காணொலியில் கழகத் தலைவர் "என்னை ஏய்க்கலாமே தவிர, ஆனால் என்னை வெல்ல முடியாது!" - தந்தை பெரியார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 14, 2020

காணொலியில் கழகத் தலைவர் "என்னை ஏய்க்கலாமே தவிர, ஆனால் என்னை வெல்ல முடியாது!" - தந்தை பெரியார்

*கலி. பூங்குன்றன்



 "விடுதலை'யின் வீர வரலாறு" எனும் தலைப்பில் காணொலி மூலம் நேற்று (13.6.2020) மாலை திராவிடர் கழகத் தலைவர் 'விடுதலை' ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய 90 நிமிட உரை தகவல்களின் களஞ்சியமாக அமைந்திருந்தது.


வெளி நாடுகளைச் சேர்ந்த 10 தோழர்கள் உள்பட  கழகத் தோழர்கள் 240 பேர் இந்தக் காணொலியில் பங்கேற்றது தனிச் சிறப்பு எனும் வகையில் இந்தக் காணொலி கருத்தரங்கம் அமைந்திருந்தது.


தொடக்கவுரையை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் பல்வேறு தகவல்களுடன் நிகழ்த்தினார்.


தொடர்ந்து 'விடுதலை' ஆசிரியர் 'விடுதலை'யின் வீர வரலாற்றையும், அதன் ஆசான் தந்தை பெரியார் அவர்கள் அதனை ஒவ்வொரு கட்டத்திலும் தோளில் சுமந்து பயணித்த கள வரலாற்றினையும் ஆதாரப் பூர்வமாக எடுத்துரைத்தார்.


ஈரோட்டிலிருந்து 'விடுதலை' சென்னை சிந்தாதரிப் பேட்டை 2, பாலகிருஷ்ணபிள்ளைத் தெருவுக்கு மாற்றப் பட்டது தொடங்கி (1941)  பெரியார் திடலில் அலுவலகம் மாற் றப்பட்டு தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது வரை தல வரலாற்றை எடுத்துக் கூறினார்.


பாலகிருஷ்ணபிள்ளைத் தெருவில் அமைந்த 'விடுதலை' அலுவலகத்தில் பொதுவுடைமைக் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான பி. இராமமூர்த்தியின் திருமண வரவேற்பு தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வையும் கூறினார்.


நீதிக்கட்சி ஆட்சியில் குறிப்பாக பனகல் அரசர் (இராமராய நிங்கர்) மறைந்தபோது (15.12.1928) அவருக்காக 'குடிஅரசு' இதழில் தந்தை பெரியார் எழுதிய இரங்கல் அறிக்கை இலக்கிய தரத்தில் உன்னதமானது. (பனகல் அரசர் ஆட்சிக் காலத்தில்தான் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்றிருந்த நிபந்தனை ஒழிக்கப்பட்டது - இந்து அறநிலையத்துறை சட்டம் கொண்டு வரப்பட்டதும் அவர் காலத்தில் தான்; கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கைக்குக் குழு அமைத்து  - அதுவரை பார்ப்பனப் பண்ணையமாக இருந்த மாணவர் சேர்க்கையை மாற்றி அமைத்த மாமேதையும் அவர்தான்; பெண்களுக்கு வாக்குரிமை ஆணை முதன் முதலில் பிறப்பிக்கப்பட்டதும் இவர் ஆட்சியில்தான். பஞ்சமர், பறையர் என்ற சொல் நீக்கப்பட்டு ஆதி திராவிடர் என்று அழைக்கப்படும் வகை யில் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் பனகல் அரசர் ஆட்சிக் காலத்தில்தான். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை உருவாக்க சட்டம் இயற்றியதும் இவ்வாட்சியில்தான்!)


பனகல் அரசர் மறைவு அறிந்து பார்ப்பனர்கள் மகிழ்ச்சிக் கூத்தாடினர். 'அபார சாணக்கியன்!' என்று சர்.சி.பி. இராமசாமி  அய்யராலேயே புகழப்பட்டவர் பனகல் அரசர்.


