சூரிய கிரகண நேரத்தில் உணவருந்தலாம்! உணவு விஷமாக மாறாது!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 26, 2020

சூரிய கிரகண நேரத்தில் உணவருந்தலாம்! உணவு விஷமாக மாறாது!!

மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சியில் அறிவியல் விளக்கம்



சென்னை, ஜூன் 26, சூரிய மறைப்பு மூடநம்பிக்கை ஒழிப்பு காணொலிக் கூட்டம் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் ஜூன் 21ஆம் தேதி காலை பதினொரு மணிக்கு துவங்கியது. பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி தலைமை வகித்தார். பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செய லாளர் இரா.தமிழ்ச் செல்வன் வரவேற்புரை யாற்றினார்.


திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் தொடக்க உரையாற்றினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், சூரியன் மறைப்பு தொடர்பாக மூட நம்பிக்கை களை எடுத்துரைத்து, அவற்றைப் பரப்புவதில் முனைந்து நிற்கும் பார்ப்பன, மதவாத சக்திகளை யும், ஊடகங்களையும் கண்டித்துப் பேசினார். ஜோதிடம் உள்ளிட்ட பிற மூடநம்பிக்கைகளின் அடிப் படையை கேள்விக்குள்ளாக்கி உரை யாற்றினார். திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார் அவர்கள் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து இணைப் புரையாற்றினார். நிகழ்வின் இடை யில் பல்வேறு நாடுகளிலிருந்தும் நேரலையான சூரியன் மறைப்புக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.


அறிவியல் பரப்புரையாளர் வி.அறிவரசன் சூரிய மறைப்பு ஏற்படும் விதங்களையும், அதனால் மனிதர் களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதையும் விளக்கினார். அந்த சமயத்தில் உணவு சாப்பிடுவதால் ஒன்றும் பாதிப்பு ஏற்படாது; உணவு விஷமாக மாறாது. இன்றும் தாராள மாக கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் நடமாடலாம். அதனால் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு எந்த பாதிப் பும் வராது என்பதை எடுத்துரைத்தார். எடுத்துக்காட்டாக சென்ற சூரிய மறைப்பு நிகழ்ச்சியின்போது சென்னை பெரியார் திடலில் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களோடும், மற்ற தோழர்களுடன் இருந்து உணவருந்திய அன்று கர்ப் பிணியாக இருந்த தோழர் சீர்த்தி, இப்போது குழந்தை பெற்று அவரது குழந்தையும் நலமாக இருப் பதை அனைவரும் காணொலியில் பார்த்து மகிழ்ந்தார்கள். அக்குழந்தைக்கு மகிழன் என்று பெயரிடப்பட்டது. அனைவரும் மகிழனுக்கு வாழ்த்துக் கூறினார்கள். தோழர் சீர்த்தியின் தந்தையார் இசையின்பன், சென்ற ஆண்டு சூரிய மறைப்பு மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சியில் கர்ப்பிணியாக இருந்த தனது மகள் கலந்து கொண்டதை பற்றி விரிவாகச் சொன்னார்.


அறிவியல் விளக்கக் கேள்விகள் கேட்ட  தோழர்களுக்கு  சிறப்பு பேச் சாளர் அறிவரசன் விளக்கமளித்தார். தமிழ்நாடு முழுவதும் பரவலாக பலர் கலந்து கொண்டார்கள். சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ், குவைத் போன்ற பல வெளிநாடுகளில் இருந்தும், மும்பை, பெங்களூர் போன்ற  பெரு நகரங்களில் இருந்தும் தோழர்கள் கலந்து கொண்டார்கள்.  ஏராளமான பள்ளி. கல்லூரி இருபால் மாண வர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண் டார்கள்.


சூரிய மறைப்பு நேரத்தில் அவரவர் வீடுகளில் இருந்தபடி தோழர்கள் உணவருந்திய காட்சி காணொலியில் ஒளிபரப்பானது. பெரியார் திடலில் சோ.சுரேஷ், விமல்ராஜ் ஆகிய தோழர்கள் பெரியார் சிலை முன் அமர்ந்து உணவருந்தினார்கள். நிகழ்ச் சியின் இறுதியில் பகுத்தறிவாளர் கழகப் பொருளாளர் முனைவர் சி.தமிழ் செல்வன் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment