அ.சி.கிருபாகரராஜ்
பேரண்ட அறிவியலைப் பொருத்தவரை புவியின் ஒவ்வொரு நாளும் புவி நாள் என்று தான் கணக்கிடப்படுகிறது. ஆனால், மனிதர்களுக்குத் தாங்கள் புவியில் வாழ்வதை நினைவூட்டி, அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அறிவுறுத்த வேண்டியிருக்கிறது. அதனால் ஏப்ரல் 22 - "புவி நாள்" என்று கொண்டாடப்படுகிறது.
நாம் வாழும் புவிக்கான நாள் நம்மைக் கடந்து சென்றிருக்கிறது. புவியில் உள்ள அனைத்து நாடுகளிலும் மனிதர்கள், கரோனா நோய் தொற்றால் அல்லலுற்றுக் கிடக்கும் நிலையில், புவி எவ்வாறு இச்சூழலை எதிர்கொண்டு கடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிவதும் இங்கு அவசியமாகிறது.
2016 ஆம் ஆண்டு, இதே புவி நாளில் தான் UNFCC உறுப்பு நாடுகள் ஒன்றுகூடி, நியூயார்க் நகரில், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திடத்தொடங்கின.
டிசம்பர் 12, 2015 ஆம் ஆண்டு, பாரிஸ் நகரில் அவ்வொப்பந்தம் உருவாக்குவதற்கான முதல்அமர்வு நிகழ்ந்தது. அதில் பங்கேற்ற UNFCC எனப்படும் அய்க்கிய நாடுளின் பருவநிலை மாற்ற கட்டமைப்புச் சார்ந்த உறுப்பு நாடுகள் பருவநிலை மாற்றத்தை திறம்பட எதிர்கொள்வது, பருவநிலை மாற்றத்தால் எதிர் கொள்ளவிருக்கும் இக்கட்டான சூழலைச் சமாளிக்கத் தேவையான கட்டமைப்புகளை அமைப்பது, இதனால் முதலில் பாதிக்கப்படக்கூடிய நாடுகளை அவற்றிலிருந்து மீட்பது, பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடுகள் அத்தகைய அழிவை எதிர்நோக்கும் நாடுகளுக்கும் (பெரும்பாலும் தீவுகள் - மாலத்தீவு, நவ்ரு) மற்றும் வளரும் நாடுகளுக்கும் பொருளாதார மற்றும் தொழி ல்நுட்ப உதவிகளை வழங்குவது குறித்தும் தீர்மானிக்க முதன்முறையாக ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க தீர்மானித்தன.
அத்தகைய சீரிய நோக்கங்களுடன் உருவாக்கப்பட்ட பாரிஸ் ஒப்பந்தம், 2016 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி (Double threshold) என்ற அடிப்படையில், உலகளவில் 55% பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் 55 நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாளிலிருந்து நடைமுறைக்கு வந்தது.
அவ்வாறு நடைமுறைக்கு வந்த ஒப்பந்தத்தின் முதன்மை இலக்காக, இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் ளாக, தொழிற்புரட்சி நிலைக்கு முன்னதாக (Pre - Industrial levels) இருந்த உலக வெப்ப நிலையை விட 2 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க முயற்சிக்க வேண்டும் என்றும், மேலும் அதை 1.5 டிகிரி செல்சியஸாக குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக நாடுகள் முனைய வேண்டும் என்றும் குறிப்பிட்டது.
முக்கிய அம்சமாக, நடைமுறைக்கு வந்த அன்றி லிருந்து மூன்று ஆண்டுகளுக்கு, எந்த நாடும் ஒப்பந்தத் திலிருந்து வெளியேற முடியாது என்ற அம்சத்தையும் அமைத்திருந்தனர்.
