நாஸ்திகர்கள் ஆகாமல் ஜாதியை ஒழிக்க முடியாது!
தந்தை பெரியார் அவர்களுக்கு ஜாதி - பிறவி பேத ஒழிப்பு - தீண்டாமை அழிப்பு என்பது இயல் பானது. இளம் வயதில் - திண்ணைப் பள்ளிக்கூட வாழ்வில் - தண்ணீர் தாகத்தைத் தீர்த்துக்கொள்ள முயன்றபோது, தண்ணீர் தருவதிலும், தண்ணீர் குடிக்கும்போதும் காட்டப்பட்ட ஜாதி வித்தியா£ச வெளிச்சமும் பெரியார் மனதை - அந்தப் பிஞ்சு பருவத்திலேயே - நெஞ்சில் சுட்ட நெருப்பாகிறது!
உலக நடப்புகளே - ‘‘அதிகம் படிக்காத, ஏன் ‘‘படிக்காத’’ பெரியாருக்கு மனித குலத்தின் பேத ஒழிப்புக்கான லட்சிய விதை அக்காலத்திலேயே - அந்த நொடியிலே ஊன்றப்பட்டு விட்டது.
சுய சிந்தனையாளரான தந்தை பெரியார் வாழ்க்கையின் இளமைப்பருவத்தில் தனது வீட்டில் உள்ள ஆச்சார அனுஷ்டான வைதிகங்களை மதிக்காமல், எவர் வீட்டிலும் - ஜாதி, மத பேதமின்றி உண்ணுவதும், எதையும் - தீட்டுக்கழித்து வீதியில் வீசப்பட்ட தேங்காய், பழம் போன்ற கழிப்பு கழித்து வீசி, வீதியில் விட்டெறியப்பட்டதைக்கூட எடுத்துக் கழுவி விட்டு அதைத் தின்று ருசித்தல் போன்ற துணிச்சலான எதிர்நீச்சல் வாழ்வை, தனக்கு வசதி யான வாழ்க்கைப் பாதையாக ஆக்கிக் கொண்டார்!
தந்தை பெரியார் பதித்த தடமான ஈரோட்டுப் பாதையை அவரது கசப்பான அனுபவங்களும், கடமையாற்றத் தூண்டிய சிந்தனைகளும், அதற் கேற்ப அவரது தனி வாழ்வு, பொது வாழ்வு, அதுவும் பார்ப்பனர்களிடம் நெருங்கிப் பழகி அவர்களது உண்மையான உள்ளுருவத்தையும் புரிந்துகொள்ள பெரிதும் துணை நின்றது!
ஜாதி, தீண்டாமை ஒழிப்பு என்பது அவரது வாழ்க்கையின் லட்சியமாகவே இருந்தாலும், அவர் இளமைக்காலத்திலிருந்து தனது வீட்டிற்கு வந்து கதாகாலட்சேபங்களை செய்து, வருமானம் பெற்றுச் சென்ற சனாதனிகளிடம் குறுக்கு விவாதங்களை நடத்தி, கேள்விகள் கேட்டு, அவர்கள் திக்குமுக்காடி யதைப் பார்த்து ரசித்து, அந்தக் கேள்வி கேட்கும் பட்டறிவுத்திறனை பாங்குடன் வளர்த்துக் கொண் டதோடு, தனி வாழ்க்கையில் திளைத்த பெரியார், பொது வாழ்க்கையில் அடி யெடுத்து வைத்ததே, சமூகநீதி - அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டிய சமத்துவ சம வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தில்தான்.
