மதுரை ‘மக்கள் கண்காணிப்பகம்' சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் காணொலியில் உரை
சென்னை, ஜூன் 12 மத வெறியை எதிர்த்து அமெரிக்காகிளர்ந்தெழுந்ததுபோல் ஜாதிவெறியை எதிர்த்து இங்கும் ஒன்றிணைந்து போராடுவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்துரை யாற்றினார்.
மதுரை ‘மக்கள் கண்காணிப்பகம் (People’s Watch) என்ற அமைப்பின் சார்பில் 10.6.2020 அன்று மாலை காணொலிமூலம் ஏற்பாடு செய்யப் பட்ட கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கருத்து ரையாற்றினார்.
அவரது கருத்துரை வருமாறு:
எப்படி பிளவுகள் வந்தன?
பிரிவுகள் நுழைந்தன?
‘மக்கள் கண்காணிப்பகம்' அமைப்பின் நண்பர் ஹென்றி அவர்களுடைய அமைப்பு எதை முன்னெடுக்கவேண்டுமோ, அதை சிறப்பாக முன்னெடுத்து, இந்திய நாட்டினுடைய உணர்வுகள் எப்படிப்பட்டது என்பது இந்தக் கரோனா தொற்று அச்சம் பலரை உலுக்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில்கூட, தெளிவாக இந்த ஏற் பாட்டினை செய்து, மனிதநேயம் என்பது ஒரு நாட்டிற்கு மட்டும் சொந்தமல்ல; ஒரு இனத்திற்கு மட்டும் முக்கியமல்ல; மனித குலம் எங்கெல்லாம் வாழ்கிறதோ அங்கெல்லாம் சொந்தமானது என்ற அந்த உணர்வு படைத்தவர்கள் நாம். அதுவும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தமிழர்களைப் பொறுத்தவரையில், திராவிடர்களைப் பொறுத்த வரையில், ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்'' என்றுபன்னெடுங்காலத்திற்கு முன்னால்சொன்ன ஒரு சமுதாயத்திலே, இங்கேயே எப்படி பிளவு கள் வந்தன? பிரிவுகள் நுழைந்தன? என்று வேதனைப்படுகின்ற நேரத்தில், அமெரிக்காவில் இப்படி ஒரு கொடுமை நடந்துள்ளது. இது அங்கே புதிதல்ல. அது ஒரு தொடர் கதைதான்!
ஒவ்வொரு நாட்டில்,
ஒவ்வொரு வகையில் இருக்கின்றது!
பிளவுகள் எந்த ரூபத்தில், ஒவ்வொரு நாட்டில், ஒவ்வொரு வகையில் இருக்கின்றது என்பதற்கு அடையாளம்தான் அது.
எவ்வளவுதான் படிப்பு - எவ்வளவுதான் ஆய்வுகள் - விஞ்ஞானம் முன்னேறினாலும், பணக் காரர்களாக ஒரு பக்கத்தில் முதலாளித்துவம் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று அவர்கள் பெருமைப்பட்டு முண்டா தட்டினாலும்கூட, ஜாதி யம், நிற வெறி, மதவெறி இவைகளையெல்லாம் தோற்கடிக்கக்கூடிய நிற வெறி படம் எடுத்து ஆடு கின்ற கொடுமையைத்தான், ஜார்ஜ் ஃபிளாயிட் அவர்களுடைய நிகழ்ச்சியின் மூலமாக நாடு கண்டது.
அதை ஒரு சட்டம் - ஒழுங்கு பிரச்சினை சம்பவமாக யாரும் கருதிவிடக் கூடாது. கருதினால், அவர்கள் ஏமாந்துவிடுவார்கள். இது முழுக்க முழுக்க ஒரு சமூக பேத பிரச்சினை. ஆழ்மனதில் மாற்றம் ஏற்படுத்தவேண்டிய மனிதநேய பிரச்சினை என்பதைத் தோழர்கள் உணரவேண்டும். எனவே, போராட்டம் தெருக்களில் நடப்பதைத் தாண்டி, மக்கள் மனதுக்குள் நுழைக்கப்படவேண்டும்.
இதுபோன்ற சம்பவங்கள் நீண்ட காலமாக அவ்வப்பொழுது தலையெடுத்துக் கொண்டே இருக்கின்ற காரணத்தினால்தான், இப்பொழுது இளைஞர்கள் அங்கே நிற பேதத்திற்கு இடமில்லா மல், மனித உரிமையில் யார் யாருக்கெல்லாம் நம்பிக்கை இருக்கிறதோ, அவர்கள் அத்துணை பேரும் துணிந்து இறங்கியிருக்கிறார்கள்.
இன்றைக்கு ‘விடுதலை'யில்கூட ஒரு அறிக்கை யைத் தெளிவாக வெளியிட்டு இருக்கிறேன்.
