கல்வி உலகம் முழுவதையும் மய்யப்படுத்தி ஒரே அதிகாரத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சி தான் தற்போது நடந்து வருகிறது. இதுவே நீட் விவகாரத்திலும் மறைந்துள்ள கசப்பான உண்மை என்கிறார் சட்ட வல்லுநர் ஃபைஸான் முஸ்தபா. அரசமைப்புச் சட்ட நுணுக்கங்களில் அபாரமான அறிவாற்றல் கொண்ட இந்த அறிஞர் தன் கருத்தை வலியுறுத்தி மே-16, 2020 'தி இந்து' நாளிதழில் கட்டுரை எழுதியுள்ளார். அதன் சுருக்கம் பின்வருமாறு:
ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவமே தனிமனித சுதந்திரமும், அதன் நிரந்தர வளர்ச்சியுமே ஆகும். இந்தியப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க 1948ஆம் ஆண்டு ஒரு குழு அமைத்தது மத்திய அரசு. உயர்கல்வியின் தரத்தை உயர்த்த வழிமுறைகள் கண்டறியவும், ஆலோசனைகள் வழங்கவும் இக்குழுவிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. டாக்டர் ராதா கிருஷ்ணனும் அக்குழுவில் உறுப்பினராக இருந்தார். தங்கள் அறிக்கையில் அவர்கள் தனிமனித சுதந்திரத்தின் சிறப்பை வலியுறுத்தியிருந்தனர். அந்தக் காலகட்டத்தில் நடந்த ஒரு வழக்கு விசாரணையின்போது அன்றைய தலைமை நீதிபதி பி.என்.கிருபால் என்பவர் அதை மேற்கோள் காட்டியிருந்தார்.
கல்வியின் தரம் அடியோடு அழிந்து விடும்
கல்வி உலகம் முழுக்க முழுக்க அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கினால் கொடுங்கோல் ஆட்சி போன்ற நிலைமையும் சர்வாதிகாரப் போக்கும் வலுவடைந்துவிடும் என்று அந்த ஆய்வுக் குழுவினர் வாதிட்டனர். அரசு அதிகாரிகள் அரசியல் ஆதாயங்களுக்காக கூலிப்படையினர் போல் நடந்து கொள்ளும் அபாயம் உள்ளது என்றார்கள் உறுப்பினர்கள். கல்வியின் தரம் அடியோடு அழிந்து விடும் என்று அவர்கள் அஞ்சினர். ஒரு தனிப்பட்ட மய்யத்தின் ஏகபோக அதிகாரத்திற்கு கல்வி உலகம் போய் விடக்கூடாது என்பது அவர்களுடைய வாதம். முக்கியமான சில வழக்குகளில் இக்குழுவினரின் பல கருத்துகள் விவா தத்திற்குப் பயன்பட்டன.
ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் நீட் தேர்வு குறித்து தீர்ப்பு வழங்கியபோது மேற்கண்ட அம்சங்கள் யாவும் புறக்கணிக்கப்பட்டன. நீதிபதி அருண் மிஷ்ராவின் தலைமையில் செயல்பட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட குழு எந்தப் பின் விளைவுகள் பற்றியும் அக்கறை கொள்ளாமல் தீர்ப்பளித்து விட்டனர்.
அவசர அவசரமாக நீட் தேர்வை கட்டாயமாக்கிவிட்டார்
நீட் தேர்வு இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று 2013ஆம் ஆண்டு வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி வலியுறுத்திற்று. அப்போது வழக்கைத் தள்ளுபடி செய்த அதே நீதிபதி 2016ஆம் ஆண்டு நடந்த தீர்ப்பின் மறு ஆய்வில் அவசர அவசரமாக நீட் தேர்வை கட்டாயமாக்கிவிட்டார், விசாரணைகள் முடிவடையாத நிலையிலேயே!
பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறாத தனியார் கல்வி நிலையங்கள் - இவை எல்லாவற்றின் தன்னாட்சி உரிமைகளையும் பறிக்கும் தேர்வு நீட்! பல்வேறு தொழில் துறைகளிலும் இன்னபிற நிர்வாகங் களிலும் கட்டுப்பாடுகள் நீங்க வேண்டும் என்று ஒரு புறம் வலியுறுத்திவரும் மத்திய அரசு, உயர்கல்வி விஷயத்தில் மட்டும் அதற்கு நேர்மாறாக தனிப்பட்ட மய்யத்தின் அதி காரத்திற்கு உட்பட்டு கல்வி உலகம் இயங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வேதனைக்குரிய விஷயம்! எல்லாத் துறைகளும் சுதந்திரமாகச் செயல்படலாம் எனில் கல்விக்கு மட்டும் ஏன் பாரபட்சமான விதிவிலக்கு?
