சுப.முருகானந்தம், மதுரை
தொற்றுநோய் என்றே நித்தம்
தொடர்கதைகள் போலே சொல்லிக்
கற்பதைத் தடுக்க வந்தார்!
கண்விழி தோழா நீயும்!!
சற்றுநாம் அயர்ந்த நேரம்
சதிவலை பின்னி விட்டார்!
முற்றிலும் போகு முன்னே
மூண்டெழு! தடுத்து நிற்போம்!!
மருத்துவம், சுத்தம் சூழ
மக்களை வாழ வைக்கும்
பொறுப்பினில் நழுவி ஆட்சி
புரிவோரைத் தட்டிக் கேட்போம்!
மருத்துவப் படிப்பை, வாழும்
மக்களின் வீதம் பார்த்தே
தரும்படி ஆளு வோரைச்
சந்தியில் நின்று கேட்போம்!!
குறுக்கினில் தடுக்கப் பார்க்கும்
குல்லுகப் பட்டர் வாலை
நறுக்கியே இனத்தைக் காக்க
நாளைநாம் களத்தில் நிற்கப்
பொறுப்புடைத் தமிழர் தலைவர்
போர்ச்சங்கு ஊதி விட்டார்!!
கருப்புடைப் புலியே வாவா!
களத்தினில் நின்றே வெல்வோம் !!
No comments:
Post a Comment