பொதுவாழ்வில் முதலில் சென்னை மாகாண சங்கத்தின் (இது நீதிக்கட்சியினருக்கு எதிராக அக்கால காங்கிரசும், பார்ப்பனர்களும் தொடங்கிய அமைப்பு) மாநில துணைத் தலைவர்களில் ஒருவ ராக தேர்வு செய்யப்பட்டபோது திரு.வி.க.வின் நட்புறவும் ஏற்பட்டது. ஆச்சாரியார் நட்பு - அவர் சேலம் நகர சபைத் தலைவர் - இவர் ஈரோடு நகர சபைத் தலைவர் என்ற உறவில் முகிழ்த்த ஒன்று. ஆச்சாரியாரும், டாக்டர் வரதராஜூலு நாயுடுவும் தான் பெரியாரை (அப்போது இப் பட்டம் இல்லை - ‘ஈ.வெ.ரா., ஸ்ரீமான் நாயக்கர்’ என்றே அழைக்கப் பட்டவர்) காங்கிரசில் சேர்ந்து உழைத்தார். சமூக நீதிதான் அவரது முதன்மையான லட்சியம்!
1922 லேயே இராமாயணத்தை - சம்பூகன் வதைக்காக கொளுத்தவேண்டும் என்று திருப்பூரில் - ராஜாஜி, திரு.வி.க., டாக்டர் பி.வரதராஜூலு நாயுடு ஆகியோர் முன்னிலையில், பொதுக்கூட்டங்களில் பேசியவர். இராமாயண எதிர்ப்பு என்பது அய்யா வைப் பொறுத்தவரை - ஜாதி ஒழிப்பு, ஜாதி தர்ம அடிப்படையில் சூத்திர சம்பூகன் தலையை இராமன் வெட்டினான் என்பதைப் படித்த பதைப் பின் காரணமாகத்தானே சுயமரியாதை இயக்கத் தோற்றத்திற்கு முன்பே காங்கிரஸ் மேடைகளில் பேசிய போதே ஏற்பட்டுவிட்டது.
அறிவியல் அணுகுமுறை - சமூக விஞ்ஞானி யான தந்தை பெரியாரின் அணுகுமுறையானதால், ஜாதி - தீண்டாமைக்கு முட்டுக் கொடுத்துத் தாங்கிப் பிடிக்கும் எதனையும் எதிர்த்தார்!
இதோ பெரியார் விளக்குகிறார், படியுங்கள்:
ஜாதி வித்தியாசம்
"ஜாதி வித்தியாசத்துக்கும் பகுத்தறிவுக்கும் ஏதா வது சம்மந்தமுண்டா?
பொருள் வித்தியாசத்துக்கும் பகுத்தறிவுக்கும் ஏதாவது சம்மந்தமுண்டா?
இவ் வித்தியாசங்கள் பகுத்தறிவினாலா? அல் லது மிருக சுபாவத்தாலா? அயோக்கியத்தனத்தாலா? என்று யோசித்துப் பாருங்கள். இவைகள் கடவுள்கள் முதல் தீர்க்கதரிசிகள், மகாத்மாக்கள், கடவுள் அவதாரங்கள் முதல் எல்லாராலும் ஒப்புக்கொள் ளப்பட்டிருக்கின்றனவே. ஆகவே இவர்கள் இத் தனை பேர்களும் (இருந்திருந்தால்) பகுத்தறிவா ளர்கள் என்றோ மனிதத்தன்மை உடையவர்கள் என்றோ சொல்ல முடியுமா? எந்த தர்ம ராஜ்ஜியமும் நீதிராஜ்ஜியமும் மக்களுக்குள் இப்படிப்பட்ட பிறவி இழிவையும் தொல்லையையும் ஏற்படுத்துவதை இருந்து வருவதை ஒழிக்க முடியவில்லையே. எப்படிப்பட்ட மதமும் மத தர்மமும் இவைகளை ஒழிக்கவில்லையே. ஆகவே நாம் இவைகளை எதிர்ப்பதால் என்ன கெடுதி என்று கேட்கின்றேன்.
சுயமரியாதை இயக்கம் ஜாதியிலும், மதத்திலும், கடவுளிலும் பிரவேசித்ததாலேயே அதன் யோக் கியதையை கெடுத்துக்கொண்டது என்கிறார்கள்.
(தொடரும்)
No comments:
Post a Comment