குறிஞ்சி மகளிர் சிந்தனைக் களத்தின் இணையப் பொன்விழா கருத்தரங்கத்தில் தமிழர் தலைவரின் சிறப்புரை
சென்னை, ஆக. 7- - "உங்களுடைய உரிமை காக்கப் படும் - என்றைக்கும் விழிப்போடு இருங்கள் - என் றைக்கும் பெரியாரைத் துணைக் கோடல் - உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்" என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
குறிஞ்சி பொன்விழா கருத்தரங்கம்
கடந்த 12.7.2020 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறிஞ்சி மகளிர் சிந்தனைக் களத்தின் இணையப் பொன்விழா கருத்தரங்கத்தில்' காணொலிமூலம் சிறப்பு ரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
அங்கே தேவி உபாசனை செய்யும் ஒரு அம்மா இருந்தார். அவரிடம் போய், ‘‘இதுபோல சர்க்கார் ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கு; பெண்களுக்கும் சொத்து பாத்யம் உண்டுனு சர்க்கார் கொண்டு வந்திருக்கிற சட்டத்தைப் பெண்கள் மூலமாகவே எதிர்க்கணும்னு மகாபெரியவர் சங்கராச்சாரியார் சொல்லியிருக்கார், அதனால இங்க ஸ்திரீகள் கூட்டம்போட வந்திருக்கோம். கூட்டத்துக்கு நீங்களும் ஸ்த்ரீகளை கூட்டி வரணும்'’ என்றேன்.
அந்த தேவி உபாசகரோ மறுத்துவிட்டார். பிறகு ஒவ்வொரு வீடாய் போய், பெண்களைப் பெரிய முயற்சிக்குப் பிறகு கூட்டத்துக்கு அழைத்து வந்து, ‘‘எங்களுக்குச் சொத்துரிமை வேண்டாம். மனு ஸ்மிருதியில் உள்ளபடி ஸ்த்ரீ தர்மம் பாதுகாக்கப்பட ணும். சர்க்கார் இந்த பில்லை வாபஸ் வாங்கணும்'' என பெண்களை வைத்தே தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.
இந்தத் தீர்மானத்தை நகல் எடுத்து டில்லி சர்க் காருக்கு அனுப்பி வைத்தோம்.
இது மட்டுமா?
திருநெல்வேலி ஜில்லாவிலிருந்து தமிழ்நாட்டின் பல ஊர்களில் இப்படி ஸ்த்ரீகள் கூட்டம் சங்கராச் சாரியாரின் உத்தரவுப்படி நடந்தது.
என்ன ஏதென்றும் தெரியாமலேயே பல பெண்கள் இதில் கலந்து கொண்டு எங்களுக்குச் சொத்து பாத்யம் வேண்டாம் என சொன்னார்கள்.
கும்பகோணத்தில் நடந்த ஸ்த்ரீகள் கூட்டத்துக்கு ஹைகோர்ட் ஜட்ஜ் திருவேங்கடாச்சாரியாரின் தங்கை செண்பகத்தம்மாளை அழைத்து வந்தோம். அவரோடு இன்னும் பல ஸ்த்ரீகளும் வந்து எங்களுக்குச் சொத்து பாத்யம் வேண்டாம் என தீர்மானம் போட்டார்கள்.
கிட்டத்தட்ட ஒருமாதம் தமிழ்நாடு பூராவும் 100 ஸ்த்ரீ கூட்டங்கள் நடந்தன. தீர்மான நகல்கள் தவிர சர்க்கார் இந்த பில்லை வாபஸ் வாங்கணும் என்று டில்லிக்கு பல தந்திகளும் அனுப்பிக் கொண்டே இருந்தோம். இந்தக் கூட்டங்கள் நடந்து கொண்டிருக் கும்போதே சங்கராச்சாரியார் மறுபடியும் என்னை அழைத்தார். ‘‘இங்கேயே கூட்டம் நடத்திக் கொண்டி ருந்தால் சரிபட்டு வராது போலிருக்கிறது. டில்லிக்கே போய் எதிர்ப்பை தெரிவிக்கணும்; அதுக்கு நீர் டில்லி கிளம்பணும்” என்றார்.
டில்லியில் Constituion Club இல் ஸ்த்ரீகளுக்கும் சொத்து பாத்யம் பில் பாஸ் பண்ணலாமா, வேண்டாமா என நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பெரிய அளவில் பெண்களை திரட்டிக் கொண்டு போனோம். அங்கே, பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என வலியுறுத்த கமலாதேவி சட்டோபாத்யாய தலைமை யில் பல பெண்கள் கூடியிருந்தனர்.
நாங்கள் கூட்டிப்போயிருந்த பெண்கள், நேரு அங்கே வருவதற்கு முன்னரே கலைந்து விட்டதால், பயன் இல்லாமல் போய்விட்டது.
