‘‘பகவத் கீதை ஏன் எதற்காக" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 28, 2020

‘‘பகவத் கீதை ஏன் எதற்காக"

‘‘பகவத் கீதை ஏன்? எதற்காக?''


நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா காணொலியில் தமிழர் தலைவர் சிறப்புரை



சென்னை, ஜூலை 28- "பகவத் கீதை ஏன், எதற்காக?" என்ற சிறிய நூலை வாங்கி நீங்கள் மேலும் விரிவாகப் படித்துத் தெரிந்து கொள்ளலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலி மூலம் உரையாற்றினார்.


நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா


கடந்த 11.7.2020 மாலை 6 மணியளவில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு'  விழா"வில் காணொலி மூலம் கழகத் தோழர்களிடையே சிறப்புரையாற்றினார். அவரது சிறப்புரையின் நேற்றைய  தொடர்ச்சி வருமாறு:


பகவத் கீதையிலே பதினெட்டு அத்தியாயங்கள் இருக் கின்றன. பதினெட்டு அத்தியாயத்திலேயும் எழுநூறு சுலோகங்கள் இருக்கின்றன. இந்த எழுநூறு சுலோகங்களில் முதல் பத்து சுலோகங்கள் படைகள் அணி வகுப்பு. எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் - அந்த எழுநூறு. சுலோகங்களும் அப்படியே திருக்குறள் மாதிரி ஆயிரத்து முன்னூற்று முப்பது அறிவுரைகளைக் கூறுகின்ற நூல் என்று. இதிலே முதல் அத்தியாயத்தில் நாற்பத்து ஏழு சுலோகங்கள் இருக்கின்றன. இதிலே முதல் பத்து சுலோகங்கள் - படைகள் எப்படி அணிவகுத்து நிற்கின்றன என்பதைச் சொல்கின்றன.


அதற்கு அடுத்தபடியாக பன்னிரண்டு முதல் பத்தொன்பது வரை - படை வீரர்கள் போர் ஆரம்பித்துவிட்டது என்று சங்க நாதம் செய்வது பற்றிக் குறிப்பிடுகின்றன. இருபதாவது சுலோகம் - அம்புகள் பறக்கத் தொடங்கிவிட்டன, இரண்டு பக்கத்திலிருந்தும். இருபத்தி ஒன்று முதல் இருபத்தி ஏழுவரை - அர்ஜுனன் தேரில் இரு படைக்கு நடுவில் சென்று பார்வையிட விரும்புகிறான். இருபத்தி ஓராவது சுலோகத்தில் சங்கு ஊதியாகிவிட்டது. அம்பு பறக்கிறது. போர் ஆரம்பித்தாகி விட்டது. சாவகாசமாக இரண்டு படைகளுக்கும் இடையிலே போய் அர்ஜுனன் தேரில் சென்று பார்வையிடுவதை விவரிக்கின்றது. இருபத்தி ஒன்றிலிருந்து இருபத்து ஏழுவரை உள்ள சுலோகம்.... இருபத்தி எட்டு முதல் நாற்பத்து ஏழுவரை அர்ஜுனன் போரிடத் தயங்குவதைக் காண்பிக்கின்றன. அதற்கப்புறம்தான், அர்ஜுனனுக்கு அறிவுரை கூறுகின்ற கிருஷ்ணனுடைய கருத்துக்கள் வருகின்றன.


இதிலே குழப்பம் ஏராளம். இது உங்களையெல்லாம், நம்மையெல்லாம் குழப்புகிறது என்று மட்டும் நினைக்காதீர் கள். அர்ஜுனனையே குழப்புகிறது. கீதையிலேயே அதைச் சொல்லியிருக்கின்றான். கீதையினுடைய அத்தியாயம் மூன்று - சுலோகம் இரண்டிலே அர்ஜுனன் சொல்லுகிறான்: "ஜனார்த்தனா! (ஜனார்த்தனன் என்றால் கிருஷ்ணன்) என் னைக் குழப்பாதே!" கெஞ்சுகிறான் உனது பேச்சுக்கள் அனைத்தும் குழப்பமாய் இருக்கின்றன. குழப்பம் உண்டாவ தால் எனது மதி மயங்குகிறது - மதிமயங்காமல் வேறு என்ன செய்யும்?


