்கு பொருள் கள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப் பட்டபடி, குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி இன்று தொடங்குகிறது. 

நியாயவிலைக் கடை பணியாளர்கள், இதற்காக பிரத்யேக மாகத் தயாரிக்கப் பட்டுள்ள டோக்கன் களை வீடு வீடாகச் சென்று வழங்க உள்ளனர்.

No comments:

Post a Comment