அவர் மறைவு குறித்து 'நமது அருமைத் தலைவர்' எனும் தலைப்பில் 7 பக்கங்கள் இரங்கல் அறிக்கையை தந்தை பெரியார் எழுதியதைத் தமிழர் தலைவர் எடுத்துக் காட்டினார்.


அந்த இரங்கல் அறிக்கையில் அந்தக் காலத்திய பல்வேறு சூழல்களை மிகுந்த வேதனையோடு வெளிப்படுத்தினார். ஜஸ்டிஸ் பத்திரிக்கை, திராவிடன் இதழ்களை நடத்துவதில் ஏற்பட்ட நட்டம், சிரமங்களை எல்லாம் எடுத்துக் கூறியுள்ளார்.


பார்ப்பனர் அல்லாதாரின் தன்மையைத் தந்தை பெரியார் படம் பிடித்து எழுதியதை ஆசிரியர் விரிவாக எடுத்துரைத்தார்.


இந்தப் பத்திரிக்கைகளால் யார் பலன் பெற்றார்களோ, அந்தப் பலன் பெற்ற பார்ப்பனர் அல்லாதார் படிப்பதில்லை - நன்றியுணர்ச்சி என்பது அறவேயில்லை.


"பத்திரிக்கைக்குச் சந்தா கேட்டால் ஆயிரம் கேள்விகளைக் கேட்பார்கள். பத்திரிக்கை அனுப்பினால் அதற்குப் பணமும் கொடுக்க மாட்டார்கள். அதே நேரத்தில் எதிரிகளின் பத்திரிக்கைகளை முன் பணம் கொடுத்து வாங்கிப் படிப்பார்கள்" என்று வேதனையுடன் விளக்கியுள்ளார் தந்தை பெரியார். பனகல் அரசர் பத்திரிக்கைகளை நடத்துவதில் ஏற்படும் நட்டத்தை ஈடுகட்டும் வகையில் உதவி புரிந்து வந்தவர் என்றும் எடுத்துக் கூறினார்.


ஈரோட்டிலிருந்து 'விடுதலை' சென்னைக்கு 1941இல் கொண்டு வரப்பட்டது மே முதல் தேதியில். அதன் திறப்பு விழாவை நடத்தினார் தந்தை  பெரியார். குமாரராஜா முத்தையா செட்டியார் ஆரம்ப விழாவில் பங்கேற்றார்.


'விடுதலை' சென்னைக்குக் கொண்டு வரப்பட்டபோது  தந்தை பெரியார் எழுதியது  - இரண்டு கோடி தமிழர்களின் உரிமைக்குப் பாடுபடும் ஒரே ஏடு 'விடுதலை'தான். ஆனால் தமிழர்களின் நிலை என்ன? அதனை உணரும் நிலையில் இருக்கிறார்களா?


சமுதாய உரிமைக்குப் போராடுவதற்கும், மற்ற உரிமை களுக்குப் போராடுவதற்கும் அடிப்படையில் வேற்றுமை உண்டு.


சமுதாய உரிமைகளுக்காகப் போராடுவோர் பல எதிரிகளைச் சந்திக்க வேண்டியவர்கள் என்று கூறும் தந்தை பெரியார் அத்தகையவர்கள் அய்ந்து வகையினர் என்று பட்டியலிடுகிறார்.


"(1) வருணாசிரமவாதிகள் (2) சீர்திருத்தம் பேசும் மதவாதிகள் (3) மதத்தின் பெயரால் கோடிக்கணக்கில் பணம் குவித்திருக்கும் மடாதிபதிகள் (4) இவற்றின் சார்பாகப் புத்தகம் போட்டு விற்பனை செய்வோர். (5) மத நம்பிக்கையில் பக்தியில் கிடந்துழலுவோர் இவர்கள் அத்தனைப் பேர் களையும் எதிர்க்கவேண்டிய கட்டாயம் சமுதாயப் புரட்சி இயக்கத்தை நடத்த வேண்டியவர்களுக்கு ஏற்படுகிறது" என்று தந்தை பெரியார் எழுதியதை 'விடுதலை' ஆசிரியர் அவர்கள் எடுத்துக்காட்டியபோது ஒரு தலைவர் எத்தனை எத்தனைப் பிரச்சினைகளுக்கெல்லாம் ஈடு கொடுத் திருக்கிறார் - எந்த அளவு துன்பங்களை அனுபவித்திருக்கிறார் - இந்தப் பார்ப்பனர் அல்லாத 'சூத்திர' 'பஞ்சம' மக்களுக்காக என்பதை நினைக்கும் பொழுது நெஞ்சம் கனக்கிறது!


