இந்தியாவில் உ.பி.யில் கோவிலுக்குச் சென்று வழிபட்ட தாழ்த்தப்பட்ட தோழர் சுட்டுக் கொல்லப்பட்டார்
இந்தியாவில் எந்த அசைவும் இல்லாதது ஏன்? ஏன்??
இந்து மதத்தின் கர்மா தந்திரம் தானே!
அமெரிக்காவில் கருப்பு நிறத்தவர் ஒருவர் வெள்ளைக்கார போலீசாரால் கொல்லப் பட்டார் என்ற நிலையில், அமெரிக்காவே பற்றி எரிகிறது.
இந்தியாவில், உ.பி.யில் தாழ்த்தப்பட்ட தோழர் ஒருவர் கோவிலுக்குச் சென்று வழிபட்டார் என்பதற்காக உயர்ஜாதியினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், இங்கு எவ்விதச் சலனமும், அசைவும் இல்லையே, ஏன்? ஏன்? வர்ணதர்மமும், சனாதனத் துவமும் தானே? என்ற வரலாற்று ரீதியான - தத்துவ ரீதியான வினாவை எழுப்பும் வகையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் முக்கிய அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
அமெரிக்காவில் கரோனா தொற்று நாளும் அதிகரித்துக் கொண்டே உள்ளது - 20,455,49
உயிர்ப் பலிகளோ மிகவும் வேதனையானது. அது 4,13,733 அய் தாண்டுகிறது.
கடந்த நான்கு மாதங்களில் அமெரிக்காவில் வேலையிழந்தோர் எண்ணிக்கையும் பெருகி, அதன் பொருளாதார வீழ்ச்சியும் கவலையளிப்பதாக உள்ளது.
அமெரிக்காவில் கருப்பரைக் கொன்ற போலீஸ்!
ஆனால், இவற்றையெல்லாம் ஒரு சின்னக்கோடு என்று சொல்லும் அளவுக்கு, கடந்த இரண்டு வாரங்களுக்குமுன் மினியாப் பொலிஸ் என்ற ஒரு நகரத்தில் நடைபெற்ற ஒரு ஈவிரக்கமற்ற, காவல் துறை அதிகாரியின் அத்துமீறல், மனித உரிமை மீறல் அமெரிக்காவையே மூச்சுத் திணற வைப்பதோடு, அமெரிக்காவில் எங்கு பார்த்தாலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் - கரோனா தொற்று பயம்கூட, இந்த நிறவெறிக்கு - இன ஒடுக்கலுக்கு முன் ஒன்றுமில் லாமல் ஆகிவிட்டது!
பெரிய கோடு- அமெரிக்காவில் தொடங்கி உலக நாடுகள் பலவற்றிலும் இந்த இன ஒடுக்கல் - மனித வாழ்வுரிமை பறிப்பு - நிறவெறியின் நிர்வாணத் தாண்டவம் கண்டு அருவருப்படைந்து - மனிதம் தழைக்க, அமெரிக்க மண்ணில் நியாய உணர்வுள்ள வர்கள் கருப்பர்கள் மட்டுமல்ல, வெள்ளை நிறத்த வர் என்றாலும், மனிதத்தின் மாண்பில், அவர்கள் சுயமரியாதையோடு இணைந்த சுதந்திர வாழ்வு முக்கியம் என்பதை வலியுறுத்தி, ‘‘எங்கெங்கு காணி னும் அறப்போர்க் கிளர்ச்சியடா, அது ஏழுகடல் தாண்டியும் நடக்குதடா'' என்று சொல்லும் அளவுக்கு சிறு தீப்பொறி, எளிதில் அணைக்க முடியாத அமேசான் காட்டுத் தீயைவிட பெருந்தீயாகப் பரவி நெருப்பின் கனல் கொந்தளிப்பாகியுள்ளது!
என்ன அங்கே நடந்தது?
