ஏழுமலையானின் கருணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 8, 2020

ஏழுமலையானின் கருணை

திருப்பதி கோவில் உள்ளிட்ட அனைத்துக் கோவில் களும்  மார்ச் 20ஆம் தேதி முதல் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இழுத்து மூடப்பட்டது.  அதன் பிறகு அரசு அறிவித்த ஊரடங்கு தொடர்ந்து  நீட்டிக்கப்பட்டதால் மக்களின் வருகை அடியோடு நிறுத்தப்பட்டது.  கோவில் கற்சிலைகளுக்கு ஆட்களே இல்லாமல்  பூஜைகள் மட்டும் தற்போது தொடர்ந்து நடந்து வருகின்றன. அர்ச்சகர்கள் கொழுக்க வேண்டுமே!


திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்துக்குக் காத்திருக்கும் அரங்குகளில் தூய்மைப் பணிகளைச் செய்ய ஒப்பந்த முறையில் பல்வேறு நிறுவனங்கள் மூலம் 1400 துப்புரவுத் தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.   கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்தத் தூய்மை ஊழியர்களுக்குப் பணி எதுவும் இல்லை என்பதால் இவர்களை ஒப்பந்த நிறுவனங்கள் பணி நீக்கம் செய்துள்ளன.


இதனால் அதிர்ச்சி அடைந்த ஒப்பந்த ஊழியர்கள் திருப்பதி விஷ்ணு நிர்வாகம் தேவஸ்தான ஓய்வறை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.  இது குறித்த தகவல் அறிந்த சட்டப்பேரவை உறுப்பினர் கருணாகர ரெட்டி, மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் முரளி உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டோருடன் பேச்சுவார்த்தை நடத் தினார்கள்.


அப்போது "ஊரடங்கு காரணமாக தற்போது ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஊரடங்குக்குப் பிறகு வேறு எந்த நிறுவனம் ஒப்பந்தம் எடுத்தாலும், உங் களையே பணியில் அமர்த்துவோம். உங்கள் வேலைக்கு  உறுதி அளிக்கிறோம்” என்று கூறினர்.  தொழிலாளர் தினத்தன்று அதிரடியாக 1400 பேர் பணி நீக்கம் செய்யப் பட்டது பலருக்கும் வேதனை அளித்துள்ளது. ஆனால் கோவில் நிர்வாகம் சார்பிலோ அல்லது ஒப்பந்த நிறுவனம் சார்பிலோ யாருமே போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலா ளர்களிடம் எதுவுமே பேசவில்லை.


ஊரடங்கு காரணமாக திருப்பதி கோயில் மூடப் பட்டிருப்பதால் 1,400 தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. இவர்களில் யாரும் உயர் ஜாதியினர் இல்லை. கோயிலின் துப்புரவுப் பணிகள், தேவஸ்தானம் சார்பாக நடத்தப்படும் தங்கும் விடுதிப் பணியாளர்கள் அனை வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களே. ஒரு வெளி நிறுவனம் மூலமாக பணியிலமர்த்தப்பட்டவர்கள். இப்போது, 'ஒப் பந்தம் முடிந்துவிட்டது. புது டெண்டர் விட்டு புதிதாக ஆள் எடுப்போம்' என்ற அறிவிப்பு வேறு. 'இந்த ஒப்பந்த வேலையும் இனி இல்லாமல் போய்விடுமோ' என்ற அச்சத்தை அவர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.


வெறும்  5000 ரூபாயில் பணிபுரியும் இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள், வேலையில்லாத இந்த இடைப்பட்ட காலத்தில் எல்லோரையும் போலவே துன்பப்படுகின்றனர். அரசும் எதுவும் செய்யவில்லை. இந்தியாவின் பணக்கார சாமியான ஏழுமலையானின் திருப்பதி தேவஸ்தானத்தால் இந்த அற்பத் தொகையை ஏற்க முடியாதா?


சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஒரு கோயில் அர்ச்சகப் பார்ப்பனர் கோவிலில் வருமானம் இல்லை. உதவி செய்யுங்கள் என்று கோயில் வாசலில் போர்டு எழுதி வைத்துள்ளார். அவர்கள் எழுதி வைத்தால் அது மனிதாபிமான கணக்கில் வந்துவிடும். நான்குபேர் உதவுவார்கள். இந்த ஒப்பந்த தொழிலாளர்கள் அப்படி வீட்டு வாசலில் எழுதி வைக்க முடியுமா? எழுதி வைத் தால்தான் உதவி வருமா?


யானையைக் காட்டி பிச்சை எடுப்பதுபோல் ஏழுமலையானை வைத்து கோடி கோடியாக சம்பாதிக்கும் அரசு, அங்கு கூட்டிப் பெருக்கி குடிவேலை செய்யும் இந்த பணியாளர்களுக்கு இந்த நேரத்தில் தாராளமாக உதவி செய்திருக்க வேண்டாமா?


கொடுப்பதற்குப் பணம் இல்லாவிட்டால் பரவாயில்லை. அதன் ஒரு நாள் உண்டியல் வசூலில் ஒரு சிறு துளியைக் கொடுத்தாலே இந்த 1,400 பேருக்கு உதவ முடியும். ஆனால் செய்யவில்லை. செய்யப்போவதும் இல்லை. போதாக்குறைக்கு இருக்கும் வேலையையும் இழக்கும் நிலை!


இவன்தான் தீராத வினைகளை எல்லாம் தீர்த்து வைப்பவனாம்!


தன் சொந்த கோயில் பணியாளர்களுக்குக் கூட நல்லது செய்ய மனமில்லாத இந்தக் கல் முதலாளியைக் கும்பிட 12 லட்சம் பேர் காத்திருக்கிறார்களாம், இணைய தளம் மூலமாக விண்ணப்பித்திருக்கிறார்களாம். இப் போதே கோவிலுக்கு வருபவர்களை எப்படி கையாள வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தினர் மருத்துவர்கள் மற்றும் அரசு நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தி வருகிறார்களாம்.


மனிதாபிமானமற்ற பக்தி வியாபாரம் - வெட்கக்கேடு!


No comments:

Post a Comment