பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மனுதர்மம் காரணமாக கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களின் கல்வி வாய்ப்புகளுக்காகத் தஞ்சைத் தரணியில் தொடங்கிய கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரியாகும்.
வாய்ப்பும், வசதியும் இல்லாத பல்லாயிரக் கணக்கான மாணவர்களுக்குக் கல்விக் கண் தந்த, வற்றாத கல்வி ஜீவநதியாக இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது, அக்கல்லூரி!
அதனால் பயன்பெற்று, வாழ்வு பெற்றவர்கள் உள்ளூர் முதல் உலகம் முழுவதும் எண்ணற்றவர்கள் உள்ளார்கள்!
அத்தகைய நன்றி பாராத - கல்வித் திருப்பணியைத் தமது வாழ்நாள் திருத்தொண்டாகக் கொண்டு, எவ்வித விளம்பர வெளிச்சத்தையும் விரும்பாது, ஆழ்ந்த அறிவு, முதிர்ந்த அனுபவம், கனிந்த கடமை உணர்வு, சிறந்த எடுத்துக்காட்டான பண்பு நலன்கள் - இவற்றைக் கொண்ட ஆன்றவிந்த அன்பாளராக என்றும் திகழ்ந்து, வியத்தகு கல்வித் தொண்டைச் செய்வதில் முழு மனநிறைவு கொண்டு வாழுபவர் போற்றுதலுக்கும், பெருமதிப்பிற்கும் உரிய கல்வி வள்ளல் பெரியவர் பூண்டி அய்யா துளசி அய்யா வாண்டையார் அவர்கள்.
அவர்கள் நாளை (மே 11) 92 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்கள் என்று அறிகிறபொழுது, நம் போன்ற பொதுப்பணி - கல்வி ஆர்வலத் தொண்டர்கள் - கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு - அவர்களை வாழ்த்துவதில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.
அவர்கள் நூறாண்டும் கடந்து, நல்ல உடல்நலத்தோடு தமது தொண்டறத்தைத் தொடரவேண்டுமென விழைகிறோம்.
வாழ்க பல்லாண்டு!
கி.வீரமணி,
திராவிடர் கழகம்
தலைவர்,
சென்னை
10.5.2020
No comments:
Post a Comment