எனினும், உலகில் வல்லரசாக தன்னை அடையாளப் படுத்திக் கொண்டு பெரியண்ணன் போக்கைக் கையாண்டு வரும் (தற்பொழுது அந்நிலையில் மாற்றம் காண்கிறது) அமெரிக்கா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அடுத்த ஆண்டே 2017, ஜூன் 1-இல், டொனால்ட் டிரம்ப், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகப் போவதாக அறிவித்தார்.
உலகளவில் பசுமை இல்ல வாயுக்களை அதிகளவில் வெளியிடும் நாடுகளில், சீனாவுக்கு அடுத்ததாக இருக்கும் நாடு, வெளியேறுவதற்கு காரணமாக நியாயமற்ற முறையில் அமெரிக்காவுக்கு பெருமளவிலான பொருளாதாரச் சுமை இருப்பதாகவும், வேகமாக வளர்ந்து வரும் நாடுகளான சீனா, இந்தியா போன்ற நாடுகளுடன் போட்டியிடும் திறன் குறைவதாகவும், சில நாடுகளின் வளர்ச்சிக்கு அமெரிக்க வளங்கள் பயன்படத்தக்க பக்கச் சார்பான ஒப்பந்தம் எனக் கூறினார். இதனால், உலக நாடுகளின் கடும் விமர்சனத்தையும் பெற்றார்.
இவ்வாறு உலகம் உய்க்க, வருங்கால சந்ததியினர் வாழ தகுந்த நிலையை உறுதிபடுத்த, பரந்த நோக்கில் உலக நாடுகள் எல்லாம் ஒன்றிணைந்து தொலைநோக்குத் திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டிய தருணத்தில், "அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே" என்ற ஒற்றை முழக்கத்துடன், குறுகிய பார்வையில் சிந்தித்து பூமிக்குத் தவறிழைத்தார். ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதன் நீட்சியாக, பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த நாளில் இருந்து மூன்றாண்டுகளுக்குப் பின்னர், கடந்த 2019, நவம்பர் 5 ஆம் தேதி அன்று பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அதிகாரப் பூர்வ முறையில் கடிதத்தின் வாயிலாக அய்க்கிய நாடுகள் அவைக்கு அறிவித்தனர்.
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின்படி, புவி வெப்ப மயமாதலை மிகத் தீவிரமாக 1.5 டிகிரி செல்சியஸ் வரை குறைத்தாலும், அது பருவநிலை மாற்றத்தை மட்டுப் படுத்த போதுமானதாக அமையாது என்றும், அந்த ஒப்பந்தத்தின்படியே 2020 நவம்பர் முதல் ஒவ்வொரு அய்ந்து ஆண்டுகளுக்கொரு முறை, உறுப்பு நாடுகள் மேற்கொண்ட மாசு குறைப்பு நடவடிக்கைகளைச் சமர்ப் பித்து, அதைக் காட்டிலும் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட முனைப்புக் காட்ட வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் கூறிவருகின்றனர். ஏனெனில், தற்பொழுதே உலக வெப்பமானது 1800-களின் நிலை அடிப்படையில், 1 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளதாகவும், அது இந்நூற் றாண்டின் இறுதியில் சில டிகிரிகள் உயரவும், கடல்நீர் மட்டம் சுமார் 1 மீட்டர் வரை உயரக்கூடிய பெரும் ஆபத்தும் உள்ளதாக வலியுறுத்தி வருகின்றனர்.
இவ்வாறு புவி வெப்பமயமாவதில் இருந்து மீட்டு, எதிர்காலத் தலைமுறையினருக்குப் பாதுகாப்பான வாழ்விடத்தை உறுதிப்படுத்த வேண்டிய நிலை மறந்து, தான்தோன்றித்தனமாக மனிதன் செயல்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் தான், இயற்கை, தன்னை மீட்டு தன்னகத்தே உய்த்துக் கொண்டிருக்கும் உயிர்கள் இனியும் உயிர்ப்புடன் நிலைத்திருக்க, தன்னையே தகவமைத்துக் கொள்ள முற்பட்டுவிட்டது போலும்.
