* தந்தை பெரியார்
25 ஆண்டுகளுக்கு முன்பிருந்த எதிர்ப்பு இன் றில்லை; வியாபாரம், லேவாதேவித் தொழில் செய்ய பணம் திரட்ட, நான் இங்கு வரவில்லை. எனது கொள்கையை எடுத்துக் கூறவும், தமிழ் மக்களைப் பார்த்துச் செல்லவுமே நான் இங்கு வந்திருக்கிறேன்.
என்னிடத்தில் தனியான மதமோ, கடவுளோ இல்லை; திராவிடர்கள், இழிமக்களாக வாழுவதை ஒழிப்பதே எனது கொள்கை. நான் காங்கிரசில் சேர்ந்து வேலை செய்து அதில் ஜாதி வித்தியாசமும், மத வித்தியாசமும் இருந்ததால்தான் அதை விட்டு விட்டு வந்துவிட்டேன். அந்தக் காலத்தில் கிறித்துவ மதத்திற்கு மாறிய இந்துக்களை திருப்பக்கூட, நான் முயன்றதுண்டு. பிறகு சிந்தித்துத் தெளிந்தபோது இந்து மதத்தின் இழிநிலை இருக்கிறதென்று கண்டு அதை விடுத்து பகுத்தறிவு பிரச்சாரம் செய்கிறேன்.
திராவிடர்களுக்கு அரசியலும் பயன்படவில்லை. மதங்களும் பயன்படவில்லை. தர்மங்களும், மதப் பிர சாரங்களும் பயன்தரவில்லை. காங்கிரசில் தலைவனாக இருந்தபோதுதான் இதை நன்றாக உணர்ந்தேன். உள்ளே நுழைந்து பார்த்தபோது விடுதலை என்பது வெறும் வேஷமாகத் தெரிந்தது.
தங்கள் சுகவாழ்விற்கு உலை வைக்கிறதென்று கருதியே எங்களைப் பார்ப்பனர்கள் எதிர்க்கிறார்கள்; சுயநலக்காரர்கள் எதிர்க்கிறார்கள் - எதிர்த்தார்கள்.
மனிதன் பகுத்தறிவுக்குப் புலப்படாத, வெளிப்படாத, எதற்கும் அடிமையாகக் கூடாது என்பது தான் எனது சுயமரியாதைக் கொள்கையின் தாத்பரியம்.
சிலர் ஒரேயடியாய் எதையும் மாற்றிவிட முடியும் என்று கேட்கிறார்கள்; கொஞ்ச காலம் போகட்டும் என்றும் கூறுகிறார்கள். ஆனால், 2,000 ஆண்டுகள் கழித்துத் தானே நாங்கள் இந்தத் தீமைகள் ஒழிய வேண்டுமென்று கூறுகிறோம். விஞ்ஞான காலத்தில் பழமையைப் பிடித்துக் கொண்டு தொங்குவதேன்? பகுத்தறிவு என்னும் உரைகல்லில் எதையும் உரைத்துப் பார்த்து முன்னேறுங்கள்.
நமது நாடு எதில் குறைந்திருக்கிறது? இருந்தும் தமிழர்களின் நிலை என்ன? பெரிய முதல் போட்டுத் தொழில் நடத்தவும், ஏன் கப்பல்கள் கட்டவும் கூட அவர்களுக்கு முடியும். ஆனால், இவற்றிற்கெல்லாம் முட்டுக்கட்டை போடப்படுகிறது.
சங்கராச்சாரியாரும், குன்றக்குடி அடிகளாரும் கூட எனது சேவை தவறு என்று கூறவில்லை. சங்கராச் சாரியார் என்னைக் கூப்பிட்டுப் பேசியிருக்கிறார். குன் றக்குடி அடிகளாருடனும் நான் விவாதித்திருக்கிறேன். சாத்திரத்திற்கு விரோதமில்லாமல் மெல்ல மெல்ல வேலை செய்யுங்கள் என்று அவர்கள் கூறினார்கள். நான் அடிப்படையிலேயே கோளாறு இருக்கும்போது எப்படி அதை நீக்காமல் பாடுபட முடியும் என்று கேட் டேன். புது வழி வகுப்பதாக குன்றக்குடி அடிகள் கூறி னார். அது பகுத்தறிவுக்கு - இழிதகைமை போக்குவதற்கு வாய்ப்பேற்படுத்துமானால் நான்கூட அவருக்கு சிஷ்யனாக இருந்து வேலை செய்யத் தயார்; இப்படிக் கூற நான் வெட்கப்படவில்லை.
மந்திரி சுப்பிரமணியம் சட்டசபையில் பேசியபோது புலவர்கள், பண்டிதர்கள், உபாத்தியாயர்கள், நாஸ்திகர் களாகி விட்டார்கள் என்று சமீபத்தில் கூறினார். உண் மையை - அறிவுக்கொவ்வாதவற்றை எடுத்துக் கூறி னால் நாஸ்திகன் என்கிற பட்டத்தையா சுமத்துவது? பல ஆசிரியர்கள் இன்று இத்தகைய அடக்குமுறைகளில் சிக்கி அல்லற்படுகின்றனர். ஆரிய ஆதிக்கம் எந்தெந்த வகையில் வேலை செய்கின்றதென்பதற்கு இது ஒரு உதாரணம். இவற்றை நீக்கத்தான் நாங்கள் பாடுபடு கிறோமே ஒழிய, வெறும் விளம்பரத்திற்கும், பட்டம் பதவிகளுக்கும், பணத்திற்கும் ஆசைப்பட்டல்ல. இந்த உண்மையை எல்லோரும் உணருவதுடன் தமிழர் களனைவரும் ஒன்றுபட்டு தங்கள் மீதுள்ள இழிவைப் போக்கிக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் இழிவுபடுத்தப்பட்டிருக்கும் நாலாம் ஜாதியினர் உயர்வுக்கு நாங்கள் பாடுபடுகிறோம். நாங்கள் அரசியல் காரியங்களில் தலையிடுவதில்லை. மக்கள் உள்ளத்தில் மறுமலர்ச்சி உண்டாக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். இதனால் எங்களை அரசியல் காரர்கள் அதிகம் விரும்ப மாட்டார்கள். நாங்கள் முழுக்க முழுக்கச் சமுதாயத் துறையில் பாடுபடுகிறோம். மதம், சாஸ்திரம், கடவுள் இவற்றை ஒருவர் மீது இன் னொருவர் திணிக்காமல் அவரவர்களாக அவரவரின் பகுத்தறிவுக்கேற்ப பின்பற்ற வேண்டியதாகும். ஏனெனில் மனிதன் பகுத்தறிவுள்ளவன். அப்பகுத்தறிவைச் சுதந் தரமாக, மற்றொருவர் வரையறுக்கும் எல்லைக்குள் இன்றிச் செலவிட வேண்டும். இன்னொருவர் சொன் னார் என்றதற்காக நம் பகுத்தறிவை அடக்கி விடாமல் இருங்கள் என்பதே எம் கட்சி கூறுவது.
ஒரு காலத்தில் தாழ்ந்தவர்களாயிருந்தவர், உலக நாடுகளில் இன்று உயர்ந்து விட்டனர். காரணம், அவர் கள் தம் பகுத்தறிவைச் சுதந்திரமாக செலவிட்டதுதான்.
(23.12.1954 அன்று கோலாலம்பூர் விருந்து உபசாரக் கூட்டத்தில் தந்தை பெரியார் அறிவுரை - 'விடுதலை', 5.1.1955)
No comments:
Post a Comment