* 10, 11, 12-ஆம் வகுப்பு தேர்வுக் குழப்பத்தைத் தவிர்த்து தெளிவு ஏற்படுத்திடுக!
* கல்லூரி தேர்வுக் கட்டணம் - பள்ளி, கல்லூரி கல்விக் கட்டணங்களில் விலக்கு தேவை!
* சமமான கற்றல் வாய்ப்பை உருவாக்குக! காணொலி வகுப்புகளைக் கணக்கில் கொள்ளக் கூடாது
* டில்லியில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்
திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
சென்னை, மே 15- காணொலி வாயிலாக 3.5.2020
ஞாயிற்றுக்கிழமையன்று திராவிட மாணவர் கழகத் தின் கலந்துரையாடல் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று சிறப்புரைஆற்றினார்.
கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
தீர்மானம் எண் 1:
மறைந்தவர்களுக்கு இரங்கல் ; மனித குலத்தை மீட்போம்!
உலகு தொற்று நோயாக உருவாகி பேரச்சத்தின் பிடியில் அனைவரையும் வைத்துள்ள கரோனா வைரஸ் நோய்க்கு பலியானோர்க்கு இரங்கலையும், அந்நோய்க்கு எதிரான போராட்டத்தில் தங்கள் இன்னுயிரைத் தந்துள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கு வீரவணக் கத்தையும் இக்கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது. உரிய பாதுகாப்போடும், மருத்துவ அறிவியல் தரும் எச்சரிக்கைகளைக் கருத்தில் கொண்டும் மாணவர் களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும், அனைவரும் செயல்பட்டு, இப்பேரிடரிலிருந்து மனித குலத்தை மீட்க வேண்டியது நம் கடமை என்பதையும் இக்கூட்டம் சுட்டிக் காட்டுகிறது.
தீர்மானம் 2:
தேர்வுக் குழப்பங்களைத் தவிர்த்து தெளிவு ஏற்படுத்திடுக!
கல்வி ஆண்டு முடிவுறும் தருவாயில் கோவிட்-19 பரவலின் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங் களும் திடீரென்று மூடப்பட வேண்டிய சூழல் அமைந்துவிட்டது. இதனால், ஏராளமான குழப்பங் களும், அவற்றால் மாணவர்கள், பெற்றோர் மத்தியில் அச்சமும் நிலவிவருகிறது. இக்குழப்பங்களை நீக்கி, அச்ச உணர்வைக் களைய வேண்டியது அரசின் கடமையாகும்.
குறிப்பாக பள்ளிக் கல்வியைப் பொறுத்தளவில், பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வின் கடைசித் தேர்வை, கல்வியாளர்கள், பல்வேறு கட்சித்தலை வர்கள் உள்ளிட்டோரின் வேண்டுகோளையும் மீறி, நடத்தியதில் சுமார் 70,000 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று செய்திகள் வந்துள்ளன; எழுதிய மாணவர்கள் பலரும் அச்ச உணர்வுடனும், குழப்ப நிலையிலும் தேர்வு எழுதியுள்ளனர். எனவே, இத்தேர் வினை எழுதாதவர்களுக்கு மட்டுமல்லாமல், மீண்டும் எழுத விரும்புவோருக்கும் அவ்வாய்ப்பினை வழங்க வேண்டும்.
11-ஆம் வகுப்புக்கான ஒரு தேர்வு மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், அதற்காக மாணவர்களைப் பெரிதும் வருத்தாமல், இதுவரை எழுதிய பாடங்களின் அடிப்படையிலும், மற்றொரு பாடத்தின் இதுவரையிலான அகத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலும் பன்னிரண்டாம் வகுப்புக்கு அவர்களைத் தேர்வு செய்யலாம்.
10-ஆம் வகுப்புத் தேர்வு கட்டாயமாக நடத்தப்படும் என்று அறிவித்துள்ள மாநில அரசு, ஊரடங்கு முற்றிலும் விலக்கப்பட்டு, பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர், குறைந்தது 15 நாட்களாவது மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தி, அதற்குப் பிறகே தேர்வுகளை நடத்த வேண்டும். இதனை தெளிவாக முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். மத்திய பாடத்திட்ட மாணவர் களுக்கு 10 நாட்கள் வகுப்புக்குப் பின்னரே தேர்வு என்று அப்பாடத்திட்ட வாரியம் அறிவித்துள்ள தையும் கவனத்தில் கொண்டு மாநில அரசின் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தீர்மானம் 3:
பள்ளி, கல்லூரி தேர்வு, கல்விக் கட்டணங்களில் விலக்கு தேவை
பெரும்பாலான கல்லூரி, பல்கலைக்கழக செமஸ் டர் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கவும், கட்டணம் செலுத்தவுமான பணிகள் தொடங்கும் முன்பே ஊரடங்கு அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த ஊர டங்கால் மக்களின் அன்றாட வாழ்க்கை மட்டுமல்லாமல், பொருளாதார நிலையும் மிகக் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு முடிந்த வுடன், தேர்வுக் கட்டணம் கட்ட நிர்ப்பந்திக்கும் சூழலை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உருவாக்குவது நியாயமாகாது. எனவே, இந்த செமஸ்டருக்கான தேர்வுக் கட்டணத்தைக் கட்டுவதிலிருந்து மாணவர்களுக்கு விலக்கு அளித்து, அதனைத் தமிழக அரசே ஏற்க வேண்டும்.
இக்கடுமையான சூழலிலும், அடுத்த கல்வி ஆண்டுக்கான பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த நிர்ப்பந்திக்கும் பள்ளிகள் மீது கடுமையான நட வடிக்கை எடுத்து, அத்தகைய போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
தனியார் கல்வி நிறுவனங்களில் குறைந்தது ஒரு மாதமேனும், கல்விக் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு வழங்கப்படவேண்டும். இவற்றை தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை ஆணையாகப் பிறப் பித்து உறுதிப்படுத்த வேண்டும்.
தீர்மானம் 4:
சமமான கற்றல் வாய்ப்பு முதன்மையானது -
காணொலி வகுப்புகளைக் கணக்கில் கொள்ளக் கூடாது
ஆசிரியர் ஓரிடத்திலும், மாணவர்கள் அவரவர் இடத்திலுமிருந்து கல்வி கற்கும் சூழல் உருவாகும் என்று புத்துலகத் தொலைநோக்காளர் தந்தை பெரியார் தெரிவித்த கருத்து, இன்றைய கரோனா சூழ்நிலையில் நமது நாட்டிலும் பரவலாக நடை முறைக்கு வந்துள்ளது மகிழத்தக்கதேயாகும்.
எனினும், இந்த வளர்ச்சி இந்நாட்டின் பெருவாரி யான மக்களுக்கு இன்னும் போய்ச் சேரவில்லை என்பதே உண்மை. கணினி, மடிக்கணினி, டேப்லட், திறன்பேசி போன்ற தொழில்நுட்பக் கருவிகள் இன்றியும், உரிய இணைய வசதி இன்றியும் தவிக்கும் பெருவாரியான குடும்பங்கள் உள்ள நாட்டில், காணொலி வழி நடக்கும் நேரலை வகுப்புகளால் சம வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்வி நிறுவன ங்கள் இத்தகைய இணைய வகுப்புகளை, பள்ளி வகுப்புகளாகக் கருதிக் கணக்கில் வைக்கக் கூடிய சூழல் இப்போது நம் நாட்டில் இல்லை. நேரடியான வகுப்புகளிலேயே கிராம-நகர, பின் தங்கிய-முன்னேறிய, ஏழை-பணக்காரப் பள்ளிகள் என பேதங்கள் இருக்கும் சூழலில், இணைய வகுப்புகள் இன்னும் மோசமான சமமின்மையை உருவாக்குகின்றன.
பள்ளி, கல்லூரிப் பாடங்களுக்கு இவற்றைக் கட்டாயப்படுத்தக் கூடாது. கற்றலில் சமவாய்ப்பு, சம வசதியும் வழங்கப்பட்டால்தான் அதன் பின்னான அனைத்து சமூகநீதிக் கதவுகளும் திறக்கும். எனவே, கல்வியும் தொய்வடைந்துவிடாமல், தொற்று நோய்க் கும் ஆட்பட்டு விடாமல், கல்வியாளர்களைக் கொண்டு ஆலோசித்து, இதற்கான வழிமுறை
களை ஆராய்ந்து அதற்கேற்ப அனைவருக்கும் சமமான பயிலும் வாய்ப்பை அரசு உறுதி செய்யவேண்டும்.
தீர்மானம் 5:
நீட் நுழைவுத் தேர்வை ஒழித்துக் கட்டுக! கல்விக் கதவடைப்புக்கான புதிய முயற்சிகளையும் உடைத்திடுக!
கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாகத் திணிக்கப் பட்டுள்ள நீட் தேர்வு, தமிழகத்தின் கல்வித் துறையி லும், மருத்துவத் துறையிலும் ஏற்படுத்தியிருக்கும் பேரிழப்பு எளிதில் அளவிடக் கூடியதல்ல. இன்றைய கொடிய கரோனா தொற்று காலத்தில், தம் உயிரைத் துச்சமென மதித்து, நம் உயிரைக் காக்கப் போராடி வரும் மருத்துவப் பெருமக்கள் நீட் தேர்வுகளால் மருத்துவக் கல்லூரிகளுக்குள் நுழைந்தவர்களல்லர் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். சமூக நீதியைப் பறிக்கும் நீட் தேர்வு, தமிழ்நாட்டின் மருத் துவக் கட்டமைப்புமீதும் பெரிய தாக்குதலை நடத்த வுள்ளது.
இந்நிலையில், இப்போதாவது விழித்துக் கொண்டு, மாநில உரிமை என்ற அடிப்படையிலும், சமூக நீதி என்ற அடிப்படையிலும், நீட்டை ஒழித்து, மருத்துவக் கல்லூரியின் கதவுகளை சமூகத்தின் ஒடுக் கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களுக்குத் திறந்துவிட வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.
இன்று நாம் எதிர்கொண்டிருக்கும் மருத்துவ நெருக்கடி சூழல்களில் அரசு மருத்துவமனைகளும், அரசு மருத்துவர்களுமே நமக்குப் பாதுகாப்பாக இருக்கப் போகிறார்கள் என்ற பேருண்மையை உணர்ந்து, இளநிலை மருத்துவம், முதுநிலை மருத் துவப் படிப்புகள் என அனைத்திலும், நீட் திணிப்புக்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கு பேராதரவு தெரிவித்து, தமிழக அரசை வலியுறுத்தி, நடவடிக்கை எடுக்க வைக்க முன்வரவேண்டும் என தமிழக மக் களை திராவிட மாணவர் கழகம் கேட்டுக் கொள்கிறது.
கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வைத் திணிக்கலாம் என்ற பார்ப்பனியச் சதியை முளையிலேயே கிள்ளி எறிவதற்கும், நீட்டை ஒழித்துக் கட்டுவதற்கும், தமிழர் தலைவர் அறிவிக்கும் போராட் டங்களை, செயல்பாடுகளை முழுமூச்சுடன் முன்னெ டுத்துச் செய்து முடிப்போம் என்று தமிழர் தலைவர் அய்யா அவர்களுக்கு இக் கூட்டம் உறுதியளிக்கிறது.
தீர்மானம் 6:
கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்து, அவர்கள்மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுக!
இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் அடிப் படையையே கேள்விக்குள்ளாக்கிய குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆர். ஆகியவற் றுக்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பர் முதல், கரோனாவுக்கான ஊரடங்கு அறிவிக்கப்படும்வரை தொடர் போராட்டங்கள் நாடெங்கும் நடைபெற்றன. அவற்றில் மாணவர்கள் முன்னின்று போராடினர். அந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்காக, வெளிப் படையாகவே வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது மத்திய அரசு! டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், ஜாமியா மில்லியா மாணவர்கள்மீது ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி., குண்டர்களைக் கொண்டும், அவர் களுக்குப் பாதுகாப்புப் படையினரின் உடையைக் கொடுத்தும் வரலாறு காணாத வன்முறையை நிகழ்த் தியது. கரோனா தொற்று காரணமாக அனைத்துப் போராட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலை யில், டில்லியில் போராடிய மாணவர்கள்மீது, ஆள் தூக்கிச் சட்டமான ஹிகிறிகி-வைப் பயன்படுத்தி தற்போது கைது நடவடிக்கைகளை ஏவியுள்ளது மத்திய அரசு. ஜே.என்.யூ-வின் மாணவர் உமர் காலித், ஜாமியாவைச் சேர்ந்த மாணவர் மீரான் ஹைதர், ஆய்வு மாணவரும், மூன்று மாத கர்ப்பிணியுமான சஃபூரா ஜர்கர், அதனைத் தொடர்ந்து ஷியாஃபூர் ரஹ்மான், ஷர்ஜில் இமாம் ஆகியோரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தைக் காக்க நடைபெற்ற போராட்டங்களில் அமைதி வழியில் பங்கேற்ற மாணவர்கள்மீது கடுமையான சட்டங்களை ஏவி கைது செய்து வரும் நடவடிக்கையை திராவிட மாணவர் கழகம் கடுமையாகக் கண்டிக்கிறது. இந்த மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும், அவர்கள்மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டுமென்றும், இனி இது போன்ற கைது நடவடிக்கைகள் தொட ரப்படக் கூடாது என்றும் மத்திய அரசை திராவிட மாணவர் கழகம் வலியுறுத்துகிறது.
No comments:
Post a Comment