"ஏதாவது ஒன்றைச் சொல்லி இதுதான் உயர்ந்தது என்று சொல். நான் அதைப் பின்பற்றுகிறேன். இல்லாவிட்டால் ஆளைவிடு. என்னைப் போட்டு குழப்பு குழப்பு என்று குழப்புகிறாயே! கடைசிவரைக்கும் அவன் குழப்பம் தீர்ந்த வனாகவே இல்லை. அவன் கடைசியிலே எங்கே வரு கின்றான் என்றால் கிருஷ்ணன் தன்னடைய சுயரூபத்தைக் காண்பித்து பெரிதாக உருவெடுத்து தன்னுடைய அறிவு - திறமைகளையெல்லாம் காண்பித்ததற்கப்புறம் மயங்கிப் போய் "நீ சொல்வதையெல்லாம் ஏற்றுக் கொள்கிறேன்" என்கிறான்.


வாலிக்கே குழப்பம் என்றால், உங்களுக்கும், நமக்கும் எவ்வளவு குழப்பம் வரும்?


இராமாயணத்தில்கூட, வாலியை ராமன் வாதத்திற்கு இழுத்துக் கொண்டு வரும்பொழுது - வாலியை ராமனால் எந்தவொரு இடத்திலும் மடக்க முடியவில்லை. வாலி கேட்கின்ற கேள்விகள் எதற்கும் ராமனால் ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை. கடைசியில் வாலியை மடக்குவதற்கு என்ன செய்தானென்றால், தான் கடவுள் அவதாரம் என்று காண்பித்தானாம். சரி அப்படியென்றால் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டனாம் வாலி, கடைசியில் வாதத்தினால் ராமன் வென்றான் என்று இராமாயணத்தில் இல்லை. கடைசியில் மயங்க வைத்துத்தான் ஏற்க வைத்திருக்கிறார்கள். அது மாதிரி இங்கேயும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அவனுக்கே அவ்வளவு குழப்பம் என்றால் உங்களுக்கும், நமக்கும் எவ்வளவு குழப்பம் வரும்?


இந்த சண்டையைப் பொறுத்தவரையிலும். இதிலே எப்படிப் பொருந்தி வரவில்லை என்பதைப் பாருங்கள். சண்டை நடக்கப் போகின்றது என்று தெரியும். சூதாடும் பொழுதே அந்தக் கலக்கம் இருந்திருக்க வேண்டும். சூதாடி நாட்டை விட்டாகிவிட்டது. நாட்டை விட்டது மட்டுமல்ல - மனைவியையும் விட்டாகிவிட்டது. மனைவியை விட்டது மல்ல. சேலையையும் உறிகிறான். அப்பொழுதெல்லாம் கலக்கம் இருந்து மாதிரி எதுவும் தெரியவில்லை. அதற்கப்புறம் அஞ்ஞாதவாசம் போகிறார்கள். அதற்கப்புறம் ஒருபிடி மண்கூட கொடுப்பதற்கில்லை என்று சொல்லி விட்டார்கள். அதற்கப்புறம் போரைத் தவிர வேறு வழியில்லை என்று ஆகிவிட்டது. எதிர்ப் படையில் யார் யார் இருக்கிறார்கள் என்பது அர்ஜுனனுக்கு முன்கூட்டியே தெரியும், கிருஷ்ண னுக்கும் தெரியும். இவர்கள் பக்கம் யார் யார் என்றெல்லாம் தெளிவாகத் தெரியும். தெரிந்துதான் போர்க்களத்திற்கு வருகிறான். அவனுக்குப் பார்த்தசாரதியாக கிருஷ்ணன் தேர் ஓட்டிக் கொண்டு வருகிறான். தெரிந்தேதான் வருகிறான் - யாரோடு சண்டை போடப் போகிறோம் என்று. முதல் அத்தி யாயத்தில் வருகின்ற சுலோகங்களின்படி குருச்சேத்திரத்தில் கவுரவர் படையினர் பாண்டவர் படையினர் எதிரெதிராக அணிவகுத்து நின்றாகிவிட்டது.


