1969 டிசம்பர் 2இல் “அர்ச்சகர் சட்டம்” தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றம்
தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும். அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர் களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...
- ஆசிரியர், 'விடுதலை'
1969 அக்டோபரில் “இழிவு நீக்கக் கிளர்ச்சி” என்ற பெயரில் “விடுதலை ”யில் அவர் எழுதிய தலையங்கத்தில் இப்படி இருந்தது- “இந்த இழிவு நீக்கக் கிளர்ச்சி என்பது, உலகில் எங்குமே இல்லாத அக்கிரமக் கொடுமையிலி ருந்து மனிதன் விடுதலை, மானம் பெற வேண்டும் என் பதற்காக நடத்தப்படும் கிளர்ச்சியேயாகும். இதில் எந்த வித வகுப்புத் துவேஷமோ, வகுப்பு வெறுப்போ இல்லை. நம் நாட்டில் (இந்துக்கள் என்னும்) சமுதாயத்தில் 100க்கு 97 பேர்களாக உள்ள மக்கள்அதிலும் படித்தவர்கள், செல்வவான்கள், உயர்தர அய்க்கோர்ட் நீதிபதிகள், கலெக்டர்கள், உபஅத்தியட்சகர்கள், மடாதிபதிகள், சமீப காலம் வரை மகாராஜாக்கள், அரசர்கள், ஜமீன்தார்கள், பலகோடி ரூபாய்க்குச் சொந்தக்காரர்கள், பிரபுக்களான இவர்கள் - சமுதாயத்தில் கீழ்ப்பிறவிகளாக கீழ் மக்களாக, கடவுள் என்கிற (அதுவும் அவர்களுடைய கடவுள்) சிலையிடம் நெருங்கக் கூடாதவர்களாக, அறைக்கு வெளியே நிற்க வேண்டியவர்களாகத் தலைமுறை தலை முறையாகத் தடுக்கப்பட்டு, நிரந்தரக் கீழ்மக்களாக ஆக் கப்பட்டிருக்கிறார்கள். இதிலிருந்து விலக்கி, மானமுள்ள மக்களாக ஆக்கப்பட வேண்டும் என்பதற்குக் கிளர்ச்சி செய்வதென்றால் அது தவறாகாது. இதுவரை செய்யா மலிருந்ததுதான் மானங்கெட்ட தன்மையும், இமாலயத் தவறும் ஆகும்“
கிறிஸ்தவத்தில் யார் வேண்டுமானாலும் பாதிரியார் ஆகலாம், இஸ்லாமில் யார் வேண்டுமானாலும் மவுல்வி ஆகலாம். வேண்டியது அது அதற்கான பயிற்சிதானே தவிர அவரின் பிறப்பு குறுக்கே வராது. பிரமாதமாகச் சொல்லப்படுகிற இந்து மதத்தில்தான் இந்தக் கொடுமை. சமுதாயத்தில் மிகக் குறுகிய அளவில் இருக்கிற ஒரே யொரு ஜாதியார் மட்டும்தான் கோயில் அர்ச்சகராக முடி யும்! மற்றவர்கள் கருவறைக்குள் நுழைந்தால் தீட்டு! தீண் டாமையை ஒழித்துவிட்டதாகச் சொல்லிக் கொண்டது அரசியலமைப்புச் சட்டம். ஆனால், இந்தத் தீண்டாமை மட்டும் தொடர்ந்தது. இதை ஒழிக்கச் சொல்லியே அறைகூவல் விடுத்தார் பெரியார்.
இதே காலத்தில் அவர் எழுதிய இன்னொரு தலை யங்கம் கூறியது - “உண்பன, தின்பன வகையிலும், பெண் கொடுப்பன, கொள்பன என்பவைகளிலும் சட்டப்படியே தடை நீக்கப்பட்ட பிறகு, ஒரு நிலக்குறிப்பான இடத்திற்கு, மூலஸ்தானத்திற்கு மட்டும் உண்டு என்றால், இது எவ்வளவு பைத்தியக்காரத்தனம் என்பதோடு, இதனால் சமுதாய இழிவும் அமுல்படுத்தப் படுவதென்றால் எவ்வளவு மானக்கேடான காரியம் என்பதையும் தெரியப் படுத்திக் கொள்கிறேன். எனவே, ஆட்சியாளர் இதைப் பகுத்தறிவோடு கவனிக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன்.”