கடந்த சில வாரங்களுக்குமுன் மினியாப் பொலிஸ் பகுதியில் ஒரு சிறு கடை. அங்கு ஜார்ஜ் ஃபிளாயிட் (George Floyd) என்ற கருப்பினத்தவர் ஒருவர் சிகரெட் வாங்குகிறார். அதற்குத் தரப்பட வேண்டியதற்காக 20 டாலர் நோட்டைத் தந்தார். அந்த நோட்டு (கரன்சி) ‘போலி நோட்டு' என்பதாகக் கடைக்காரருக்குத் தெரிய வருகிறது. உடனே போலீசுக்குத் தகவல் போனது. மின்னல் வேகத்தில் வந்த போலீஸ் (வெள்ளை அதிகாரிகள்) எவ்வித விசாரணையும் செய்யாமல், ஜார்ஜ் ஃபிளாயிட் என்ற அந்தக் கருப்பு மனிதரை கீழே தள்ளி, ஒரு காருக்கடியில் படுக்க வைத்து, அவர் கழுத்தில் தனது முழங்காலை வைத்து அழுத்திட, ஜார்ஜ் பிளாயிட், ‘‘என்னால் மூச்சுவிட முடியவில்லை'' என்று கதறிக் கதறி அழுது கூக்குரல் இடுகிறார்.
அதைப் பொருட்படுத்தாத டெரக் சவு என்ற வெள்ளையின போலீஸ் அதிகாரி மேலும் கழுத்தை அழுத்த, அவர் கொல்லப்படுகிறார்.
இத்தனைக்கும் பிளாயிட் கையில் துப்பாக்கியோ, அது போன்ற எந்த கருவியும்கூட இல்லை!
அந்த வெள்ளை அதிகாரியுடன் மேலும் மூன்று போலீஸ்காரர்கள் (வெள்ளை அமெரிக்கர்கள்) இருந்தும்கூட அந்தக் கோரமான நிகழ்வைத் தடுக்க முன்வரவோ, முயற்சிக்கவோ இல்லை என்பது மேலும் வேதனையையும், சோகத்தையும் பெருக் குபவையாகும்!
இதை தனது செல்போனில் அப்படியே பதிவாக் கினார் 17 வயது மாணவி டேர்னல்லா. இது சமூக ஊடகங்களில் பரவி - பரபரப்பான செய்தியாகியது.
(குறிப்பு: இன்றுதான் ஜார்ஜ் பிளாயிட் உடல் அடக்கம் செய்யப்பட்டது).
சிறு பொறியால் அமெரிக்காவே எரிகிறது!
இந்த சிறு தீப்பொறி, பெருநெருப்பாகி, அமெரிக் காவில் எரிமலை வெடித்ததுபோல் பற்றி எரிகிறது!
கருப்பின மக்கள் மாத்திரமல்ல, மனித உரிமைகள் காக்கப்படவேண்டும், அடிமை முறையை ஒழித்த ஆபிரகாம் லிங்கனின் மண்ணில் இன்னமும் மனதில் ஆதிக்கவாதிகளாக உள்ளவர்களின் மாறாத மனப் போக்கு மண்மூடிப் போகவேண்டும் என்பதற்காக எல்லா அமெரிக்கப் பெருநகரங்களிலும் மக்கள் பெருந்திரளாகக் கூடி அறப்போர் ஆர்ப்பாட்டங் களை நடத்தி, எல்லோரும் குடியேறிய நாடுதான் அமெரிக்கா என்கிறபோது, ஏன் இந்த இன நிற பேதம்? கருப்பினமானாலும் மனித இனமல்லவா? உழைப்பிலோ, திறமையிலோ, ஆற்றலிலோ எவ் வகையில் அவர்கள் மற்றவர்களுக்குக் குறைந்த வர்கள்? அல்லது தாழ்ந்தவர்கள்? என்ற கேள்வி இதுபோது நிகழ்வுகள் - அடிக்கொருமுறை இந்த பேதப் புயல் வீசும் போதெல்லாம் எழுகின்றது.
