படையல் யார் வயிற்றில் போகிறது?
ஒரு கடவுளுக்கு தினம் எத்தனை தடவை பூஜை படையல்? ஒவ்வொரு பூஜை படையலுக்கு எத்தனை படி அரிசி பருப்பு சாமான்கள்? இவைகள் எல்லாம் யார் வயிற்றில் அறுத்து வைக்கப்படுகின்றன? மக்களுக்குக் கல்வி இல்லை, தொழில் இல்லை, சாப்பாடு இல்லை என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டு, மற்றொரு புறம் இம்மாதிரி செல்வம் பாழாக்கப்படுவ தென்றால் யோக்கியன் எப்படி சகித்திருக்க முடியும்?
தயவு செய்து நீங்களே யோசித்துப் பாருங்கள். வைகுண்ட ஏகாதசிக்கும் ஆருத்திரா தரிசனத்துக்கும், தைப்பூசத்துக்கும் கார்த்திகை தீபத்துக்கும், திருப்பதிக் குடைக்கும், திருச்செந்தூர், ராமேஸ்வர ஸ்நானத்துக்கும் என்று வருஷாவருஷம் எத்தனை கோடி ரூபாய் பாழாகிறது? மக்கள் போக்குவரத்து செலவு, மெனக்கேடு செலவு, உடல் கேடு, ஒழுக்கக்கேடு ஆகிய காரியம் எல்லாம் சேர்த்துப் பார்த்தால் இக்கடவுள்களால் மக்களுக்கு நன்மையா தீமையா என்று கேட்கின்றேன்.
இச்செலவுகளைத் தடுத்து அச்செல்வங்களை வேறு வழிக்கு பயன்படுத்த முயற்சி செய்தால் வரியே இல்லாமல் அரசாங்கத்தை நடத்தக் கூடிய பணம் மீதியாகாதா? நம் நாட்டில் கடவுள்களுக்கு இருக்கும் செல்வங்களைக் கைப்பற்றி தொழில் சாலைகள், பள்ளிக் கூடங்கள் ஏற்படுத்தினால் வேலை இல்லாத் திண்டாட்டமும் தற்குறித்தன்மையும் அந் நிய நாட்டார் வியாபாரத்தின் பேரால் சுரண்டுதலும் இந் நாட்டில் அரை நிமிஷமாவது இருக்க முடியுமா? என்று கேட் கின்றேன். ஏதோ ஒரு சில கூட்டங்கள் சோம்பேறியாய் இருந்து வயிறு வளர்க்க வேண்டி, மற்ற மக்கள் தாங்கள் பாடுபட்டு தேடிய செல்வத்தை பாழாக்கி இவ்வளவு முட்டாள் தனமாய் நடந்து கொள்ளுவதா? என்று கேட்கின்றேன்.
மற்றும் கடவுள் பேரைச் சொல்லிக்கொண்டு பக்தியின் காரணம் காட்டிக்கொண்டு எவ்வளவு முட்டாள் தனமாய் நடந்து கொள்ளுகிறோம் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். காவடி எடுத்துக்கொண்டு கூத்தாடுவதும், மஞ்சள் துணி கட்டிக்கொண்டு வீதியில் கிடந்து புரளுவதும் மொட்டை அடித்துக்கொள்ளுவதும், பட்டை பட்டையாய் மண்ணையும் சாம்பலையும் அடித்துக்கொள்ளுவதும், உடம்பில் கம்பி களையும் கத்திகளையும் குத்திக்கொள்ளுவதும் அழுக்குத் தண்ணீரில் குளிப்பதுமான காரியங்கள் எதற்கு என்று சிந்திக்கிறோமா?
- தந்தை பெரியார், குடிஅரசு, 19.12.1937
- ‘மணியோசை’
No comments:
Post a Comment