இலக்கை அடையும் வரை நம் ஓட்டம் நிற்காது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 14, 2020

இலக்கை அடையும் வரை நம் ஓட்டம் நிற்காது!

மாணவர்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் இயக்கம் திராவிடர் கழகம்!


திராவிட மாணவர் கழகத்தின் கலந்துரையாடலில் காணொலிமூலம் தமிழர் தலைவர் உரை



சென்னை, மே 13  இலக்கை அடையும் வரை நம் ஓட்டம் நிற்காது; மாணவர்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் இயக்கம் திராவிடர் கழகம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலிமூலம் திராவிட மாணவர் கழகத்தின் கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றும்பொழுது கூறினார்.


திராவிட மாணவர் கழகத்தின்


கலந்துரையாடல்


திராவிட மாணவர் கழகத்தின் கலந்துரையாடல், காணொலிமூலம் கடந்த 3.5.2020 அன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில்,காணொலியின்மூலம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:


நாம்  போராடியது தமிழகத்திற்கு மட்டுமல்ல, அத னுடைய விளைவு இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் பலனடையக்கூடிய அளவிற்கு இருந்தது.


பெரியாருடைய முயற்சிகள், 


திராவிட இயக்கத்தினுடைய முயற்சிகள்


அவர்கள் வடபுலத்தில் இருந்தாலும், கிழக்கே இருந்தாலும், மேற்கே இருந்தாலும் எல்லோருக்கும் பயன்படக்கூடிய அளவிற்குப் பெரியாருடைய முயற்சி கள்,  திராவிட இயக்கத்தினுடைய முயற்சிகள் இருந்தன.


எனவே, திராவிட இயக்கம், அதனுடைய தொடர்ச்சி, அந்தக் காலகட்டத்தில் வந்த பிறகுதான், இட ஒதுக் கீட்டினை கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்தி, இன்றைக்கு 69 சதவிகித இட ஒதுக்கீடு வரக்கூடிய அளவிற்கு வந்தது.


இதற்கிடையில் எத்தனைத் தடைகள் வந்தன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.


குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து


தந்தை பெரியார் போராடினார்


1935 ஆம் ஆண்டில், இந்தியைத் திணித்து, தமிழ்ப் பண்பாட்டைக் கெடுத்தது மட்டுமல்லாமல் ராஜகோபாலாச்சாரியார், 2500 ஆரம்பப் பள்ளிக் கூடங்களை மூடினார் என்று தந்தை பெரியார் அவர்கள் ஒவ்வொரு மேடையிலும் சொல்வார். பிறகு இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்த பிறகு, 6,000 பள்ளிக்கூடங்களை மூடினார். அரை நேரம்தான் பிள்ளைகள் படிக்கவேண்டும்; மீதி அரை நேரம் அப்பன் தொழிலை மகன் கற்றுக்கொள்ளவேண்டும். அதன் பெயர்தான் குலக்கல்வித் திட்டம்.


அந்தக் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து தந்தை பெரியார் போராடினார். திராவிடர் இயக்கம் போராடியது. இது பல பேருக்குத் தெரியாது.


ஏனென்றால், 1954 ஆம் ஆண்டிலேயே குலக் கல்வித் திட்டத்தை ஒழித்துவிட்டோம். இரண்டு ஆண்டுகள்கூட அந்தக் குலக்கல்வித் திட்டத்தை நீடிக்க விடவில்லை. பெரியாருடைய தொடர் போராட் டம்தான் அதற்குக் காரணம்.


பார்ப்பனர்கள்மட்டும்தான்அன்றைக்குப்படிக் கின்றவாய்ப்பைப்பெற்றார்கள்.அதன்காரணமாக, பொறியாளர்களாக, மருத்துவர்களாக, வெளிநாடு களுக்குச் சென்று வருபவர்களாக அவர்கள்தான் இருந்தார்கள்.


ஆகவே, அந்தக் காலகட்டத்தைத் தாண்டி, காம ராசரை ஆட்சிக்கு வந்து, ராஜகோபாலாச்சாரியார் மூடிய பள்ளிக்கூடங்களைத் திறந்தார். அப்பன் தொழிலை செய்யவேண்டும் என்ற குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார்.


மூன்றாவது தடை ஓட்டப் பந்தயம் இது. இதனால் தான், மருத்துவக் கல்லூரியில் நம் சமுதாயப் பிள்ளை கள் படிக்க முடிந்தது.


எஸ்.எஸ்.எல்.சி.யில் கூட


பன்னாடை முறை!


எஸ்.எஸ்.எல்.சி.யில் கூட செலக்சன் மெத்தட் என்று வைத்திருந்தார்கள். ‘‘பன்னாடை முறை'' என்று அன்றைக்கு விடுதலையில் எழுதினோம்.


இன்றைக்கு எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் அத்துணை பேரும் தேர்வு எழுதுகிறார்களே, அதுபோன்று அன் றைக்குக் கிடையாது. செலக்சன் மெத்தட் என்று ஒன்றை வைத்து, கடைசி நேரத்தில் அவர்கள் தேர்வு எழுத முடியாது என்று சொல்வார்கள். அந்த முறை தவறு என்று போராடியது இந்த இயக்கம்தான்.


அன்றைக்கு ஒரு லட்சம் பேர்கூட எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுத முடியாத ஒரு சூழல். இன்றைக்கு ஏழு லட்சம், எட்டு லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதக்கூடிய அளவிற்கு நம்முடைய பிள்ளைகளுடைய படிப்பு வளர்ந்திருக்கிறது என்றால், அதற்குக் காரணம் திராவிடர் இயக்கம்தான்.


குலக்கல்வித் திட்டம் தொடர்ந்திருந்தால், இன்றைக்கு நம்முடைய பிள்ளைகள் பொறியாளர்களாக, மருத்து வர்களாக வந்திருக்க முடியுமா? என்பதை நீங்கள் நன்றாக எண்ணிப்பார்க்கவேண்டும்.


அந்த நிலையை மாற்றவேண்டும் என்பதற்காக, இப்பொழுது நீட் தேர்வு போன்றவற்றைக் கொண்டு வருகிறார்கள்.


மறைமுக அஜெண்டாவை


வைத்திருக்கிறார்கள்!


இன்றைக்குநம்முன்நிறையசவால்கள்வந்திருக் கின்றன.குருகுலக்கல்வித்திட்டத்தைஅறிமுகப் படுத்தவேண்டும்என்றுசொல்கிறார்கள்.ஆர்.எஸ்.எஸ். திட்டமான இந்துத்துவா திட்டத்தை அமல்படுத்த வேண் டும் என்று மறைமுக அஜெண்டாவை வைத்திருக் கிறார்கள்.


இன்னொரு பக்கத்தில் பார்த்தீர்களேயானால், இப்பொழுது ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. அதுபற்றி நாம்தான் விடுதலையில் அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். பிறகுதான் மற்றவர்களும் அறிக்கைகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.


கலை அறிவியல் கல்லூரியில்கூட, நுழைவுத் தேர்வைக் கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எனவேதான், அதனையும் எதிர்த்து நாம் போராடவேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம்.


மாணவர்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் இயக்கம் திராவிடர் கழகம்!


ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் இயக்கம் இந்த இயக்கமாகும்.


கிராமப்புறத்தில் உள்ள பிள்ளைகள், ஆன்லைனில் எப்படி கல்வி கற்க முடியும்? அதற்குரிய வளர்ச்சிகள் அடையவேண்டும் என்பது ஒரு பக்கத்தில் இருந்தாலும், அதற்குரிய வசதி வாய்ப்புகள் இருக்கவேண்டும் அல்லவா!


நகர்ப்புறத்திலுள்ள பிள்ளைகள் வசதி வாய்ப் புள்ளவர்களாகவும், உயர்ந்த ஜாதியினர் போலவும் இருக்கிறார்கள். எந்த வசதியும் இல்லாத கிராமப்புற பிள்ளைகளுக்கு வீட்டிலேயே இடம் கிடையாது. அவர்களைப் போய் ஆன்லைனிலேயே படிக்க வேண்டும் என்று சொன்னால் எப்படி?