இப்படித் தர்க்கரீதியாக வாதிட்டு அரசை வலியுறுத் தியது மட்டுமல்லாது 1970 ஜனவரி 26ஆம் நாளை - குடியரசு தினத்தை - “கர்ப்பக்கிரகக் கிளர்ச்சி நாள்” என்றும் அறிவித்தார் பெரியார். கிளர்ச்சிக்கான ஏற்பாடு களிலும் இறங்கினார். இது விஷயமாக உரிய சட்டம் கொண்டு வருவதாக முதல்வர் கலைஞர் அறிவித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை ஒத்திவைத்தார். 1969 டிசம்பர் 2இல் அப்படியொரு “அர்ச்சகர் சட்டம்” தமிழக சட்ட மன்றத்திலும் நிறைவேறியது. இது பெரியாரின் விடாப் பிடியான பிராமணிய எதிர்ப்பு இயக்கத்திற்குக் கிடைத்த ஒரு வெற்றி.
ஆனால், இந்தச் சட்டம் நடைமுறையில் செல்லு படியாகாத படி 1972 மார்ச்சில் ஒரு தீர்ப்பைச் சொன்னது உச்சநீதிமன்றம். இதைத்தான் “அறுவை சிகிச்சை வெற்றி-ஆனால் நோயாளி மரணம்“ என்று கண்டித்துத் தலை யங்கம் தீட்டினார் “விடுதலை” ஏட்டில் கி.வீரமணி. இவர் பின்னாளில் தி.க.வின் பொதுச் செயலாளரானவர்.
இந்தத் தீர்ப்பு கண்டு வெறுத்துப் போன பெரியார் அரசியலமைப்புச் சட்டத்தில் இதற்கான உரிய திருத்தங் களை செய்ய வைப்பதற்காக “இழிநிலை நீக்க மாநாடு“ ஒன்றைக் கூட்டப் போவதாக 1973 அக்டோபரில் அறிவித்தார் அப்படியே டிசம்பர் 8,9இல் நடத்தவும் செய்தார். அதில் போராட்ட அறிவிப்பையும் வெளியிட்டார். அவருக்கு அப்போது வயது 94. அந்த வயதிலும் தளராத போராட்டக் காரராக, கடைசிவரை உறுதி மிக்க சமூகப் பேராளியாகத் திகழ்ந்தார். இத்தகைய மகத்தான சமூக சீர்திருத்தவாதி டிசம்பர் 24இல் அந்த போராட்டத்தை நடத்தாமலேயே- இயற்கை எய்தினார்.
சகல ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் கொண்டு வரவைத்து பிராமணியத்தின் ஓர் அடிப்படைக் கூறை அசைத்துப் பார்த்தார் பெரியார். அவர் அன்று எடுத்த முயற்சி இன்னும் முழுமையாகவில்லை என்பது தான் சோகம், தோல்வி அவருக்கல்ல சகல சமூகநீதி சக்திகளுக்கும்.
திராவிட முன்னேற்றக் கழகம்
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற கலைஞர் 1969 நவம்பரில் ஏ.என் சட்டநாதன் தலைமையில் “பிற்படுத்தப் பட்ட வகுப்பார் கமிஷனை” அமைத்தார். அது தனது அறிக்கையை 1970இல் சமர்ப்பித்தது. அதில் பிற்படுத்தப் பட்டோருக்கு அரசுப் பணிகளிலும் கல்லூரிகளிலும் 33% இடஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஏற்கெனவே 25% தான் இருந்தது. ஆனால், இடஒதுக்கீடானது 50%க்கும் குறைவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புச் சொல் லியிருந்ததால் பிற்படுத்தப்பட்டோருக்கு 31%, பட்டியல் ஜாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு 18%, பொதுப் போட்டிக்கு 51% என்று புதிய இடஒதுக்கீடை அமுலுக்கு கொண்டு வந்தது கலைஞர் அரசு 1971இல். இது பிற்படுத் தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் கூடுதல் நன்மை செய்தது. தாழ்த்தப்பட்டவர்கள்-பழங்குடியின ருக்கு இதற்கு முன்பு 16% இடஒதுக்கீடே இருந்தது. சமூக நீதி விஷயத்தில் கலைஞர் அரசின் ஒரு முக்கியமான பங்களிப்பாக இது இருந்தது.
இதற்கு ஆதரவாகப் பெரியாரின் வலுவான ஆலோ சனையும் இருந்தது என்று பதிவு செய்திருக்கிறார் கி.வீரமணி.
..- முற்றும்
No comments:
Post a Comment