*கலி. பூங்குன்றன்
இனி ஒவ்வோர் ஆண்டும் அன்னை நாகம்மையார் நினைவு நாளான மே 11ஆம் தேதி மகளிர் உரிமைப் போராட்ட பேரிகை நாளாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அந்த நாளில், அந்த அரும்பணியைத் தாமே தொடங்கி வைத்து உரையாற்றினார்.
பகுத்தறிவுச் சிந்தனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்பிய தந்தை பெரியார் அவர்கள் அது தம் குடும்பத்திலிருந்தே தொடங்கப்பட வேண்டும் என்று எண்ணினார். அத்தகைய அறிவு நாணயம் பெரியாரிடம் எப்பொழுதுமே உண்டு.
நாகம்மையாருக்கு வயது 13, பெரியாருக்கு வயது 19 - திருமணம் நடந்தது; நாகம்மையாரோ ஆச்சாரமாக வளர்ந்தவர். அவர் வாழ வந்த குடும்பமும் (ஈ.வெ.ரா.வைத்தவிர) ஆச்சார அனுஷ்டானத்தில் ஆகா யத்தைத் தொடக்கூடியது.
ஆனாலும் விரதநாளில் மாமிச உணவே வேண்டும் என்பதில் அடம் பிடிக்க ஆரம்பித்து, ஒவ்வொன்றிலும் அழகாகக் காயை நகர்த்தினார்.
கோயிலுக்குச் சென்ற நாகம்மையாரை, சிலரை ஏவி விட்டுக் கலாட்டா செய்வதில் தொடங்கி, நாகம்மை யாரைப் பிடித்து ஆட்டிய ஒவ்வொரு மூடநம்பிக்கைப் 'பேயையும்' விரட்டியடித்தார்.
எந்த அளவுக்கு அவரை வார்த்தெடுத்தார் என்றால், தான் தொடங்கிய தீண்டாமை ஒழிப்புப் போராட்டமான வைக்கம் போராட்டத்தில், தான் சிறைக்குச் சென்ற நிலையில், இந்தியாவையே உலுக்கி எடுத்த தீண்டாமை ஒழிப்புப் போரைத் தலைமை தாங்கி நடத்திச் செல்லும் அளவுக்கு நாகம்மையாரை மேனிலைக்குக் கொண்டு வருவதில் பின்புலமாக பலமாக இருந்து வந்திருக்கிறார் பெரியார்.
பெரியார் சிறையில் இருந்தபோது, நாகம்மையார், பெண்கள் படை ஒன்றைத் திரட்டி மறியல் செய்தார். ஒரு நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டும்.
நாகம்மையார், எஸ்.ஆர். கண்ணம்மாள் (பெரியாரின் தங்கை) திருமதி நாயுடு, திருமதி கோவிந்தன் சாணார் மறியலில் ஈடுபட்டபோது, போலீஸ் அதிகாரி சர்மா 'நீங்கள் என்ன ஜாதி?' என்று கேட்க, 'எங்களில் யார் அந்த ஜாதி என்று அறிந்து, தாழ்த்தப்பட்டவர்களை மட்டும் அனுமதிக்க மறுக்கும் தந்திரமா?' என்று கொள்கை ரீதியான எதிர்க் கேள்வியை வைத்தார் நாகம்மையார் (22.5.1924).
கொட்டும் மழையில் அந்த மறியல்!
இவ்வளவுக்கும் நாகம்மையாருக்குப் பள்ளிப் படிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. திருமணத்திற்குப் பின் கையெழுத்து மட்டும் போடக் கற்றுக் கொடுக்கப் பட்டார். அந்தப் பெண்ணை இந்தளவுக்குத் துணிவும், கொள்கைத் திடமும் கொண்டவராக உருவாக்கியதை எண்ணிப் பாருங்கள்.
வைக்கம் போராட்டத்தில் நாகம்மையார் வகித்த ப(£)ங்கினை தமிழ்த் தென்றல் திரு.வி.க. பின்வருமாறு எழுதுகிறார்.
"இந்தியாவிலேயே முதன் முதலில் அரசியல் போராட்டக் களத்தில் குதித்துச் சிறை வாசம் ஏற்ற முதல் பெண்மணி நாகம்மையாரே ஆவார்.