இன்று அமெரிக்காவின் இளைய தலைமுறை - எல்லா தரப்பிலும் உள்ளவர்கள் என்பது ஒரு தனி சிறப்பம்சம் - இப்போது அணி திரண்டு, அநியாயத் திற்கு எதிராகக் குரல் கொடுத்து முழங்கி முரசு கொட்டத் தொடங்கி விட்டனர்!
எரியும் நெருப்பில்
பெட்ரோல் ஊற்றும் டிரம்ப்
இந்தத் தீயை அணைக்கவேண்டிய அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் போன்றோர் தங்களின் அதிகாரக் குரலை உயர்த்தி, எப்போதோ எவரோ காவல்துறையோ - பயன்படுத்திய சில அடுக்கு சொல் என்ற முள்ளாகிய சொற்களில் மோகங் கொண்டு ‘If there is looting, there will be shooting' என்று கூறி, இராணுவத்தை அழைப்பேன், அடக்கு வேன் என்று ஆர்ப்பரித்து, தீயை அணைக்க பெட்ரோல் ஊற்றிய கதையாகவே ஆயிற்று!
இப்பிரச்சினை வெறும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை அல்ல; அந்தக் கண்ணோட்டத்தோடு பார்த்தால் சரியான சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியாத நோய் போலாகிவிடக் கூடும்.
இது காலங்காலமாகவே ஆதிக்க மனப்பான்மை - அதிகார ஆணவம் - இவற்றில் ஊறித் திளைத்தல் - அமெரிக்க ‘வர்ண தருமத்தின்' வெளிப்பாடு என்பதை மறந்துவிடக் கூடாது!
மார்ட்டின் லூதர்கிங் ஜூனியரின் அறப்போர் கிளரச்சி - பஸ் மறியல் - விளைந்த வெற்றி - அவரு டைய உயிரைப் பணயமாகக் காவு வாங்கியது!
ஆபிரகாம் லிங்கன்களுக்கும், ஜான் வில்கிங் பூத்கள் கொடுத்த கொடூரம் போலவே, இவரது உயிர் பறித்ததும் அதே நிறவெறி ஆதிக்க உணர்வு - அதிகார மமதையே!
எனவேதான், இதற்கு சரியான அறுவை சிகிச்சை தேவை என்று உலகெங்கும் உள்ள இளைய தலை முறை முதல் முதிய நியாயவான்கள் வரை நினைத்து களத்திற்கு வந்து கடமையாற்றிட வந்துள்ள நிலை.
கனடா நாட்டு பிரதமர் வந்து முட்டி போட்டுக் கொண்டு அறப்போராட்ட வீரர்களுடன் தாமும் கலந்து, தமது அறவழி நிலை ஆதரவினைக் காட்டி யுள்ளார்.
வெள்ளை மனங்கொண்ட
வெள்ளையர்களும் உள்ளனர்!
இதுபோல ஆஸ்திரேலியா போன்ற பற்பல நாடு களிலும் இது வெள்ளை நிறத்தினராகிய எங்களில் பலருக்கு, வெள்ளை மனம் உள்ளது என்று காட்டி இவ்வணியில் நின்று மனிதத்திற்காக - சமத்துவத் திற்காக சரியாகக் குரல் கொடுக்கத் தவறிடவில்லை என்பது புதிய நம்பிக்கையை ஊட்டுகிறது; புத்துலகு பிறக்கும் என்ற ஒளி தெரிகிறது!
அமெரிக்காவின் மக்கள் தொகை 33 கோடி. இதில்,
- வெள்ளை இனத்தவர் - 76.5 விழுக்காடு
- கருப்பினத்தவர் (Afro-American) - 13.5 விழுக்காடு
- இந்திய - சீனர் உள்ளிட்ட ஆசிய நாட்டவர் - 5.9 விழுக்காடு
- மற்ற பலதரப்பட்ட நாட்டினர் - 2.8 விழுக்காடு
- பூர்வீகக் குடியினர் - 1.3 விழுக்காடு.
மேற்காட்டிய - தீப்பொறியாய் கிளம்பிய ஜார்ஜ் ஃபிளாயிட், டெரக்சவு போன்றவர்களின் பிரச்சினை வெறும் சட்டம்- ஒழுங்குப் பிரச்சினையல்ல என்போம்.
இந்த போலீஸ் அதிகாரியின் மனைவி தனது கணவரின் இந்த அடாத, அநியாயச் செயலைக் கண்டு வெறுப்படைந்து, இத்தகையவரின் மனை வியாகத் தான் இருக்க விரும்பவில்லை என்று மணவிலக்கு (Divorce) மனு தாக்கல் செய்துவிட்டார் என்பது ஓர் இன்ப அதிர்ச்சியாகும்! (நம்மூர் பழைய பாணி - ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்' போதை மனப்போக்கு அங்கே இல்லாத தால் இந்த புரட்சிகர சிந்தனை வந்ததுபோலும்!).
அமெரிக்காவில் இந்த ஒரு சம்பவத்திற்காக அல்ல - நோயை அதன் மூலத்தை ஆராய்ந்து அப் புறப்படுத்த இது ஒரு அரிய வாய்ப்பு என்று இன்றுள்ள தலைமுறை - நிறங்களை மறந்து மனித திறங்களை, நெஞ்சின் உரங்களோடு போராட்ட களத்திற்கு வந்துள்ளது பாராட்டத்தக்கது.
‘புண்ணிய பூமி'யான இந்தியாவில்...
ஆனால், ‘புண்ணிய பூமியான' - ‘ஞானபூமியான' நமது நாட்டில் - பல்லாயிரக்கணக்கில் பார்ப்பன மேலாண்மை பறந்துகொண்டுள்ள ‘பாரத' நாட்டில் என்ன நிலை?
ஒடுக்கப்பட்ட மக்களை, குறிப்பாக தாழ்த்தப்பட்ட சகோதர்களைப் படுகொலை செய்யும் வர்ணாசிரம ஜாதி வெறித்தனத்தின் தொற்று கரோனா தொற்றை விடக் கொடுமையானது. அது அன்றிலிருந்து இன்றுவரை வாங்கிய உயிர்ப் பலிகள் கணக்கிலடங் காது. மறக்கப்பட்டவைகளை விட மறைக்கப்பட்ட வைகளே அநேகம்!
பழைய செய்திகள் கூட வேண்டாம். இரண்டு நாள்களுக்கு (2020 ஜூன் முதல் வாரத்தில்) உ.பி. பா.ஜ.க. ஆட்சி - ஒரு யோகி சாமியார் முதலமைச்சராக உள்ள பெரிய மாநிலத்தில் நடந்த நெஞ்சு வெடிக்கும் நிகழ்ச்சி இதோ படியுங்கள்:
கோவிலுக்குள் சென்ற தாழ்த்தப்பட்ட தோழர் சுட்டுக் கொலை!
உத்தரப்பிரதேசத்தின் அம்ரோகா மாவட்டத்தி லுள்ள டோம் கேரா கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ் குமார் ஜாதவ். 17 வயது தாழ்த்தப்பட்ட சமூகத்து சிறுவனான இவர், சில நாட்களுக்கு முன்பு, தனது கிராமத்திலுள்ள சிவன் கோவிலுக்கு வழிபடச் சென்றுள்ளார். அப்போது அவரை கோவிலுக்குள் செல்லக் கூடாது என்று ஜாதி ஆதிக்க வெறியர்கள் தடுத்துள்ளார்கள்; எனினும், அவர் தடையைத் தாண்டி, கோவிலுக்குள் சென்று வழிபட்டிருக்கிறார்!
இதனால் ஆத்திரமடைந்த ஜாதி வெறியர்கள் விகாஸ்குமார் கோவிலிலிருந்து வெளியே வந்தவுடன் அவரைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். இதில் படுகாயமடைந்த விகாஸ்குமாரை அழைத்துக் கொண்டு அவரது தந்தை ஓம் பிரகாஷ் ஜாதவ் காவல்துறையினரிடம் புகார் செய்தபோது, அவர்கள் புகாரை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டனர்!