நண்பர் வீரமணி அவர்கள்


தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கின்றார்


அவர்கள் கணக்கெடுத்துச் சொன்னது மட்டும் போரில் அய்ம்பத்து அய்ந்து லட்சம் பேர் வருகிறார்கள். இதைத்தவிர தேர் வேறு அங்கு நிற்கிறது. தேர், குதிரைகள் இதற்கெல்லாம் இடம் வேண்டும். கிட்டதட்ட ஒரு ஜில்லா அளவிற்கு இருந்திருக்கும் போலிருக்கிறது அந்த குருச்சேத்திரப் போர். அவ்வளவு பெரிய இடம் இருந்தால்தான் இவ்வளவு பேரும் நகர முடியும். இந்தக் கணக்கெல்லாம்கூட நண்பர் வீரமணி அவர்கள் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கின்றார்கள்.


தேர்கள் மட்டும் பதினோரு லட்சத்து எண்பதாயிரத்து தொள்ளாயிரத்து எண்பது தேர்கள். ஒரு எட்டடி பத்தடியாவது வேண்டாமா? - ஒரு தேர் நிற்பதற்கு. நிற்பதற்கு மட்டுமல்ல, அசைவதற்கு இடம் வேண்டாமா? அதை ஓட்டிச் செல்வதற்கு இடம் வேண்டாமா? இவைகளை எல்லாம் எப்படி கணக்கெடுத்தான் என்று தெரியவில்லை.


யானைகள் மட்டும் பதினோரு லட்சத்து எண்பதாயிரத்து தொள்ளாயிரத்து எண்பது. குதிரைகளும், பதினோரு லட்சத்து எண்பதாயிரத்து தொள்ளாயிரத்து எண்பது, காலாட் படைகள் வேறு. அது பத்தொன்பது லட்சத்து எண்பத்து எட்டாயிரத்து முன்னூறு. எல்லாம் சேர்ந்து அய்ம்பத்து அய்ந்து லட்சம் பேர் இருக்கிறார்கள். இவ்வளவு பேரும் இருப்பதற்கு குருச்சேத்திரத்தில் இடம் இருந்திருக்கிறதாம். இரு பக்கங்களிலும் போர்க் கொடிகள் தூக்கியாகிவிட்டன. இரு படையினரும். போர் புரிய ஆயத்தமாகிவிட்டனர். கவுரவர் படையினரும் பாண்டவர் படையினரும். பாண்டவர் படையின் சார்பாக கிருஷ்ணன், அர்ஜுனன், பீமன், யுதிஷ் டன், நகுலன், சகாதேவன், காசிராஜன், சிகண்டி, விராடன், சாத்தியாகி, அபிமன்யூ போன்றவர்கள் நிற்கிறார்கள்.


சங்கு ஊதியாகிவிட்டது. கிருஷ்ணனும் சேர்ந்து ஊதி யிருக்கிறான் அர்ஜுனனும் ஊதிவிட்டான். சங்கு ஊதினாலே போர் துவங்கிவிட்டது என்று அர்த்தம். ஆகவே படைகள் போர்க் கொடி ஏற்றியாவிட்டது.