ஆம். இவ்வாண்டு அதே பூமி தினமான ஏப்ரல் 22 அன்று, உலகமே செயலற்று நகராமல், தனது பொருளாதார ஓட்டத்தை நிறுத்திக்கொண்டிருக்கும் வேளையில், பூமி தனது மறுசீரமைப்பு பணியில் மும்முரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது. கரோனா (COVID-19) நோய்த்தொற்று பரவல் காரண மாக உலக நாடுகள் யாவும் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தியிருக்கக் கூடிய சூழலில், மனிதர்கள் யாவரும் வீடடங்கி இருக்கின்றனர். சாலை, இரயில் மற்றும் விமானப் போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் உலகளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அளவு பாரிஸ் ஒப்பந்தத்தின்படி ஒவ்வொரு நாடும் தனக்கே உரிய வகையில் பசுமை இல்ல வாயுக்களை வெளியிடக்கூடிய பங்கைக் குறைத்து இலக்கை அடையவேண்டிய அளவைக் காட்டிலும் (NDC - National Determined Contribution) வெகுவாகக் குறைந்திருக்கிறது.
உலகளாவிய கோவிட்-19 பாதிப்பு, மனிதகுல வரலாற்றில் மறக்க, மறைக்க முடியாத இழப்புகளை ஏற்படுத்தியிருக்கக்கூடிய அதே வேளையில், தொழிற் புரட்சி தொடங்கிய காலந்தொட்டு, இயற்கைக்கு மனிதன் ஏற்படுத்திய பாதிப்புகளுக்கான பதில் நடவடிக்கையாக, இன்றைய நிலை அமைந்துவிட்டதை உணரமுடிகிறது. இயற்கை தன்னைத் தானே சுத்திகரித்துக்கொள்ளும் விளைவை, உலகம் எங்கும் காணமுடிகிறது, உணரமுடிகிறது.
சீனாவின் வூஹான் மாகாணத்தில், கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல், (அமெரிக்கா, பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அதிகாரப் பூர்வமாக விலகிய ஒரு மாதத்தில்) ஜனவரி மாதத்தில், உலக சுகாதார அமைப்பால் உலகம் முழுவதும் சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது (Public emer gency of international concern). பின்னர் பிப்ரவரி 20 ஆம் தேதி, உலக சுகாதார அமைப்பால் (WHO) கோவிட்-19 என பெயர் சூட்டப்பட்டது. உலகளவில் அனைத்து நாடுகளிலும் பரவிய சூழலில், அதை தவிர்க்க அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கையான ஊரடங்கு மூலம் மக்கள் நடமாட்டம் மிகப்பெருமளவில் தடைபட்டது.
நாசா மற்றும் அய்ரோப்பிய விண்வெளிக்கழகத்தின் (ESA) செயற்கைக்கோள் படங்கள் வாயிலாக வெளிப் பட்டுள்ள தரவுகள் மூலம், சீனாவின் வூஹான் மாகாணத்தில், NO2 அளவு கடந்த 2019 ஆம் ஆண்டைக் காட்டிலும் 40 விழுக்காடு குறைந்து காணப்படுகிறது. வாகனப் புகை, தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் புகை இன்மையால், சீனாவின் பிற மாகாணங்களிலும் ஊரடங்கினால் பெரிதும் குறைந்திருக்கிறது.