வலுச் சண்டைக்கு வருவார்கள்; அதே நேரத்தில் வந்த சண்டையை எதிர் கொள்ள அஞ்சும் கோழைகள் அல்ல என்று பெரியார் சொன்னதை ஆசிரியர் குறிப்பிட்டார்.


நமக்கு ஆதரவு கொடுப்பவர் சிலர் என்றால் எதிர்ப்போர் பலர். எல்லாவற்றிற்கும் ஈடு கொடுக்கும் நமது போராயுதம் 'விடுதலை'யே!


இன்றைக்குக்கூட என்ன நிலைமை? பார்ப்பானைப் பார்ப்பான் என்று சொல்லக் கூடாதாம் - பிராமணன் என்று சொல்ல வேண்டுமாம் (அவன் பிராமணன் என்றால் நம்மை நாம் சூத்திரர்கள் என்று ஒப்புக் கொள்வது ஆகாதா? அதனால்தான் 'தமிழர்களே உங்கள் சூத்திரப் பட்டம்' ஒழிய பார்ப்பானைப் பிராமணன் என்று அழைக்காதீர்!' என்றார் தந்தை பெரியார்).


"பார்ப்பன மாந்தர்காள் பகர்வது கேண்மின்" என்று திருமூலர் பாடவில்லையா? பார்ப்பனப் பாரதியே "பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே" என்று பாடவில்லையா?


மறப்பினும் ஓத்துக்  கொளலாகும்


பார்ப்பான் பிறப்பொழுக்கம்


குன்றக் கெடும் என்று


திருக்குறள் கூறவில்லையா?


இன்று கரோனா என்றவுடன் அதைத் தடுக்க என்ன சொல்லுகிறார்கள்?


"உடற்பயிற்சி செய்யுங்கள் - நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள் - சத்துள்ள உணவை உட்கொள்ளுங்கள்" என்று சொல்லவில்லையா?


அதுபோல இந்த ஆரியக் கரோனாவை ஒழித்துக் கட்ட நாம் தயாராக வேண்டும். 'விடுதலை'யை வீட்டுக்கு வீடு கொண்டு செல்ல வேண்டும்.


இன்றைக்குக்கூட சமூகநீதிப் பிரச்சினையில் - பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய தொகுப்பில் இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது என்ற நிலையில் முதல் அறிக்கை வெளி வந்தது 'விடுதலை'யில் தானே (8.5.2020).


நான்கு பக்கங்களில்தான் 'விடுதலை' வெளி வருகிறது. இதில் கிளம்பிய சிறு பொறி எங்கெங்கும் கிளம்பி விட்டதே!


பிஜேபியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா என்ன சொல்லுகிறார்?


பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு நாங்கள் எதிரிகள்  அல்ல என்று பேச ஆரம்பித்து விட்டாரே - பீகார் தேர்தல் வந்துவிட்டதல்லவா! ஆம் பீகாரில் பெரியார் இருக்கிறார் என்பதை எடுத்துக் கூறினார் கழகத் தலைவர்.


(கடந்த பீகார் தேர்தலின்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பாகவத் இடஒதுக்கீடு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று கூறவில்லையா? பீகார் தேர்தலில் அது பிரச்சினையாகும் என்று தெரிந்தவுடன் 'நான் அப்படி சொல்லவில்லை; இடஒதுக்கீடு தேவையான ஒன்றே' என்று பிளேட்டைத் திருப்பிப் போடவில்லையா?)


அமெரிக்காவில் கறுப்பர்  ஒருவர் கொல்லப்பட்டார் நிறவெறி காரணமாக என்றவுடன் அமெரிக்காவில் எதிர்ப்புத் தீ பற்றிக் கொண்டதே! அதுபோல இந்தியாவில் எத்தனை எத்தனை தாழ்த்தப்பட்டோர் படுகொலை செய்யப்படுகிறார்கள் - உத்தரப்பிரதேசத்தில் கோயிலுக்குள் ஒரு தாழ்த்தப்பட்டவர் சென்றார் என்பதற்காகத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து 'விடுதலை' தானே பொங்கி எழுந்தது?