போர் துவங்கிவிட்டதற்கு அறிகுறியாக முரசுகள், பேரி கைகள், தப்பட்டைகள், பறைகள், கொம்புகள் போன்றவை பேரிரைச்சலுடன் முழங்கத் தொடங்கிவிட்டன. இரு பக்கங் களிலும் அம்புகள் பாயத்தொடங்கிவிட்டன. அவனும் அம்பு விடுகிறான். இவனும் அம்பு விடுகிறான். இரண்டு புறங்களி ருந்தும் அம்புப் படைகள் வருகின்றன. இத்த நிலையில் சாவகாசமாய் கிருஷ்ணன் தேரை ஓட்டிக் கொண்டு இரண்டு படைகளுக்கும் இடையிலே போய் நிற்கின்றானாம். அந்த அம்புகளெல்லாம் என்ன செய்தன? அதுவும் சாதாரணமாக இல்லை.


பேரிரைச்சலில் இந்த கிருஷ்ணன்


பேசியது யாருக்குத் தெரியும்?


பேரிரைச்சலுடன் பேரிகைகள் கொட்டுகின்றனர் என்று சுலோகங்களில் இருக்கிறது. அந்தப் பேரிரைச்சலில் இந்த கிருஷ்ணன் பேசியது யாருக்குத் தெரியும்? அய்ம்பத்து அய்ந்து லட்சம் பேருக்கும் எப்படித் தெரியும்? ஒலி பெருக்கி யில் பேசியிருந்தாலும் புரிந்திருக்காது. அந்த இடத்தில் அர்ஜுனனுக்கு சந்தேகம் வந்ததாம். அதை கிருஷ்ணன் போக்கிக் கொண்டிருந்தானாம்.


இதை எவன் எழுதிக் கொண்டிருந்தான்? எந்த செய்தியா ளர் அங்கு போனார். எவன் எழுதிக் கொண்டு வந்து இவ னிடம் கொடுத்தான். எவன் என்ன பேசிக் கொண்டார்க ளென்பது எப்படித் தெரியும்? இந்த கிருஷ்ணனும் அர்ஜுன னும் பேசியதையெல்லாம் யார் எடுத்துச் சொன்னது? கிருஷ்ணன் பின்னாலே வந்து அவனே சொன்னான் என்றும் கதை இல்லை. அர்ஜுனன் வந்து சொன்னான் என்றும் கதையில் இல்லை. எவன் சொன்னான் என்று தெரியவில்லை? ஆனால் போர் நடந்து கொண்டிருக்கிறது.


போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது நடுவிலே எழுநூறு சுலோகங்களைச் சொல்ல வேண்டி இருக்கிறது. அர்ஜுனனுக்கு விளக்கம் சொல்ல வேண்டும். அந்தக் காலத்தில் யுத்தங்கள் எல்லாம் இரவில் நடக்காது. பகலில் தான் நடைபெறும். ஒரு சுலோகத்தினைச் சொல்லி முடிக்க 5 நிமிடம் வேண்டும். 700 சுலோகங்களையும் சொல்லி முடிக்க 5 நாட்கள் வேண்டும்.


போர்க்களத்திற்கு வருமுன்பே அர்ஜுனனுக்கு யாரோடு சண்டை போடப் போகிறோம் என்று தெரியும். போர்க்களத் திற்கு வந்து நின்றதற்கப்புறம்தான் என்னமோ திடீரென்று ஆட்களைப் பார்த்தது மாதிரியும் பாவம் பாட்டன் நிற்கிறாரே, பெரியப்பா நிற்கிறாரே, சித்தப்பா நிற்கிறாரே, சொந்தக்காரன் நிற்கின்றானே. நான் எப்படி அவர்களையெல்லாம் கொல்லுவ தென்று சொன்னானாம். அந்த சந்தேகமே அர்ஜுனனுக்கு வரக்கூடாது. அவன் ஆரம்ப காலத்திலிருந்தே சண்டை போட்டு, சண்டை போட்டு வந்தவன். அவன் என்னமோ புதிதாகக் கொல்ல வந்தவன் மாதிரி அவனுக்கு கண்ணன் எடுத்துச் சொல்லுகிற மாதிரி கீதையில் சொல்லப்பட்டிருக் கின்றது. இப்படி பொருந்தாத தன்மையில் இருக்கிறது என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு


அறிவியலுக்குப் புறம்பான வாதங்கள், உலகியலுக்குப் புறம்பான வாதங்கள்!


