ஜெய் சிறீராம் சொல்ல மறுத்த முதியவர்மீது தாக்குதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 9, 2020

ஜெய் சிறீராம் சொல்ல மறுத்த முதியவர்மீது தாக்குதல்

ஜெய்ப்பூர்,ஆக.9 ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் கப்பர் அகமது கச்சாவா  (வயது52) ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். அருகிலுள்ள கிராமத்திற்கு பயணிகளை இறக்கிவிட்டு அவர் திரும்பியபோது, ‘ஜெய் சிறீராம்’ மற்றும் மோடி ஜிந்தாபாத் என்று சத்தமிட்டபடி இருவர் ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியுள்ளனர்.  ஆட்டோ ஓட்டுநரிடம் ‘ஜெய் சிறீ ராம்’, ‘மோடி ஜிந்தாபாத்’ என்று முழக்கமிடுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். அவ்வாறு அவர் சொல்ல மறுத்ததாலேயே அவரைத் தாக்கியுள்ளனர். இதுகுறித்து  ஆட்டோ ஓட்டுநர் கப்பர் அகமது கச்சாவா காவல்நிலையத்தில் புகார் செய்ததையடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரைத் தாக்கிய இருவரும் ராஜஸ்தான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கச்சாவாவின் மருமகன் ஷாஹித் கூறியதாவது, “அதிகாலை 4 மணியளவில், என் மாமா பயணிகளை அருகிலுள்ள கிராமத்திற்கு இறக்கிவிட்டு திரும்பி வந்தபோது, ஒரு காரில் இருந்த இரண்டு பேர் அவரைத் தடுத்துப் புகையிலை கேட்டார்கள். இருப்பினும், அவர்கள் என் மாமா வழங்கிய புகையிலையை எடுக்க மறுத்து, மோடி ஜிந்தாபாத் என்று சொல்லும்படி கூறினார்கள்.” என்று கூறினார். ‘ஜெய் சிறீராம், மோடி ஜிந்தாபாத்’ எனக் கூறுமாறு கட்டாயப்படுத்தியபோது ஆட்டோ ஓட்டுநர் கச்சாவா மறுத்துவிட்டதால், அவருடைய கன்னத்தில் ஒருவர் அறைந்துள்ளார். அவர்களிடமிருந்து தப்பித்துச்செல்ல முயன்றபோது, அவ்விருவரும் அவரைத் துரத்திச் சென்று தாக்கியுள்ளனர்.கச்வா அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளதாவது,:“ஒருவர் என்னிடம் மோடி ஜிந்தாபாத் என்ற முழக்கத்தை முழங்கச் சொன்னார். நான் மறுத்துவிட்டேன். பின்னர் அவர் என்னை கடுமையாக அறைந்தார். நான் என் டாக்சியை எடுத்துக்கொண்டு சிகாரை நோக்கி செல்ல முயன்றேன். ஆனால் அவர்கள் தங்கள் காரில் என்னைப் பின்தொடர்ந்து ஜக்மல்புரா அருகே எனது வாகனத்தை நிறுத்தினர். அவர்கள் என்னை வாகனத்திலிருந்து இறங்கும்படி கட்டாயப்படுத்தினர். பின்னர் அவர்கள் என்னை மோசமாக அடித்தார்கள். மோடி ஜிந்தாபாத் மற்றும் ஜெய் சிறீராம் என்று முழக்கமிடும்படி கட்டாயப்படுத்தினர். அவர்கள் என் தாடியை இழுத்து, உதைத்து, குத்தினார்கள். இதன் விளைவாக என் பற்கள் உடைந்தன. அவர்கள் என்னை ஒரு குச்சியால் தாக்கியதால் என் இடது கண், கன்னம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. என்னை அடித்து உதைத்த பின்னர், என்னை பாகிஸ்தானுக்கு அனுப்பிய பின்னரே ஓயப்போவதாக அவர்கள் கூறினர்” என்று கச்சாவா புகாரில் குறிப்பிட்டுள்ளார்.


 


No comments:

Post a Comment