இதனிடையே, விகாஸ் குமாரை கோவிலில் தாக்கியது மட்டுமின்றி, கடந்த சனியன்று (6.6.2020) அவர் வீட்டிற்கே வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், விகாசை இழுத்து வெளியில் போட்டு, துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.
கோவிலுக்குள் சென்று சாமி கும்பிடக்கூட உரிமை, சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் ஆன நாட்டில் - அதுவும் குடியரசுத் தலைவராக ஒரு தாழ்த்தப்பட்ட வரையே மேலே வைத்து பொம்மலாட்டம் காட்டும் ஒரு சூழ்நிலை உள்ள ‘‘பாரதத் திருநாட்டில்''
- ‘ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்' என்று பாடிய பாட்டெல்லாம் வெற்று காகித மை சிந்தலா - காற்றோடைதானே!
இந்தக் கரோனா தொற்றிலும் ஜாதி - தீண்டாமை எப்படி நச்சுப் பல்லை வைத்து உயிர்களைப் பலி கொள்கிறது!
இந்த செய்திகள்கூட வெளியே வருவதில்லை. காரணம், உயர்ஜாதியினர் வல்லாண்மையின் வலி மையே ஆட்சி புரியும் கொடுமை!
இலேசான குரல் உண்டா?
அமெரிக்க நாட்டிலாவது இப்போது ஒரு பெரும் மக்கள் திரள் - அறப்போர் - போர்ச்சங்கு. ஆனால், அதைவிடப் பெரிய உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று தம்பட்டம் அடிக்கும் இந்நாட்டில் ஒரு சிறு லேசான குரல்கூட எதிர்க்குரலாகக் கிளம்பவில்லை.
இதற்கு முக்கிய காரணம் என்ன? ஜாதி, ஜாதி... ஜாதியும், ஜாதி தர்மமுமான மனுதர்மமும் அதனை பல்லாயிரக்கணக்கில் நிலை நிறுத்தும் பிறவி பேதத் தின் ஊற்றுக் கண் ஆகிய பார்ப்பனீயமும் தானே!
ஜாதி முறையில் கூட - தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் போன்ற புரட்சியாளர்கள் கூறியபடி, படிநிலை ஜாதி முறை Graded inequality என்ற பேதத்தினைக்கூட ஏற்றமும், தாழ்வும் உள்ள படிக் கட்டுகளாக்கி, எதிர்ப்பாளரான பின்னால் இருந்து தூண்டும் பொது எதிரியை மறந்துவிட்டு, தனக்கு அருகில் உரசும் நபரையே தனது எதிரியாக்கி ஒரு வருக்கொருவர் சண்டையிட்டு, ஜாதி மோதல்களை உருவாக்கிய உண்மையான பிரித்தாளும் பெரும் சூழ்ச்சி (Divided & Rule) என்ற ஆயுதம்தானே காரணம்?
அமெரிக்காவும் - இந்தியாவும்!
அமெரிக்காவில் மனித உரிமைக்குக் கேடாக நிற வெறியால் விளைந்த வெறுப்பும், வெறுப்பினால் அடிக்கடி கருப்பின மக்களின் உரிமைக் குரல்வளைகள் அழுத்திப் பறிக்கப்படும் நிலையில், ஏற்படும் விழிப் புணர்வு எரிமலை வெடிப்பதைப்போல, கிளம்பு கிறதே, அதைவிடப் பன்மடங்கு அவமானம், உரிமைப் பறிப்பு துவங்கி, உயிர்கள் படுகொலை வரை செல்லும் நிலையிலும், அக்கிரமம், அநீதி என்று ஆர்த்தெழுந்து, கொதித்து, கொந்தளித்துக் கிளம்பும் நிலை ஏன் இல்லை?
மூல காரணங்களையே தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் ஆராய்ந்தார்கள்.
