நமது கல்விக்கான போராட்டம் என்பது தடை தாண்டும் ஓட்டப் பந்தயமே!
திராவிட மாணவர் கழகத்தின் கலந்துரையாடலில் காணொலிமூலம் தமிழர் தலைவர் உரை
சென்னை, மே 13 1944 ஆம் ஆண்டிற்கு முன்பே தொடங்கப்பட்டது திராவிட மாணவர் கழகம்; நமது கல்விக்கான போராட்டம் என்பது தடை தாண்டும் ஓட்டப் பந்தயமே என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலிமூலம் திராவிடர் கழக மாணவரணியினரின் கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றும்பொழுது கூறினார்.
திராவிடர் கழக மாணவரணியினர் கலந்துரையாடல்
திராவிடர் கழக மாணவரணியினரின் கலந்து ரையாடல், காணொலிமூலம் கடந்த 3.5.2020 அன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில், காணொலி யின்மூலம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
நன்றி, மகிழ்ச்சி!
அவரது உரை வருமாறு:
அனைவருக்கும் வணக்கம். உங்களையெல்லாம் (திராவிட மாணவர்கழகத்தினரை) இக்கலந்துரை யாடல் மூலம் சந்திப்பதிலே மிகுந்த மகிழ்ச்சிய டைகிறேன். இதற்குக் காரணமான நம்முடைய கழகப் பொதுச்செயலாளர் அன்புராஜ், பிரின்சு என்னாரெசு பெரியார், நம்முடைய கழக அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன் அவர்கள், மாணவரணி அமைப்பாளர், துணைச் செயலாளர்கள், மாணவர் கழகத்தின் முக்கிய பொறுப்பாளர்கள், ஆகிய எல்லோருக்கும் என்னுடைய அன்பான நன்றியை, மகிழ்ச்சியை தெரி வித்துக் கொள்கிறேன்.
கல்விக் கண்ணை
எல்லோருக்கும் கொடுப்பதுதான்
மாணவர்களுக்கு நிறைய பணிகள் இருக்கின்றன. இப்போதுகூட இங்கே தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கின்றன. நம்முடைய அறிவாசான் தந்தை பெரியார் அவர்களும், ஒரு நூறு ஆண்டுகளைக் கடந்து இருக்கின்ற திராவிடர் இயக்கமும் எப்படிப்பட்ட பணிகளை செய்திருக்கிறது? கல்வித் துறையில் மாபெரும் புரட்சி. திராவிட இயக்கத்தினுடைய மிகப்பெரிய முக்கிய குறிக்கோளே, அனைவருக்கும் அனைத்தும் என்பதில், மிக முக்கியமான முன்னுரிமை கல்விக் கண்ணை எல்லோருக்கும் கொடுப்பதுதான்.
காரணம் என்னவென்றால், உலகத்தில் எங்கும் இல்லாத ஒரு கொடுமையான வருணாசிரம தர்மம், ஜாதி, தீண்டாமை, பிறவி பேதம், ஆண் உயர்ந்தவன் - பெண் தாழ்ந்தவள் என்கிற பிறவி பேதம் - பிறவி அடிப்படையில் இப்படிப்பட்ட பேதத்தை உண்டாக் கியதனால், ஆரியத் தத்துவம், பண்பாட்டுப் படை யெடுப்பில் உள்ளே நுழைந்ததிலிருந்து, நம்முடைய கல்விக் கண்ணைக் குத்துவதிலேதான் அவர்கள் கவனமாக இருந்தார்கள்.
இன்றைக்கும் புதிய புதிய வடிவிலே மனுதர்மம் வந்து கொண்டிருக்கிறது!
கல்வியை நமக்குக் கொடுக்கக்கூடாது என்றார்கள்; கல்வியை அவர்களுடைய ஏகபோக உரிமையாக ஆக்கிக் கொண்டார்கள். இன்றைக்கும் மனுதர்மத்தை எதிர்த்துத்தான் நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம். இன்றைக்கும் புதிய புதிய வடிவிலே மனுதர்மம் வந்து கொண்டிருக்கிறது. ஆட்சியாக இருந்தாலும், அங்கே இருக்கின்ற காட்சிகளாக இருந்தாலும், மனுதர்மத் தினுடைய மறுவடிவமாகத்தான் பல முயற்சிகள், இன்றைக்கும் புதிய வடிவங்கள் பெறுகின்றன.
