மகாராட்டிர மாநிலத்தில் கரோனா தொற்றின் கொடுமை மிக அதிகமாகியுள்ளது அனைவரும் அறிந்த ஒன்று; அதனாலேயே அங்கு பத்தாம் வகுப்புத் தேர்வு நடத்தாமலேயே அனைவரும் ‘பாஸ்' (‘Pass') என்று அவசரச் சட்டம்மூலம் அந்த அரசு அறிவித்து ஒரு நல்ல முன்மாதிரியை சில மாதங்களுக்கு முன்பே உருவாக்கியது.
தமிழ் வழியில் படிக்கும், தமிழ்ப் பிள்ளைகளுக்கு 10 ஆம் வகுப்புத் தேர்வினை, தனித்தேர்வர்கள் என்ற முறையில், தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறைதான் நடத்தி, தேர்வு முடிவுகளை ஆண்டுதோறும் அறிவிக்கும் வழமை இருந்து வருகிறது!
இந்நிலையில், தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நடத்தாமலேயே - கரோனா கொடுமையினால் - அனைவரும் ‘பாஸ்' (‘Pass') என்று தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவித்து சான்றிதழ் வழங்குவதுபோலவே, மும்பைவாழ் தமிழ்ப் பிள்ளைகள் - நமது பத்தாம் வகுப்புப் பாடங்களைப் படித்து, தேர்வெழுத வேண்டியவர்களுக்குத் தேர்ச்சி (‘பாஸ்') சான்றிதழ் வழங்குவதுதான் சரியானதாக இருக்க முடியும்.
எனவே, அவர்களுக்கும் இங்குள்ள மாணவச் செல்வங்களுக்குள்ள வாய்ப்புப் போன்றே, மகாராட்டிராவில் உள்ள நமது தமிழ்ப் பிள்ளைகளுக்கும் அவ்வாறே செய்ய உடனே பள்ளிக்கல்வித் துறை முன்வரவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
தமிழக முதல்வரும், கல்வி அமைச்சரும், மகாராட்டிர மாநிலத்திலுள்ள 10 ஆம் வகுப்பு மாணவர்கள் ‘நெஞ்சில் பால் வார்த்து', அவர்களை மேற்படிப்புக்குத் தகுதியாக்கிட முன்வரவேண்டும்!
கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
26.6.2020
No comments:
Post a Comment