சாப்பாடு கிடைப்பதே பெரிய சிக்கல். அவர்களுடைய பெற்றோருக்கு வேலை வாய்ப்பு இல்லை. இந்தச் சூழ்நிலையில், கிராமப்புறப் பிள்ளைகள், அடித்தட்டில் இருக்கக்கூடிய மக்களுக்கு என்ன வாய்ப்பு என்பதைப் பற்றியெல்லாம் போராட வேண்டிய இயக்கமாக நம்முடைய இயக்கம் இருக்கிறது.


ஒவ்வொரு காலகட்டத்தில்,


ஒவ்வொரு வடிவத்தில்...


ஒரு பெரிய போராட்டம் என்னவென்றால், கல்வி எல்லோருக்கும் பொதுவுடைமை ஆவதா? அல்லது அக்கிரகாரத்திற்கு மட்டும் தனியுடைமை ஆவதா? என்கிற போராட்டம் மூன்று, நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடங்கிய போராட்டமாகும். ஒவ்வொரு காலகட்டத்தில், ஒவ்வொரு வடிவத்தில் மாறி மாறி அந்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


இன்றைக்கு நம்முடைய இயக்கம்தான், மாணவர் களுடைய நலனுக்காக அதனை தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறது. ஏனென்றால், கல்விதான் மாண வர்களுக்கு மிகவும் முக்கியம்.


டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மிகவும் அழகாக சொன்னார்,  உலகத்தில் எத்தனையோ கொடுமைகள் இருக்கின்றன, மத கொடுமைகள் இருக்கின்றன என்று சொன்னாலும்கூட, பெரும் பாலான மக்களைப் படிக்கக் கூடாது என்றும், காதில் கேட்டாலே ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்றும், நாக்கை அறுக்க வேண்டும் என்றும் சொன்ன ஒரு கொடுமையான சனாதனம் - ஹிந்து மதம் என்று சொல்லக்கூடிய பார்ப்பனீய மதம் - வேத மதம் - புரோகித மதம் வேறு கிடையாது.


எனவே, இதற்கு ஒரு மத அடிப்படையை, வருணாசிரம தர்ம அடிப்படையைக் கொண்டு வந்து வைத்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு இருந்தார்கள்.


எனவே, ஜாதி ஒழிப்பினுடைய ஓர் அம்சத்தில் பலன் பெறக்கூடியது மிக முக்கியமானது கல்வி வளர்ச்சி. ஆகவே, கல்வி வளர்ச்சியடைய வேண்டுமானால், வருண தர்மத்தை அழிக்கவேண்டும். வருண தர்ம உணர்வுகள் இருந்தால், கல்வியை எல்லோரும் பெறக் கூடாது; உயர்ந்த ஜாதிக்காரர்களாகிய பார்ப்பனர்கள் மட்டும்தான் பெற முடியும். பிறவியில் உயர்ந்தவர்கள் என்று கருதக்கூடிய ஆண்கள் மட்டும்தான் பெற முடியும் என்ற நிலை இருந்தது.


1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில், முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டின் தீர்மானம்


இன்றைக்கு அந்நிலை மாறி, பெண்கள் படித்தி ருக்கிறார்கள்; அவர்கள் உத்தியோகத்திற்குப் போயிருக் கிறார்கள் என்றால், அதற்கு என்ன காரணம்? நம் முடைய இயக்கம்தான் காரணம். பெண்கள் காவல் துறையில் பணிக்குச் செல்லவேண்டும்; இராணுவத்தில் பணியாற்றச் செல்லவேண்டும் என்று நாமெல்லாம் பிறக்காத காலத்தில், 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில், முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில் தீர்மானம் கொண்டு வந்தார்கள்.


எல்லோருக்கும் கல்வி, உடை எல்லாவற்றையும் கொடுக்கவேண்டும் என்று சொன்னார்கள்.


நீதிமன்றங்களும் அவர்களுக்குச்


சாதகமாக இருக்கின்றன!


