ஆதிக்கம்+ஆணவம்+வருணம் = ஆரியம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 11, 2020

ஆதிக்கம்+ஆணவம்+வருணம் = ஆரியம்!

* கலி. பூங்குன்றன்


சகாப்தத் தலைவர் தந்தை பெரியாரும் சரி, அவர் வழி வந்த தலைவர் ஆசிரியர் அவர்களும் சரி - ஒன்றைத் திரும்பத் திரும்பக் கூறி வந்துள்ளனர், வருகின்றனர்.



பார்ப்பனர்களைப் பொறுத்தவரை அவர்களின் அணுகுமுறைகளில் கூச்ச நாச்சமில்லாத பம்மாத்துத் தனமாக பேசும், நடந்து கொள்ளும் முறைகளிலும் சரி, அவ்வப்போது நிறம் மாறிக் கொண்டே இருப்பர்; எனினும், அடிப்படையில் மட்டும் அவர்களின் அழிந்துபோன செல்களும் சரி, புதிது புதிதாக உதிர்த்துக் கொண்டுள்ள குருதி செல்களிலும் சரி, மாற்றம் என்பது மட்டும் இருக்கவே இருக்காது.


குறிப்பாக வர்ணாசிரமதர்மத்தை எடுத்துக் கொண்டால் அதனை அந்த அச்சான வடிவத்திலும், உள்கட்டமைப்பிலும், அது தேவையானது - அதன் அஸ்திவாரத்துக்கு எந்த வகையிலும் பலகீனம் வந்துவிடக் கூடாது என்பதுதான் அவர்களின் திட்டவட்டமான தீர்க்கமான முடிவு.


ஆனால், இந்தக் காலக் கட்டத்தில் அதன் உள்ளார்ந்த தன்மையை அப்படியே காப்பாற்ற முடியும் - நியாயப்படுத்த முடியும் என்ற எண்ணம் - தந்தை பெரியார்தம் சகாப்தத்தில் அறிஞர் அண்ணா, கலைஞர் போன்றவர்கள் தலைதூக்கிய இந்தக் காலக் கட்டத்தில், வருணாசிரம தர்மத்தை அதன் அந்தரங்கத்தை அப்படியே காப்பாற்ற முடியாது என்ற நிலையில் என்ன செய்வார்கள்? என்ன சொல்லுவார்கள்? அதற்கு வேறு எங்கும் போக வேண்டாம்.


மறைந்த ‘துக்ளக்‘ சோ இராமசாமி அவர் ஏட்டில் எழுதியதே போதுமானது.


“வெறுக்கத்தக்கதா பிராமணியம்?’ எனும் தலைப்பில் என்ன எழுதினார்?


“இந்த நிகழ்ச்சியிலே ஒரு விஷயத்தைத் தெளிவாக்கி விடுவது நல்லது. நான்கு வருணங்கள் பிறப்பின் அடிப் படையில் ஏற்படுத்தப்பட்டவை அல்ல. குணம், வாழும் வகை இவற்றின் அடிப்படையில் மனிதர்கள் வகைப்படுத்தப் பட்டனர். இதுபற்றி ‘எங்கே பிராமணன்’ தொடரில் விளக்கமாக எழுதியிருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


திருவாளர் ‘சோ’ இராமசாமி கூறும் இந்தக் கருத்தில் முகத்திரையை முக்காலும் கிழித்து மூலையில் தூக்கி எறிந்தவர் - பார்ப்பனர்  ‘துக்ளக்‘ உலகத்தின் லோகக் குருவான மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி.


அவர் எழுதிய ‘தெய்வத்தின் குரல்’ முதல் பாகம் (பக்கம் 1001-1003)


“ஜாதி வித்யாஸமே இல்லை என்று பகவான் சொல்ல வில்லை. ஆனால் பிறப்பின்படி இன்றி, குணத்தின் படி கர்மாவைப் பிரித்துத் தரும் சதுர்வர்ணத்தைத் தாம் சிருஷ்டித்ததாகத்தான் சொல்கிறார். ‘சாதுர் வர்ணயம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாசக’ என்றே சொல்கிறார் என்கிறார்கள்.