சங்கராச்சாரியாரின் எதிர்ப்பால் கொஞ்சநாள்கள் பில்லைத் தள்ளிவைத்த நேரு, பிறகு பெண்களுக்குச் சொத்தில் பங்கு உண்டு என்ற பில்லை பாஸ் பண்ணிவிட்டார்."
தாய்மார்களே, சகோதரிகளே, தோழர்களே, மகளிர் அமைப்பாளர்களே, நன்றாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண்களுக்குச் சுதந்திரம் வேண்டுமானால், அவர்களுக்குச் சொத்துரிமை இருக்கவேண்டும் என்று சமூக விஞ்ஞானியான பெரியார் அவர்கள் சொன்னார்.
எங்கே மறுமணம் இல்லையோ - எங்கே மண விடுதலை இல்லையோ - எங்கே பொருளாதார சுதந்திரத்திற்கு வாய்ப்பு இல்லையோ - விபச்சாரம் முளைப்பது அந்த இடம்தானே என்று பெரியார் கேட்டார்.
இதுபோன்று வேறு யாராவது கேட்டிருப்பார்களா? என்று நீங்கள் எல்லாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.
ஆகவேதான், பெண்களுக்குச் சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று சொல்லும்பொழுது, பிறப்பதற்குப் போராட்டம் - கள்ளிப் பாலைத் தாண்டவேண்டிய கட்டம் இருக்கிறது - அதைத் தாண்டி அவர்கள் மேலே வந்த பிறகு, படிக்க வேண்டியிருக்கிறது - அதற்குப் பிறகு உத்தியோகத்திற்குப் போகவேண்டி இருக்கிறது.
மூன்று நிலைகளாக....
பெண்களைப் பொறுத்தவரையில், மூன்று நிலை களாகத்தான் வைத்திருந்தார்கள்.
- அலங்காரப் பொம்மைகள் - படித்த பெண்களாக இருந்தாலும் சரி.
- அவர்கள் சமையற்கூடங்கள் - இன்னமும் பார்த் தீர்களேயானால், மேலை நாடுகளுக்குச் சென்றவர்கள் கொஞ்சம் மாறியிருக்கிறார்கள்: நம்முடைய நாட்டில் இருக்கக்கூடியவர்கள், நான் உள்பட, யாராக இருந்தாலும் விதிவிலக்கல்ல - சமையல் கட்டிற்குப் போகிறோமா? பெண்கள் சமைத்து வைத்தால், நாம் சாப்பிடுவதற்குத் தயாராக இருக்கிறோம். சமையலுக்கு வேண்டிய காய்கறிகளைக்கூட அரிந்து கொடுப்ப தில்லையே!
பெண்களுக்கு இரு மடங்கு வேலை!
உத்தியோகத்திற்குப் போகின்ற பெண்கள், அலுவலகத்திலும் பணி செய்யவேண்டும்; வீட்டிற்கு வந்ததும், வீட்டிலும் வேலைகளைச் செய்யவேண்டும். பெண்களுக்கு இரு மடங்கு வேலை.
இதைத்தான் ஒருமுறை துணைவேந்தராக இருந்த லலிதா காமேசுவரன் அவர்கள் என்னிடம் கேட்டார்.
"புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் எழுதிய குடும்ப விளக்கில், பல பகுதிகள் எனக்கு ஒவ்வாமை" என்று சொன்னார்.
என்னவென்று நான் கேட்டேன்.
"குடும்பத்தில், இன்னின்ன வேலைகளைப் பெண்கள்தான் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே, ஆண்களுக்குப் பங்கு வேண்டாமா?" என்று கேட்டார்.
"உண்மைதான் நீங்கள் சொல்வது" என்றேன்.
ஒரு மணவிழாவில் நான் உரையாற்றும்பொழுது சொன்னேன், "நளன் யார்? இன்றைக்குத் திருமண விழாக்களில், ஆண்கள்தானே சமையற்காரர்களாக இருக்கிறார்கள். ஆண் ஏன் சமைக்கக்கூடாது? சமையல் தொழில் பெண்களுக்குத்தான் முத்திரை குத்தப்பட்டு இருக்கிறதா?"
எனவேதான் நண்பர்களே, பெண்கள், ஒவ்வொரு உரிமைக்கும் போராடவேண்டிய நிலை இருக்கிறது.
பெண்கள் அணியும் உடையில்கூட வேறுபாடு இருக்கக்கூடாது என்றார் பெரியார்.
மணியம்மையார் அவர்களைப் பார்த்து, ‘‘அம்மா, நீ கூட கிராப் வெட்டிக் கொள்'' என்றார்.
