டாக்டர் சிவபாலன் இளங்கோவன் கூறுவதைக் கேளுங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 21, 2020

டாக்டர் சிவபாலன் இளங்கோவன் கூறுவதைக் கேளுங்கள்!

கடந்த 19.5.2020 - 'இந்து தமிழ் திசை' நாளேட்டில் 'அரசு மருத்துவர் கள் உயர்ந்து நிற்கும் இடம் எது?' என்ற தலைப்பில் டாக்டர் சிவபாலன் இளங்கோவன் ஓர் அரிய கட்டுரையைத் தீட்டியுள்ளார்.


அதில் மிக முக்கியமாக அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:


(1) கரோனா தொற்று மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் களத்துக்கு வந்து பணியாற்றக் கூடியவர்கள் யார்? தனியார் மருத்துவமனைகள் அல்ல - மாறாக அரசு மருத்துவமனை டாக்டர்கள்தான்


(2) தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 1,80,000 மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிகிறார்கள். அதில் 12 ஆயிரம் பேர் கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணிபுரிபவர்கள்.


இந்த அரசு மருத்துவமனை டாக்டர்கள் தான் கரோனா தொற் றால் தாமும் பாதிக்கப்படுவோம் என்ற தெரிந்திருந்தும் களத்தில் நின்று பணியாற்றுகிறார்கள். சரியான உபகரணங்கள் இல்லாத நிலையிலும்கூட குடும்பங்களை விட்டுப் பிரிந்து பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.


(3) இந்த சமூகப் பொறுப்பும், சமூக அர்ப்பணிப்பும் அவர்களுக்கு எப்படி வந்தது? அரசு மருத்துவமனையில் பணியாற்றும் கணிசமா னோர் இடஒதுக்கீட்டின் விளைவாக வந்த ஏழை, எளிய தொடக்க தலைமுறையினராக இருப்பதும், முதுநிலைப் படிப்பில் அரசாங்க மருத்துவர்களுக்குக் கிடைக்கும் 50 சதவீத இடஒதுக்கீட்டின் வழியாக வந்தவர்களாக இருப்பதும் ஒரு முக்கியமான காரணம்.


(4) கிராமப்புறங்கள் உள்ளிட்ட நமது அரசு மருத்துவமனைகளில் பணிபுரியக் கூடிய மருத்துவர்களில் பெரும்பாலான மருத்துவர்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பைச் சார்ந்தவர் களாகவே இருக்கின்றனர்.


(5) இந்தியா முழுவதுமே அரசு மருத்துவர்கள் பணி குறிப் பிடத் தக்கதாக இருந்தாலும், சமூக நீதியில் கவனம் செலுத்திய தமிழ் நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு இன்று நாட்டிலேயே வலுவான தாகப் பார்க்கப்படுகிறது. சரியான வகையில் அமல்படுத்தப்படும் இடஒதுக்கீடு எப்படி ஒரு துறையைச் சிறப்பானதாக மாற்றும் என்பதற்கு நமது மருத்துவத் துறைதான் சரியான உதாரணம். தமிழ்நாட்டில் சமூகநீதிக்காக நடந்த நீண்ட நெடிய போராட்டங்களின் விளைவு இது.


(6) இப்படிப்பட்ட மாணவர்கள் மருத்துவத்துறையில் நுழைவ தைத் தடுக்கும் வகையில் 'நீட்' தேர்வு அமைந்திருக்கிறது என்றும், அது நமது மருத்துவத் துறையின் கட்டுமானத்துக்கே ஆபத்தானது என்றும் சமூக ஆர்வலர்களால் தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வருகிறது.


(7) மேலும் அனைத்திந்திய தொகுப்புக்கு வழங்கும் மருத்துவ முதுநிலைப் படிப்புக்கான இடங்களில் 'ஒபிசி' இடஒதுக்கீடு புறக் கணிக்கப்பட்டிருக்கிறது. இதன் வழியாக, இப்படிப்பட்ட ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவத்துறைக்கு வருவது தொடர்ச்சியாக தடுக்கப் படும் ஆபத்து இருக்கிறது.


(8) கரோனா தடுப்புப் பணியிலும், இறப்பைத் தடுப்பதில் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் தமிழக மருத்துவத் துறையில் இருக்கும் மருத்துவர்கள் யாரும் 'நீட்' எழுதியவர்கள் அல்லர்.


(9) ஒரு நல்ல மருத்துவர் என்பதற்கு அடையாளம் 'நீட்' தேர்வில் அவர் எவ்வளவு மதிப்பெண் வாங்குகிறார் என்பதில் அல்ல; நெருக்கடி யான கால கட்டத்திலும் தன்னலம் பாராது எப்படி சமூகப் பொறுப்புடன் மக்கள் நலனில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார் என்பதில்தான் இருக்கிறது.


என்று ஒன்பது அம்சங்களை ஒரு மருத்துவர் ஒரு சித்திரம் போல வரைந்திருக்கிறார்.


இந்தப் பிரச்சினையில் இதைவிட அழகாக, தெளிவாக, செறிவாகச் சொல்ல முடியாது; மருத்துவராக இருக்கக் கூடிய ஒருவர் இவ்வளவு ஆழமாக சமூக விஞ்ஞானத்தோடு ஆய்வு செய்திருக் கிறார் என்று நினைக்கும்போது பெரும் ஆச்சரியமாகவே இருக் கிறது.  இதற்காக இந்த மருத்துவரை பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.


மருத்துவக் கட்டமைப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத் தில் ஜொலிக்கிறது என்று ஒப்புக் கொள்ளும் மத்திய அரசு - அதற்குக் காரணமாக இருக்கக் கூடிய அடிப்படை சமூகநீதியை எண்ணிப் பார்க்க கடமைப்பட்டு இருக்கிறது.


ஆனால் நடப்போ இதற்கு எதிர்மாறாகவே இருக்கிறது. இட ஒதுக்கீட்டை ஒழிப்பதிலேயே கங்கணம் கட்டிக் கொண்டு செயல் பட்டு வருகிறது. இந்த நிலை மருத்துவத் துறையின் தேவை, சேவையைச் சீரழித்து விடும். மருத்துவத்தைப் பற்றிச் சொல்லும் பொழுது அதனை ஒரு துறை (Department) என்று சொல்லுவ தில்லை.


'மெடிக்கல் சர்வீஸ்' என்றுதான் சொல்லுகிறோம். இதன் பொருள் மருத்துவச் சேவை என்பதாகும். அந்தச் சேவை செய்கிறவர்கள் எந்தப் பின்னணியில் வரக் கூடியவர்களாக இருக்கவேண்டும் என்பதற்கு தந்தை பெரியார் பிறந்த சமூக நீதி மண்ணான தமிழ்நாடே உதாரண மாகும்.


ஒரு நூற்றாண்டுக்கும் மேலான சமூகநீதி என்னும் செப்பனிடல் இங்கு நிகழ்ந்திருக்கிறது. நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திரா விடர் கழகம் என்ற பரிணாமங்கள் இதன் பின்னணியில் உள்ளன.


இந்திய  அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் இதற்காகவே மேற்கொள்ளப்பட்டது என்பதை நினைவூட்டுகிறோம். தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடே பொங்கி எழுந்ததன் விளைவே அந்த முதல் திருத்தம் ஆகும்.


இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இடஒதுக்கீடு 69 விழுக் காடு என்பது சட்டப்படியாக (By an act) நடைமுறையில் உள்ளது. இதற்காக முக்கியமாக பாடுபட்ட சமூகப் புரட்சி இயக்கம் திராவிடர் கழகமே என்பது வரலாற்றுக் கல்வெட்டு.


அரசு என்பது ஏதோ ஒரு நிருவாக எந்திரம் மட்டுமல்ல; அதற்கென்று ஒரு சமூகப் பார்வை இருக்க வேண்டும்; நாட்டு மக்களின் நலிவுகள் - ஏற்றத் தாழ்வுகள் எந்த அடிப்படையில் உள்ளன என்று ஓராது பார்க்கும் மெய்ஞ்ஞானம் வேண்டும்.


அந்த மெய்ஞ்ஞானத்தின் விளைச்சலே சமூகநீதி இடஒதுக்கீடு! இந்தக் கரோனா நேரத்திலாவது நம்முன் நடக்கும் நடப்பை எண்ணிப் பார்த்தாவது டாக்டர் சிவபாலன் இளங்கோவனால் தீட்டப் பட்டுள்ள கட்டுரையின் சாரத்தை - சமூக ஏற்றத் தாழ்வு என்ற நோய்க்கான சமூக மருத்துவப் பிழிவைக் கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்பட வேண் டும் என்று மத்திய - மாநில அரசுகளை வற்புறுத்துகிறோம்.


கட்டுரை எழுதியவர் ஒரு கட்சிக்காரர் அல்ல - ஒரு டாக்டர் என்பதும் நினைவில் இருக்கட்டும்!


No comments:

Post a Comment