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற சம்பவம்....
கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு, நம்முடைய நாட்டில், உத்தரப்பிரதேசத்தில் ஒரு சம்பவம்.
என்ன அந்த சம்பவம் என்றால், அமெரிக்காவில் எப்படி ஜார்ஜ் ஃபிளாயிட் அவர்களுக்கு கொடுமை நடந்ததோ, அதைவிட மிக மோசமான கொடுமை நடந்திருக்கிறது.
ஓர் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஆதிதிராவிட சமுதாயத்தைச் சார்ந்த விகாஸ் குமார் ஜாதவ் என்ற இளைஞர், உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலுக்குள் சென்று கும்பிடவேண்டும் என்று உள்ளே சென்றிருக்கிறார். உயர்ஜாதிக்காரர்கள் அவரை கோவிலுக்குள் போகக்கூடாது என்று தடுத்திருக்கிறார்கள்.
கடவுளைக் கும்பிடுவதற்காகத்தான் நான் செல்லுகிறேன் என்று சொல்லி, கோவிலுக்குள் சென்றிருக்கிறார். அவர் திரும்பி வெளியே வரும் பொழுது, அவரை அடித்து, மண்டையை உடைத் திருக்கிறார்கள் உயர்ஜாதியினர்.
காவல்துறையில் புகார் அளிப்பதற்காக அவரு டைய தந்தை காவல் நிலையத்திற்குச் சென்ற பொழுது, அந்தப் புகாரை காவல்துறையினர் ஏற்க வில்லை - பதிவு செய்ய விரும்பவில்லை.
விகாஸ் குமார் ஜாதவ் அவர்கள் அடிபட்ட நிலையில் வீட்டிற்குள் இருந்தபொழுது, சில நபர்களால் வெளியே இழுத்து வரப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி நேற்று வெளிவந்திருக்கின்ற செய்தியாகும்.
இந்தச் செய்தி ஊடகங்களிலோ, செய்தித்தாள் களிலோ வெளிவரவில்லை.
பாபு ஜெகஜீவன்ராமிற்கு ஏற்பட்ட அவமானம்!
நம்முடைய நாட்டில், பாபு ஜெகஜீவன்ராம் - இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், துணைப் பிரதம ராகவும்கூட இருந்தவர்தான். அவர் வாரணாசியில் சம்பூர் னானந்து என்ற உயர் ஜாதிக்காரரின் சிலையைத் திறந்தார் என்பதற்காக ஒரு தாழ்ந்த ஜாதிக்காரன் உயர்ஜாதிக்காரர் சிலையை எப்படி திறக்கலாம் என்று கூறி, சிலை தீட்டுப்பட்டு விட்டதாகக் கூக்குரல் எழுப்பி, காசி பல்கலைக் கழக மாணவர்கள் கங்கையிலிருந்து நீரைக் கொண்டு வந்து அந்த சிலைமீது அதைக் கொட்டி தீட்டுக் கழித்தனர். காரணம் என்னவென்றால், இவருடைய ஜாதி, ஜாதி, ஜாதி!
எனவேதான், இந்த உரிமை என்பது அந்த நாட்டிலே ஒரு வகையில் இருக்கிறது. ஆனால், அதே நேரத்தில், நம்முடைய நாட்டைப் பொறுத்த வரையில், இங்கு பிறவி ஜாதி பேதம் இருக்கிறது.
அமெரிக்காவில், ஒரு பெருந்திரள் என்கிற அளவிலாவது இளைஞர்கள் எழுச்சி அடைந்திருக் கிறார்கள். ஆனால், அந்த எழுச்சியைக் கூட இங்கே காண முடியவில்லை என்று சொல்லுகின்ற நேரத்தில், இப்படிப்பட்ட உணர்வாவது நமக்கு வந்து, இவர்களை ஒன்று திரட்டியிருக்கிறார்கள் இந்தக் காலகட்டத்தில் என்று சற்று ஆறுதலாக இருக்கிறது.
இன்னும் தீவிரமான உணர்வை,
விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்
95 ஆண்டுகளுக்கு முன்பு, தந்தை பெரியார் அவர்கள், கேரளத்தில், வைக்கம் தெருக்களில், நாய் போகலாம், பன்றி போகலாம், கழுதை நடக்கலாம் - ஆனால், ஆறறிவு உள்ள மனிதன், அவன் பிறந்த ஜாதியின் காரணமாக நடக்க உரிமையில்லை என்பதற்காக எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற ஒரு இயக்கத்தினுடைய தொண்டன் என்ற முறையில், நாம் இந்த முயற்சியில் தீவிரமாக இறங்கவேண்டும். இன்னும் தீவிரமான உணர்வை, விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.
நம்மிடையே உள்ள பிரிவுகளைப்பற்றி நினைக்கக்கூடாது - எது நம்மை இணைக்கிறது என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். சற்று நேரத்திற்கு முன்பு, பேராயர் அவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.
