காணொலி மூலம் மும்பை கழகத் தோழர்களுடன் தமிழர் தலைவர் "அய்யா அன்று சொன்னதும் - ஆசிரியர் இன்று சொன்னதும்!" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 13, 2020

காணொலி மூலம் மும்பை கழகத் தோழர்களுடன் தமிழர் தலைவர் "அய்யா அன்று சொன்னதும் - ஆசிரியர் இன்று சொன்னதும்!"

*கலி. பூங்குன்றன்



கடந்த 3ஆம் தேதி மும்பை திராவிடர் கழகத் தோழர்கள், பிற அமைப்புத் தோழர்களுடன் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் காணொலி மூலம் கலந்துரையாடல் நடந்தி னார்கள். கழகத் துணைத்தலைவர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோரும் பங்கு கொண்டனர்.


பழம்பெரும் கழகத் தோழர்கள்தம் குடும்பத்தி னரின் வாரிசுகள் காணொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருப்பதும் உரையாடுவதும் பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக கழகத் தலைவர் எடுத்த எடுப்பிலேயே கூறினார். சீர்வரிசை சண்முகராசன் அவர்களின் மருமகன் சு. குமணராசன், நங்கை குமணராசன், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தொல்காப்பியனார் அவர்களின் வாழ்விணையர் இரத்தினம் அம்மாள், மகன் காமராஜ், கழக மத்தியக் குழு உறுப்பினர் மந்திரமூர்த்தி அவர்களின் மகன்கள் தயாளன் (நாகர்கோயிலிருந்து) மற்றொரு மகன் இராஜசேகர், மும்பை பெரியார் பெருந்தொண்டர் எஸ்.எஸ். அன்பழகன் அவர்களின் மகன் இரவிச் சந்திரன் (மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர்), மறைந்த மும்பை கழகப் பொருளாளர் என்.ஏ. சோமசுந்தரம் அவர்களின் மகன்கள் ஆசைத்தம்பி, சவுந்தரபாண்டியன், தோழர் ஆரிய சங்காரன் அவர்களின் மகன் மாறன், சற்குணம், தோழர் பொற்கோ அவர்களின் மகன் அன்பழகன், வெ.சித்தார்த்தன், மும்பை திராவிடர் கழகத் மாநில தலைவர் எம். கணேசன், மாநில செயலாளர் இ.அந் தோணி, பொருளாளர் அ.கண்ணன், தோழர் பெரியார் பாலாஜி, தோழர் அ.இராதாகிருஷ்ணன், ஜெ.வில்சன், இசக்கிபாண்டியன் முதலிய தோழர்கள் காணொலியில் பங்கேற்று தாராவி பகுதியில் கரோனா தொற்றுத் தீவிரத்தை எடுத்துச் சொன்னதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குக் கழகத்தின் சார்பில் செய்து வரும் உதவிகளைக் கூறினர். குறிப்பாக குமணராசன் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள லெமூரியா அறக்கட்டளை சார்பாக 1 லட்சத்து 600 கிலோ அரிசி மற்றும் தானியங்கள் பாதிக்கப்பட் டோருக்கு வழங்கப்பட்டது அறிந்து கழகத் தலைவர் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.


பொதுவாக இல்லறம், துறவறம் என்றுதான் சொல் லுவார்கள் மூன்றாவது அறத்தைத் தந்தை பெரியார் அறிமுகப்படுத்தினார். அதுதான் தொண்டறம். வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியார் அந்தத் தொண்டறப் பணியினைத்தான் செய்து கொண்டு இருந்தார்கள் அவர்களின் வழிவந்த நாம் அந்தப் பணியைச் செய்து கிடப்பதே நம் பணி என்ற முறையில் பணியாற்ற வேண்டும்.


மனிதன் தானாகப் பிறக்கவில்லை. ஆகவே தனக்காக மட்டும் வாழக் கூடியவன் அல்லன் என்று கூறிய தந்தை பெரியார் அவர்களின் தூய தொண் டறக் கருத்தினை கழகத் தலைவர் பொருத்த மாகவே சுட்டிக் காட்டினார்.


தாராவிபற்றி வரும் தகவல்கள் பற்றி தமிழர் தலைவர் குறிப்பிடும்போது மிகவும் கவலையாகவே இருக்கிறது. பத்துக்குப் பத்து அடி வீட்டில் அய்ந்தாறு பேர்கள் வாழும் நிலையில்தான் தாராவியில் பெரும் பாலும் வாழுகிறார்கள். இந்த நிலையில் தனி நபர் இடைவெளி என்பதை எங்கே போய்த்தேட முடியும்?


நவிமும்பை என்று ஒரு பகுதியை ஏற்படுத் தியதுபோல தாராவிவாழ் மக்களுக்காக போதிய வசதிகளுடன் ஒரு புதிய நகரை உருவாக்க அம்மாநில அரசு முன்வர வேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான யோசனையைத் தமிழர் தலைவர் கூறினார்.


நீண்ட காலத் திட்டம், அவசர காலத் திட்டம் என்று பிரித்துக் கொண்டு அரசு செயல்பட வேண்டும்.