'நீட்' என்ற போர்வையிலோ, கட்டுப்பாடுகள் விதிக்கும் அதிகார பலத்தாலோ சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங் களுக்குரிய உரிமைகளை எந்த மாநில அரசும் பறிக்கலாகாது. கட்டுப்பாடுகளால் சிறுபான்மையினர் என்ற அடையாளம் மறைந்துவிடாது.
சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களில் நிர்வாகச் சீர்கேடுகள் தடுக்கப்பட வேண்டியவைதான். யாரும் மறுக்க வில்லை. அதற்காக ஒரு சில கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையில் முறைகேடாக நடந்து கொள்வதை வைத்து, விதி எண் 30 மற்றும் 19(ஜி)யைப் பயன்படுத்தி, எல்லா தனியார் கல்வி நிலையங்களின் உரிமைகளையும், அரசு உதவி பெறாத சுயநிதிக் கல்லூரிகளின் உரிமைகளையும் பறிப்பது நியாயமா?
பாதிக்கப்படும் மாணவர்கள்
நீட் தேர்வு மாணவச் சமுதாயத்திற்கு அனுகூலமான தேர்வாகவா உள்ளது? இல்லை! எல்லோரும் ஆர்வத்துடன் விரும்பி ஏற்கும் தேர்வா அது? இல்லை! நீட் போலவே பல நுழைவுத் தேர்வுகள் தலை சுற்ற வைக்கும் அளவுக்கு உள்ளன. ஜே.இ.இ. என்று ஒன்று. சட்டக் கல்லூரிக்கான பொதுத் தேர்வு இன்னொன்று. இப்படி இன்னும் பல. இவற்றுக்கெல்லாம் பயிற்சியளிக்க நகரங்களில் புற்றீசல்கள் போல் பயிற்சி நிலையங்கள் முளைத்து விட்டன. ஒரு சில தரமான பயிற்சி நிலையங்கள் நீங்கலாக பெரும்பாலானவை தங்கள் வளர்ச்சியை மட்டுமே உள்நோக்கமாகக் கொண்டு உள்ளன. புறநகர்ப் பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் வாழும் மாணவர்கள் எப்படி பயிற்சி பெறுவார்கள்? தாய்மொழியில் கல்வி பயின்ற ஏழை மாணவர்கள் எப்படி பயனடைவார்கள்? இது போதாதென்று மாநில அரசுகளின் பாடத்திட்ட, தரம் ஆகியவற்றுக்கும் சி.பி.எஸ்.இ. முறை களுக்கும் பெரும் வேறுபாடு உண்டு.
பலவிதமான தகுதித்தேர்வுகள் நடக்கும்போது உடல் நலம் குன்றியதாலோ, சரியாக எழுதாததாலோ ஒரு மாண வன் தோல்வியுற்றாலும் வருடத்தை வீணாக்காமல் வேறொரு தேர்வில் எப்படியாவது தேர்ச்சி பெற்றுவிட முடியும் என்பதையும் மறுப்பதற்கில்லை. தனக்கு விருப்ப மான கல்வி நிலையத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் முடிகிறது.
கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம் - கேள்வித் தாள்கள் தேர்வுகளுக்கு முன்பாகவே கசிந்து விடுவது. கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை நீட் தேர்வுக்கான கேள்வித் தாள்கள் குறிப்பிட்ட தினங்களுக்கு முன்பே வெளிவந்துவிட்டன. எனவே நீட் தேர்வு நம்பகத் தன்மை, வெளிப்படைத் தன்மை - இரண்டையும் இழந்து நீண்ட காலமாகிவிட்டது.
குளறுபடிகள் ஒன்றா இரண்டா
எடுத்துச் சொல்ல?
நீட் தேர்வுக்கான கேள்வித்தாள்களில் காணப்படும் மொழிபெயர்ப்புப் பிழைகள் இன்னொரு கொடுமை. 2018இல் நடந்த நீட் தேர்வில் 49 கேள்விகள் தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. அதற்கு மாற்றாக சுமார் ஒரு லட்சம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு 196 மதிப்பெண்களாவது வழங்கும்படி உத்தரவிட்டது. தவறாக மொழிபெயர்க்கப்பட்ட கேள்விகளுக்கு மாணவர் கள் ஏதேனும் ஒரு பதிலை எழுதியிருந்தார்களா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளாமலேயே எல்லோருக் கும் உபரி மதிப்பெண்களை வழங்க, தவறான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி விட்டதாக அறிவித்து, உச்சநீதிமன்றம் அதை நிராகரித்து விட்டது. நீட் தேர்வால் நிகழ்ந்த இத்தகைய குளறுபடிகள் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல?