யார், எந்த உருவத்தில் இருக்கிறார்கள் என்ப தல்ல,
எந்த வண்ணம் என்பது முக்கியமல்ல,
எல்லோருக்கும் அடிப்படையாக ஒரே எண்ண மாக - சமத்துவம் - சம வாய்ப்பு - ஜாதியற்ற - பேதமற்ற உள்பட ஒரு சூழ்நிலை என்ற அளவிலே இருக்கவேண்டும்.
அதற்கான ஒரு பெரிய முயற்சியாக, நாம் அனை வரும் ஓரணியில் திரளவேண்டும். ஏனென்றால், எது நம்மை இணைக்கிறதோ அது மிக முக்கியம்.
இந்த நாட்டில், காலங்காலமாக, ஜாதியின் காரண மாகக் கொடுமைப்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், மீண்டும் மீண்டும் உயிர்க் கொலைக்கும், பாலின கொடுமைகளுக்கும் ஆளாகிற நேரத்தில், வேடிக்கை பார்த்துக்கொண்டு, அது அவர்களுடைய பிரச்சினை என்று மற்றவர்கள் அலட்சியப்படுத்துவதற்கு என்ன காரணம்? சிந்திக்கவேண்டாமா?
மனிதத்தைக் குழிதோண்டி
புதைத்துக் கொண்டிருக்கிறார்கள்
இந்த நாட்டினுடைய ஜனநாயகத்தின் அடிப் படையினுடைய பலகீனம் மட்டுமல்ல, நண்பர்களே, இந்த ஜாதியத்தின் கட்டமைப்பு, தந்தை பெரியார் அவர்களும், அண்ணல் அம்பேத்கர் அவர்களும் சொன்னதைப்போல, அழகாக, ஒரு அடிக்கட்டுமானம் எப்படி அமைக்கப்பட்டு இருக்கிறது என்றால், படிநிலை ஜாதிகள். அவர் உயர்ந்தவர் - அதற்குக் கீழே - அதற்குக் கீழே என்று வருகிறபொழுது, பிரித்துப் பிரித்து இவர் கள் வைத்திருக்கின்ற காரணத்தினால், இது நம்மு டைய பிரச்சினையல்ல - மற்றவர்களுடைய பிரச்சினை என்று பிரித்துப் பார்த்தால், மனிதம் செத்துவிடும். மனிதத்தைக் குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனவேதான், இப்பொழுது நம்முடைய கடமை களை ஆற்றவேண்டும். ஊடகங்கள் எல்லாம், வாயடைத்துப் போயிருக்கின்றன. அல்லது வேகமாக அவர்கள் ஏதாவது சொல்ல ஆரம்பித்தால், அவர்கள் குறி வைக்கப்படுகிறார்கள்.
இந்த நேரத்தில், குரல் கொடுக்கவேண்டிய கட்டாயம் மிக முக்கியமானது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில், மிகப்பெரிய அளவிற்கு கரோனா தொற்று காலகட்டத்தில்கூட, இந்த ஜார்ஜ் ஃபிளாயிட் பிரச்சினையில், அந்தக் கொடுமையைப் பார்த்து, இன்றைக்கு எழுந்த எழுச்சி, அமெரிக்காவே மூச்சுத் திணறக் கூடிய அளவிற்கு இருக்கிறது.
மனித இனத்திற்குக் கொடுத்திருக்கின்ற
மிகப்பெரிய அறைகூவல்
எங்களுடைய கருப்பினமும் வாழ வேண்டும் என்று அவர்கள் சொல்லக்கூடிய வாய்ப்புகள் இருக் கிறதே - அது மனித இனத்திற்குக் கொடுத்திருக்கின்ற மிகப்பெரிய அறைகூவல்.
அதுமட்டுமல்ல, அங்கே நடைபெற்ற பிரச்சினை என்று நாம் நினைப்பதைவிட, இங்கே அந்தப் பிரச்சினை எந்த ரூபத்தில் வந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டவேண்டும்.
இந்திய நாட்டினுடைய குடியரசுத் தலைவர் ஒரு கோவிலுக்குள் போகிறார். அங்கே அவர், அந்தக் கோவிலுக்குள் போக முடியாத நிலை. முதல் குடிமகனுக்கே அவமானம் ஏற்படக்கூடிய ஒரு காலகட்டம் இன்றைக்கு ஏற்பட்டு இருக்கிறது.
மனித உரிமைகள் இங்கே மிகப்பெரிய அளவிற்குப் பறிக்கப்படுகின்றன!