குளோபல் கார்பன் பிராஜெக்ட் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ள 'தி கார்டியன்' இதழ், பொதுவாக இவ்வாண்டு வாக்கில் கரியமில வாயுவின் வெளியேற்றம் மிகுந்திருக்க வேண்டிய நிலையில், தற்பொழுது யாரும் எதிர்பாராத விதமாக கோவிட்-19 பரவலால் ஏற்பட்ட உலகளாவிய சமூக, பொருளாதார இயக்கமின்மையால், 5 விழுக்காடு குறைந்திருப்பதாகவும், அது 2.5 பில்லியன் டன்கள் அளவு CO2 வாயு புவி வளிமண்டலத்தில் வெளியாவது தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
உலகளவில் பசுமை இல்ல வாயுக்களில் மிகப்பெரும் பங்கு வகிக்கும் ஒன்றான மனித செயல்பாடுகளால் வெளியேற்றப்படும் கரியமில வாயு அளவில் முதன்மை யாக விளங்கும் சீனா, தற்பொழுது நிலக்கரி மற்றும் எண்ணெய் பயன்பாட்டில் 25% குறைந்துள்ளதாகவும், அதனால் 100 டன் கரியமில வாயு வளிமண்டலத்தில் வெளியாவது தடுக்கப்பட்டுள்ளதாகவும், இது உளகள வில் 6% என்றும் சீனாவின் ஆற்றல் மற்றும் காற்று ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கிறது. கரியமில வாயு வெளியிடலில் மிகப்பெரும் பங்காற்றுவது விமானப் போக்குவரத்து. அமெரிக்காவில் 2018 ஆம் ஆண்டு, மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின்படி, ஆண்டொன்றுக்கு 65 மில்லியன் தொலைதூர விமான போக்குவரத்து மேற்கொள்ளப்படுவதாகவும், அவற்றில் சுமார் 67 விழுக்காட்டினர் மேற்கொள்ளும் பயணங்கள் முக்கியத் தேவைகளுக்கானது அல்ல என்பதும் தெரியவந்துள்ளது. இத்தகைய தேவையற்ற பயன்பாடுகளை உள்ளடக்கிய காலச்சூழலில்தான் தற்பொழுதைய நிலவரப்படி, அன்றாட விமானப் போக்குவரத்து முடங்கியுள்ளது.
காற்று மாசினால் இயற்கைக்கு மட்டுமல்லாது, மனிதர்களுக்கும் மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை, அண்மைக் காலங்களில் இந்திய மாநகரங் களில் ஏற்பட்ட மாசு நிலையை அறியும்போதே உணரமுடியும். உலக சுகாதார நிறுவனம், உலகளவில் ஆண்டொன்றுக்கு 7 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர் என்றும், 10 இல் 9 நபர்கள், மிக மாசடைந்த காற்றையே சுவாசிக்கின்றனர் என்றும் குறிப்பிடுகிறது. இந்தியா, சீனா போன்ற மக்கள் தொகை பெரிதும் உள்ள நாடுகளில், சுவாச நோய்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். வாகன, தொழிற்சாலை மற்றும் கட்டுமான பணிகள் இல்லாததால், இந்தியா போன்ற வேளாண் சார்ந்த நாடுகளில் விவசாயக் கழிவுகளை எரிப்பது தடைப்பட்டுள்ளதால் காற்று மாசு, 20 - 30 விழுக்காடு குறைந்துள்ளது. இந்நிலை தொடருமானால், சுமார் 50,000 முதல் 1,00000 வரை உளகளவில் உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம் என்றும் பன்னாட்டுப் பருவநிலை ஆராய்ச்சி மய்யத்தின் தரவுகளின் வாயிலாக அறியமுடிகிறது.
சீன சூழலியல் அமைச்சகத்தின் தரவுகளின்படி, அந்நாட்டின் நிலமேற்பரப்பு நீரில், பாஸ்பரஸ் மற்றும் அம்மோனியா ஆகிய இரசாயனங்களின் அளவும் குறைந்துள்ளதாக அறியமுடிகிறது.
இவ்வாறான சூழல் உலகெங்கிலும் நிலவுகிறது. உலகின் அழகிய நகரங்களில் ஒன்றான வெனிஸ் நகர கால்வாய்கள் படகுப் பயணத்திற்கு புகழ்பெற்றவை. ஆண்டுதோறும் அவ்வழகை அனுபவிக்க, மக்கள் திரளாகக் கூடுவர். இக்காரணத்தால் கால்வாய் நீர் மாசடைந்தே காணப்படும். ஆனால், தற்பொழுதைய கோவிட்-19 ஊரடங்கால், வெனிஸ் நகரம், வெறிச்சோடிப் போயிருக்கிறது. கால்வாய் நீர் தெளிந்து, பளிங்கு போல காட்சியளிப்பதில் உள்ளிருக்கும் ஜெல்லி மீன்களின் அழகைக் காணமுடிகிறது.