மாணவர்களின் தகுதியை உயர்த்த நீட் தேர்வு சிறந்த வழி என்று தான் உண்மையில் நம் நீதிபதிகள் கருதுகிறார்கள். ஆனால் தகுதி என்பது உண்மையில் எது? ஒருமித்த கருத்து ஏதேனும் உண்டா? இதுபற்றி பல நூல்களிலும் பலவிதமான விளக்கங்கள் உள்ளன. சம வாய்ப்பாலும் நேர்மையான போட்டியாலும் பெறப்படும் வெற்றி தான் 'தகுதி' என் கிறார்கள் அறிஞர்கள்.
பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட அம்சம் தகுதி எனப்படுவது. இதைச் சரியாகக் கணக்கிட முடியாவிட்டாலும் போதுமான அளவுக்காவது அளவிட்டுவிட முடியும் என்று தான் நீட் ஆதரவாளர்களும் நம் நீதியரசர்களும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்ன? நீட் மட்டுமல்ல - இன்னபிற நுழைவுத் தேர்வுகளும் தகுதி நிர்ணயித்திற்கான அடிப்படைத் தேவைகள் இல்லாமல் தான் நடத்தப்பட்டு வருகின்றன. இவை நேர்மையாக நடத்தப்படும் போட்டிகளே அல்ல. சரிசமமான வாய்ப்புகள் இத்தகைய தேர்வுகள் மூலம் கிடைக்கும் என்பதே வெறும் பிரமை!
கற்றலுக்குத் தேவையான அம்சங்களில் முக்கியமானவை மூன்று - கற்பனைத் திறன், கலப்படமற்ற ஆர்வம், அறிவுத் தேடலுக்கான தூண்டுதல் ஆகியவை. பொதுவான நுழைவுத் தேர்வுகள் மூலம் இவை மூன்றையும் அளவிட முடியாது. சரியான அளவு கோல்கள் நீட் போன்ற தேர்வுகள் அல்ல!
பெரும்பாலான மருத்துவர்கள் கிராமப்புறங்களில் பணி புரிய விரும்புவதில்லை. சேவை மனப்பான்மையே அவர் களிடம் இல்லை என்று வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி அன்றே மிகச் சரியாகக் குறிப்பிட்டது. ஆனால் அவர்களுடைய வாதம் புறக்கணிக்கப்பட்டு நீட் தேர்வுக்கு ஆதரவாகவே பின்னர் தீர்ப்பளிக்கப்பட்டது. தேர்வு மூலம் தகுதி பெற்ற மருத்துவர்கள் அப்படித் தயக்கம் காட்டுவ தில்லை என்று சொல்லாமல் சொன்னது 2016ஆம் ஆண்டின் தீர்ப்பு. நீதியரசர் அருண் மிஷ்ரா மருத்துவர்களிடம் சேவை மனப்பான்மையும் பொறுப்புணர்ச்சியும் காணப்படவில்லை என்று வருத்தம் தெரிவித்தது வீணாயிற்று.
அமெரிக்க அறிஞர்கள் அனுபவப்பூர்வமாக ஆய்வுகள் நடத்தி அறிவித்த உண்மை இப்படிப்பட்ட பொதுத் தேர்வு கள் பாரபட்சமானவை என்பதுதான். ஒடுக்கப்பட்ட குடும் பங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்களும் சிறுபான்¬யின ரும் இப்படிப்பட்ட தேர்வுகளால் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று உறுதிப்படுத்தினார்கள் பல அமெரிக்க ஆராய்ச்சி யாளர்கள். ஜாதி மத வேறுபாடுகளும் வேறு பல பேதங்களும் இத்தகைய தேர்வுகளின் பின்னால் மறைந்துள்ளன என் கிறார்கள் பல அமெரிக்கப் பத்திரிகையாளர்கள். நம் நாட்டு நீதியரசர்கள் பலர் இதுபற்றி கவலைப்படுவதாகவே இல்லை.