கஸ்தூரிபா காந்திக்கும் இப்பெரும் புகழ் கிட்டியது கிடையாது. புறநானூற்று வீரத் தாய்மார்களுக்கு ஏற்றிச் சிறப்பிக்கப்பெறும் அத்தனை உயர் பண்புகளும் அம்மையாரிடம் நிறைந்து காணப்பட்டன. கற்ற கல்வி சொற்பமானாலும், கணவர் வழி நின்று கற்றுக் கொண்டது ஏராளம். தொடக்கத்தில் எல்லாப் பெண்களையும் போல் பண்டைய வழிமுறைகளையே பின்பற்றி வந்த நாகம்மையார், அவையெல்லாம் தம் கணவருக்குப் பிடிக்காதவை என்பதைப் படிப்படியே உணர்ந்து தாமே நிறுத்திக் கொண்டார். சமுதாயக் கொள்கையில் மட்டுமின்றி, அரசியல் கொள்கைகளிலும் கணவரையே அடியொற்றி நடைபோட்டார்" என்று திரு.வி.க. எழுதுகிறார் என்றால் அன்னையாரின் அரும்பெருமைதான் என்னே!
தந்தை பெரியாருடன் காங்கிரஸ் கட்சி நடத்தும் மாநாடுகளுக்கெல்லாம் சென்றுள்ளார். தமிழ்நாட்டிலி ருந்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் பெண்மணியும் நாகம்மையாரே!
காங்கிரசிலிருந்து விலகி தந்தை பெரியார் சுயமரி யாதை இயக்கத்தைத் தோற்றுவித்தபோது அந்த இயக்கத்தின் தொண்டர்களுக்கெல்லாம் அரும் பெரும் அன்னையாராக ஒளிர்ந்தார் (இவ்வளவுக்கும் அவருக் கென்று ஒரு குழந்தை கிடையாது - ஒரு பெண் குழந்தை பிறந்து குறுகிய காலத்திலேயே மரணித்து விட்டது.)
சுயமரியாதைக் குடும்பத்திற்கு அவர் எத்தகைய வராக இருந்தார்? தந்தை பெரியார் அவர்களுடன் அய்ரோப்பிய சுற்றுப் பயணத்தில் பங்கு கொண்டவரும், பல கால கட்டங்களில் இயக்கத் தொடர்போடு தந்தை பெரியாரை ஒட்டி வாழ்ந்து வந்தவருமான எஸ். இராமநாதன் எழுத்தால் அதனைக் காண முடியும்.
"நாகம்மையார் தமது கணவரின் எல்லா முயற்சி களிலும் மிகுந்த உற்சாகத்துடன் ஒத்துழைத்ததே சுய மரியாதை இயக்கத்தின் வெற்றிக்குக் காரணமாகும். மூடக் கொள்கைகளினின்று மக்களை விடுவிக்கும் பொருட்டு அவர், தமிழ்நாடு, கேரளம், மலாய் ஆகிய இடங்களில் உள்ள எல்லா ஜில்லாக்களிலும் சுற்றுப் பயணம் செய்திருக்கிறார். அவர் ஒரு பிரசங்கியல்ல; ஆனால் அவர் பிரசன்னமாயிருக்கும் ஒவ்வொரு கூட்டத்திலும் பெண்கள் தீவிரமாகக் கலந்து கொள் ளுவார்கள். அவர் எல்லோரையும் அன்புடன் உப சரிப்பார். அவருக்கு மக்கள் பேறு இல்லை, ஆனால் பொது ஜன நன்மைக்காக வேலை செய்த எல்லா இளைஞர்களையும், பெண்களையும் தம் சொந்தப் பிள்ளைகளாகப் பாவித்து வந்தார். அவர்தம் சொந்த கொள்கைகளுக்காக வேலை செய்தவர்களுக்கெல்லாம் ஒரு தாயாக இருந்தார். அவர்களுடைய சவுக்கியங்களை அவர் தாமே நேராகக் கவனித்து வந்தார். சமூகப் போராட்டத்தில் வீட்டை இழந்தவர்களுக்கு அவர் அபயம் அளித்தார்."
எஸ். இராமநாதன் அவர்களின் உண்மைப் படப் பிடிப்பு இது.
"நாகம்மையார் மட்டும் இல்லாமல் இருந்தால் அப் போது இயக்கத்துக்கு ஆளே கிடைக்காது" என்கிறார் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்.
சுயமரியாதை இயக்க வீரர்களுக்கு அய்யாவும், அன்னையாரும் அழைப்பாளர்களாகக் கையொப்ப மிட்டு அழைப்பிதழ் அடித்து ஈரோட்டில் தங்கள் சொந்த மாளிகையிலேயே திருமணத்தை நடத்தி வைத்தனர் என்றால், எஸ். இராமநாதனின் படப்பிடிப்பு எந்த அளவு துல்லியமானது என்பது துலங்கும்.
குத்தூசி குருசாமி - குஞ்சிதம் திருமணம், தென் மாப்பட்டு சி.முருகன் - பாலக்காடு செல்லம்மாள் திருமணம் அப்படி நடைபெற்றவைதான்!