தாழ்த்தப்பட்டவர் இந்தியாவில் குடியரசுத் தலைவர் என்று பெருமைப் பேசுவதில் அர்த்தம் உண்டா?  அந்தக் குடியரசுத் தலைவர் இந்தியாவில் கோயிலுக்குள் செல்ல முடியவில்லையே! இந்தச் சமுதாயப் போராட்டத்தை நடத்த நம்மை விட்டால் யார் இருக்கிறார்கள்? 'விடுதலை'யை விட்டால்  எழுதுவதற்கு வேறு எந்த ஏடு இருக்கிறது? என்று அடுக்கடுக்கான கேள்விக் கணைகளை எழுப்பினார் தமிழர் தலைவர் 'விடுதலை' ஆசிரியர்.


தந்தை பெரியாரின் பொது வாழ்வில் கூட வந்தவர்கள் யார் யார்? அப்படி வந்தவர்கள் தொடர்ந்து வந்ததுண்டா? அ. பொன்னம்பலனார், குத்தூசிகுருசாமி, ஜீவா, ஜே.எஸ். கண்ணப்பர், கே.எம். பாலசுப்பிரமணியம் என்று நீண்டதோர் பட்டியல் உண்டு. வந்தவர் வரட்டும் - வராதவர்பற்றி கவலை இல்லை - என் பயணம் தொடரும் என்று இலட்சியப் பாதையில் வீறு நடை போட்டவருக்குப் பெயர்தான் பெரியார். சலிப்பறியா சரித்திர நாயகரே அந்தத் தலைவர்.


1944 ஆகஸ்டு 15 'விடுதலை'யில் எழுதுகிறார் - அவர்தம் அனுபவத்தில் எழுதுகிறார்.


படித்தவர்களும், பணக்காரர்களும் பெரிதும் பயன்பட மாட்டார்கள் என்று எழுதுகிறார்?


நான் யாருக்குக் கெடுதி செய்திருக்கிறேன்? என்று கேட்ட பெரியார் ஓர் இடத்தில் குறிப்பிடுகிறார் - மயிர்ச் கூச்செறிகிறது.


அதனை நம் ஆசிரியர் எடுத்துக் காட்டியபோது காணொலியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பொறி தட்டியது.


"என்னை ஏய்க்க முடியுமே தவிர, என்னை யாராலும் வெல்ல முடியாது - காரணம் என் கொள்கை என் இலட்சியம் நடத்தை அப்படிப்பட்டது!" என்று தந்தை பெரியார் சொல்லும் இவ்வார்த்தைகள் - எந்த ஒரு உன்னதமான இலட்சிய இயக்கமும், இலட்சியவாதியும் நெஞ்சில் ஏந்திச் செல்ல வேண்டிய ஈடு இணையற்ற வீரமும், விவேகமும் நிறைந்த பொன் வாசகங்கள்  என்பதைப் பொருத்தமாக எடுத்துக் காட்டினார் கழகத் தலைவர்.


இது போன்ற பல்வேறு தகவல்களும், நிகழ்வுகளும் அலை அலையாக அணி வகுத்தன ஆசிரயர் உரையில்.


 


மனந்திறந்தார்கள்


37 ஆண்டுகளாக 'விடுதலை' படித்து வருகிறேன். ஆசிரியரின் இன்றைய பேச்சு எனக்குப் பாடப் புத்தகமாக இருந்தது.


- மும்பை கணேசன்


- - - - -


தந்தை பெரியார் உலகத்துக்குக் கொடுத்த நன்கொடை நமது தமிழர் தலைவர்


- அரசு செல்லையா, அமெரிக்கா


- - - - -


ஒழுக்கமாக இருப்போர் எல்லாம் 'விடுதலை'யைப் படிப்பார்கள். ஒழுக்கமாக இருப்பவர்கள் நாட்டில் குறைவு. அதனால் 'விடுதலை' அதிகமாக செல்லுவதில்லை என்று சொன்னவர் எங்கள் சிறிய தந்தையார் பி.வி.ஆர். (இராமச்சந்திரன்)


- டாக்டர் சோம.இளங்கோவன், அமெரிக்கா


(பெரியார் போல் பேசி இதனைச் சொன்னார்)


- - - - -


"ஆயிரம் பக்கம் உள்ள புத்தகத்தைப் படித்து முடித்துள்ளது போன்று இருக்கிறது ஆசிரியரின் உரை.