ஏனென்றால், பெண்களுடைய உடை, அவர்க ளுடைய நேரத்தை, நினைப்பை, உழைப்பை எந்த அளவிற்கு வீணாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
இன்றைக்குத் தவறாகத் திரிபுவாதம் செய்யப்படுகிறது
அதேநேரத்தில், பெரியாரின் பெண்ணியக் கருத்து கள் இன்றைக்குத் தவறாகத் திரிபுவாதம் செய்யப்படு கின்றன.
கற்பு என்றால், அது பெண்களுக்கு மட்டும்தானா? கற்புக்கரசி என்றுதானே சொல்கிறீர்கள்; கற்புக்கரசன் என்று சொல்கிறீர்களா? என்று கேட்டார்.
இது இருவழிப் பாதையாக, சமமாக இருக்க வேண்டுமே தவிர, அது ஒரு வழிப்பாதையாக இருக் கக்கூடாது என்று சொன்னார்.
பெரியாருக்கு முன்பு, பாரதியார் அவர்கள் பெண் ணுரிமையைப் பற்றி வேகமாகப் பேசியிருக்கிறார் என்று சிலர் சொல்வார்கள். உண்மைதான்.
பாரதியார் கண்டது புதுமைப் பெண் என்றால்,
பெரியார் கண்டது புரட்சிப் பெண்.
பாரதியார் பாடினார் - ஒரு இயக்கம் நடத்தவில்லை.
பெரியார், போராடினார் - அதுதான் மிகவும் முக் கியம்.
பாடுவது வேறு - போராடுவது வேறு.
அந்த அளவிற்குப் பெரியாருடைய பணி இருந்தது. ஆண்கள் நன்றி மறந்தாலும், பெண்கள் ஒருபோதும் நன்றி மறந்துவிட முடியாது.
நண்பர்களே, நான் சங்கராச்சாரி மடத்தைப்பற்றி சொன்னேன். இதோ, இவர் பார்ப்பன அம்மையார்தான். உயர்ந்த ஜாதிக்காரர்தான். ஆனால், புரட்சிகரமான சிந்தனை உடையவர். எழுத்தாளர் இராஜம் கிருஷ் ணன்.
எழுத்தாளர் இராஜம்கிருஷ்ணன் எழுதிய ‘காலந்தோறும் பெண்'
அவர் எழுதிய புத்தகத்தை அண்மையில் நான் எடுத்துப் படித்துப் பார்த்தேன். அதில் பல செய்திகளை எழுதியிருக்கிறார். அதில் ஒரே ஒரு செய்தியைச் சொல்கிறேன்.
எழுத்தாளர் இராஜம்கிருஷ்ணன் அவர்கள் எழுதிய ‘காலந்தோறும் பெண்' என்ற நூலில், 14 ஆம் அத்தியாயமாக - ‘‘வேத (அ)தர்ம பரிபாலனங்கள்'' என்ற ஒரு தலைப்பில்,
சில ஆண்டுகளுக்குமுன், எங்கள் பேட்டை மாதர் சங்க உறுப்பினர்கள் காஞ்சியில் சென்று, அங்கு தங்கியிருக்கும் ஆசாரிய சுவாமிகளைத் தரிசித்து, அருள்பெற்று வர ஒரு சுற்றுலாப் பயணத் திட்டம் போட்டிருந்தார்கள். இந்தத் திட்டத்தில், நானும் புகுந்துகொண்டேன். சுமார் அய்ம்பது பெண்மணிகள் - பிராமணர், அல்லாதார், முதியவர், இளையவர் என்ற பாகுபடில்லாத வகையில் சேர்ந்திருந்தனர். அது சித்திரை மாசக் கோடை நாள். காலையில் கிளம்பி, சுவாமிகள் தங்கியிருந்த குளக்கரை ஓரத்துக் கோயில் முன், எங்கள் வண்டி வந்து நிற்கையில், மணி பன்னிரண்டரையாக இருந்தது. அடியும், பொடியும் ஒட்டும் உச்சி நேரம். பலருக்குத் தாகம். சில சிறுமிகள், குழந்தைகளும் இருந்தனர்.
இந்த நேரத்தில், எப்பொழுது நிழல் கண்டு விடா யாற்றிக் கொண்டு மூச்சு விடுவோம் என்று வெம்மை நெருக்கடியேற்றியிருந்தது. சில சிறுவர்கள் பசி, பசி என்று கட்டுச் சோற்றுக் கூடைகளைப் பார்த்துப் பிடுங்கி எடுத்தார்கள்.
வண்டி நின்று, பெண்கள் இறங்கத் தொடங்கியதும், உள்ளிருந்து ஒரு பிராம்மணர் (வெளிவேடம் அப்படி) வந்தார்.
‘‘நில்லுங்கோ, இங்கே தலைமுடி வச்சுண்டவா, ஸ்மார்த்தா, வடகலைக்காரா, புருஷன் இல்லாதவா வரப்படாது; மத்தவா வரலாம்'' என்றார்.
