கேள்வி 1: மன்னார்குடியில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், தூய்மைப் பணியாளர்களுக்கு உதவி செய்கிறோம் என்னும் பெயரில் அவர்களை வரிசையாக நிறுத்திவைத்து, ஜீயர் காலில் விழ வைத்துள்ளது எதைக்காட்டுகிறது?
- குடந்தை க.குருசாமி, கும்பகோணம்
பதில் : ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கிளைகளில் ஒன்றான விசுவ இந்து பரிஷத் என்ற அமைப்பு, உழைக்கும் மக்களை பார்ப்பனருக்கு அடிமையாக்கும் சமூக இழிவு பரப்பும் அமைப்பே என்று நாட்டுக்கு உணர்த்துகிறது.
தந்தை பெரியார் கேட்டார் முன்பு - “தூய்மைப் பணியாளர்கள் இல்லாவிட்டால் இன்றைய நிலையில் நாடும் மக்களும் என்ன ஆவர்? ஜீயர் பதவி இல்லாவிட்டால் என்ன நட்டம்? லாபமே - மானமும் அறிவும் மிச்சமாகும்!”
கேள்வி 2: சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது என்பது போல் அய்யா உயர்த்திப் பிடித்த சமூகநீதிக்கு அடிமேல் அடி விழுகிறதே? தனியார்த் துறை மற்றும் மத்திய உயர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு கேட்டு நாம் போராட வேண்டிய நிலையில், உச்சநீதிமன்றம் மூலம் இப்போது இருக்கிற இட ஒதுக்கீட்டுக்கே ஆபத்து வரும் போலிருக்கிறதே?
- செல்வம், பஹ்ரைன்
பதில் : நமக்கு தொடர் பணி உள்ளது; ஆயத்தமாவோம். ஆரியம் அதன் விஷத்தைக் கக்குகிறபோது அதனை மாற்று முறி மருந்தாக கழகம் தானே நின்று வென்றெடுத்துக் காட்ட வேண்டும் - ஆயத்தமாவோம்!
கேள்வி 3: பொருளாதாரப் பாடப்பிரிவில் முதுகலையில் தங்கப்பதக்கம் பெற்றவர் என்ற முறையிலும், சமுதாய இயக்கத்தின் தலைவர் என்ற முறையிலும் ஊரடங்கு தளர்வுக்குப் பின்னால் இந்தியாவின் பொருளாதார அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? - இரா நீலகண்டன், பேராவூரணி
பதில் : அடித்தளத்து மக்களுக்குப் பயன்படும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அதன்மூலம் அவர்களுக்கு பணத்தை - குறைந்தது 5000 முதல் 10,000 வரை பஞ்சமில்லாமலே புழங்கவிட்டால், பணம் சுற்றி வரும் - பலன் அளிக்கும்! சிறு, குறு தொழில்களின் முடக்கம் கூடவே கூடாது!
கீன்ஸ் (Keynes) என்ற பிரிட்டிஷ் பொருளாதார அறிஞர் எளிமையாகச் சொன்னார். “ஒருவருடைய செலவு மற்றவரின் வருமானம்.” அரசுகள் செலவிட வேண்டும். எளிய, நடுத்தர மக்களுக்கென்று 100 நாளுக்கு மேல் 200 நாட்கள் பணிகளைப் பெருக்கி - wages- சம்பளத்தை தாராளமாகப் பெருக்கினால் - வருவாய்க்குப் பல புதிய வழிமுறைகள் அரசுக்கு உண்டு - பொருளாதாரம் சீரடையும் சில மாதங்களில்!
கேள்வி 4: அன்னை நாகம்மையாரின் பிறந்தநாள் குறித்த குறிப்பு எதுவும் உள்ளதா? கிடைக்கவில்லையெனில் அவருடைய நினைவு நாளை சுயமரியாதை இயக்கப் பெண்களை நினைவுகூரும் வகையில் நாம் நடத்திடலாமா? - தென்றல், ஆவடி
பதில் : அன்னை ஈ.வெ.ரா. நாகம்மையாரின் நினைவு நாள் உறுதியான நாள் என்பதால், நிச்சயம். மகளிர் உரிமை போராட்ட நாளாக ஆண்டுதோறும் மே மாதத்தில் கொண்டாடலாமே! இந்த ஆண்டே - ஊரடங்கு இருந்தாலும்கூட - காணொலி மூலம் நானே துவக்குகிறேன் - மகளிர் அணி மட்டுமல்லாது மற்ற தோழர்களும் இணைந்து நடத்திடலாம்!
மே 11 - நினைவு நாள். அன்று முதல் ஒரு வாரம் 18ஆம் தேதி வரை ஆங்காங்கு காணொலிக் கலந்துரையாடல் மூலம் நடத்திடலாம் - மகிழ்ச்சிதானே? அணியமாவோம்!
கேள்வி 5: 'கடவுள் என்பது மனிதனின் கற்பனையே' என்பதை பள்ளிச் சிறுவர்களும் புரிந்து கொண்ட, இந்நாளில் சில ஏடுகள் 'பக்தி மலர்' வெளியிடுவது பற்றி?
- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்.
பதில் : வியாபாரம் - பக்தி வியாபாரம் லாபகரமானது. ‘நாய் விற்ற காசு குறைக்காது! கருவாடு விற்ற காசு நாறாது!’ என்பதால்!
கேள்வி 6: தமிழ் மொழி ஆர்வலர், கலை இலக்கியவாதி என்பதற்கு அடையாளமாக தங்களின் பெயருக்கு முன்/ பின் பாரதி என்று போட்டுக் கொள்வதும், வரும்படி புனைப்பெயர் சூட்டிக் கொள்வதுமாக பல பேர் இருக்கின்றனரே? இது கம்யூனிஸ்ட் தோழர்களிடையே அதிகம் காணப்படுகிறதே? - மன்னை சித்து, மன்னார்குடி - 1
பதில் : அவர்களில் பலரும் பாரதியை மட்டும் உயர்த்தி, பாரதிதாசனை ஏற்க மறுத்த அந் நாள் நிலையில் அப்படி! அந்த மாயையில் இப்போது பெரிதும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும், பாரதி என்பது வட சொல்; கற்றிடும் அமைப்பு என்பது உள்ளிட்ட பல பொருள்கள் அதற்கு உண்டு. அதனால் பிரச்சார் பாரதி. சமஸ்கிருத பாரதி என்று பல இடங்களில் வழங்கப்படுகிறது.
கேள்வி 7: பெரியார் வாழ்வில் உடன் பயணித்தவர்களின் அளப்பரிய தியாகங் களைத் தெரிந்துகொள்ளவும் ஆவணப்படுத்தவும் ஏதுவாக தினம் ஒருவர் என்று தாங்கள் எழுதினால் எங்களுக்கெல்லாம் பேருதவியாக இருக்கும்.
- ச.கண்ணன், திருவையாறு ஒன்றியம்.
பதில் : நிச்சயம் எழுதுவன். ‘உண்மை’யில் முன்பே பலரைப் பற்றியும் எழுதி உள்ளேன். அவசியம் அந்த ‘கடலிலும்‘ மூழ்கிடலாம். ஆயத்தமாக இருங்கள்!
கேள்வி 8: கரோனாநெருக்கடி காலத்திலும் வரும் கல்வி ஆண்டில் புதிய கல்விக் கொள்கை நாடு முழுதும் அமலுக்கு வருகிறது என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறுகிறாரே? - வெங்கட. இராசா, ம.பொடையூர்
பதில்: கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ் ஆபத்தை விட, மோசமான ஆபத்துகளை தன்னுள் பதுக்கிக் கொண்டுள்ளது தான் புதிய கல்விக் கொள்கை. அதை எப்பாடுபட்டேனும் போரிட்டு ஒழித்தே தீருவோம்!
கேள்வி 9: கடுமையான நிதி நெருக்கடியால் தான் தமிழக அரசு மதுக் கடைகளைத் திறக்க வேண்டி வந்துள்ளதாக சொல்லப்படுகிறதே, நிதி நெருக்கடியைச் சமாளிக்க வேறு வழி இல்லையா? - செல்வ.வேந்தன், செக்காணூரணி
பதில் : 25000 கோடி முதல் 30 ஆயிரம் கோடி கூடுதலாக வருவாய் வர திட்டம் தரும் பொருளாதார நிபுணர்களுக்குத் தமிழ்நாட்டில் எந்த பஞ்சமும் இல்லை. ஆனால், அரசின் நிலை - துணிந்து சிந்திக்க மறுக்கும் அறிவின் சோம்பல்!
கேள்வி 10: சங்கராச்சாரியார்களும், ஜீயர்களுமே தனிக்கடை வைத்திருக்கும் போது, ஒரே மதம், ஒரே நாடு என்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்.
பதில் : இந்தக் கேள்விக்குப் பதிலாக, ‘காலந்தோறும் பிராமணீயம்’ நூல் ஏழாம் தொகுதியில், முன்னாளில் ஜெயலலிதா அவர்களை துக்ளக் வார ஏட்டில் தொடர் கட்டுரை எழுத வைத்த “சோ” பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, அத் தொடரில் ஜெயலலிதா கேட்ட கேள்வி ஒன்றைச் சுட்டிக் காட்டியுள்ளார் பேராசிரியர் அருணன்.
அதில் அவர் (ஜெ) கேட்கிறார்: ‘நான் அய்யங்கார் குடும்பத்தைச் சேர்ந்தவள், என் தந்தையார் வடகலை - என் தாயார் தென்கலை. நான் எந்த நாமம் போடுவது?’ என்ற கேள்வியை, ஒரு வழக்கில் காஞ்சிபுரம் யானைகளுக்கு வடகலை நாமமும் தென்கலை நாமமும் மாறி மாறி போடத் தீர்ப்பளித்துள்ளது பற்றி எழுதியுள்ளாரே! (பெட்டிச் செய்தி காண்க.) அதற்கு ஒரே மதம் என்று கூறுவோர் பதில் அளிக்கட்டும்!
No comments:
Post a Comment