அது அவனவன் செய்த பூர்வ ஜென்ம வினைப் பயன். அவன் போன ஜென்மத்தில் செய்த செயல் களின் விளைவை இந்த ஜென்மத்தில் இப்படிப் பிறந்து அனுபவிக்க வேண்டுமென்ற அவன் தலையெழுத்து என்ற கர்மா தத்துவம் போதிக்கப்பட்ட சனாதன ஹிந்து மத தர்மம்; இவற்றால் கண்டுபிடிக்கப்பட்ட கருவியே இல்லாத ஆத்மா!
ஜார்ஜ் ஃபிளாயிட் மரணத்திற்கு நீதிக் கேட்டு நியூயார்க்கில் நடந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.
அப்படி ஒன்றைப் பரப்பி மனதில் பதிய வைக்கவே ‘பகவத் கீதை' போன்ற பிறவி பேதத்தை நியாயப் படுத்தும் நூல். இதற்கு முன்பே மனுதர்மமும், இதிகாச புராணங்களும் ‘‘ஜாதி தர்மத்தையும், வர்ண தர்மத் தையும் ஆண்டவன் உண்டாக்கியது - அதனால் அந்த அமைப்பை மாற்றவே முடியாது'' என்ற ஒரு நிலைப்பாட்டை, கட்டுப்பாடான பிரச்சாரத்தின்மூலம் ஆரியம் நிலை நிறுத்தி வெற்றி பெற்றது!
கருப்பர்களுக்குக்
கல்வி உரிமை மறுக்கப்பட்டதுண்டா?
கருப்பர்களை, வெள்ளையர்கள் நிற பேதம் காரணமாக மிகவும் மோசமாக நடத்தினாலும்கூட, அவனுடைய கல்வி உரிமையை மறுக்கவில்லை. ‘‘வேறு தனிப் பள்ளிக்கூடத்தில் படி, என் தோலும், உன் தோலும் வெவ்வேறு வண்ணம். எனவே, என்னுடன் அமர்ந்து படிக்க உனக்குத் தகுதி இல்லை'' என்றுதான் ஆணவத்துடன் கூறினானே தவிர, அவன் படிக்கவே கூடாது, அவன் படிக்கும் மத நூலையோ, சாஸ்திரங்களையோ படித்தால் நாக்கை அறு; காதால் கேட்டால் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்று உலகம் கேட்டறியாத ஈவிரக்கம் அற்ற கொடுமையைச் செய்யவில்லையே!
படிப்பு கிடைத்தவுடன் கருப்பினத்தவர் மார்ட்டின் லூதர் கிங்குகளும்,ஒபாமாக்களும், நெல்சன் மண் டேலாக்களும், ஜெலிண்டா லீசாரைஸ், மைக்கேல் ஜாக்சன்களும், சிட்னே பாய்ட்டியர்களும் வர முடிந்தது.
இன்றும் விழிப்புணர்வினால் எல்லாத் துறை களிலும் அவர்களின் தகுதி திறமையால் வெள்ளை இனத்தவரோடு போட்டியில் வெல்லுவதாக உயர முடிந்தது!
அங்கும் அதற்கு Affirmative Action என்ற இட ஒதுக்கீடும் உதவுகிறது - காலங்காலமாய் அழுத்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட, குரலற்ற மக்களாக அவர்கள் இருந்த காரணத்தால்.
இங்கு - ‘பாரத் வர்ஷத்தி'ல் கல்வி கண் குத்தப்பட் டுள்ளதே - அதிலிருந்து விடுதலை பெற அசமத்துவம், பேதம் நிலவுவோரிடையே ‘சம வாய்ப்பு' என்று கூறுவதே ஒண்ணா நம்பர் பித்தலாட்டம் அல்லவா?
புத்த மார்க்கம் விரட்டப்பட்டதே!