எனக்கு அச்சொற்களைக் கேட்டதும், பேயறை கொண்டாற்போல் இருந்தது.
உண்மையில், இதை ஏற்பாடு செய்த பெருமாட்டி களில், முக்கியமானவர், அவர் குறிப்பிட்ட ஸ்மார்த்தப் பிரிவினில் வந்தவர். கணவரை இழந்து ஒரு வருடமே ஆகியிருந்தது. தலைமுடி வைத்திருந்தார்.
அவர் கணவர் இருந்த காலத்தில், சுவாமிகளை மாதர் சங்கத்துக்கே அழைத்து, பாத பூஜை விமரிசை யாகச் செய்து மகிழ்ந்திருக்கிறார்.
இப்போது இவர் உள்ளே வருவதற்கே தடைக் கோடு கிழிக்கப்படுகிறது. இந்த அவமானம் என்னைத் தவிர அங்கே யாருக்குமே உரைத்ததாகத் தெரிய வில்லை.
அந்தத் தடைச் சொற்களைவிட, பெண்மணிகள் தலைவணங்கி அதை ஏற்றுக்கொண்டது, எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது...
"எனக்கு உள்ளே அடி வைக்க மனச்சாட்சி மறுத் தது... இந்த நிலையில், ஸ்மார்த்த வடகலை, தென்கலை, சம்பிரதாய மரபு, என்னுள் ஒரு கேலிக் கூத்தாகவும், ஓர் ஆர்வத்தைக் கிளப்பியது.
தங்கள் தோழிகளாக, உற்றவர்களாக மகிழ்ந்து பழகியவர்கள் இவ்வாறு மனிதப்பண்பு இல்லாத கொடூரமான சொற்களுடன் விலக்கப்படும்பொழுது, அதனால், ஒரு சிறு பாதிப்புகூட இல்லாதவர்களாக மற்றவர், அந்தப் பிராமணரை வணங்கி உள்ளே செல்லுகிறார்கள் என்றால், பெண்களின் கல்வியும், பல முன்னேற்றங்களும் ஒட்டுமொத்தமாகப் பயனே அளிக்கவில்லை என்றுதான் தோன்றிற்று."
படிப்பு, அந்தஸ்து இதெல்லாம் பயன்படவில்லை. எது பயன்படும்? பெரியாரின் சுயமரியாதைதான் பயன்படும்.
எனவேதான் நண்பர்களே, பெரியார் என்றும் தேவைப்படுகிறார், எப்போதும் தேவைப்படுகிறார்.
உரிமைகளுக்கு எங்கெங்கெல்லாம் சவால்கள் தோன்றுகின்றனவோ, அங்கெல்லாம் பெரியார் தேவைப்படுகிறார்.
பெண்ணடிமை நோய்க்கு நீண்ட காலத்திற்கு முன்பு சுயமரியாதைச் சூரணம்
கரோனா என்ற தொற்று நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆனால், ஜாதி நோய்க்கு, பெண்ணடிமை நோய்க்கு நீண்ட காலத்திற்கு முன்பு சுயமரியாதைச் சூரணம், பெரியார் என்ற மருந்து கிடைத்தது.
அதன் காரணமாகத்தான், எத்தனையோ தோழர் களை இன்றைக்குப் பெரியார் கண்ட புரட்சிப் பெண் களை - நாங்கள் சுந்தரவல்லிகளாகவும், அருள்மொழி களாகவும், மற்ற மற்ற பெண்களாகவும், குறிஞ்சி அமைப்புப் பெண்களாகவும், எல்லோரையும் பார்க் கின்றோம். அதுதான் மிக முக்கியம்.
இந்தப் படை பெருகட்டும்; இந்தத் தடை விலகட்டும்!
பெரியார் எங்கும் பரவட்டும்!
பெரியார் என்பவர் தனி மனிதரல்ல! தத்துவம் - ஒரு காலகட்டம் - ஒரு சகாப்தம்!
உரிமை என்பது கொடுத்துப் பெறுவது அல்ல - தட்டிப் பறிப்பது!
"அக்கா அக்கா என்று நீ அழைத்தாய்
அக்கா வந்து கொடுக்க
சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே?"
என்று சொன்ன புரட்சிக்கவிஞரை நினைவில் வைத்துக்கொண்டு, உரிமைகளை நீங்களே தட்டிப் பறியுங்கள்!
பெரியாரைத் துணைக் கோடல் - வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்
உங்களுடைய உரிமை காக்கப்படும் - என்றைக்கும் விழிப்போடு இருங்கள் - என்றைக்கும் பெரியாரைத் துணைக் கோடல் - உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.
வாழ்க பெரியார்!
வளர்க பெண்ணிய உரிமைகள்! நன்றி, வணக்கம்!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
No comments:
Post a Comment