மருத்துவப் பட்ட மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு - வழக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 16, 2020

மருத்துவப் பட்ட மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு - வழக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை, ஜூன் 16 மருத்துவப் பட்ட மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரு வாரத்தில் மத்திய அரசு பதிலளிக்கவேண்டும் என உத்தரவிட்டனர்.


மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி திராவிடர் கழகம், திமுக, மதிமுக,  அதிமுக, பா.ம.க. தாக்கல் செய்த வழக்குகளுக்குப் பதிலளிக்க மத்திய அரசுக்கு  சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.


மருத்துவம் மற்றும் பல் மருத்துவம்  படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான இடங்களை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. இளங்கலை படிப்பில் 15 சதவித இடங்களும், முதுகலை படிப்பிற்கு  50 சதவீத இடங் களையும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படுகிறது.


இந்த அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.


இந்த அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எந்த இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை.


தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், மருத் துவ மேற்படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங் களில், தமிழக அரசு சட்டப்படி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என திராவிடர் கழகம் சார்பில் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்,  திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம்,   மதிமுக சார்பில் வைகோ ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய் திருந்தனர்.


அதேபோல, மத்திய அரசு கல்வி நிறுவனங்களைப் போல தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 27 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி பாமக சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்காதது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்லாமல், மருத்துவ மேற்படிப்பு ஒழுங்குமுறை சட்ட விதிகளையும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின ருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு சட்டவிதிகளையும் மீறிய செயல் என  திராவிடர் கழகம் சார்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.


சட்டவிதிகளின்படி, மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும், இடஒதுக்கீடு வழங்காமல் மருத்துவ மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்த தடை விதிக்க வேண்டும் என திராவிடர் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


திமுக தரப்பில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் போது, தமிழகத்தில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும்,


இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக் கீடு மறுக்கப்பட்டதால், 425 பேர் மருத்துவ மேற்படிப்பு வாய்ப்பை இழந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.


இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க., எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பியும், அரசுக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டதாகவும், அதற்குப் பதிலளித்த மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் பரிசீலிக்க முடியாது என தெரிவித்தது.


வழக்கு நிலுவையில் உள்ளதால், மாநில அரசு, 50 சதவீத இடஒதுக்கீட்டை இதர பிற்படுத்தப்பட்ட வகுப் பினருக்கு வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை எனவும் திமுக தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.


இடஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளதால், இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்குக் கிடைக்கவேண்டிய சட்டப் பூர்வமான உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குற்றம் சாட்டப் பட்டுள்ளது.


இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசின் கொள்கையை மத்திய அரசே மீறுகிறது எனவும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்காதது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனவும் அதில்  கூறப்பட்டுள்ளது.


இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தகுதியான மாணவர்களின் வாய்ப்புப் பறிபோவதை பார்த்து கொண்டு மத்திய அரசு கண் மூடித்தனமாக  இருக்கக் கூடாது எனவும் அதிமுக தனது மனுவில் வலியுறுத்தி யுள்ளது.


இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு இன்று (16.6.2020) விசாரணைக்கு வந்தன.


திராவிடர் கழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஏ.தியாகராஜன் மற்றும் த.வீரசேகரன் வாதிட்டனர்


திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், மாநில அரசுகள் அகில இந்திய ஒதுக்கீடாக வழங்கும் இடங்களுக்கு மாநில இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற  விதிகள் அனுமதித்த போதும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.


அப்போது, அதிமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுந்தரேசன், அகில இந்திய ஒதுக்கீடாக வழங்கப்பட்ட இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பி னருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு மறுப்பது, சமூகநீதி மறுக்கப்பட்டதாகும் எனவும், மாநிலங்களில் பின்பற்றப் படும் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற மருத்துவக் கவுன்சில் அனுமதித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.


தமிழகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம், அரசமைப்புச் சட்டம் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.


மத்திய அரசு இடங்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் போது, மாநில அரசு இட ஒதுக்கீடு வழங்கப் படவில்லை என்வும் குற்றம் சாட்டினார்.


பா.ம.க. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலு, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசு சட்டப்படி, 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என வலியுறுத்தினார்.


மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன், மருத்துவப் படிப்பிற்கு தேர்தெடுக்கப்பட்ட மாணவர்களை வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்க வில்லை என சுட்டிக்காட்டினார்.


இதையடுத்து, திராவிடர் கழகம் - திமுக - அதிமுக  மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தாக்கல் செய்யப் பட்ட வழக்குகளுக்கு வரும் திங்கள் கிழமைக்குள் பதி லளிக்கும்படி மத்திய மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


மேலும்,  மருத்துவ மேற்படிப்புக்கு தேர்ந்தெடுக்கப் பட்ட மாணவர்களை எதிர் மனுதாரராக சேர்க்க மனு தாரர்கள் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசார ணையை திங்கள் கிழமைக்கு தள்ளிவைத்தனர்.


வழக்கு விவரம்


மருத்துவ பட்ட மேற்படிப்பில் பிற்படுத்தப்பட் டோருக்கு (OBC) 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் (W. P. NO. 8327 /2020 & W. M. P NO. 9986/2020) திராவிட முன்னேற்றக் கழகம் ( 8326 /2020 & W. M. P. NO 9987 /2020) தொடர்ந்த வழக்கில் ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகரத்திற்கும் நீதிபதிகள் உத்தரவிட் டுள்ளனர்.


No comments:

Post a Comment