அந்த வகையில் எந்தவொரு கருத்தும் பொருந்தி வரக் கூடியதல்ல. இதிலே எந்தக் கருத்துச் சொல்லப்பட்டிருக் கின்றதென்றால் ஆன்மிகவாதம் வேதாந்த உபதேசம், மூட நம்பிக்கைகள் பற்றிய கருத்துகள், குருட்டுப் பழக்க வழக் கங்களைப்பற்றிய கருத்துக்கள், கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம், வருணாச்சிரம தர்மம், யாகம் செய்ய வேண்டி யதனுடைய அவசியம், உயிர்ப் பலி கொடுக்கப்பட வேண்டி யதனுடைய அவசியம், மோட்சம்பற்றியவை, நரகம் பற்றி யவை, பரம பதம் பற்றியவை, அறிவியலுக்குப் புறம்பான வாதங்கள், உலகியலுக்குப் புறம்பான வாதங்கள், அவதாரத் தினுடைய மகிமை, விசுவ ரூப தரிசனம், மாயா ஜாலம், பயமுறுத்துதல், பக்தி போதனை, குலத் தொழில் செய்தவன் மூலம் ஆண்டவனை அடைதல், பாவபுண்ணிய விளக்கம் போன்ற இப்படிப்பட்ட கருத்துக்கள் தான் நிறைந்திருக்கின்ற காரணத்தினாலே வாழ்க்கைக்கு எந்த வகையிலும் பயன் படாத அளவுக்குக் கீதை உள்ளது என்பதை நாம் பார்க்கின் றோம்.


இதில் அர்ஜுனன் மட்டும் கிருஷ்ணனிடம் கேள்வி கேட்கின்ற மாதிரி அமைந்தவை 85 சுலோகங்கள், சஞ்சயன் என்ற அமைச்சன் திருதராட்டிரரிடம் என்னென்ன நடக்கின் றது என்பதை ஞான திருஷ்டியால் சொல்லிக் கொண்டிருந் தானாம். இது நாற்பத்தொரு சுலோகம். திருதராட்டினன் சஞ்சையனிடம் ஒரு கேள்வி கேட்கின்றான். அதற்கு ஒரு சுலோகம். கிருஷ்ணன், அர்ஜுனனிடத்திலே சொல்வதாக இருக்கின்ற சுலோகங்கள் 569.


கிருஷ்ணன் சொல்கிறான், அர்ஜுனா கீதை என் இருதயம். கதை முடிந்த பிறகுதானே கீதை. போர் முடியாத பொழுதே, கதை முடியாத பொழுதே கீதை என் இருதயம் என்று சொல்லுகின்றான். அர்ஜுனா! நமக்கிருவருக்கிடையே நடந்த புனிதமான, புண்ணியமான, தர்மமான உரையாடலை எவன் ஒருவன் படிப்பானோ அவன் என்னை ஆராதித்த வனாகிறான், இதுவே என்னடைய எண்ணமாகும் என்று கிருஷ்ணன் சொல்லுகின்றான். இப்படி சொல்லுவதற்கு அங்கு என்ன அவசியம் வந்தது?


சண்டை போட வேண்டுமா? வேண்டாமா? என்பதைத் தானே சொல்லி முடிக்க வேண்டும். தைரியமாக சண்டை போடு, நான் பார்த்துக் கொள்கிறேன் என்றல்லவா சொல்ல வேண்டும்! அதை விட்டுவிட்டு இப்படிச் சொன்னால் என்ன அர்த்தம்?


கீதையில் உள்ள முரண்பாடுகளைப்பற்றி....


