தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் காவல்துறையின் அத்துமீறல் அராஜகத்தால் இருவர் மரணம் அடைந்தது- அதிர்ச்சிக்குரியது; காவல்துறை மனித உரிமைகளை மதிக்கவேண்டுமே தவிர, காலில் போட்டு மிதிக்கக் கூடாது. சம்பந் தப்பட்ட காவல்துறையினர் உரிய தண்ட னைக்கு ஆளாகவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இரண்டு வணிகப் பிரமுகர்கள் ஜெயராஜ் (வயது 58), அவரது மகன் பென்னிக்ஸ் (வயது 31) ஆகி யோர், கரோனா ஊரடங்கின்போது கடைகளை குறிப்பிட்ட நேரத்திற்குமேல் திறந்திருந்தார்கள் என்பதற்காக அங்கே பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள், அவர்களைக் கைது செய்து, வழக்குப் போட்டு சிறையில் அடைத்த தோடு, வரம்பு மீறி, மிருகத்தனமாகத் தாக்கி யுள்ளனர். அதிகாரத் தன்முனைப்பு அவர்களை இப்படி ‘சாமியாடச் செய்வது' அத்துறையின் கடமை உணர்வு, தன்னலம் மறந்து தொண்டு செய்வது எனும் ‘ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம்போல' ஆகி, அவ்விருவரும் - இளம் வயதுள்ள நிலையில், சிறைக் காவலில் மரண மடைந்தது, நாட்டிலே ஒரு பெரும் கொந் தளிப்பை உருவாக்கியுள்ளது!
தந்தையும், மகனும் ஒரே குடும்பத்தில் உயிரிழக்கும் வேதனை!
சட்டத்தை மீறினால், சட்டப்படி என்ன தண்டனையோ, அதைத் தருவதை விட்டு, இப்படி அராஜகம், அருவருப்பு, அதீதமான அதிகார ஆணவத்துடன் மிருகத்தனமான தாக்குதல் நடத்தி, இரு உயிர்களை - தந்தையும், மகனும் ஒரே குடும்பத்தில் உயிரிழக்கும் வேதனையான - வெட்கப்படும் துன்பத்தையும், துயரத்தையும் ஏற்படுத்திய காவல்துறை அதிகாரிகளின் இத்தகைய போக்குகளை தொலைக்காட்சிகள் படமெடுத்துப் பரப்பியும் கூட, பயமோ, கடமை உணர்வைக் கருத்தோடு செய்யும் மனோநிலையோ ஏனோ சில காவல்துறை அதிகாரிகளுக்கு வருவதில்லை.
கோவையில் ஒரு தாயின் முன்பு, அவரது மகனைப் போட்டு அடித்துத் தாக்கும் காட்சி, பார்த்த அனைவருக்கும் மன வலியை உண் டாக்கவே செய்தது!
காவல்துறை மனித உரிமைகளை
மதிக்கவேண்டும்!
‘உங்கள் நண்பன்' - காவல்துறை என்பது உண்மையிலேயே கடைப்பிடிக்கப்பட்டால் இப்படிப்பட்ட அவலங்கள் நடைபெறலாமா?
காவல்துறை மனித உரிமைகளை மதிக்க வேண்டும்! காலில் போட்டு மிதிக்கக் கூடாது; கடைசியில் அவர்களது ஆணவத்திற்கும், அதீத நடவடிக்கைகளுக்கும் அதிகமான ‘‘விலை கொடுக்க'' வேண்டியது வந்தே தீரும்.
சென்னை உயர்நீதிமன்றக் கிளை மதுரை அமர்வு, இதனைத் தாமே முன்வந்து வழக்காக எடுத்து, விசாரணையை மேற்பார்வை பார்க்கும் என்று அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத் தக்கது!
காவல்துறை அதிகாரிகள்மீது உடனே வழக்குகள் பதிவு செய்யவேண்டும்; அப்போது தான் அத்துறையின்மீது ஏற்பட்டுள்ள களங்கத் தையும், கறையையும் துடைக்க வழியேற்படும்.
மனிதம் எத்துறையிலும் ஆட்சி செய்யவேண்டும்
மனித உயிருடன் விளையாடக் கூடாது; மனித உரிமைகளை மதிக்கும் மனிதம் அத் துறையில் மட்டுமல்ல, எத்துறையிலும் ஆட்சி செய்யவேண்டும்.
அந்த இருவரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிப்பதோடு, தவறு செய்தவர்களை தண்ட னையிலிருந்து தப்ப அனுமதிக்கக் கூடாது என்றும் அரசை வலியுறுத்துகிறோம்.
காவல்துறை மீது மக்களுக்கு ஏற்படவேண் டியது விருப்பே தவிர, வெறுப்பு அல்ல என் பதை மறந்துவிடக் கூடாது.
கி. வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
26.6.2020
No comments:
Post a Comment