எனவே, அந்தப் போரில், பல களங்களில் இதற்கு முன்பு, திராவிட இயக்கத் தலைவர்கள் டாக்டர் டி.எம்.நாயர், நடேசனார், சர்.பிட்டி தியாகராயர் இன்னும் எத்தனையோ தோழர்கள், நம்முடைய இயக்கத்தில் அரும்பாடுபட்ட திராவிட இயக்கத் தோழர்கள்.
அதற்கு அடுத்தகட்டமாக அறிவாசன் தந்தை பெரியார் அவர்களுடைய தலைமையில், பேரறிஞர் அண்ணா, முத்தையா முதலியார், பன்னீர்செல்வம் போன்றவர்கள், அதுபோல, கலைஞர் அவர்கள், திராவிடர் இயக்கத்தில் நம்மோடு பணியாற்றக் கூடிய பல்வேறு தோழர்கள், இயக்கத் தோழர்கள், போராட்ட வீரர்கள் இவர்கள் அத்துணை பேரும் முயற்சி எடுத்தார்கள்.
1944 ஆம் ஆண்டிற்கு முன்பே தொடங்கப்பட்டது திராவிட மாணவர் கழகம்
திராவிட மாணவர் கழகம் என்பது, திராவிடர் கழகம் தொடங்குவதற்கு முன்பே அதாவது 1944 ஆம் ஆண்டிற்கு முன்பே தொடங்கப்பட்ட ஒன்றாகும். அன்றைக்குக் கல்வி மறுக்கப்பட்டது மட்டுமல்லாமல், ஜாதி அடிப்படையில், குடந்தை அரசினர் கல்லூரியில் தண்ணீர்ப் பானை வைப்பதில், நமக்குத் தனி தண்ணீர்ப் பானை, பார்ப்பனர்களுக்குத் தனி தண்ணீர்ப் பானை என்றிருந்ததை போட்டு உடைத்து - அதிலிருந்து முளைத்ததுதான் திராவிட மாணவர் கழகம்.
திராவிடர் இயக்கம் கல்விக்காக என்னென்ன செய்தது என்பதுகுறித்த ஒரு புத்தகத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்!
திராவிட மாணவர் கழகத்திற்கு இப்படிப்பட்ட ஒரு பெரிய வரலாறு உண்டு. அதேநேரத்தில், திராவிடர் இயக்கம் கல்விக்காக என்னென்ன செய்தது என்று பார்க்கும்பொழுது, அதுபற்றிய ஒரு விளக்கமான புத்தகத்தை நான் தயாரித்துக் கொண்டிருக்கின்றேன்.
நம்முடைய திராவிட மாணவர்கள் கல்வித் துறையில் சந்தித்த தடை ஓட்டப் பந்தயங்கள். அந்த ஓட்டப் பந்தயங்களையெல்லாம் எப்படித் தாண்டி, தந்தை பெரியார் அவர்களுடைய முயற்சியினால் மிகப்பெரிய அளவிற்கு நாம் வென்றோம்; திராவிட இயக்கத்தினுடைய முயற்சியினாலே, திராவிட ஆட்சிகளாலே வென்றோம். அதனால் இன்றைக்கு மிகப்பெரிய அளவிற்கு வளர்ச்சி வந்திருக்கிறது. இதனைத் தலைகீழாக ஆக்குவதற்கு இப்பொழுது கடும் முயற்சிகள் நடைபெறுகின்றன என்பதையெல்லாம் விளக்கி, நம்முடைய மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இப்பொழுது இருக்கின்ற கரோனா சூழல் மாறி, ஒரு நல்ல அளவிற்கு சூழல்கள் வரும் என்று நமக்கு நம்பிக்கை உண்டு. இன்னும் சில மாதங்கள் இருக்கலாம், அதிகபட்சமாக. எப்படியிருந்தாலும், தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதிக்குப் பிறகு நிலைமைகள் வெகு அளவிற்கு சீரடையக்கூடிய வாய்ப்பு இருக்கும். அப்பொழுது பல முயற்சிகளை நாம் செய்யவேண்டி இருக்கும்.
ஒவ்வொரு நேரத்திலும்,
ஒவ்வொரு விதமான அறிவிப்புகள்
ஒரு பக்கத்தில், கல்வியில் நீங்கள் சுணக்கமாக இருக்கக்கூடாது. அது ஆன்லைன் கல்வியாக இருந் தாலும்கூட. அதிலே கூட நம்முடைய மாணவர்கள், கல்லூரியில் படிக்கின்றவர்கள், பல்கலைக் கழகங்களில் படிக்கின்றவர்கள், உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு எத்தனையோ சோதனைகள் இருக்கின்றன. ஆட்சியாளர்களே அவ்வப்பொழுது தடுமாறிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தக் கால கட்டத்தில், தேர்வு வருமா? வராதா? எல்லா பாடங் களுக்கும் தேர்வு வைப்பதா? இல்லையா? எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? ஒவ்வொரு நேரத்திலும், ஒவ்வொரு விதமான அறிவிப்புகள் வந்தாலும், நம்முடைய தோழர்கள், கரோனா தொற்றின் காரணமாக, ஊரடங்கில் வீட்டிற்குள்ளே இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, இயக்க நூல்கள், பகுத்தறிவை வளர்த்துக் கொள்வது என்பது ஒரு பக்கத்தில் இருந்தாலும், அதே அளவிற்குச் சமமாக, நீங்கள் மாணவர்களாக இருக்கின்ற காரணத்தினால், படிப்பறிவிற்கு என்ன தேவை? என்பதுதான் மிகவும் முக்கியம்.
ஒன்று பகுத்தறிவிற்கு, கொள்கைக்கு - இன்னொன்று படிப்பறிவிற்கு!
படிப்பு என்பது இருக்கிறதே, அது ஒரு அனு மதிச் சீட்டு போன்றது. அதனை நாம் பெறுவதற்கு என்றைக்கும் நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். சோர்வில்லாமல், தொய்வில்லாமல் அதற் காக நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இரு கண்களில், ஒன்று பகுத்தறிவிற்கு, கொள்கைக்கு. இன்னொன்று படிப்பறிவிற்கு அல்லது உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்வதற்கு. இன்றைய சூழலுக்கேற்ப, ஆன்லைன், இணைய வழிக்கு உங்களைத் தயாராக்கிக் கொள்ளவேண்டியதும் மிக முக்கியமானதாகும்.
சுருக்கமாக, நம்முடைய சமூகநீதிக்கான தடை ஓட்டப் பந்தயங்களில் நாம் எவ்வளவு கடந்திருக்கிறோம் என்பதை இளைய தலைமுறையினருக்கு, மாணவர் களுக்கு, அதிலும் குறிப்பாக, பத்தாம் வகுப்பு, பன்னி ரெண்டாம் வகுப்பு, கல்லூரிகள், பல்கலைக் கழக மாணவர்களுக்கு, நீங்கள் அறிந்துகொண்டதை, இணையத்தின் வாயிலாக அல்லது தொடர்புகளின் வாயிலாக அவர்களுக்குச் சொல்லலாம்.
உதாரணத்திற்கு சுருக்கமாக சொல்கிறேன், அய்யா தந்தை பெரியார் அவர்கள்,
‘‘இந்து மதம் எங்கே போகிறது?''
ஆரியர் படையெடுப்பு வருவதற்கு முன்பு, இங்கே பலவிதமான கல்வி மறுப்புகள் இல்லாமல் இருந்தி ருக்கலாம்- தமிழ்நாட்டில். ஆனால், அதற்குப் பிறகு, ஆரியர்கள் வந்த பிறகுதான், மனுதர்மம் வருகிறது. ஆரியர்கள் வரும்பொழுது, கையில் மனுதர்மத்தோடு வந்தார்கள். அதனை அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள், ‘‘இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற நூலில் மிகத் தெளிவாகச் சொல்லியிருப்பார்.
வெள்ளைக்காரர்களைப் பொறுத்தவரை சொல்லும் பொழுது, வெளிநாட்டுப் படையெடுப்பின்போது பைபிளோடு போனார்கள் என்று சொல்வதுண்டு.