நம்முடைய தோழர்கள் முடிந்த உதவியை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கை களை கைக்கொள்ள வேண்டும்.


ஈரோட்டில் ஒரு தடவை 'பிளேக் நோய்' தாண்ட வமாடியது. பலர் மடிந்தனர். செல்வந்தர்கள் வீட்டைக் காலி செய்துவிட்டு வெளியூர் சென்று விட்டனர்.


அந்த நேரத்தில் இளைஞராகிய பெரியார் தம் நண்பர்கள் பட்டாளத்துடன் ஓடோடிச் சென்று உதவி செய்தார். 'பிளேக்' நோயால் மரணம் அடைந்தவர் களைத் தோளில் தூக்கிச் சென்றார் என்றால் சாதாரணமா?


மும்பை காணொலியில் இவற்றையெல்லாம் எடுத்துச் சொன்ன கழகத் தலைவர் மும்பையில் அரும் பணியாற்றிய கழகத் தோழர்களை எல்லாம் மறக்காமல் நினைவு கூர்ந்தார். அய்யா தொல் காப்பி யனார், ஜார்ஜ் ஜோசப், மந்திரமூர்த்தி, என்.ஏ.சோம சுந்தரம், எஸ்.எஸ்.அன்பழகன், ஏ.பி.நெல்லையா, மும்பையில் பணியாற்றி, பிறகு நெல்லை திரும்பி, நெல்லை மாவட்டக் கழகத் தலைவராகயிருந்து சிறப்பாகக் கழகப் பணிகளை மேற்கொண்டார் நெல்லையப்பா. தற்போதைய நெல்லை மாவட்டக் கழகத் தலைவர் தோழர் காசி மற்றும் வேலாயுதம், இரத்தினசாமி, ஆர்.ஏ.சுப்பையா, மோசஸ், தரும ராசன், திமுகவில் இருந்தாலும் எப்பொ ழுதும் சுயமரியாதைப் பகுத்தறிவு வீரர்களாகவே வாழ்ந்து காட்டிய ஆரியசங்காரன், பொற்கோ, தியாகராசன், சீர்வரிசை சண்முகராசன், சாமிக்கண்ணு முதலிய தோழர்களையும், குடும்பத்தினரையும் பசுமையாக நினைவு கூர்ந்தார் கழகத் தலைவர்.


கழகத் தொடர்பில் மும்பைக்கும், தமிழ்நாட்டுக்கும் எப்பொழுதுமே இணை பிரியா தொடர்புண்டு. மணியம்மையார் திருமணத்தைக் காரணமாகக் காட்டி, 1949இல் திராவிடர் கழகத்திலிருந்து திமுக பிரிந்த நிலையில், பம்பாயில் திராவிடர் கழகம் இரண்டாவது மாகாண மாநாட்டை ஏற்பாடு செய்து மணியம்மையாரை அம்மாநாட்டுக்குத் தலைமை யேற்கச் செய்தது தனிச் சிறப்பு (12.2.1950).


மாநாட்டுத் தலைவராக வழிமொழிந்த தொல்காப் பியன் அவர்கள் தெரிவித்த கருத்து முத்தாய்ப்பானது.


"பெரியார் அவர்களின் திருமணத்தில் குற்றம் காண முயன்ற தோழர்கள் குற்றமேதும் காண இயலாது, மணியம்மையார் அவர்களால் கழகத்தைத் தலைமை வகித்து நடத்த முடியுமா என்று நையாண்டி செய்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று கருதுகிறேன். அந்த நையாண்டிக்குப் பதில் கூறுமுகமாகவே நாங்கள் தோழர் மணியம்மையார் அவர்களை இம்மாநாட்டுக்கு தலைவராகத் தேர்ந் தெடுத்திருக்கிறோம்" என்று கூறியதுதான் எத்தனைச் சிறப்பு.


அம்மாநாட்டில் பங்கேற்க தந்தை பெரியாருடன் ஆனைமலை நரசிம்மன், பட்டுக்கோட்டை டேவிஸ், வேலூர் திருநாவுக்கரசு ஆகியோரும் சென்றி ருந்தனர்.


அம்மாநாட்டில் தந்தை பெரியார் தெரிவித்த கருத்து இன்றைக்கும் பொருந்துகிறது.


"நான் சுமார் 6 வருடங்களுக்கு முன்பு இவ் விடம் வந்திருந்தபோது, நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்களோ, அந்த நிலையில்தான் இன்றும் இருந்து வருகிறீர்கள். மற்ற பகுதிகளில் எல்லாம் வாழ்க்கைத் தரம் மூன்று மடங்கும், நான்கு மடங்குமாக பெருகி யிருக்க உங்களுடைய வாழ்க்கைத் தரம் மட்டும் அப்படியேதான் இருந்து வருகிறது. முன்பு இருந்த அதே வசதிக் குறைவுகளோடுதான் நான்  உங்களைக் காண்கிறேன்.