அதேநேரத்தில், ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞர் கோவிலுக்குள் சென்று கடவுளை வணங்குவதற்குக் கூட அவருக்கு உரிமையில்லை. அவர் சுட்டுக் கொல்லப்படுகிறார் - இதனைக் கேட்பதற்கு நாதி யில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு, மனித உரிமைகள் இங்கே மிகப்பெரிய அளவிற்குப் பறிக்கப்படுகின்றன.
ஹென்றி அவர்களையும், மற்றவர்களையும்
நாம் வெகுவாகப் பாராட்டவேண்டும்!
எனவேதான் நண்பர்களே, கரோனா காலமாக இருந்தாலும்கூட, இந்த முயற்சி ஒரு நல்ல தொடக்கம். இதற்காக அந்த அமைப்பையும், குறிப்பாக ஹென்றி அவர்களையும், மற்றவர்களையும் நாம் வெகுவாகப் பாராட்டவேண்டும்.
இந்த முயற்சியில், ஊடகங்கள் தங்களுடைய பணியை செவ்வனவே செய்யவேண்டும். அதே போல, நீதிமன்றங்களைப் பொறுத்தவரையில், மக்கள் மன்றத்திலே நாம் மிகப்பெரிய அளவிற்குக் கருத்துகளை உருவாக்கினால்தான் - If the Public Opinion marches forward, then Law comes limping behind என்று சொல்லக்கூடிய அளவிற்குப் பொது ஜனக் கருத்தை வேகமாக உருவாக்கவேண்டியது நம்முடைய கடமை.
அந்த வகையிலேதான், ஆயிரங் கருத்து மாறுபாடுகள் கொள்கை வேறுபாடுகள் நம்மிடையே இருந்தாலும்கூட, அடிப்படையானது - சமத்துவம் - சமுதாய சமத்துவம் - ஜாதியற்ற ஒரு சமத்துவம் - பேதமற்ற சமத்துவம் - தீண்டாமை ஒழிந்த ஒரு சமத்துவம் - மனிதகுலம் தழைக்கவேண்டும் என்று சொல்லக்கூடிய ஒரு சமத்துவம் என்ற அந்த சமத்துவ சமுதாயத்தை நோக்கி நாம் விரைந்து செல்லவேண்டும்.
மனித உரிமைகளைக்
காப்பாற்றுகின்ற பிரச்சினை
மதவெறிக்கு இடமில்லை - அதேபோல, ஜாதி அழியவேண்டும் - தீண்டாமை அழிக்கப்பட வேண்டும் என்ற உணர்வு வெறும் சாதாரண மதங்களை எதிர்க்கின்ற பிரச்சினையோ என்றோ - சடங்குகளை எதிர்க்கின்ற பிரச்சினையோ என்றோ யாரும் கருதக்கூடாது. இது முற்றிலும் மனித உரிமைகளைக் காப்பாற்றுகின்ற பிரச்சினை.
எனவேதான், மனித உரிமைகளை நாம் காப்பாற்றுகின்ற இந்தப் போராட்டத்தில், ஒன்று சேர்வோம் - ஒருங்கிணைவோம் - ஒருமித்துக் குரல் கொடுப்போம் - எந்த ரூபத்தில், எது வந்தாலும்!
அது ஒரு கட்டத்தில், ஜார்ஜ் ஃபிளாயிட் பிரச் சினையாக வரலாம் - உத்தரப்பிரதேசத்தில், விகாஸ் குமார் ஜாதவ்வாக வரலாம் - இன்னொரு இடத்திலே, தமிழ்நாட்டிலே இன்னொரு கொடுமையாக வரலாம்.
மிகப்பெரிய அறப்போராட்டத்தினுடைய
ஒரு தொடக்கம்தான் இது
எது வந்தாலும், மனிதம் காப்பாற்றப்பட வேண்டும் - மனித குலத்தினுடைய மாண்பு காப் பாற்றப்படவேண்டும் - மனிதர்கள் அனைவரும் சமம் என்று சொல்லக்கூடிய அந்த உணர்வு காப்பாற்றப்படவேண்டும் என்பதற்கான இந்த மிகப்பெரிய அறப்போராட்டத்தினுடைய ஒரு தொடக்கம்தான் இது - இது முடிவல்ல! இந்தத் தொடக்கத்தைத் தொடங்கி வைத்தவர்களுக்கு எனது மனமுவந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாங்கள் எப்பொழுதும் உங்களோடு இருப்போம் - என்றைக்கும் இந்தப் பணிக்காகவே எங்களை ஒதுக்கிக் கொண்டவர்கள்.
ஜாதியற்ற - பேதமற்ற - சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவோம்
எனவேதான், எந்த விலை கொடுத்தாவது, நாம் ஒரு ஜாதியற்ற - பேதமற்ற - சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவோம். அதை உலகத்திற்கே படைப் போம்!
புதியதோர் உலகு செய்வோம், வாரீர்! வாரீர்!! என்று அழைத்து, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்து ரையாற்றினார்.
No comments:
Post a Comment