எனவே, மனதால் அவர்கள் ‘ஏகலைவன்களாகவும்', தவம் செய்து கடவுளை காண முயன்ற சம்பூகன் தலை, இராமனால் சீவி எறியப்பட்ட கதையும் மன ரீதியான மூளைக்குப் போடப்பட்ட விலங்குகள் அல்லவா?
எனவேதான் ஜோதிபாபூலே தொடங்கி, 18 ஆம் நூற்றாண்டு - அதற்கு முன்னே புத்தரின் ஜாதி ஒழிப்பு மார்க்கம் மண்ணை விட்டே விரட்டப்பட்டுவிட்டது!
கடவுள், ஜாதி, பெண்ணடிமை, ஆத்மா ஆகிய வற்றை எதிர்த்துக் குரல் கொடுத்த சிரவண மார்க் கங்கள் திரிபுக்கும், தீவிர விரட்டலுக்கும் ஆளாகியதால் இந்த உணர்வு துளிர்க்க முடியாத அளவுக்கு வேரில் பார்ப்பனீயம் திராவகத்தை ஊற்றி விட்டது! அதனால் உலகம் முழுவதும் பரவிய பவுத்தம் - புத்தர் பிறந்த மண்ணில் காட்சி மதமாக காட்சியளிக்கும் கையறு நிலை!
தென்னாட்டில் தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம்தான், ‘‘மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு'' என்று சொல்லிக் கொடுத்து, சுயமரியாதை உணர்வு இல்லாத சுதந்திர வேடம், ஜாதி சர்க்கஸ் கூண்டுக்குள்ளே நிரந்தரமாக வாசம் செய்யும் சிங்கம், புலிகளைப்போல, சர்க்கஸ்காரன் தயவிலே தான் அவைகளுக்கு ஆகாரம் என்பதால், அவைகள் வெறும் காட்சிகளுக்கே பயன்படும் நிலை. அதுபோல தற்போது சில ஜாதி ஒழிப்பாளர்கள்.
மக்களின் மீட்சிக்கு எழுச்சி ஏற்படுத்த முடியாத அளவுக்கு ஆரியம் தக்க பாதுகாப்பான ஏற்பாடுகளைச் செய்தது.
எனவே, இளைய தலைமுறையினரே, என்னரும் தோழர்களே, சிந்தியுங்கள்!
எத்தனை பச்சைப் படுகொலைகள் நேற்று நடந்ததுபோல நடந்தாலும், நம்மினச் சகோதரிகள் பாலின வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாலும், கண்ணீர் சிந்தும் காட்சிப் படல அவலம் ஒரு தொடர்கதையாகவே தொடரும் கொடுமைகள்தானே நாம் காணுவது?
இதற்கிடையில் பெரியாரால், திராவிடர் இயக்கத் தால் இங்கு படிப்பும், பதவியும் பெற்ற சில ‘மேதாவி' கள்?! ‘‘இப்ப ஏங்க பார்ப்பன எதிர்ப்பு? அவங்க எல்லாம் மாறிவிட்டார்களே! என்று நுனிப்புல் மேய் கின்றனர் - ‘‘நுணலும் தன் வாயால் கெடும்'' என்ற முதுமொழிக்கேற்ப அந்த வாதம் எத்தகைய சொத்தை வாதம் என்பதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு.
பார்ப்பன நீதிபதியின் இனவெறிப் பேச்சு
கேரள உயர்நீதிமன்றத்தின் நீதிபதியான பார்ப் பனர் ஒருவர் - ஜஸ்டீஸ் சிதம்பரேஷ் என்பவர், 11 மாதங்களுக்கு முன்பு அகில இந்திய பிராமணர் மாநாடு கொச்சியில் நடைபெற்றபோது (19.7.2019 அன்று) பேசியுள்ள பேச்சில்,
‘‘....நமது அடையாளம், நமது வசிப்பிடம், அக்கிர காரங்கள் தற்போது பறிபோய்க் கொண்டுள்ளன. அக்கிரகாரம், ‘நமது வசிப்பிடம்'. கீழ் ஜாதியினர் நுழைந்து அதை பாழ்படுத்தி வருகின்றனர். இங்கே கேரளாவில் எண்ணற்ற அக்கிரகாரங்கள், பாதுகாக்கப் படுகின்றன; அதன்மூலம் பிராமணர்களது பாரம் பரியம் பாதுகாக்கப்படுகின்றது.
