சென்னை, ஜன. 7- பொங்கல் திருநாளாம் ஜனவரி 15ஆம் தேதி நடத்தப்படவுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வை வேறு தேதியில் நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்
சு.வெங்கடேசன் போர்க்குரல் உயர்த்தியுள்ளார். பாரத ஸ்டேட் வங்கி உடனடியாக தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என அதன் தலைமை அலுவலகத்தை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஜனவரி 14, 15, 16, ஆகிய 3 தேதிகளிலும் தமிழர் திருநாளாம பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இத்தகைய சூழலில் பாரத ஸ்டேட் வங்கி தேர்வு நடத்துவது என்பது அந்த தேர்வில் தமிழர்கள் அதிகளவு கலந்துகொள்ள முடியாத சூழலை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழர்கள் ரயில்வே தேர்வுகளில் புறக்கணிக்கப்பட்டு வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதாக தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு இளைஞர்கள் ஏராளமானோர் வங்கிப் பணிகளில் சேர ஆர்வம் காட்டி வரும் நிலையில், பொங்கல் அன்று நடத்தப்படும் தேர்வானது அவர்களுக்கு இக்கட்டான சூழலை உருவாக்கியுள்ளது. இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியின் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி தேர்வு தேதியை மாற்ற நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
போகி என்ற பெயரால் பொருட்களை எரிக்காதீர்!
சென்னை மாநகராட்சி வேண்டுகோள்
சென்னை, ஜன. 7- போகி நாள் தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: போகி நாளின் போது, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஜன.13, 14 ஆகிய நாள்களில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள தேவையற்ற பொருட்களை எரிப்பதைத் தவிர்த் திடும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், மாநகராட்சியின் 15 மண்டலங் களில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மக்கள் தேவையில்லாத பொருட்களை தனியாக மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் நாளை (8.1.2023) முதல் ஒப்படைக்கலாம். இது தொடர்பாக பேட்டரியால் இயங்கும் 3 சக்கர வாகனங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
எழும்பூர் அருங்காட்சியகம் புதுப்பிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு
சென்னை,ஜன.7- சென்னை எழும்பூரிலுள்ள அரசு அருங்காட்சியகம் புதுப்பிக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி எழும்பூர் அருங்காட்சியகம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு அதில் அலங்கார விளக்குகள், இருக்கைகள் அமைக்கப்பட்டு புதுப்பிக்கப்படவுள்ளது. மேலும் பாதுகாப்பு உபகரணங்களும் அமைக்கப்படுகின்றன. இங்கு கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. எழும்பூரில் அருங்காட்சியகத்தை புதுப்பிப்பதற்காக தமிழ்நாடு அரசு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி அருங்காட்சியகத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்பதற்காக விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில் ரூ.62 லட்சத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டு சீரமைப்பு பணி கள் மேற்கொள்ளப்பட்டதாக அருங் காட்சியக இயக்குநர் ஒரு கடிதத்தில் தெரிவித்துள்ளார். புதுப்பிக்கும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. இந்த பணிகள் முடிந்தவுடன் அருங்காட்சியகம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும்.
இளைஞர்களிடையே இதய நோய் தடுப்பு விழிப்புணர்வு குறும்படத்திற்கு விருது
சென்னை, ஜன. 7- இளம் இதயங்களைப் பாதுகாக்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள பிரசாந்த் பன்னோக்கு மருத்துவமனை லயோலா கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் துறையுடன் இணைந்து ‘இதயத் திரைப்பட விழாவை’ நடத்தியது. இதில் பங்கேற்ற சிறந்த குறும்படங்களுக்கான விருதை நேற்று (6.1.2023) பிரசாந்த் மருத்துவமனை அறிவித்தது.
இந்த விருதை நேற்று (6.1.2023) லயோலா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் 3 மாணவர்களுக்கு புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் வழங்கினார். முதல் 3 இடங்களைப் பிடித்த குறும்படங்களுக்கு விருதுடன் முறையே 1 லட்சரூபாய், 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. ‘சேவ் யங் ஹார்ட்ஸ்’ பிரச்சாரம் குறித்த இதழையும் இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.
‘டோபமைன் டெவில்ஸ்’ என்னும் குறும்படம் முதல் பரிசை தட்டிச் சென்றது. இளைஞர்களிடையே இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதில் இதைத் தயாரித்தவர்களின் அற்புதமான மற்றும் ஆக்கப்பூர்வமான முயற்சிக்காக இந்த விருது வழங்கப்பட்டது. இதே போன்று ‘விழித்துக்கொள்’ மற்றும் ‘லைப் ஸ்டைல்’ ஆகிய குறும்படங்கள் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் பரிசைப் பெற்றன.
இது குறித்து பிரசாந்த் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரசாந்த்கிருஷ்ணா கூறுகையில்:- "சமீபகாலமாக திடீர் மாரடைப்பால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. இளைஞர்கள் இடையே இதய பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சமூக பொறுப்புள்ள மருத்துவமனை என்பதன் அடிப்படையில் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளை மாற்றுவதன் முக்கியத்துவத்தை அவர்களிடம் கொண்டு செல்லும் விதமாக இது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை நாங்கள் கடந்த ஆண்டு துவக்கி அதை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment