நீட்  தேர்வு நடைமுறை இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளை வெற்றி பெறவிடாமல் சீரழிப்பதாகும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 26, 2020

நீட்  தேர்வு நடைமுறை இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளை வெற்றி பெறவிடாமல் சீரழிப்பதாகும்!

நீட் பொதுத்தேர்வில்  இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது ஓர் அரசமைப்பு சட்டத் தேவையாகும்


பிற ஏட்டிலிருந்து...


நீட் எனப்படும் தேசிய அளவிலான மருத்துவக் கல்லூரி மாணவர் நுழைவுத் தேர்வை எதிர்த்து, தமிழ்நாட்டில் உள்ள ஏறக்குறைய அனைத்து அரசியல் கட்சிகளும் பதிவு செய்த மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம் அண்மையில் எதிர் கொள்ள வேண்டியதாயிற்று. தமிழ் நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் 27 சதவிகித இட ஒதுக்கீடு இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு  அளிக்கப்பட வேண்டும் என்று கோரி, அரசமைப்பு சட்ட 32 ஆவது பிரிவின் கீழ் இந்த மனுக்களை தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் பதிவு செய்திருந்தன. இந்தக் கோரிக்கை நியாயமானதாகவும், தக்க காரணங்களைக் கொண்டதாகவும் இருந்தபோதிலும்,  குடிமக்கள் தங்களது அரசமைப்பு சட்டப்படியான அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவோ, அல்லது நீதிமன்றத்தை நேரடியாக அணுகமுடியாத வழக்காடிகள் சார்பாக பொதுநல மனுக்கள் மூலம் நிவாரணம் பெறுவது தொடர்பான அரசமைப்பு சட்டத் தின் 32 ஆவது பிரிவின் கீழ் இந்த மனுக்கள் பதிவு செய்த நடைமுறை கேள்விக்கு உள்ளாகியது.  இந்த மனுக்கள் இந்திய உச்ச நீதி மன்றத்தில்  விசாரிக்கப்படு தற்கு  தடை ஏற்பட்டிருந்த நிலையில், இதே நிவாரணம் கோரி, இதே மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்து அணுகுவதற்கு உச்ச நீதிமன்றம் இந்த அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்கியது.


இட ஒதுக்கீடு என்பது அரசமைப்புச் சட்டப்படியான அடிப்படை உரிமை அல்ல என்று உச்ச நீதி மன்ற நீதிபதிகளில் ஒருவர் தற்செயலாக தெரிவித்த கருத்து காரணமாக இந்த வழக்குக்கு செய்திகளில் முக்கிய மான இடம் அளிக்கப்பட்ட போதிலும், நீட் தேர்வு நடைமுறையினால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினைகள் மீது கவனம் குவிய வேண்டியது மிகவும் அவசியமான தாகும்.


தேசிய நாள் என்பது என்ன?


அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல்,  மாநிலங்களின் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி படிப்புகளில் சேர்க்கை அளிப்பதில்  தீங்கு விளைவிக்கும் வகையில், மாநில அரசுகளை நீட் தேர்வு நடைமுறை மத்திய அரசின் அடிமைகளாக ஆக்கிவிட்டது.  மத்திய அரசால் இந்த நீட்தேர்வு நடத்தப்படுவதால், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு தனியார் பயிற்சி மய்யங்களில் பெரும் பொருள் செலவு செய்து பயில இயலாத மாணவர்களுக்கு எதிராக, சமமற்ற ஒரு நிலையை இந்த தேர்வு ஏற்படுத்திவிட்டது. அது மட்டுமன்றி,  தேசிய நலன்கருதி மாநில அரசுகளின் பொது சுகாதார, மருத்துவ இலக்குகளையும் மத்திய அரசு தனக்குக் கீழ்ப்பட்டவைகளாக ஆக்கிக் கொண் டது. மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் லஞ்ச ஊழல் நிலவுகிறது என்ற ஒரு தெளிவற்ற குழப்பம் நிறைந்த கருத்தைத் தெரிவித்தது தவிர, தேசிய நலன் என்பதற்கு எந்த விதமான சரியான விளக்கமும் அளிக்கப்படவில்லை.


நீட்தேர்வின் கீழ் - தாழ்த்தப்பட்ட பிரிவு மக்கள், பழங்குடியின மக்கள் ஆகியோருக்கு அகில இந்திய அளவில் இட ஒதுக்கீடு அளித்து வரப்படுகிறது என்ற நிலையில்,  இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு இத்தகைய அகில இந்திய அளவிலான இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் போன்ற மத்திய அரசின் மருத் துவக் கல்வி நிறுவனங்களில், மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளில் இதர பிற்படுத்தப் பட்ட பிரிவு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து  வரப்படும்போது, நீட்தேர்வின் கீழ் மத்திய அரசினால் ஒதுக்கப்படும் மருத்துவக் கல்வி படிப்புகளில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படாதது ஏன் என்பது முறையாக விளக்கப் படவில்லை.


மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் அவர்கள் எழுப்பிய ஒரு கேள்விக்கு, மத்திய சுகாதார குடும்ப நல அமைச்சகம் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அளித்த பதிலில் இந்தக் கேள்விக்கான விளக்கம் அளிப்பதற்கான ஒரு முயற்சி மட்டுமே மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர் களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட இயலாமைக்கு அமைச்சகம் இரண்டு காரணங்களைத் தெரிவித்துள் ளது. அவற்றில் ஒன்று, சலோனி குமாரிக்கும் - சுகாதார சேவைத் துறைக்கும் இடையே நடந்து வரும் இது தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நிலு வையில் உள்ளது என்ற காரணமும், ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கென்று தனித் தனியான இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளைப் பின்பற்றி வருகின்றன என்ற காரணமும்தான். இந்த இரண்டு காரணங்களுமே முட்டாள்தனமானவை என்பதை மேலோட்டமாகப் பார்க்கும்போதே தெரிகிறது.


சலோனி குமாரி வழக்கை சுட்டிக் காட்டுவது முட்டாள்தனமே


இது தொடர்பான வழக்கு ஏற்கெனவே உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று குறிப்பிடப் பட்டுள்ள மத்திய அரசு சுகாதாரத் துறை அமைச்ச கத்தின் காரணம் அர்த்தமற்ற செய்தியாகும். இந்த வழக்கில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று கோரிதான் சலோனி குமாரி விண்ணப்பித்துள்ளார். மனுதாரர் கோரியுள்ள ஒரு முடிவை நடைமுறைப்படுத்துவதற்கு அரசு செயல் படுவதைத் தடுப்பதற்கான விதி எதுவும் சப்-ஜூடிஸ் விதிகளில் இல்லை என்பதால், இந்த ஆட்சேபணை முற்றிலும் ஆதாரமற்றதும், நியாயமற்ற துமாகும். மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள மற் றொரு காரணமும் அது போன்றே முட்டாள்தனமான தாகும். மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை நடை முறையை  தனது பொறுப்பில் கொண்டு வந்து விட்ட மத்திய அரசு,  இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தைப் பற்றிய கவலைகளைத் தெரிவித்துள்ளது. இந்த நிலைப்பாடும் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாகும். மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட , பழங்குடியின மக்கள் இருக்கும் விகிதாசார அடிப் படையில்) அவர்களுக்கானஇட ஒதுக்கீட்டு அளவு மாநிலத்துக்கு மாநிலம் மாறுபட்டு இருக்கின்றன.


யாருக்குத் திறந்துவிடப்படுகிறது!


அதனால், நீட் தேர்வின் அடிப்படையில் அகில இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாண வர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படாமல் இருப்பது, (தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட) பகுஜன் சமூக மாணவர்களுக்கு உரிய மருத்துவக் கல்வி இடங்களை சவர்னாக்களுக்கு (உயர்ஜாதியின ருக்கு)  நியாயமற்ற முறையில் மாற்றி அளிப்பதே ஆகும். மாநில அரசுகளால் அந்தந்த மாநில சட்ட விதிகளின்படி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் இட ஒதுக்கீட்டுக்காக உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை இடங்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக மிகுந்த செலவு செய்து பயிற்சி பெற இயன்ற மாணவர்களுக்கே திறந்து விடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


இத்தகைய இழப்பை ஏற்படுத்திய இந்த நிலைக்கான குற்றச்சாட்டு நீதிமன்றங்களின் பாதங்களிலும் வைக்கப் பட தகுந்தவையே. 2012 ஆம் ஆண்டு முதல் நடை பெற்ற நீட் தேர்வு பற்றிய வழக்கு பெருத்த முரண் பாடுகளுடனேயே உச்ச நீதிமன்றத்தால் கையாளப்பட்டு வந்துள்ளது. 2013 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மூன்று நீதிபதி அமர்வின் தீர்ப்பு, அமர்வின் மற்ற நீதிபதிகளுக்கு சுற்றுக்கு விடாமலேயே அளிக்கப்பட்ட தீர்ப்பாகும். இது பற்றிய மறு சீராய்வு மனு ஒன்று உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது, முந்தைய முக்கிய தீர்ப்பு 2016ஆம் ஆண்டில் திரும்பப் பெற்றுக் கொள்ளப் பட்டதுடன்,  இது பற்றிய விசாரணை மீண்டும் புதியதாக நடைபெறவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப் பளித்தது,  நீட் தேர்வு நடைமுறைக்கு புத்துயிர் அளித் தது. எட்டாண்டு கால வரலாறு கொண்ட இந்த தீர்ப்பு இறுதியில் 2020 இல் முடிவுக்கு வந்தது.  அதில் நீட் தேர்வு அரசமைப்பு சட்டப்படி செல்லத் தக்கது என்று இறுதியில் தீர்ப்பு அளிக்கப்பட்டு  இருந்தது. அதே நேரத்தில் சலோனி குமாரியின் வழக்கு பதிவு செய்யப்பட்டு இப்போது நான்கு ஆண்டுகள் ஆன போதிலும்,  இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி எந்த ஒரு தீர்ப்பும் வருவதற்கான அறிகுறிகள் எவையுமே தோன்றவில்லை.


நன்றி: எக்னாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி தலையங்கம்


Economic and Political Weekly, 20-06-2020


தமிழில்: த.க. பாலகிருட்டிணன்


No comments:

Post a Comment