கீதையைப் படிக்காத உங்களுக்கெல்லாம் வாழ்வே கிடைக்காது. நீங்கள் கீதையைப் படிக்காததனாலே, போற்றாத தனாலே உங்களுக்கு வாழ்வே கிடையாது. மிகுந்த சிரத்தை யுடன் அருவறுப்பின்றி இதை எவன் ஒருவன் கேட்கின் றானோ அவன் எல்லா பாவங்களையும் விட்டு விலக்கப் பெற்று புண்ணியம் செய்தவனைப் போன்ற உன்னத நிலையை அடைகின்றான். நாளைக்கே இவைகளை எல்லாம் செய்யுங்கள். நீங்கள் செய்த பாவங்கள் எல்லாம் போக்கி, புண்ணியமடைய வேண்டுமானால் இதைப் படிக்க வேண்டு மாம்.


ஆகவே, கீதையில் உள்ள முரண்பாடுகளைப்பற்றி அருமை நண்பர் வீரமணி அவர்கள் மிகச் சிறப்பாக சொல்லியிருக்கின்றார்கள்.


எனக்கென எந்தவிதக் கடமைகளும் மூன்று உலகில் இல்லை. என்றாலும் நான் எனது கடமைகளை செய்து கொண்டிருக்கின்றேன் என்று கிருஷ்ணன் சொல்லுகின்றான். இதற்கு என்ன அர்த்தம்? எனக்கு இந்த அலுவலகத்தில் வேலையே இல்லை. இருந்தாலும் நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன். ஒன்றுக்கொன்று எவ்வளவு முரண் பாடுகள், பொருந்திவராத கூற்றுக்கள் இருக்கின்றன?


உலகில் தர்மங்கள் தாழும் பொழுது, அதர்மங்கள் ஓங்கும் பொழுது, என்னை நானே படைத்துக் கொண்டு அவ்வப் பொழுது அவதாரம் செய்கின்றேன். யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கிருஷ்ணன் சொல்லுகின்றான். தென் மாவட்டத்தில் நடைபெற்ற கலவரங்களின் பொழுதெல்லாம் கிருஷ்ணன் வந்திருக்கின்றார். ஜாதிக் கலவரம் நடைபெற்ற பொழுது, பாபர் மசூதி இடிக்கப்பட்ட பொழுதுதெல்லாம் வந்திருக்கின்றார். யாருக்கும் தெரியவில்லை. அவதாரம் எடுத்துதான் வந்திருக்கின்றார் ஈரான், ஈராக்கில் நடைபெற்ற சண்டைக்கெல்லாம்கூட அவர் போய்விட்டுதான் வந்திருக் கின்றார். அதர்மம் எங்கெங்கெல்லாம் ஓங்குகின்றதோ அங் கெல்லாம் நான் நிற்பேன் என்று சொல்லுகின்றார். வெளிப் படையாக நான் தெரிவதில்லை. ஆனால் நான்தான் எல்லாப் பொருள்களிலும் இருந்துவருகிறேன் என்று சொல்லுகின்றார்.


அறிவுக்குப் பொருந்திய வராத கூற்றுக்கள்


எல்லா உயிர்களையும் படைப்பவனும் நான்தான். அழிப்பவனும் நான்தான். ஏன் படைக்கின்றாய்? அதைக் காக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? அதன் பிறகு அழிப்பானேன்? இவைகள் எல்லாம் அறிவுக்குப் பொருந்தி வராத கூற்றுக்கள் அல்லவா?