திராவிட இயக்கக் காலத்தில், அண்ணா அவர் களுடைய காலத்தில், கலைஞர் அவர்களுடைய காலத்தில், அதற்குப் பிறகு திராவிட இயக்கத்தில் ஏற்பட்டிருந்தாலும், அது எம்.ஜி.ஆர். ஆட்சியாக இருந்தாலும், ஜெயலலிதா ஆட்சியாக இருந்தாலும், கல்வியில் அவர்கள் குறிப்பாக எதைச் செய்தாலும், நாம் அதில் கவனமாக இருந்தோம். ஒவ்வொரு ஆட்சி வரும்பொழுதும், அவர்கள் கல்விக் கொள்கையில் இருந்து நகர்ந்தால், உடனடியாக அதனைச் சுட்டிக்காட்டுவதில் திராவிடர் கழகம் ஒரு முன்னோட்டமாக இருந்துகொண்டிருக்கின்ற காரணத்தினால்தான், நீதிமன்றங்களில் வழக்கு உள்பட போட்டிருக்கிறோம். இட ஒதுக்கீட்டிற்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றோம். உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்காக முன்னுரிமை கொடுக் கிறார்கள். நீதிமன்றங்களும் அவர்களுக்குச் சாதகமாக இருக்கின்றன.


‘நீட்' தேர்வின் கொடுமையை எதிர்த்து...


‘நீட்' தேர்வின் கொடுமையை எதிர்த்து நம்மு டைய இயக்கம்தான் தொடர்ந்து போராடிக் கொண் டிருக்கின்றது.


‘ஜூனியர் விகடன்' இதழில், நீட் தேர்வில் எவ் வளவு ஒழுக்கக்கேடான, முறைகேடுகள் நடைபெற்று இருக்கின்றன என்பதைப்பற்றியெல்லாம் சுட்டிக் காட்டியிருக்கிறது.


அப்படி இருந்தபொழுதும், அவர்கள் மிகப்பெரிய அளவில் ஊழலை ஒழித்துவிட்டதுபோன்று, அவர் களுக்குத்தான் தகுதி, திறமை இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.


நீட் தேர்விற்காக தயாராகிறோம், அதற்குரிய பாடங்களைப் படிக்கிறோம் என்று சொல்பவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டும்தான் மருத்துவர்களாகக் கூடியவர்கள் இருக்கிறார்களே தவிர, மற்ற பாடங்களான கெமிஸ்ட்ரி போன்றவற்றிற்குக்கூட அவர்கள் பதில் சொல்லக்கூடிய அளவிற்கு அவர்களுடைய கல்வித் தரம் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.


ஆகவேதான், நம்முடைய போராட்டம் என்பது ஒரு தொடர் போராட்டமாக, தொடர் ஓட்டப் பந்தயத்தில் தடை ஓட்டப் பந்தயத்தைப்பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஒரு தடையைத் தாண்டி, இன்னொரு தடை, அதைத் தாண்டினால், இன்னொரு தடை என்ற அளவில் இருக்கும்.


இலக்கை அடையும் வரையில்


நம்முடைய ஓட்டம் நிற்காது


ஆகவே, அந்தத் தடைகளையெல்லாம் நாம் தாண்டி, இன்றைக்கு ஓடிக் கொண்டிருக்கிறோம். இலக்கை அடையும் வரையில் நம்முடைய ஓட்டம் நிற்காது.


தந்தை பெரியார், கல்வி வள்ளல் காமராசர், அண்ணா, கலைஞர் அதேபோல, மற்ற மற்ற வாய்ப்புகள் - திராவிட இயக்கத்தினுடைய தொடர் தொண்டு - திராவிட இயக்கத்தின் முன்னோடிகளாக இருக்கக்கூடிய சர் பிட்டி தியாகராயர், டாக்டர் நடேசனார் போன்றவர்கள், சென்னை திருவல்லிக்கேணியில் விடுதிகள் நடத்தி, பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு சாப்பாடு போட்டார்கள்.


அங்கே தங்கி, உணவருந்தி, படித்தவர்கள் உலகப் புகழ் பெற்ற பொருளாதார நிபுணர்களாக ஆர்.கே. சண்முகம் போன்றவர்கள் வந்தார்கள் என்றால், எவ்வளவு பெரிய கல்வித் தொண்டை திராவிட இயக்கம் நடத்தியிருக்கிறது என்பதைப் பாருங்கள்.