யார் பிராமணர்கள் என்று என்னிடம் கேட்டால், அவர் எடுக்கும் அனைத்துப் பிறவியுமே பிராமண ராகத்தான் பிறப்பார்கள் - அவர்கள்தான் பிரா மணர்கள்.''
இத்தகையவர் நீதிபதிகளானால், அவர்கள் வழங்கும் தீர்ப்பு சம்பூகன் விஷயத்தில் இராமன் எடுத்த செயல் முடிவு போலத்தானே ஆகும் என்று நினைப்பது தவறாகுமா?
வடபுலத்தில் மாவட்ட நீதிபதி ஒருவர் - தாழ்த்தப் பட்டவர் நீதிமன்றத்தில் அமர்ந்து விசாரணை நடத்தியபோதே, அவர் மாற்றப்பட்டார் வேறு ஊருக்கு.
அவரது இடத்திற்கு வந்த ஒரு பார்ப்பன நீதிபதி, அவர் இருக்கையை அகற்றியதோடு, அந்த அறையை நன்றாகக் ‘கங்காஜலம்‘ விட்டு சுத்தம் செய்து பிற கல்லவா தனது நீதி பரிபாலனத்தை ஆரம்பித்தார்!
இந்தியக் குடியரசுத் தலைவர்
அவமதிக்கப்பட்டாரே!
நமது குடியரசுத் தலைவரை ஒடிசா மாநிலம் பூரிஜெகன்னாதர் கோவில் படிக்கட்டில் அமர வைத்த கொடுமையை மூடி மறைத்தார்களே தவிர, தீண் டாமை ஒழிப்புச் சட்டத்தின்கீழ் தண்டிக்கவா செய்தார்கள்? இல்லையே!
பதவி பெற்றாலும் முதல் குடிமகன் என்பவருக்கே இப்படி ஒரு அவலமா என்று நாம்தானே கண்டித்தோம். நாடு திரண்டதா? இல்லையே! ஏன் நாம் சுட்டிய காரணங்கள் தானே அப்படி ஒரு உணர்ச்சியை உரு வாக்கவிடாமல் தடுப்பதற்குத் துணையான கார ணங்கள் இல்லையா?
நம் கையைக் கொண்டே
நம் கண்ணைக் குத்துவதா?
நீதி கேட்க, பெருந்திரளான மக்கள் மத்தியில் எழும் உணர்வுகளை அணைக்க ஆரியம் நம்மினத்த வர்களையே சுவாதீனப்படுத்தி, நம் கையைக் கொண்டே நம் கண்ணைக் குத்திட வைத்து, அதற்கு சிறு சேதாரம் கூட இன்றி சொகுசு வாழ்க்கையும், சொர்க்க லோக நினைப்புடனும் வாழுகிறது!
மக்களைச் சிந்திக்க வைப்பதோடு, பிறவி இழிவு ஒழிக்கும் பெரும்பணிக்கு முன்னுரிமை தருவதை இன்றைய இளைஞர்கள் - பகுத்தறிவு கண்ணோட்டத் தோடு பச்சைக் கொடிக்கும், பச்சைப் பாம்புக்கும் உள்ள பேதத்தை அறிந்து, புரிந்து, தெளிந்து, செயற் களத்திற்கு வரும் நாளே முக்கியம்.
புரட்சிக்கவிஞர் பாடியதுபோல,
‘‘மனுவின் மொழி அறமானதொருநாள்
அதை மாற்றியமைக்கும் நாளே தமிழர் திருநாள்!''
என்பதை உணர்ந்து ஓரணியில் திரள
வாரீர்! வாரீர்!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
10.6.2020
No comments:
Post a Comment