“தமிழர் நிலை தாழ்ந்திருக்கிறது. தமிழர் சமுதாயத்தில் கீழான ஜாதி; கல்வியில் 100க்கு 80 தற்குறி. செல்வத்தில் 100க்கு 90 கூலி ஜீவனம்; தொழிலில் 100க்கு 75 சரீரப்பாடுபட்டு உழைக்கும் தொழில்; ஒற்றுமையில் 108 ஜாதிகள்; கட்டுப்பாட்டில் அவனவன் சுயநலமும், ஒருவனை ஒருவன் ஏய்ப்பதும் - ஒழிக்க சமயம் பார்ப்பதும்; மதத்தில் எதிரிக்கு அடிமையாய் இருந்து உழைத்துப் போடுவது; அரசியலில் வஞ்சக அயோக்கியருக்கு வால் பிடித்து கைதூக்குவது; மானத்தில் ஈனமும், மதிப்பில் சளி உமிழத்தக்கவராகவும் இருக்கின்றனர்.
இதற்குக் காரணம் என்ன?
'நன்றி, விசுவாசம் காட்டுவதும், நயவஞ்சகம் செய்யாமையும் தமிழனுக்கு நஞ்சு‘ என்று சொல்லப்படுவதற்கும் - அவை அநேகமாய் உண்மையாய் இருப்பதற்கும் காரணம் என்ன என்பது இரண்டாவது கேள்வி. இந்த நிலையும், குணங்களும் பார்ப்பனர்களுக்குள்ளும், முஸ்லீம்களுக்கும், ஏன் சட்டைக்காரர்களுக்கும் (ஆங்கிலோ-இந்தியர்கள்) கூட சாதாரணமாய் காண்பதற்கு முடிவதில்லை என்று சொல்லப்படுகிறதே இதற்குக் காரணம் என்ன? இது மூன்றாவது கேள்வி. இந்த மூன்று கேள்விகளிலும் உள்ள விஷயங்கள் சிறிது அதிகப்படுத்திக் கூறியிருப்பதாகச் சிலர் கருதலாம். ஆனால் பெரும்பான்மை உண்மை என்பதைப் பெரும்பான்மையோர் ஒப்புக் கொள்ளுவார்கள்.
ஆதலால், இவைகளுக்குக் காரணம் என்ன என்று கவனிக்க வேண்டாமா?
- தந்தை பெரியார்
('குடிஅரசு' கட்டுரை, 27.11.1943)
- ‘மணியோசை’
No comments:
Post a Comment