கரோனாவும் 'நடத்தைப் பொருளாதாரமும்!' (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 20, 2020

கரோனாவும் 'நடத்தைப் பொருளாதாரமும்!' (2)


கரோனாவினால் ஏற்பட்ட தீய விளைவுகள்  - உயிர்ப் பலி, பொருளாதாரத்தில் எளிய மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுதல் போன்றவற்றுடன் எதிர் பாராத சில விளைவுகள் ஏற்பட்டுள்ளன என்றும் சமூக ஆர்வலர்கள் கூறத் தான் செய்கின்றனர்!


கங்கை நீரை சுத்தப்படுத்த எத்தனையோ ஆயி ரம் கோடி  ரூபாய் செலவிட்டோம் - இப்போது அது ஊரடங்கு காரணமாக சுத்தமாகி வருகிறது - என்கிறார்கள்!  அதுபோலவே டில்லியில் தொழிற்சாலைகள் இயங்காத காரணத்தினால் காற்று மிகவும் மாசடைந்த நிலை மாறி - அதன் காற்று மாசு வெகுவாகக் குறைகின்றது என்றும் கூறுகிறார்கள் - ஒரு பக்கம் மகிழ்ச்சியையும் தெரிவிக்கிறார்கள்!


இது உண்மையாகவும் இருக்கலாம்; நாம் மறுக்க வில்லை; ஆனால் ஒன்று, இவை எந்த நிலையில்? மோட்டார் கார்கள் ஓடாமல், சாலைகள் வெறிச்சோடி இருக்கும்போது, விபத்துகளே ஏற்பட வில்லை அல்லது எங்கோ சிற்சில விபத்துகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன என்று கூறி மகிழவா முடியும்?


இயல்பு வாழ்க்கையில் இவை சாத்தியப்பட்டால் தானே அந்த மகிழ்ச்சிக்கு நியாயம் உண்டு.


நெருக்கடி காலத்தில் - 'எமர்ஜென்சி' என்ற காலத்தில் (1976 இல்) "ரயில்கள் சரியாக ஓடின - அலுவலகங்கள் சரியான நேரத்திற்கு இயங்கின - லஞ்சம் வாங்க பயந்தார்கள் - திருமணம் 50 பேருக்கு மேல் நடத்தினால் அபராதம்" என்பது வேலை செய்தது என்று சிலர் கூறி மகிழ்ந்தார்கள். ஆனால், அதற்கு நாடு கொடுத்த விலை? மதிப்பற்ற தனி மனித சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் பறிபோயிற்று என்பதல்லவா?


நடத்தைப் பொருளாதார மாற்றம் - கரோனா தொற்றின் விளைவாக ஊரடங்கு, வீட்டுக்குள் முடக் கம் - அதன் காரணமாக தாராளமாக வெளியே சென்று இளைஞர்களுக்கு துரித உணவு, பிட்சா, பர்கர் - எல்லாம் சாப்பிடவும், சினிமா கேளிக்கைகளில் கை நிறைய வாங்கும் சம்பளத்தை 'தாம்தூம்' என்று செலவழித்து 'ஜாலி'யாக இருப்பதுமே வாழ்க்கை  என்று நினைத்தவர்களுக்கு - கரோனாவின் விளைவாக சம்பளக் குறைப்பு, வேலை இழப்பு, வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு வாழுதல் முதலியவற்றைப் பற்றி ஆழமாகச் சிந்தித்து அதற்கேற்ப 'விரலுக்கு ஏற்ற வீக்கத்தை' மட்டும் வைத்துக் கொள்வது எப்படி என்று நினைத்து அசைபோட்டு சிந்தித்தால், எவ்வளவு பெரிய செலவாளியாக இதற்கு முன் நீங்கள் திகழ்ந்திருந்தாலும், உறுதியான, ஆழமான சிந்தனை உங்களை சரியான முடிவு எடுக்கவே தூண்டிவிடும். வாழ்க்கை முறை (Life Style Changes) மாற்றங்கள் தானே - அவசியத்தின் உந்துதல் காரணமாக தானே கருக் கொண்டு உருக்கொள்வது நிச்சயம்!


எங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு திருப்பத்  தையே ஒரு உதாரணமாக்கிட விரும்புகிறேன் - படிப்பறிவைவிட பட்டறிவே பல நேரங்களில் நல்ல பாடங்களைக் கற்றுத் தருகிறது!