நீலாவதி - இராமசுப்பிரமணியம் திருமணம் அவ் வாறே நடைபெற்றது. திருமணம் நடந்த இடம் திருச்சி தென்னூரில்.
சிவகாமி - சாமி. சிதம்பரனார் திருமணம், ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாநில மாநாட்டுப் பந்தலில் (பெரியார் தோட்டத்தில்) அய்யா அம்மா அழைப்பில் 5.5.1930 மாலை நடைபெற்றது.
திருமண விழாவுக்குத் தலைவர் அன்னை நாகம்மையார்-வரவேற்புரை ஆற்றியவர் ஈ.வெ.ரா. (மணமகள் சிவகாமி ஏற்கெனவே கணவரை இழந்தவர். சிவகாமியின் தந்தையார் ஒன்றைக் கூறுகிறார்; 'என். மகளின் மறுமணத்தைப் பற்றி என்னைச் சந்திக்கும் பொழுதெல்லாம் பெரியார் கேட்டுக் கொண்டே இருப்பார். தந்தையாகிய எனக்கு இருந்த கவலையை விட அவரிடம் அதிகமாக இருந்ததை அறிந்து நெகிழ்ந்திருக்கிறேன்' என்று குறிப்பிடுகிறார்).
தோழர் நாகம்மையார் இந்தத் திருமணத்தை நடத்தி வைப்பார் என்று பெரியார் சொன்னதும் தலைமை வகித்த நாகம்மையார் அவர்கள் தோழர் ஈ.வெ. ராமசாமி என்று விளித்ததும் சமூக வரலாற்றில் புரட்சியின் ஒளிவீச்சாகும்.
தந்தை பெரியார் அவர்கள் ருசியா சென்று வந்த பிறகுதான் தோழர் என்று அழைக்கச் சொன்னார் என்பது உண்மைதான் என்றாலும், அதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தப் புரட்சிக்கு அய்யாவும், அம்மாவும் அடி எடுத்துக் கொடுத்து விட்டார்கள்.
மணமகன் சாமி.சிதம்பரனார் திருவாரூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர். திருவாரூரில் புதுமணத் தம்பதியர்க்குத் தடபுடலான வரவேற்பு - ஊர்வலம். அந்நிகழ்ச்சியிலும் பெரியாரும் - நாகம்மையாரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து பல நாள்கள் திருவாரூரிலேயே அன்னை நாகம்மையார் தங்கி இருந்து புதுப்பெண்ணுக்குக் குடும்ப வழிமுறைகள், நிருவாகம்பற்றி கூட இருந்தே கற்பித்தார் என்றால் இந்த வைபவத்தை எந்த வரிகளால் வருணிப்பது!
தந்தை பெரியார் 1929இல் மலேசிய சிங்கப்பூருக்குப் பயணமானார். அந்நாட்டு மக்களின் அன்பு மழையில் திளைத்தனர். ஒரு மாத காலச் சுற்றுப்பயணம்! பிரியா விடை பெற்றபோது, தாங்கள் விரும்பும் மலேயா நாட்டு பொருள் என்ன என்று விரும்பிக் கேட்டபோது அன்னை நாகம்மையார் அளித்த பதிலில், மிகுந்த பெருந்தன்மையும், கொள்கை மிளிர்ந்த பெரும் பண்பும் என்னே! என்னே!!
"நீங்களெல்லாம் இங்கே சுயமரியாதை இயக்கத்தைப் பாடுபட்டுப் பரப்பியிருக்கிறீர்களே, அதுவே எனக்கு அருமையான பொருள்" என்றாரே பார்க்கலாம்.
இன்னும் எத்தனை எத்தனையோ அணிகலன்கள் அன்னையாரின் அரை நூற்றாண்டுக்கும் குறைவான அவர்தம் சரிதத்தின் கிரீடத்தில் உண்டு.
மதுவிலக்குப் போராட்டத்தை காந்தியார் அறிவித்த போது இந்தியாவே ஈரோட்டைத் திரும்பிப் பார்த்தது. ஆம். அங்குதான் தந்தை பெரியார் தலைமையில் கள்ளுக்கடை மறியல் போராட்டம் களை கட்டியது. தனக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.
பெரியார் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில், அந்தப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தியவர்கள் நாகம்மையாரும், கண்ணம்மாவும் ஆவர். வெகு மக்கள் போராட்டமாகக் கனன்று எழுந்தது வெள்ளைக்கார அரசே அதிர்ந்தது.