அறிவுக்குக் கொஞ்சம்கூட பொருந்திவராத கூற்றுக்கள் ஏராளம் கீதையில் இருக்கின்றன. மனதை என்னிடம் அர்ப் பணித்து எந்நேரமும் என்னையே தியானி, இப்போரைப் பற்றியோ மற்றதைப் பற்றியோ, நாட்டைப்பற்றியோ, பாண்ட வர்கள் ஆள வேண்டியதைப் பற்றியோ கவலைப்படாதே. அதிக சிரத்தையுடன் என்னை வழிபடுபவர்கள் கூடிய சீக்கிரம் என்னை அடைகிறார்கள். கடைசியில் எழுநூறாவது சுலோகம் என்ன சொல்லுகிறதென்றால் "யோகேஸ்வரனும் பார்த்தனும் எங்கு இருக்கிறார்களோ அங்கெல்லாம் லட்சுமி யும் வெற்றியும் நீதியும் எப்பொழுதும் நிலைத்திருக்கும்" இது கிருஷ்ணன் சொன்னதுமல்ல, அர்ஜுனன் சொன்னதுமில்லை, மூன்றாம் நபர், படர்க்கை ஒருவன் சொல்லுகிறான். கீதையில் கீருஷ்ணனும் பார்த்திபனாகிய அர்ஜுனனும் எங்கு இருக்கிறார்களோ அங்கெல்லாம் யார் இருப்பார்கள் என்றால் லெட்சுமி, வெற்றி, நீதி எப்பொழுதும் நிலைத்து நிற்பார்கள்.


இது என்ன அறிவுரை?


அது மட்டுமல்ல, பாலகங்காதர திலகர், காந்தியடிகள், வினோபாபாவே, ராஜாஜி இப்படிப்பட்ட பெரியவர்க ளெல்லாம் பாராட்டி கீதையைப்பற்றி ஒரு பெரிய அதிசயத் தைச் சொல்லிவிட்டார்களாம். கிருஷ்ணன் சொன்னானாம்- "ஊர் உலகத்திற்கு நாட்டிற்கு பயன்படுகின்ற அளவிற்கு இருக்கிறாராம். காரியத்தைச் செய்வதில் மட்டும் உனக்கு அதிகாரம் உண்டு. அதற்குண்டான பலன்களெல்லாம் முடிவுகளெல்லாம் என்னைச் சார்ந்தது என்று. அதைத்தான் கொத்தடிமைக்காரன்கூடச் சொல்லிக் கொண்டிருக்கிறான். நீ உழைத்துக் கொண்டே இரு, பலனை எதிர்பார்க்காதே நான் கொடுப்பதை வாங்கிக் கொள்; நீயாகக் கேட்காதே என்கின்றான். இங்கே என்ன சொல்லுகிறார்களென்றால் பயனை எதிர்பார்த்து எதையும் செய்யாதே. உன் கடமையைச் செய்; பயனை எதிர்பார்க்காதே. இது என்ன அறிவுரை?


பயனை எதிர்பார்க்காமல் எவன் கடமையைச் செய் வான்? நாங்கள் வெட்டியாட்களாகவா வந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். பேசினால் அதனைக் கேட்பவர் களுக்குக் கொஞ்சமாவது புத்தி வருமே என்பதற்காகத்தான் பேசிக் கொண்டிருக்கிறோமே தவிர, நீ உழைத்துக் கொண்டே இரு, பலனை எதிர்பார்க்காதே, நான் கொடுப்பதை வாங்கிக் கொள். நீயாகக் கேட்காதே, கடமையைச் செய் என்கிற அறிவுரையை எல்லோரும் சொல்லுகிறார்கள். இதை எப்படிச் சொல்லுகிறார்கள் என்று புரியவில்லை?


வள்ளுவரின் திருக்குறள்!


வள்ளுவரின் எந்தவொரு குறளை எடுத்துப் பார்த்தீர்க ளேயானாலும் நற்பயன் கருதி கடமையைச் செய் என்றுதான் சொல்லுகிறார். ‘அறம்' என்றாலே கடமை. அறம் என்பதே தனிப்பட்ட கடமை. பொதுக் கடமை, ஊர்க்கடமை, உலகக் கடமை, குடும்பக் கடமை, அரசுக் கடமை, போர் செய்யும் படைத்தலைவரின் கடமை போன்ற பல கடமைகளை எடுத்துச் சொல்லி அதற்கு ஒரு பொதுச் சொல் உண்டென்றால் "அறம் ஆகும். எல்லாப் பண்புகளும்ட ஒன்றின்கீழ் நிறைந்திருக்கின்ற ஒரு தன்மையை நற்பண்புகளுக்கெல்லாம் குறிப்பிட வேண்டுமென்றால் தமிழைப் பொறுத்தவரையிலும் “சால்பு” என்பதாகும். "அறம்” இதைத்தான் எங்கு பார்த்தாலும் வற்புறுத்துகிறார் வள்ளுவர்.