அதுபோன்று, ஆரியர்கள் மனுதர்மத்தோடு வந்தார் கள். அந்த மனுதர்மத்தினுடைய விளைவு என்ன?
சூத்திரனுக்கு, கீழ்ஜாதிக்காரனுக்கு எதைக் கொடுத் தாலும், கல்வியைக் கொடுக்காதே!
ஜாதி முறையில், பார்ப்பனன் உயர்ந்தவன், அவன் மட்டும்தான் படிக்கவேண்டும். மற்றவர்களுக்கு அந்த உரிமை கிடையாது.
சூத்திரர்களுக்குக் கிடையாது, பஞ்சமர்களுக்குக் கிடையாது, அடுக்குமுறை என்று சொல்லக்கூடிய ஏணிப் படிக்கட்டு ஜாதி முறை இருக்கின்ற காரணத்தினால், அடியில் இருக்கின்ற எல்லா ஜாதியைச் சார்ந்த, எல்லா வருணத்தைச் சார்ந்த பெண்கள் சுதந்திரமாக இருக்கக்கூடாது; பெண்கள் படிக்கக்கூடாது; பெண் களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்ற அடிமைத் தனத்தையும் உருவாக்கி வைத்துக்கொண்டு இருக்கக் கூடிய சூழ்நிலையில், மக்கள் தொகையில் சரி பகுதி யினராக இருக்கக்கூடியவர்கள் பெண்கள். சரி பகுதிக்கும் மேலே, 80 விழுக்காட்டிற்குப் பக்கத்தில் இருக்கின்றவர்கள், பார்ப்பனரல்லாத மற்ற மக்களாகிய திராவிடர்கள்.
பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் படிக்கின்ற வசதி வாய்ப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு இருந்தன
அவர்களுக்குப் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. சேர, சோழ, பல்லவன், பாண்டியன், நாயக்கர் காலம் என்று வரிசையாக நம்முடைய வரலாற்றை எடுத்துக் கொண்டால், பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் படிக் கின்ற வாய்ப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு இருந்தன.
இதிலிருந்து எப்போது மாறுதல் ஏற்பட்டது? என்கிற வரலாற்றை தெரிந்துகொள்ளவேண்டும். 1851 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள், சோப்பு, சீப்பு விற்க வந்தாலும்கூட, அவர்கள் தங்களு டைய வியாபாரத்திற்காக வந்தாலும்கூட, அவர்களே பிறகு ஆட்சியையும் பிடிக்கக் கூடிய அளவிற்கு வந்து, அவர்கள்மூலமாக பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்டது என்பது வரலாறு. கல்வியாளர்கள், ஆதாரத்துடன் அதனை எழுதியிருக்கிறார்கள். எனவே, அந்தக் காலகட்டத்தைத் தாண்டியது முதல் தடை ஓட்டப் பந்தயமாகும்.
வெள்ளைக்காரர்கள் வரவில்லையென்றால், நமக்குக் கல்வி வாய்ப்பு என்பதே கிடைத்திருக்காது!
அதைத் தாண்டி, வெள்ளைக்காரர்கள் வந்த பிறகு, 1813 ஆம் ஆண்டில், சாசனச் சட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வந்தார்கள். காரணம் என்ன வென்றால், அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வந்தது. அந்த வேலை வாய்ப்புகளில் முதன்முதலில், இந்திய வரலாற்றிலே, பல பேர் சொல்வார்கள், ‘‘வெள்ளைக்காரன் வந்தான், கெடுத்துவிட்டான்'' என்று. வெள்ளைக்காரர்கள் வரவில்லையென்றால், நமக்குக் கல்வி வாய்ப்பு என்பதே கிடைத்திருக்காது. முழுக்க முழுக்க வருணாசிரம தர்மம்தான் இருந்திருக்கும்.
முதன்முறையாக அந்தச் சட்டம் திருத்தப்பட்டதுதான்
கதவு திறக்கப்பட்டதற்கு முதல் முயற்சி
ஒரு சிறிய செய்தியை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். 1813 ஆம் ஆண்டின்போது லண்டனிலிருந்து கொண்டுவரப்பட்ட சாசனச் சட்டத்தின்படி, ஓர் உத்தரவு போட்டார்கள்; அந்த உத்தரவு என்னவென்றால், 87 ஆவது பிரிவு என்று ஏற்கெனவே இருந்த சட்டத்தில் திருத்தம் செய்தார்கள்.