அப்பொழுது மும்பையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கள்ளுக்கடை மறியலைத் தொடர்வதா, முறிப்பதா என்ற பிரச்சினை எழுந்த போது 'அது என் கையில் இல்லை. ஈரோட்டில் இரு பெண்களின் கைகளில் இருக்கிறது' என்றாரே காந்தியார். அந்த இரு பெண்களும் தந்தை பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும், தங்கை கண்ணம்மாளும்தான்.
உலகத்திலேயே ஒரு வீடு, இயக்கத் தோழர்களின் வீடாகவும், ஒரு மாபெரும் சமுதாயத்தின் தலைமைக் காப்பு அரணாகவும் இருந்தது என்று சொல்லிக் கொள்ளும் பெருமை இருந்ததும், அந்த வீட்டின் அணையா நந்தா விளக்காக ஒரு தாய் ஒளி வீசியதும் ஈ.வெ.ரா. என்ற பெயர் தாங்கிய பெரியாரின் ஈரோட்டு மாளிகையாக மட்டுமேதான் இருக்க முடியும்.
பொது வாழ்வுதான் தந்தை பெரியாரின் சொந்த வாழ்வு - ஒரு கால கட்டத்தில் அதற்குக் கடையாணிகளாக இருந்தவர்கள் நாகம்மையாரும், மணியம்மையாரும்!
ஈரோடு மட்டுமல்ல திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு தந்தை பெரியார் இயங்கிய நேரத்தில்கூட அதே வகை பெருமை கொண்டதாக ஒளி வீசியது - திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையே! அங்கு வீசிய மங்கா ஒளி விளக்குக்குப் பெயர்தான் அன்னை மணியம்மையார்.
ஒரு தலைவர் இன்று உலகத்தின் முகவரியாக ஜொலிக்கிறார். அவர் வாழ்ந்த சகாப்தத்தில் வாழ்ந்தோம். அவர் காட்டிய ஒளியில் வீறுநடை போடுகிறோம் - ஆம். நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளவேண்டும் - இது தற்பெருமையல்ல - தகத்தகாய தத்துவத்தின் செறிவு.
வாழ்க பெரியார்!
வாழ்க அன்னை நாகம்மையார்!!
(11.5.2020இல் காணொலியில் கழகத் தலைவர் ஆற்றிய உரையின் விரிவாக்கமே இது)
"நாகம்மாள் மறைவு - எல்லாம் நன்மைக்கே!"
"நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்று என்று சொல்லட்டுமா?
ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா?
இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா?
உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா?
ஊக்கம் போய் விட்டது என்று சொல்லட்டுமா?
எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவும் விளங்கவில்லையே"
***
"நாகம்மாள் மறைவால் எனக்கு அதிகம் சுதந்திரம் ஏற்பட்டதுடன் "குடும்பத் தொல்லை" ஒழிந்தது என்கின்ற ஒரு உயர் பதவியையும் அடைய இடமேற்பட்டது"
***
"நமக்கென்று ஒரு தனி வீடோ அல்லது குறிப் பிட்ட இடத்தில் நிரந்தர வாசமோ கூடாது வென்னும் கருத்து இருந்ததுண்டு. ஆனால் அதற்கு வேறு எவ்விதத் தடையும் இருந்திருக்கவில்லை. என்றாலும், நாகம்மாள் பெரிய தடையாய் இருந்தாள்.
இப்பொழுது அந்தத் தடை இல்லாது போனது ஒரு பெரிய மகிழ்ச்சிக்குரிய காரியமாகும். ஆதலால் நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையைத் தருவதாகுக.
- ஈ.வெ.ரா.
('குடிஅரசு' - 14.5.1933)
நாகம்மையார் மறைந்த நிலையில் தந்தை பெரியார் எழுதிய இந்த இரங்கல் - உலக இரங்கல் இலக்கிய வரலாற்றில் தனித் தன்மையுடன் பட்டொளி வீசிப் பறக்க கூடியதே
கழகத் தலைவர் இந்த இரங்கல் இலக்கியத்தில் சில பகுதிகளை எடுத்துக்காட்டி காணொலியில் பங்கேற்றவர்களைக் கண் கலங்க வைத்தார்.
தந்தை பெரியார் இந்த இரங்கலில் குறிப்பிட்ட படியே நாகம்மையார் அடக்கம் செய்யப்பட்ட அன்றே திருப்பத்தூர் சென்று ஒரு கிறித்துவத் திருமணத்தைச் செய்து வைத்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
இப்படியும் ஒரு மனிதரா!
இப்படியும் ஓர் இயக்கமா!
அதிசயம்! அதிசயம்!!
ஆனாலும் உண்மை - உண்மையே!
No comments:
Post a Comment