சென்னை பிராட்வே சட்டக் கல்லூரி விடுதியில் (Madras University Students Club) என்ற 150 ஆண்டு வரலாற்றைக் கொண்டது அவ்விடுதியில் - இரண்டாமாண்டு படித்தபோது, நண்பர்கள் சாமிதுரை, திண்டுக்கல் சுப்பிரமணியம் மற்றும் நண்பர்கள் சிலர் பிராட்வேயிலிருந்து மாலை நேரம் நடைபயிற்சி போல் நடந்தே வந்து, மாலை 7 மணி அளவில் புகாரி ஓட்டலுக்குள் நுழைவோம். அவரவர்களுக்கு எது விருப்பமோ அதை ஆர்டர் செய்து "அரட்டை" அடித்துக் கொண்டு சாப்பிட்டு முடித்ததும், சுமார் 700 ரூபாய் சராசரி 'பில்' வரும்; நாங்கள் மாறி மாறி அந்த பில்லைக் கொடுப்போம்; இதில் யாரும் கணக்குப் பார்த்தில்லை!


ஒரு நாள், திரும்பி நடந்துவரும்போது நான் நண்பர் களிடம் உரையாடிய நிலையில், ‘‘நாம் ஒவ்வொரு நாளும் இப்படி இவ்வளவு ரூபாயை நமது விடுதி உணவு இருக்கும்போதும் செலவழிக்கின்றோமே - இதே 700 ரூபாய்க்கு வீட்டில் கறி - (இறைச்சி) வாங்கினால் நம் குடும்பத்தில் உள்ள எத்தனை பேர் சாப்பிடுவார்கள்; இந்தச் செலவு - தேவையற்ற ஆடம்பரம் அல்லவா? இது தவிர்க்கப்பட்டால் என்ன?'' என்று கேட்டவுடன் - மற்றவர்களுக்குப் பொறி தட்டியது.


பிறகு வெகுவாகவே அது குறைந்து விட்டது. அதுபோல இப்போதும் ஒரு நல்ல சூழல், 50 நாள் பயிற்சி - உடல் நலம் பேணுவது - சிக்கனம் தானே உருவாவது - வீட்டுச் சமையல், பழம் போன்றவற் றிற்குத் தாராளமாக செலவழித்து, நல்ல சத்துணவு விருந்தாக சாப்பிட, வாய்ப்பு உள்ளவர்கள் சாப்பிடலாமே! (இந்த நிலைகூட குறிப்பிட்ட அளவு மக்களிடம் இல்லை என்பது வேதனைக்குரியதே!)


இதுபோல பல்வேறு அன்றாட வாழ்க்கை நடத்தை களில் மாற்றங்களை உருவாக்கி, எந்த நிலையிலும் ஒருசிறு தொகையையாவது சேமித்தலும் - சேர்த்தலும் மிகவும் தலையாய கடமையாகும்.


கடன் வாங்குவது அரசுகளின் உரிமையாகட்டும்.


தனி மனித வாழ்வில் கூடுமான வரை கடன் வாங்குவதைத் தவிர்த்தால் - தந்தை பெரியார் அவர்கள் கூறுவதுபோல, நமது சுயமரியாதைக்குப் பங்கமோ, இழுக்கோ என்றும் ஏற்படவே ஏற்படாது!


தொழில் செய்ய வங்கிகளிலோ, மற்றபடி நிறுவனங் களிலோ கடன் வாங்கி, நாணயமாய் திருப்பிக்கட்டும் வ(ப)ழக்கம் தவறல்ல. தேவையற்ற ஆடம்பரங்கள் நம்மை அதல பாதாளத்தில் தள்ளி விடும். எளிமை எப்பொழுதும் ஏற்றம் தரும்; புது வாழ்வையே உருவாக்கி மேன் மைப்படுத்தும்!


'சிறுதுளி பெரு வெள்ளம் - நினைவிருக்கட்டும்!'


தந்தை பெரியார்  அவர்கள் கடனும் வாங்க மாட்டார்; எவருக்கும் (எளிதில்) கடனும் கொடுக்க மாட்டார். எனவேதான், அவர் கண்ட இயக்கம் ஒரு பெரும் நிறுவனமாகி, வளர்ந்தோங்கும் வாய்ப்பும், அந்த வருவாய்மூலம் எப்படிப்பட்ட இழப்புகளையும் ஈடுகட்டி கொள்கைப் பிரவாகம் தடையின்றி ஓடவும் வழி ஏற்பட்டுள்ளது! நமக்கு மிகவும் இன்றியமையாத பொருள்களையே வாங்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளுங்கள்.


இன்னும் 18 மாதங்கள் பொருளாதாரச் சிக்கலும், நெருக்கடியும் கரோனா தீர்ந்தும் - தீராத விளைவாக நம்மையே அச்சுறுத்தும். அப்போது நாம் நம்மைக் காப்பாற்றிட, நாம் மானத்தோடு வாழ, இந்த நடத்தைப் பொருளாதார மாற்றம் வெகுவாக கைக்கொடுக்கும் - மறவாதீர்!


No comments:

Post a Comment