‘‘இந்தியாவில் வாழும் எந்த ஒரு குடிமகனும், அவனது மதம், பிறப்பு, வம்சம், வர்ணம் என்ற எந்த ஒரு காரணத்தினாலுமோ, அன்றியும் அவை இல்லாத வேறு எதையும் வைத்துக் கொண்டோ, கம்பெனிகளுடைய வேலை வாய்ப்புகளில் சேருவதைத் தடுக்க, பிறப் பின் அடிப்படையில் தடைகள் இருக்கக்கூடாது. அவர்கள் புலம்பெயர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கவேண்டும்” என்று முதன்முறையாக அந்தச் சட்டம் திருத்தப்பட்டதுதான் கதவு திறக்கப்பட்டதற்கு முதல் முயற்சியாகும்.
அதற்குப் பிறகு அவனுக்கு வேலைக்கு ஆட்கள் தேவைப்பட்டது. இங்கிலாந்திலிருந்து அதிகாரிகள் போன்ற பதவிகளுக்குத்தான் ஆட்களை அழைத்து வந்தார்கள். இதனை உணர்ந்துகொண்ட பார்ப்பனர்கள், ஆங்கில மொழியை மிலேச்ச பாஷை என்று சொன்னாலும், சமஸ்கிருதத்தைப் படிப்பதைவிட ஆங்கிலத்தைப் படித்து, அவர்கள் பணியாற்றக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டார்கள்.
1912 ஆம் ஆண்டு
திராவிட அய்க்கிய சங்கம் உருவானது
எனவேதான் வகுப்புவாரி உரிமை தேவைப்பட்டது. 1912 ஆம் ஆண்டு திராவிட அய்க்கிய சங்கம் உருவானது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு அது உருவானது - 20 ஆம் நூற்றாண்டு தென்னாட்டைப் பொறுத்தவரையில்! வடநாட்டைப் பொறுத்தவரையில், அதற்கு முந்தைய நூற்றாண்டிலே ஜோதிபாபூலே போன்றவர்கள் மிகத் தெளிவாக உருவாக்கினார்கள்.
எனவே, இந்தக் காலகட்டம்தான் இந்தியாவிலேயே கல்விப் புரட்சிக்கு திட்டமிட்ட ஒரு காலம். அது மகாராட்டிராவிலும், தென்னாட்டிலும்தான் கல்விப் புரட்சி ஏற்படக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டன.
நீதி வேண்டும் என்பதற்காகப் பிறந்ததுதான் நீதிக்கட்சியாகும்!
திராவிடர் இயக்கம் அப்போதுதான் தோன் றியது. சர்.பிட்டி தியாகராயர், டாக்டர் நாயர், நடேசனார் போன்றவர்கள் எல்லாம் சேர்ந்து உருவாக்கினார்கள். கல்வி, வேலை வாய்ப்புகளை இந்தியர்களுக்கேகொடுக்கவேண்டும்என்று தீர்மானம் போட்டார்கள். இந்தியர் என்ற பெயராலே பார்ப்பனர்களே எல்லா பதவிகளுக்கும் போகிறார்கள்; நூற்றுக்கு மூன்று பேராக இருப்ப வர்கள் அவர்கள். விகிதாச்சாரத்தில் நூற்றுக்கு நூறை அவர்கள் அனுபவிக்கிறார்கள். ஆனால், நூற்றுக்கு 97 சதவிகிதம் இருப்பவர்களுக்கு வாய்ப்பில்லைஎன்பதைச் சுட்டிக்காட்டி, அதில் பிறந்ததுதான் சமூகநீதி. நீதி வேண்டும் என்பதற்காகப் பிறந்ததுதான் நீதிக்கட்சியாகும்.
அவர்கள் முதலில் கல்வியிலும், உத்தியோகத் திலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். இரண் டாவது தடை ஓட்டப் பந்தயத்தைத் தாண்டியது நீதிக்கட்சியின்மூலமாகத்தான்.