அத்துடன் உலகளவில் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிவிட்டதால், மனிதர்களின் அரவணைப்பில் வாழும் உயிரினங்களுக்கும், மனிதர்களின் ஆக்கிரமிப்பு களில் இருந்து விடுபட்ட வன விலங்குகளுக்கும் கூட இத்தருணம் சுதந்திர உணர்வை அளித்திருக்கிறது.
தாய்லாந்தில் கடற்கரைகளில் கடல் ஆமைகள் பெருமளவில் படையெடுத்திருக்கின்றன. ஆஸ்திரேலியா நகர வீதிகளில் கங்காருக்களும், அமெரிக்க சாலைகளில் மான்கள், ஊர்வன உயிரினங்கள், பிரான்சில் பறவைகளின் கூட்டங்கள், ஜப்பானில் குரங்குகள் என வீதிக்கே வலம் வந்துவிட்டன. இந்தியாவில் யானை வழித்தடங்களை (Elephant Corridor) ஆக்கிர மித்த மனித நடமாட்டம் தடைபட்டுள்ளதால், யானைகள் ஊருக்குள் வரும் செய்திகளும் மற்றும் மலை கிராமங்களில் காட்டெருமைகள், சிறுத்தை போன்றவையும் மக்கள் வாழ்விடங்களில் நடமாடும் செய்திகளும் கேள்வியுறுகிறோம்.
இந்தியாவிலும் இத்தகைய சூழலைக் காணலாம். பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின்படி, 2030 ஆம் ஆண்டிற்குள், 175 GW புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் தன்னிறைவு அடைவது, 2005 ஆம் ஆண்டு நிலைப்படி ஒவ்வொரு மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வில் (GDP) 33 - 35% வரை பயன்படுத்தி மாசு அளவைக் குறைக்கவும், புதைபடிவ எரிபொருள் அல்லாத மாசு ஏற்படுத்தாத ஆற்றலை பயன்படுத்துவது, 2.5 பில்லியன் டன் அளவுள்ள கரியமில வாயுவை உள்வாங்கக்கூடிய அளவிலான காடுகளை உருவாக்கவும் நாம் செயல்பட்டு வருகிற சூழலில், இயற்கை தாமாக மேற்கொண்டுள்ள இம்மறுசீரமைப்பால் பல மாற்றங்கள் நடந்திருப்பதைக் கண்கூடாக காணமுடிகிறது.
இந்திய நாட்டின் மிக முக்கிய வற்றாத நதிகளில் ஒன்றான கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள தொழிற்சாலைகள், தோல் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் மாசு, மனிதக் கழிவுகள், இந்து மதச் சடங்கு என்ற பெயரில் இறந்த உடல்களை வீசுவது என பல்வேறு காரணங்களால் ஆசியாவில் பெரிதும் மாசடைந்த நதிகளில் ஒன்றாக இருக்கிறது. இத்தகைய நிலையில், கங்கையை மீட்டெடுக்க பல்வேறு காலக்கட்டங்களில், பல அரசுகள், முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. அதன் நீட்சியாக தற்பொழுது மத்திய பா.ஜ.க அரசும், தனது முதல் ஆட்சிக்காலத்திலேயே "நமாமி கங்கா" என்ற திட்டத்தை உருவாக்கி, தற்பொழுது வரை சுமார் 3000 கோடி ரூபாய் செலவிட்டிருக்கிறது. எனினும், ‘புனித’ கங்கை நதியின் புனிதத்தை மீட்ட பாடில்லை. ஆனால் பாழும் இந்த கரோனா வைரஸ்தான், இன்று கங்கை நதியின் தூய்மையை மீட்கத் தொடங்கியிருக்கிறது.