- குமணராசன், மும்பை


- - - - -


இளைஞர்களை ஈர்க்கும் உரை.


- துரை.இராயப்பன், அபுதாபி


- - - - -


75 ஆண்டு கால 'விடுதலை' வாசகன் - அய்யா காலத் தில் வந்த 'விடுதலை'யைப் படிக்கப் பயிற்சி வேண்டும் - இப்பொழுதோ எட்டுப் பக்கம் - பல வண்ணம் - இரு பதிப்பு - இது நமது ஆசிரியரின் சாதனை.


- பொத்தனூர் க.சண்முகம்


- - - - -


எங்கள் தந்தையார் கே.கே.சின்னராசு எங்கு சென்றாலும் அவர் கையில் 'விடுதலை' இருந்து கொண்டே இருக்கும். மருத்துவமனைக்குக் கடைசியாக சென்றபோது கூட அந்த விடுதலையுடன் தான் சென்றார். அவர் வரதட்சணை கேட்டதுண்டு - எங்கள் மாமனார் மாமியாரிடம் - 'விடுதலை' ஆயுள் சந்தா, 'உண்மை' ஆண்டு சந்தா இவைதான் அந்த வரதட்சணை.


- கே.சி.எழிலரசன், திருப்பத்தூர்


- - - - -


1974 (9 வயது) முதல் நான் 'விடுதலை' வாசகன்.


- கோ.ஒளிவண்ணன், சென்னை


 


முகம் தொங்கிய பிஜேபி செய்தி தொடர்பாளர்கள்


தொலைக்காட்சி விவாதங்களில் அரட்டைக் கச்சேரி நடத்தும் பிஜேபி பேர்வழிகள் - இடஒதுக்கீடு பிரச்சினை தலை தூக்கிய இந்தக் கால கட்டத்தில் பலமுனைக் கருத்துத் தாக்கத்திற்கு ஆளாகி, பதில் சொல்லத் திணறி முகந் தொங்கிய பரிதாப காட்சியை நன்கு இரசிக்க முடிகிறது. இடஒதுக்கீட்டை மறுக்கவும் முடியவில்லை - அதே நேரத்தில் அகில இந்திய மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்ட பிரச்சினையில் மத்திய பிஜேபி அரசின் துரோகத்தை நியாயப்படுத்தவும் முடியாத நிலையில் விழி பிதுங்கிய காட்சியை என் சொல்ல! அட நாராயணா!


"மு. கருணாநிதியும், கி. வீரமணியும் மண்டல் கமிஷனுக்காக ஒன்றும் செய்யவில்லை" என்று அபாண்ட பொய்யைச் சொன்னபோது ஆதாரத்துடன் எதிர் தரப்பில் மறுக்கப்பட்டது.


திராவிடர் கழகம் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தியதையும், பி.பி.மண்டல் அவர்கள் பெரியார் திடலுக்கு வந்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து உரையாடியதையும், பெரியார் திடலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பி.பி.மண்டல் அவர்களும், உறுப்பினர்களும் கலந்துகொண்டதைப் பற்றியும், திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி முகத்துக்கு முகம் பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தகுந்தது.


 


இரங்கல்


சிகாகோ டாக்டர் சோம. இளங்கோவன் அவர் களின் அண்ணனும், சிறந்த பகுத்தறிவாள ருமான பொறியாளர் பொன்னுசாமி, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், கடலூர் துறைமுகம் ஒன்றிய கழகத் தலைவருமான சோ. குப்புசாமி, மறைந்த இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் மகள் மணமல்லி ஆகியோருக்கு இரங்கல் தெரி விக்கும் வகையில் சிறிது நேரம் அமைதி காத்து தன் காணொலி உரையைத் தொடங்கினார் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.


No comments:

Post a Comment