தமிழ்த் திருமணம்
தமிழில் நடக்கும் திருமணமெல்லாம் தமிழர் திருமணம் ஆகிவிடாது. இதற்குச் சரியான சான்று ஒன்று நம்மிடம் உள்ளது. 'தமிழ்த் திருமணம்' என்று தலைப்பிட்டு அத்திருமண முறையினை விளக்குகின்ற 16 பக்கக் கையேடு அது. முதல் பக்கத்தில் இன்னாருக்கும் இன்னாருக்கும் நடக்கும் தமிழ்த் திருமணம் எனவும், நடத்துபவர் சிவத்திரு இன்னாரென்றும், திருமறை பாடுபவர் தருமபுரம் இன்னாரென்றும் மொக்கை எழுத்துகளால் அச்சிடப்பட்டுள்ளதுடன் 30.5.1979, சென்னை என்று நாளும் இடமும் குறிக்கப்பட்டுள்ளன. கைச்சுவடிக் குள்ளே, ஸ்ரீவிநாயகர் வழிபாடு, திருவிளக்கு பூஜை, பாலிகை இடுதல், விபூதி இடுதல், காப்பு இடுதல், ஆடை உடுத்தல், பஞ்ச கவ்யம், அஞ்செழுத்து, பெற்றோர் வழிபடுதல், திருத்தாலி வழிபாடு, தாலி கட்டுதல், பட்டங்கட்டுதல், மாலை மாற்றுதல், மிஞ்சி இடுதல், அறு கெடுத்தல், வாழ்த்து எனும் சடங்குத் தலைப்புகளின் கீழ் அவற்றிற்கேற்ற சைவ சமயப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
“ஆனை முகத்தானைக் கூப்புவர் தம்கை”, “நமச்சிவாயமே”, “சிவனவன்காண்”, “ஆலவாயான் திருநீறே”, “வேதியர் குழாமும், திருத் தொண்டரும் ஆறு சூடினார்”, “சிவலோகம் ஆள்வதற்கு”, “ஆவினில் அயந்துமாகி”, “கயிலை மலை யானே”, “ஆரூரானை”, “உமையவளோடும் இருந்தவளே”, “நாகேச்வரரே”, “பிரமபுரக் காவலனை” என்னும் சொற் றொடர்கள் பெய்யப்பட்ட பாடல்களே கையேட்டில் அச்சிடப் பட்டுள்ளன. சடங்குப் பெயர்களும், பாடல்களும் நமக்குத் தமிழர் நாகரிக - பண்பாட்டையா உணர்த்துகின்றன? ... பழந்தமிழர் நாகரிகத்தில் ஆனைமுகத் தான் உண்டா? அவனுக்கு வழிபாடு ஏது? உண்மைத் தமிழ்ப் பண்பாட்டில் வேதியர் குழாம் இடம்பெற வாய்ப்புண்டா? சைவ சமயப் பவுராணிகக் கதைகளெல்லாம் தமிழரின் தொன்மைக் கால வழக்கமா? அது பிற்காலச் செருகல் அல்லவா? அனைத்துக்கும் அப்பால் - பஞ்சகவ்ய முறை தமிழரின் கோட்பாடா? ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புத் தாக்கத்தால் உருவான இவை எல்லாவற்றின் தேக்கமாகத் திகழ்கின்ற இம்மணமுறைக்குத் “தமிழ்த் திருமணம்'' என்ற பெயர் எப்படிப் பொருந்தும்?
(நூல்: சுயமரியாதைத் திருமணம் தத்துவமும் வரலாறும்)
- ‘மணியோசை’
No comments:
Post a Comment