இந்தியாவின் (CPCB) அறிக்கையின்படி, 78% சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலக்கப்படுவதாகவும், இதன் காரணமாக சுமார் 1 இலட்சம் குழந்தைகள் இறப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறியது. இந்நிலையில் தற்பொழுது இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குளிப்பதற்குக் கூட தகுதியற்ற நிலையிலிருந்த கங்கை நீர், தற்பொழுது குடிநீராக பயன்படுத்துவதற்கே ஏற்றது என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தெரிவித்துள்ளது.
மாசினால் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்திய நகரங்களில் 10 இல் 6 நகரங்களில் தற்பொழுது காற்று மாசு குறைந்து தூய்மையானதாக இருப்பதாகவும், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மார்ச் 25 அன்று, இந்தியாவில் சராசரி PM 2.5 அளவு 22 விழுக்காடும், NO2 அளவு 15 விழுக்காடும் குறைந்துள்ளதாக Centre for Research on Energy and Clean Air தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்தியாவில் 2 மில்லியன் மக்கள், காற்று மாசின் காரணத்தால் உயிரிழந்துவரும் சூழலில், இத்தகைய மாற்றம் மிக முக்கியமானதாகும்.
தமிழ்நாட்டில் கூட தாமிரபரணி ஆற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் மாசு இல்லாததால், பல ஆண்டுகளுக்குப் பின்னர் தெளிந்த நீராகக் காட்சியளிப்பதாக செய்திகளின் வழியே அறியமுடிகிறது.
இவ்வாறு மனித சமூகத்திற்கு எதிரியாக, அபாயமாக அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் பரவலால், இத்துணை ஆண்டுகளாக இயற்கையின் அனைத்து பரிமாணங்களிலும் தனது சுயநல பொருளாதார காரணங்களுக்காக ஆக்கிரமித்து சுரண்டிவந்த கொடுங் கரங்கள், தற்பொழுது ஏது செய்வதென அறியாமல் தத்தளித்து வரும் வேளையில், பூமி தன் காயங்களுக்கு ஆற்றுப்படுத்த முனைந்து விட்டது.
எனினும் நாம், இன்றைய சூழலில் இருந்து அறிந்துகொள்ள வேண்டிய செய்தியாக உலக விஞ்ஞானிகள் நமக்கு அறிவுறுத்துவது யாதெனில், உலக வெப்பமயமாதலின் காரணத்தால் பருவநிலை அளவிலும், மனித சமூக அளவிலும், பொருளாதார அளவிலும் ஏற்படக்கூடிய அழிவிற்கு, இத்தருணம் ஒரு சிறிய இடைவெளி - அழிவை நோக்கிய பயணத்தில் சற்றே ஓர் இளைப்பாறுதல் மட்டும் தான் என்றும், இந்த உலகடங்கு சூழலே முழுமையான, இறுதியான நீடித்த தீர்வாக அமையாது என்றும் தங்கள் கருத்தை மிக உறுதியாக அறிவித்திருக்கின்றனர்.
நம் எதிர்கால சமுதாயத்திற்கான ஆரோக்கியமான இன்ப வாழ்விற்கு இக்கட்டான இந்த கோவிட்-19 நோயிலிருந்து விடுபட்டு மீண்டு எழுந்தாலும், இயற்கை தன்னை மீட்டெடுத்து வந்த நிலையை நாம் மீறாமல், உலக நாடுகள் யாவும் தங்கள் எல்லைகளை கடந்து, இன, மொழி, மத, பொருளாதார ஏற்றத்தாழ்வு வேறுபாடுகளை களைந்து, "மனிதம்" என்ற ஒற்றைப் புள்ளியில் இணைவோம்! இயற்கையை மீட்டெடுப்போம்!
No comments:
Post a Comment