சமத்துவமற்ற நிலையும் வேறுபாடுகளும்
சிறுபான்மையினரின் உரிமைகள் மாறுதல்களுக்கு உட் பட்டவையுமல்ல, பிரிக்கப்படக்கூடியவையுமல்ல, பறிக்கப் படக் கூடியவையுமல்ல. அரசமைப்புச் சட்ட விதி எண். 14இல் சமத்துவம் பற்றி குறிப்பிட்டுள்ள சில அம்சங்கள் சற்றே முரண்பட்டாலும் சிறுபான்மையினரின் அடிப்படை உரிமை கள் மறுக்கப்படக் கூடாது என்பதே நமது அரசமைப்புச் சட்டத்தின் வாக்குறுதி. பல சட்டப் பிரிவுகள் இதை வலியுறுத்துகின்றன. சலுகைகள் மறுக்கப்பட்டு அவதியுறும் ஏழை மக்களை இப்படிப்பட்ட தேர்வுகள் வஞ்சித்து அவர் களுக்குரிய வாய்ப்புகளைப்பறித்து வருகின்றன. அரசமைப்புச் சட்டத்தின் 14ஆவது பிரிவில் உள்ள சமத்துவ விதிகளை சிறுபான்மையினரின் உரிமைகள் மீறுவதாக சிலர் நினைப் பது சரியல்ல.
மய்யப்படுத்தப்பட்ட கலந்தாய்வுகள் மிகப் பெரிய இடையூறு என்றே சொல்லலாம். இவற்றால் பல தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் சிறுபான்மையினரின் கல்வி நிலையங்களிலும் மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் நிரம்பாமலே உள்ளன. இதை நீட் தேர்வின் மன்னிக்க முடியாத ஊடுருவல் அல்லது கொடுமையான கபளீகரம் என்றே கூறலாம். மருத்துவக் கல்லூரிகளில் நிரம்பாமல் கிடக்கும் ஒவ்வொரு இடமும் தேசிய இழப்பேயாகும்.
மக்கள் - மருத்துவர்கள் விதிகம்
மிகமிகக் குறைவு
கரோனா வைரஸ் உலகையே புரட்டிப் போட்டுள்ள இன்றைய நிலையில் நம் நாட்டு மக்கள்தொகைக்குத் தேவை யான அளவுக்கு மருத்துவர்கள் இல்லை என்ற உண்மை மிகத் தெளிவாகத் தெரிகிறது. மக்கள் - மருத்துவர்கள் விதிகம் மிகமிகக் குறைவு!
பல்கலைக்கழகங்களோ மாநில அரசோ ஒரு பொதுவான நுழைவுத் தேர்வு நடத்திக் கொள்ளலாம் என்று நீதியரசர் மிஷ்ரா கருதினார். மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களே கூட இப்படி ஒரு சாதாரண நுழைவுத் தேர்வை மாணவர்களுக்குப் பொதுவாக நடத்திக் கொள்ளலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். இதுவும் ஏற்புடையதே என்கிறார்கள் பலர்.
எல்லா மருத்துவக் கல்லூரிகளுக்கும் ஒரே மாதிரியான கட்டாயத் தேர்வைக் காட்டிலும் நேர்மையான முறையில் வெளிப்படைத் தன்மையோடு ஒவ்வொரு கல்லூரியிலும் சேர்க்கை நடைபெற்றாலே போதும் என்பதே பல அறிஞர் களின் கருத்து. நீட் தேர்வு என்று ஒரு கட்டாயக் கொடுமை தேவை தானா என்றே பலரும் கேட்கிறார்கள். முறைகேடுகள் எதுவுமின்றி நீண்டகாலமாக சேர்க்கை நடத்திவரும் மருத்துவக் கல்லூரிகள் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி போராடலாம் என்றும் பலர் கூறுகிறார்கள். மய்யப்படுத்தப் பட்ட கலந்தாய்வு என்பதே தேவையற்ற கட்டுப்பாடு - பாதகமான விதி - என்கிறார்கள் சிந்தனையாளர்கள் பலர்.
மருத்துவக் கல்லூரிகள் சுகாதாரம், உடல்நலம், தனிமனித ஒழுக்கம் இவையெல்லாம் கற்றுத்தந்து மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சட்டப்பிரிவு 30இன்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று பல அறிஞர்கள் கூறுகிறார்கள். அவை யாவும் ஒரு புறம் இருக்கட்டும். மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து இடங்கள் எல்லாமே நிரம்பிய பிறகுதானே அவற்றைப் பற்றி யோசிக்க முடியும்? இடங்கள் முழுவதும் நிரம்ப வேண்டும் என்றால் 'நீட்' தேர்வு அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்கிறார் கட்டுரையாளர் ஃபைஸான் முஸ்தபா.
'நீட்' தேர்வுக்கு எதிரான போரில் நாம் வெற்றியடைந்தே தீர வேண்டும்.
நன்றி: 'தி இந்து'
ஆங்கில நாளிதழ், 16.5.2020
No comments:
Post a Comment