ஆகவேதான், தந்தை பெரியாருக்கு என்றைக்கும் அரசியல் பார்வை கிடையாது. சமுதாயப் பார்வைதான். அனைவருக்கும் அனைத்தும் என்று சொல்கின்ற நேரத்தில், கல்விதான் அடிப்படையானது.


பகுத்தறிவுச் சிந்தனை என்பதற்கு, எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும் என்று சொல்லும் பொழுது, கல்வி வாய்ப்புகள் வரவேண்டும்.


மாணவர்கள் படித்து முடித்த பிறகு, அவர்களுக்கு உத்தியோகம் வேண்டும். அந்த உத்தியோகம் எல்லோருக்கும் சம பங்கில் இருக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியம்.


இப்பொழுதுகூட கிரிமீலேயர் என்ற ஒன்று, தமிழ் நாட்டைத் தவிர எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது.


69 சதவிகித இட ஒதுக்கீடு கிட்டத்தட்ட


30 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறது


இந்தியா முழுவதும் 69 சதவிகித இட ஒதுக்கீடு கிடையாது. பல மாநிலங்களில் இட ஒதுக்கீடே கிடை யாது. ஆனால், தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறது.


இந்தச் சாதனை யாருடைய சாதனை? திராவிட இயக்கத்தினுடைய சாதனையாகும். குறிப்பாக, தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு, அன்னை மணியம்மையார் அவர்களுக்குப் பிறகு, திராவிடர் கழகத் தொண்டர்களுக்கு, இவர்களுடைய வலிமை, தியாகம், மாணவர்களுக்காக அதே பாதை - அதே கொள்கை - அதே தலைவர்களுடைய வழிகாட்டுதல்கள் - ஆகவே, இவையெல்லாம் வெற்றி பெறக்கூடிய ஒரு நெடிய போராட்டமாக இருக்கிறது.


உங்களுக்காகப் போராடுவதற்கு


திராவிடர் கழகம் இருக்கிறது!


எனவேதான் நண்பர்களே, போராட்டக் களத்திலே நாங்கள் இருக்கிறோம்; உங்களுக்காகப் போராடுவதற்கு திராவிடர் கழகம் இருக்கிறது. ஒத்த கருத்துள்ளவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து நாங்கள் போராடுவதற்குக் களம் அமைக்கவிருக்கிறோம். அந்தப் போர் என்பது ஒரு நெடிய போராகும். நீங்கள் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டியது உங்களுடைய கல்வியில் கவனம் செலுத்துங்கள். பெற்றோரிடம் நீங்கள் அன்பு காட்டுங்கள். பெற்றோருடைய தியாகம்தான் உங்களை வாழ வைக்கிறது. உங்களுடைய வழிகாட்டிகளாக இருக்கக்கூடிய ஆசிரியர்கள், நண்பர்கள் அவர்களிடம் நல்ல வண்ணம் பழகுங்கள்; எளிமையாகப் பழகுங்கள். எந்தவிதமான பாலின வேற்றுமைகளுக்கும், பாலின வக்கிரங்களுக்கும் இடமில்லாதவர்கள்தான் நம்மு டைய திராவிட மாணவர்கள் என்ற அந்த உணர்வை நீங்கள் உருவாக்கவேண்டும்.


ஏனென்றால், இப்பொழுது இளைஞர்கள் சிலர், தவறான வழியில் அவர்களுடைய சிந்தனைகள் செல்கின்றன. தேவையில்லாத எத்தனையோ நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அந்தச் செய்திகள் அருவருக்கத்தவையாக இருக்கின்றன.


கட்டுப்பாடு மிகுந்த இயக்கம்


திராவிடர் கழகம்!


ஆனால், நம்முடைய மாணவச் செல்வங்கள், அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் என்பதுதான் நமக்கு இருக்கின்ற பெருமையாகும். காரணம், இந்த இயக்கம் கட்டுப்பாடு மிகுந்த இயக்கமாகும்.