"துன்ப முறவரினுஞ் செய்க துணிவாற்றி


இன்பம் பயக்கும் வினை"


என்று வள்ளுவர் சொல்லுகின்றார்.


பலருக்கும் இன்பம் பயக்கக்கூடிய ஒரு வினையைச் செய்வதற்கு உனக்கு துன்பம் எவ்வளவு வந்தாலும் தாங்கிக் கொள்.


‘‘தக்கார் தகவில ரென்ப தவரவ


ரெச்சத்தாற் காணப் படும்”


வள்ளுவர் எதை - எடுத்துச் சொன்னாலும் அதனடைய பலனைக் கருதிச் செய். பயனை எதிர்பார்த்துச் செய் என்கிறார்.


“ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே" - பெற்றெடுப்பது எதற்கு என்றால் அவனைக் காப்பாற்றுவதுதான் கடமை, அவன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்கு. “சான்றோ னாக்குதல் தந்தைக்குக்கடனே". அறிவாளியாக்கியதன் பலனாகச் செய்யவேண்டிய கடமை தந்தைக்கு உண்டு. ஆகவே “வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே”.


"நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே


ஒளிறுவா ளருஞ்சம முருக்கிக்


களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே".


என்று புறநானூற்றுப் பாடல் கூறியது மாதிரி, எந்தவொரு கடமையாக இருந்தாலும் நற்பயன் எதிர்பார்த்துத்தான் செய்யவேண்டும். கீதையில் இருக்கின்ற பெரிய மோசடிக் கருத்து எல்லோராலும் புகழுகின்ற கருத்து இதுதான்.


"கடமையைச் செய், எதைப்பற்றியும் நீ கவலைப்படாதே' என்று எடுத்துச் சொல்லுகின்ற அளவிற்கு இருக்கிறார்கள்.


இதிலே கிருஷ்ணனுக்கு எத்தனை மனைவிகள் என்று வீரமணி அவர்கள் கணக்குப் போட்டுச் சொல்லியிருக் கிறார்கள். பதினாறாயிரத்து எட்டு மனைவிகளாம். ஒரு பெரிய கிராமம் அளவிற்கு. பதினாறாயிரத்து எட்டு மனைவிகள். ஒரு மனைவி வீட்டிற்குள் ஒரு நாள் போனார் என்று வைத்துக் கொள்ளுங்கள் ஒரே ஆள் மறுபடியும் அந்த மனைவி வீட்டிற்கு வருவதற்கு நாற்பத்தி மூன்று ஆண்டுகள். பத்து மாதம், அய்ந்து நாட்கள் ஆகும், அதுவரையிலும் அவள் என்ன செய்வாள்? ஏதாவது அறிவுக்குப் பொருத்தம், நடைமுறை உலகியலுக்குப் பொருத்தமாகவும் இருக்கிறதா என்று பாருங்கள்.''


‘‘பகவத் கீதை ஏன்? எதற்காக?''


‘‘பகவத் கீதை ஏன்? எதற்காக?'' என்ற சிறிய நூலை வாங்கி நீங்கள் மேலும் விரிவாகப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.


அதுமட்டுமல்ல நண்பர்களே,


நாவலர் அவர்கள் புரட்சிக்கவிஞர் அவர்களுடைய கருத்துகளை எடுத்துச் சொல்கிறபோது, விவேகத்தோடும், வேகத்தோடும், உயிர்த்துடிப்போடும் மிக அழகாக இருக்கும்..


(தொடரும்)


No comments:

Post a Comment