சரி, ஆனால் எத்தனை வயதுக்கு மேல் இப்படிக் குணத்தை அறிந்து, அதை அனுசரித்து, அதற்கான வித்தையைப் பயின்று, அதற்கப்புறம் தொழிலை அடையாளம் பண்ணுவது? முக்கியமாக பிராமணனின் தொழிலை எடுத்துக் கொண்டால் இவன் ஏழெட்டு வயசுக்குள் குருகுலத்தில் சேர்ந்தால்தானே, அப்புறம் பன்னிரெண்டு வருஷங்களில் தன் தொழிலுக்கானவற்றைப் படித்துவிட்டுப் பிறகு அவற்றில்தானே அனுஷ்டானம் பண்ண வேண்டியதைப் பண்ணவும், பிறருக்குப் போதிக்க வேண்டியதைப் போதிக்கவும் முடியும்? குணம் ஆன பிறகு (ஓர் அமைப்பில் உருவானபிறகு)தான் தொழிலை நிர்ணயிப்பது என்றால், கற்க வேண்டிய இளவயது முழுதும் பல பேர் தொழிலைத் தெரிந்து கொள்ளாமல் வீணாவதாகவும் அப்புறம் சோம் பேறியாக ஒரு தொழிலுக்கும் போகப் பிடிக்காமல் இருப்பதாகவுமே ஆகும்ÕÕ என்று இந்தத் ‘துக்ளக்‘ அக்கிரகார வகையறாக்களுக்கு முகத்தில் அறைந் ததுபோல் பதிலடி கொடுத்துள்ளாரே - இந்தப் பிரச்சினையை எத்தனையோ முறை நாம் எடுத்துக் காட்டியிருந்தும், அறிவு நாணயம் என்பது கடுகளவும் இல்லாமல் ஓடி ஓடி ஒளிவது ஏன்?


அடேயப்பா, இந்த Ôமஹா பெரியவாளைÕ வரிக்கு வரி தூக்கிச் சுமக்கும் குருமூர்த்தி கூட்டம் அடுத்த இதழில் இதற்குப் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்!


6ஆம் வகுப்பு முதல் உள்ளூரில் தொழிலில் ஈடுபட வேண்டும் என்று கூறும் இந்தப் புதிய கல்விக் கொள்கைச் சரத்தும், தொழிற்கல்வியை எந்த வயதில் தொடங்க வேண்டும் என்று சங்கராச்சாரியார் கூறும் கருத்தும் ஒத்துப் போவதைக் கவனித்தது, மத்திய அரசின் இந்தப் புதிய கல்வியின் உற்பத்தி சங்கராச்சாரியாரின் மடத்திலிருந்து தொடங்குகிறது என்பதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.


ராஜாஜி இரண்டு முறை சென்னை மாநிலத்தின் முதல் அமைச்சராக வந்தபோதும் பள்ளிகளை இழுத்து மூடியது எதைக் காட்டுகிறது? அதுவும் 1938ஆம் ஆண்டிலேயே 2500 பள்ளிகளை மூடினால், கிராமப்புறத்தைச் சேர்ந்தவன் அப்பன் தொழிலை அண்டி வயிறு வளர்க்கும் அவலத்தின் பக்கம்தானே தள்ளப்படுவான்?


1952இல் சென்னை மாநில முதல் அமைச்சராகக் கொல்லைப் புறம் வழியாக நுழைந்தபோதும் - 6000 பள்ளிகளை இழுத்து மூடி, மீதிப் பள்ளிகளிலும் அரை நேரம் படித்து, அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்று சட்டம் போடவில்லையா?


அப்போதுகூட, இப்பொழுதுகூறும் இதே Ôதொழிற்கல்விÕ பல்லவிதான் பாடினார்கள்.


ஆச்சாரியாரை அறிந்திராதவரா தந்தை பெரியார்? ஒரே ஒரு வார்த்தையில் ஒரே ஒரு சொடுக்கில் ‘தொழிற்கல்வியல்ல - அப்பன் தொழிலை பிள்ளை செய்யும் குலக் கல்வி’ என்று துல் லியமாகச் சொன்னதுதான் தாமதம் - காட்டுத்தீயாக பற்றி ஆச்சாரியாரின் அஸ்தியிலேயே ஜுரம் கண்டு, அரசியலை விட்டு ஓடியவர் தானே - அவரது பொதுவாழ்வே அத்தோடு அஸ்தமிக்கவில்லையா?


இப்பொழுதும்கூட என்ன? மக்கள் தொகையில் பெரும்பா லோரான தாழ்த்தப்பட்டோர், பிற் படுத்தப்பட்டோருக்கு எதிரான இந்தப் புதிய குலக்கல்வித் திட்டத் தால், பிஜேபியும், சங்பரிவார்களும், இவற்றின் மூலக் கர்ப்பமான பார்ப் பனச் சக்திகளும் அடையாளம் காணப்படத்தானே போகிறார்கள்.