ஒரு சிறிய உதாரணத்தைச் சொல்லவேண்டு மானால், எவ்வளவு தடை வைத்திருந்தார்கள் என்று சொன்னால், பள்ளிக்கூடங்கள் எப் பொழுது உருவானது என்றால், ஆயிரத்து எண் ணூற்று சொச்சத்தில்தான். வெள்ளைக்காரன் உருவாக்கினான். அப்பொழுது பல்கலைக் கழகத் தோடு இணைத்து பள்ளிக்கூடங்களை வைத்தி ருந்தார்கள்.
மனுதர்மத்தினுடைய வேரை
வெட்ட ஆரம்பித்தது
அந்தக் காலகட்டத்திலேயே, நம்முடைய ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த, ஷெல்யூல்டு காஸ்ட் என்று இன்றைக்குச் சொல்லக்கூடிய அந்தப் பிரிவைச் சார்ந்த நம்முடைய சகோதரர்களையே படிக்கக்கூடாது என்று தடுத்தார்கள். அதனை உடைத்தது நீதிக்கட்சிதான். அவர்களுக்குத் தனியே லேபர் ஸ்கூல் என்று வைக்கவேண்டும்; ஜாதிப் பெயரை வைக்கக்கூடாது; தொழிலாளர்கள் அவர்கள் என்று சொல்லி, அந்த வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்கள்.
இப்படி நீதிக்கட்சி, கல்விக்கு முன்னுரிமை கொடுத்து, கல்வி வாய்ப்புகளை பார்ப்பனரல்லாத மக்களுக்குத் தரவேண்டும் என்று, மனுதர்மத்தினுடைய வேரை வெட்ட ஆரம்பித்தது.
அந்தக் காலகட்டத்தில்தான் மிகப்பெரிய ஒரு போராட்டம் ஆரம்பித்தது. நீங்கள் எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள், மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பம் போடவேண்டும் என்றால், சமஸ்கிருதம் தெரிந்திருக்கவேண்டும் என்று இருந்ததை, நம்முடைய பனகல் அரசர், திராவிட இயக்கம் வந்ததற்குப் பிறகுதான், 1920 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான், அதனை மாற்றியதினால்தான், இன்றைக்கு நம்முடைய மக்கள் மருத்துவராக வர முடிந்தது.
இன்றைக்கு நீட் தேர்வின்மூலம், மீண்டும் பழைய சூழலை உருவாக்கவேண்டும் என்பதற்காகத்தான், மறைமுகமாக வேறு திசையில் திசை திருப்பி உருவாக்கவேண்டும் என்கிற முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதனை நாம் எதிர்த்துக் கொண் டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இதைத்தான் தடை ஓட்டப் பந்தயம் என்கிறோம்! சமஸ்கிருதம் படித்திருந்தால்தான், மருத்துவக் கல்லூரியில் மனு போட முடியும்; மருத்துவராகி மேலே வர முடியும். அதேபோன்று பொறியாளர் படிப்பும்.
நம்முடைய ஆட்சிகள் வந்தவுடன், வகுப்புவாரி உரிமை என்பதைக் கொண்டு வந்த பிறகுதான் படிப்பதற்கு வாய்ப்பு வந்தது. அந்த வகுப்புவாரி உரிமை உத்தரவு 1928 ஆம் ஆண்டிலிருந்து 1950 ஆம் ஆண்டு வரையில் இருந்தபொழுதுகூட, சுதந்திரம் வந்த பிறகு, அரசமைப்புச் சட்டத்தைக் காரணம் காட்டி, வகுப்புவாரி உரிமையை ரத்து செய்யக்கூடிய முயற்சிகள் எடுக்கப்பட்டன. வகுப்புவாரி உரிமையை உச்சநீதிமன்றம் செல்லாது என்று சொன்னவுடன், அதனை எதிர்த்துப் போராடியவர் தந்தை பெரியார் அவர்கள்தான்.
அதன் காரணமாகத்தான், 1951 ஆம் ஆண்டு, முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தம் வந்தது. 15(4) பிரிவு என்பது, மாணவர்கள், குறிப்பாக ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பில், வாய்ப்புகளை உருவாக்கு வதுதான் 15(4) அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
(தொடரும்)
No comments:
Post a Comment