சென்னை மாகாணத்தவரான நீங்கள் அங்கு பிழைக்க வழியில்லை என்று இங்கு வந்து இவ் வளவு கஷ்டத்தில் பிழைக்கிறீர்கள். ஆனால் இம்மாகாணத்தையும், பிற மாகாணங்களையும் சேர்ந்த குஜராத்தி, மார்வாரி, பனியாக் கூட்டங்கள் உங்களை விட 10 மடங்கு, 20 மடங்கு அதிகமாக சென்னை மாகாணத்தில் குடியேறி ஆன மட்டும் கொள்ளையடித்து குபேரர்களாக ஆகி கொண் டிருக்கிறார்கள். கோடீஸ்வரர்களாக ஆகிக் கொண்டி ருக்கிறார்கள். மாட மாளிகைகள் கட்டி மகோன்னத வாழ்வு வாழ்கிறார்கள்" என்று குறிப்பிட்டார் தந்தை பெரியார்.


இன்றைக்கு 70 ஆண்டுகளுக்குமுன் தந்தை பெரியார் கூறியதுதான் இன்றளவும் தொடர்கிறது. அதைத்தான் கழகத் தலைவர் அவர்கள் தமது காணொலி உரையாடலில் பத்துக்குப் பத்தடி வீட்டுக்குள் அய்ந்தாறு பேர் முடங்கிக் கிடக்கும் அவல நிலை நீடிக்கிறதே என்று துயரந்தோய்ந்த குரலில் குறிப்பிட்டார்கள்.


1940ஆம் ஆண்டிலும் தமிழர்களின் அழைப்பின் பேரில் தந்தைபெரியார் பம்பாய் வந்தார். அந்தப் பயணத்தின்போது டாக்டர் அம்பேத்கர், முகம்மது அலி ஜின்னா ஆகியோருடனான சந்திப்பு ஜின்னா மாளிகையில் நடைபெற்றது. அதில் எடுக்கப் பட்ட முடிவுகளும் வரலாற்றில் பதிக்கப்பட்ட வைரக்கற் களாகும் (8.1.1940).


அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியாருக்கு இரண்டு முறை அழைத்து தேநீர் விருந்தளித்தார். அந்தத் தேநீர் விருந்தில் முக்கிய தலைவர்கள், பிரமுகர்களைப் பங்கேற்க அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஏற்பாடு செய்தார். தாராவியில் (7.1.1940) நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு அண்ணல் அம்பேத்கர் தலைமை ஏற்க, தந்தை பெரியார் மூன்று மணி நேரம் உரையாற்றினார். தலைமையேற்ற அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியார் பற்றி கூறியது என்ன?


"பார்ப்பனீயத்தை ஒழிப்பதில் நானும் பெரியார் கொள்கையை ஒத்துக் கொள்கிறேன்.  அன்று முதல் இன்று வரை பார்ப்பனீயத்தை எதிர்த்துப் போராடி வருபவரான ஒப்பற்ற தலைவர் பேசும் கூட்டத்திற்குத் தலைமை வகிக்க எனக்குக் கிடைக்கப் பெற்றது பாக்கியமே, எனது வாழ்க்கையில் இதனைப் பெரும் பாக்கியமாகவும் குறிப்பிட்டார்.


அந்தக் கூட்டத்திற்கு மேலும் ஒரு சிறப்பு என்ன வென்றால் ஒரே கூட்டத்தில் அண்ணா அவர்கள் இரண்டு பேரில் உரையை மொழி பெயர்த்தார்.


தந்தை பெரியாரின் தமிழ் உரையை ஆங்கிலத் திலும், அண்ணல் அம்பேத்கரின் ஆங்கில உரை யைத் தமிழிலும் மொழிபெயர்த்த சாதனையை அண்ணா நிகழ்த்தினார்.


பெரியார் தமிழ்நாட்டையும் தாண்டி வெளி மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கரும், ஜின்னாவும் கேட்டுக் கொண்டனர். அதேபோல தந்தை பெரியாரின் அழைப்பினை ஏற்று ஜனாப் ஜின்னா அவர்களும், டாக்டர் அம்பேத்கர் அவர் களும் தமிழ்நாட்டில் 15 நாள்கள் சுற்றுப் பயணம் செய்ய இசைந்தனர். எப்படியோ அந்த அரிய வாய்ப்பு அமையாமல் போனது கெட்டவாய்ப்பே!


தந்தை பெரியாரின் இந்த மும்பைப் பயணத்தில் அண்ணா, சண்டே அப்சர்வர் பாலசுப்பிரமணியம், ஜஸ்டிஸ் ஆசிரியர் டி.ஏ.வி.நாதன், கே.எம்.பால சுப்பிரமணியம், டி.பி.எஸ்.பொன்னப்பா, சி.பஞ்சாட்சரம் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.


1959 பிரப்வரியிலும் ஒருமுறை தந்தை பெரியார் மும்பையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டதுண்டு.


தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில் தோழர்கள் சென்னையிலிருந்து வேன்மூலம் மும்பை சென்று நிகழ்ச்சியில் பங்கேற்ற நிகழ்வுகளும் குறிப்பிடத் தக்கவையேயாகும்.


No comments:

Post a Comment