ஆம், அந்த ஒரு கணத்திலே இந்த ஆதிக்கக் கூட்டத்தின் ஆரியபுரம் அஸ்தமனம் ஆகியே தீரும்.


காரணம் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக சிறுபான்மைக் கூட்டம் வைக்கும் பெருந்தீ - கொடுந்தீ-இந்த புதிய கல்வி எனும் குலக்கல்வி!


1952களில் ஆச்சாரியார் கொண்டு வந்த குலக் கல்வித் திட்டம் காரணமாக அவர் பதவியை விட்டு துரத்தப்பட்டார் என்பது வரலாறு.


ஆனால் அதற்கு 57 ஆண்டுகளுக்குப் பிறகும், அந்த ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்திற்கு வக்காலத்துப் போட்டு எழுதிய ஏடு ‘துக்ளக்‘ - எழுதிய ஆசாமி - சோ ராமசாமி.


“அதுவரை கல்வி கற்காத ஏழைக் குழந்தைகள் புதிய ஏற்பாட்டின் விளைவாக கல்வி கற்பார்கள் என்பதுதான் ராஜாஜியின் அந்தத் திட்டத்தின் தனிச் சிறப்பு - எனினும் திராவிடக் கட்சிகள், அரசியல் நோக்கத்துடன் அந்தப் புதிய ஏற்பாட்டை எதிர்த்தன. காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலரும் அந்த எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்தனர்.


அந்தச் சூழலில் ராஜாஜி அமைச்சரவை 13.4.1954 அன்று பதவி விலகியது. அன்றைய தினமே காமராஜர் தலை மையில் புதிய காங்கிரஸ் அமைச்சரவை பதவி ஏற்றதுÕ’ (‘துக்ளக்‘ 5.10.2011 பக்கம் 12).


‘துக்ளக்‘ மட்டுமல்ல - ‘கல்கி’யும் (1980 - ஜூலை), ‘தினமலரும்‘ (வாரமலர் - 4.4.2010) ஆச்சாரியாரின் குலக் கல்வி திட்டமும் அதன் கர்த்தாவாகிய ஆச்சாரியாரும் அஸ்தமித்து, அந்த இடத்தில் முள் செடிகளும் முளைத்து மண்டியிட்ட பிறகுகூட குலக்கல்விக்கு தொழிற்கல்வி என்று மகுடம் சூட்டிக் குதூகலித்தனர் என்பது நினைவில் இருக்கட்டும்.


அந்த மனப்பான்மை அவர்களை விட்டு இன்றுவரை மறையவில்லை - அன்றைய குலக்கல்வியை - அப்பன் தொழிலை எப்படி தொழிற்கல்வி என்று கூறி அடம் பிடித்துத் துள்ளித் திரிந்தார்களோ, அதே புத்தியோடு அட்சரம் மாறாமல் - புதிய கல்விக் கொள்கை என்னும் முகமூடி அணிந்து உள்ளே நுழையும் குலக்கல்வியை, தொழிற்கல்வி என்று சாதிப்பதைக் கவனித்தால் காலம் மாறினாலும், காகப்பட்டர் பரம்பரை மட்டும் அந்தப் புளித்துப் புரையோடிப்போன மனுதர்ம - மனித விரோத புத்தியிலிருந்து மாறுவது என்பது அவர்கள் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் எந்த ஜென்மத்திலும் இல்லை இல்லவே இல்லை.


இன்று வெளிவந்த ‘துக்ளக்‘ (19.8.2020) அட்டைப் படத்தைப் பார்ப்பவர்களுக்கு ஒன்று தெளிவாகவே தெரியும்.


இவர்கள் கூறும் குலக்கல்வித் திட்டத்தை Òவர்ணாசிரம சதிÕ’ என்று நாம் சொல்லுகிறோமாம். சதி என்பது சரிதானே? சதியையே ஆதரித்த சதிகாரக் கூட்டமாயிற்றே!


இப்பொழுது கூறுங்கள் - காலங்கள் மாறினாலும்- கோலங்கள் மாறினாலும் குல்லூகப்பட்டர் கும்பலான கோணல் புத்தியும், குறுக்கு வெட்டு குழிபறிப்பும், பார்ப்பனர் அல்லாதார்மீது குதிரைச் சவாரி செய்ய வேண்டும் என்ற ஆதிக்க வெறியும், அவர்களின் குருதியில் தோய்ந்துவிட்ட குரூரமாகும்! இது கல்வெட்டுச் சிலாசாசனமாகும்.


No comments:

Post a Comment