'வெற்றி பெறுவேன், என்ன பந்தயம் கட்டுகிறாய்?‘ என்று சொல்பவர்களைப் பார்த்திருக்கிறோம், கேள்வியும் பட்டுள்ளோம்.
'தோல்வி அடைந்தே தீருவேன் - என்ன பந்தயம் கட்டுகிறாய்?' என்று சவால் விடுபவர்களை இதுவரை பார்த்திராவிட்டால் அல்லது கேள்விப்படாவிட்டால், இதோ நம் கண்ணுக்கு எதிரே தமிழக அதிமுக அரசை ஒரு தரம் பார்த்துக் கொள்ளுங்கள்.
டாஸ்மாக்கைத் திறக்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. அதனை எதிர்த்துத் தொடரடப்பட்ட வழக் கில், சில நிபந்தனைகளை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் டாஸ்மாக்கைத் திறக்க ஆணை பிறப்பித்தது.
திறந்த இரு நாள்களிலேயே, சென்னை உயர்நீதி மன்றத்தின் நிபந்தனைகள் காற்றில் பஞ்சாய்ப் பறந்தன.
மீண்டும் வழக்கு - உயர்நீதிமன்றம் ‘‘மதுக்கடைகளை மூடுக!'' என்ற உத்தரவு.
இதற்கிடையே திமுக தலைமையிலான பல்வேறு கட்சிகளும், திராவிடர் கழகம் போன்ற சமுதாய அமைப்பு களும், அமைதியான முறையில், ஜனநாயக உணர்வின் அடிப்படையில் மதுக்கடைகளைத் திறக்க எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவரவர் வீட்டுக்கு முன் கருப்புச் சின்னம் அணிந்து 'மதுக்கடைகளைத் திறக்காதே' என்று குரல் கொடுத்தனர்.
தமிழ்நாடு தழுவிய அளவில் இந்த அறப்போராட்டம் நடந்து பொது மக்களின் உணர்வை வெகு நேர்த்தியாகத் தெரிவித்து விட்டது.
பல இடங்களில் பெண்களே திரண்டு வந்து, மதுக்கடை கள் முன் தங்கள் எதிர்ப்பைப் பதிவும் செய்தனர்.
இவ்வளவுக்குப் பிறகும் அதிமுக அரசு - 'முதலையும், மூர்க்கனும் கொண்டது விடான்' என்ற முதுமொழிக்கு ஏற்ப, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையை எதிர்த்து, மதுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டைச் செய்துள்ளது.
ஏதோ ஒரு வகையில் அஇஅதிமுகவுக்கு நெருக்கமாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த்கூட அதிமுக அரசின் இந்தப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் மதுக்கடையைத் திறக்கச் சொல்லி ஆணை பிறப்பித்தாலும், தனி நபர் இடைவெளி என்பது எதிர்பார்க்கவே முடியாத ஒன்று என்பது உறுதி.
காவல்துறையினருக்கு இருக்கும் வேலைப்பளு போதாது என்று தமிழக அரசு கருதிவிட்டதோ! தடியை எடுத்துக் கொண்டு மதுக்கடைகள் பக்கம் ஓடி தனி நபர் இடைவெளியைப் பராமரிக்க கொம்பு சுற்ற வேண்டுமோ?
இதிலும் தோல்வி கண்டால், உச்சநீதிமன்றம் மறு உத்தரவைப் பிறப்பிக்கும் பட்சத்தில் அதிமுக அரசு என்ன செய்யும்? தோல்விகளைச் சுமப்பதற்கென்றே முதுகைப் பலப்படுத்திக் கொண்டு இருக்கிறதா?
இரண்டு நாள் மதுக்கடை திறப்பு என்ற அளவிலேயே பல இடங்களில் படுகொலைகள் - குடும்பங்களில் வன்முறைகள்!
இதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக தமிழ்நாடு மக்கள் மத்தியிலே 'தண்டனை' கிடைக்கும் என்பதை அதிமுக அரசு மறந்திட வேண்டாம். அதன் கூட்டணி கட்சிகள் கூட இந்த வகையில் இவ்வரசுக்கு உதவிக்கரம் நீட்டப் போவதில்லை.
கோயம்பேடு காய்கறிச் சந்தைப் பிரச்சினையில் அதிமுக அரசு மேற்கொண்ட அணுகுமுறையினால் கரோனா தன் சண்டித்தனத்தைக் காட்டிவிட்டது. 2,167 பேர் கரோனா தொற்றுக்கு ஆளானது கோயம்பேடு சந்தைப் பிரச்சினையில் அதிமுக அரசின் தவறான அணுகுமுறை தான் காரணம் என்ற கருத்து, பற்றி எரியும் ஒரு தருணத்தில், டாஸ்மாக்கைத் திறந்து, மக்கள் வெள்ளத்தை வழிந்தோடச் செய்து, கரோனா தொற்றைப் பெருக்கல் கணக்கில் பற்ற வைத்த அவப் பெயருக்கும், பழிக்கும் ஆளாக வேண்டாம் என்று எந்தவித அரசியல் நோக்கமுமின்றி சமூகப் பொறுப்புணர்ச்சியுடன் வலி யுறுத்துகிறோம்.
பந்தயம் கட்டித் தோற்க வேண்டாம் என்பதே நமது கனிவான வேண்டுகோள்!
No comments:
Post a Comment