இந்த இயக்கம் ஒழுக்கத்தில் தலைசிறந்த இயக்கமாகும்.


மாணவர்களான உங்களுக்குத் தலையாய கடமை என்னவென்றால், படிப்புதான். ஏனென்றால், எளிய குடும்பங்களிலிருந்து வந்திருப்பவர்கள் நாம்.


ஓர் உத்வேகம்தான் என்னை ஒரு சிறந்த மாணவனாகக் கல்வித் துறையில் ஆக்கியது


என்னை எடுத்துக்கொண்டால், நான்தான் எங்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரி. அதுபோன்று உங்களில் பலரும் இருப்பீர்கள்.


இயக்கப் பணிகள், போராட்டங்கள் என்று எவ் வளவோ இருந்தாலும், படிப்பு என்று வருகின்றபொழுது, நாம் மற்றவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று, என்னோடு படித்த பார்ப்பனர்களைத் தாண்டவேண்டும் என்ற அந்த ஓர் உத்வேகம்தான் என்னை ஒரு சிறந்த மாணவனாகக் கல்வித் துறையில் ஆக்கியது. எனக்காக இதை நான் சொல்லவில்லை, நீங்கள் அதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் சொல்கிறேன்.


மாணவர்களாகிய நீங்கள் கல்விக்கும், கட்டுப்பாட்டிற்கும் முன்னுரிமை கொடுக்கவேண்டும்!


எனவேதான், எதற்கு முன்னுரிமை என்று பார்க் கின்றபொழுது, நீங்கள் கொடுக்கின்ற முன்னுரிமை, படிக்கின்றபொழுது, உங்களுடைய கல்விக்கு. இரண்டாவது முன்னுரிமை, கட்டுப்பாடு, ஒழுக்கத்திற்கு. மூன்றாவது முன்னுரிமை, நம்முடைய மாணவர்களுக்கு, ஆடம்பரத்தில் நாட்டம் செல்லக்கூடாது. எளிமையாக இருக்கவேண்டும்; தேவையற்ற செலவுகள், தேவையற்ற ஆடம்பர உணவுகள்,  அல்லது பெற்றோருக்குச் சுமையாக இருப்பது. இவையெல்லாம் தேவையற்றது. இப்போது நாம் வீட்டிற்குள் அடங்கியிருக்கிறோம் என்று சொல்லும்பொழுது, எத்தகைய உணவைச் சாப்பிடுகிறோம்? வீட்டில் சமைத்த உணவைத்தான் சாப்பிடுகிறோம். அது ஆரோக்கிய வாழ்விற்கு உகந்தது. உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்காதது.


இளமையில், தனித்தனியாக இருக்கும்பொழுது நன்றாக இருப்பார்கள். ஆனால், நான்கு பேர் சேரும் பொழுது, குழு மனப்பான்மை ஏற்பட்டால், அது நல்ல விஷயத்திற்குப் பயன்படவேண்டும்.


அந்த வகையில், மாணவச் செல்வங்களாகிய உங்களை சந்திப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.


மாநாடு, கருத்தரங்கம் போன்றவற்றையெல்லாம் நிலைமை சீரானவுடன் ஏற்பாடு செய்யலாம்.


இந்தக் காலகட்டத்தில், கரோனா தொற்று ஏற்படு வதால், கட்டுப்பாடு காக்கவேண்டும். நம்மைத் தனி மைப்படுத்திக் கொள்வதுதான் மிகவும் நல்லது. ஏனென் றால், இதற்கு மருந்து கிடையாது. கிட்டத்தட்ட நாம் பல தடைகளைத் தாண்டி வந்து கொண்டிருக்கின்றோம். இன்னும் சில நாள்கள் கட்டுப்பாடாக இருங்கள்; படிப் பிற்கு முன்னுரிமை கொடுங்கள்; அதேபோல உங் களுடைய வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதவிகரமாக இருங்கள் என்று சொல்லி, தீர்மானங்களை நிறைவேற்றி, உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.


நன்றி, வணக்கம்!


இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்  மாண வரணியினரின் கலந்துரையாடலில் காணொலிமூலம் உரையாற்றினார்.


No comments:

Post a Comment