மும்மொழிக் கொள்கையின் நோக்கம் என்ன?
தேசியக் கல்விக் கொள்கையின் முன்னுரையில், “உள்நாட்டுத் தேவைகளையும், அயல்நாட்டுத் தேவைகளையும் கருத்தில் கொண்டும், நாட்டின் பன்முகத் தன்மையையும், மாறுபட்ட கலாச்சாரங்களையும் கவனத்தில் கொண்டும் திட்டத்தின் கூறுகள் வடிவமைக்கப்படும்” என்று கூறுகிறது. ஆனால் வகுக்கப்பட்டிருக்கும் மொழிக்கொள்கைக்கும், இவர்களின் முன்னுரைக்கும் ஒரு துளியும் தொடர்பில்லை.
நாட்டின் பன்முகத்தன்மையையும், மாறுபட்ட கலாச்சாரங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றால், தாய்மொழி ஆளுமையும், தாய்மொழியின் பண்பாடுகளும் பாதுகாக்கப்பட வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியில் இலக்கியங்களையும், அறிவியலையும் வளர்ப்பதுமே அந்த மொழியின் மேம்பாட்டிற்கான வழியாக இருக்க முடியும். இன்னொரு மொழியைப் படிப்பதால் தாய்மொழி மீதான கவனச் சிதறலே ஏற்படும்.
உள்நாட்டில் இருக்கும் தாய்மொழி தவிர்த்த பிற மொழி ஒன்றைப் படிப்பதனால், அந்தப் பிறமொழி சார்ந்த மாநிலத்தில் மட்டுமே நமக்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலும். அந்தப் பிறமொழியால், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வாழ்வதற்கோ அல்லது தொடர்பு கொள்வதற்கோ உரிய தேவையைப் பூர்த்தி செய்துவிட முடியாது. ஆனால், ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும் போது, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களோடும் தொடர்புத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். மேலும் அயல்நாட்டுத் தொடர்புத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும். எனவே ஒரு இந்தியருக்குத் தாய்மொழியுடன் இணைப்பு மொழியாகவே ஆங்கிலம் மட்டுமே இருந்தால் போதுமானாது.
இந்நிலையில் தேசியக் கல்விக் கொள்கை 2020ல் உள்ள 4.11 முதல் 4.22 வரையிலான கொள்கைகளை ஆய்வு செய்து பார்த்தால் பின்வரும் கேள்விகள் எழுகின்றன.
4.11-ம் பிரிவில் “சிறு குழந்தைகள் தங்கள் தாய்மொழியில் கருத்துகளை விரைவாகக் கற்றுக் கொள்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு, குழந்தை பேசும் மொழி, கற்பித்தல் மொழி என்று இரண்டு வகையான மொழித் திட்டங்களைக் கொண்டு வருவது ஏன்? அதாவது தாய்மொழியையே இன்னொரு மொழியில் கற்றுத் தரப்போவதாகக் குழப்பமான வரையறையைத் தந்திருக்கிறார்கள். இதன் பொருள் என்னவென்றால், ஒரு தமிழ் பேசும் குழந்தை வணக்கம் என்று இயல்பாக அழைப்பதை மாற்றி, நமஸ்தே என்றால் வணக்கம் என்று தலைகீழாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறீர்களா? அதாவது “மாணவர்களின் வீட்டு மொழிக்கும், கற்பித்தல் மொழிக்கும் வேறுபாடு இருக்கும் பட்சத்தில், ஆசிரியர்கள் இருமொழி கற்பித்தல் முறை மற்றும் கற்றுக் கொள்ளுதல் சாதனங்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவார்கள்” என்கிறார்கள். இதன் மூலம் ஒரு குழந்தையின் தாய்மொழி அல்லாத வேறு ஒரு மொழி படிப்பதற்கான செலவுகளை அங்கீகரிக்க இந்தப் பிரிவு வகை செய்துள்ளது.
4.11-ன் இன்னொரு சொற்றொடரில், “பல மொழி பேசும் குடும்பங்களில், சில சமயங்களில் பிற குடும்ப உறுப்பினர்களால் பேசப்படும் வீட்டு மொழி” என்று குறிப்பிடுகிறார்கள். இதன் பொருள் என்ன? இனிமேல் ஒவ்வொரு வீட்டிலும் பலமொழிகள் பேசப்படுவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்துவதற்கான மறைமுகமான திட்டமாக சந்தேகிக்கப்பட உள்ளதா? அல்லது பலமொழிகள் பேசுகிற வீடுகளில் உள்ளவர்களைக் கவனத்தில் கொண்டு இந்தப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதா? நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது இனிமேல் தாய்மொழிச் சிந்தனையை முழுக்க மழுங்கடித்து, ஒவ்வொரு வீட்டிலும் கலப்பு மொழிகளைத் திணிப்பதன் மூலம், தாய்மொழிப் பற்றாளர்களையும், தாய்மொழியால் ஒருங்கிணைபவர்களையும் பிரித்தாளும் சூழ்ச்சியாகவே இந்தப் பிரிவைப் பார்க்க வேண்டியுள்ளது.
4.12 பிரிவில் அனைத்துக் குழந்தைகளும் விரைவில் பன்மொழிகளைக் கற்றுக் கொள்கிறார்கள் என்றும், எனவே அடித்தள நிலையிலிருந்து குழந்தைகளுக்கு வெவ்வேறு மொழிகள் அறிமுகப்படுத்தப்படும் என்கிறார்கள். ஒரு குழந்தை தாய்மொழியில் பேசுவது எளிது. அதைப் படிப்பதும் எளிது. கற்றுக் கொள்வதும் எளிது. ஆனால் பலமொழிகளையும் கற்றுக் கொள்வார்கள் என்று நம்புவது பிஞ்சுத் தலையில் பாறாங்கற்களைச் சுமத்துவதற்குச் சமமாகாதா? இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும், பிற மாநிலங்களுடன் தங்களது மொழிகளைக் கற்றுத் தர ஆசிரியர்களை நியமிக்க ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்பது இன்னொரு மாநில மொழியின் வளர்ச்சியில் குறுக்கீடு செய்வதற்கான செயல்திட்டமாகவே உள்ளது. ஒரு மாநிலமொழியின் தாய்மொழிப் “பயிர்” வளர்ச்சிக்கு, இன்னொரு மாநில மொழி “களை”யாக இருக்க வேண்டும் என்ற திட்டவரைவு என்பது, பிறரின் தாய்மொழி வளர்ச்சியின் மீது தேசியக் கல்விக் கொள்கையை வகுத்தவர்களுக்கு உள்ள வெறுப்பாகவே அறிய முடிகிறது.
4.13 பிரிவில் “மும்மொழி செயல்படுத்துவது தொடரும்” என்று சொல்வது மட்டுமில்லாமல், மாநிலம், மண்டலம், மாணவர்கள் விருப்பப்படி இன்னும் இரண்டு இந்திய மொழிகள் கட்டாயம் என்கிறார்கள். மும்மொழியை ஏற்காதவர்கள், எப்படி இன்னும் இரண்டு இந்திய மொழிகளை விருப்பமாகக் கொள்வார்கள்? ஒரு மாநில அரசு, இன்னொரு மாநில அரசோடு ஒப்பந்தம் செய்து கொண்டு வேறு ஒரு மொழியைத் தங்கள் மாநிலத்தில் கொண்டு வரும் போது, எடுத்துக்காட்டாக, எனக்குத் தெலுங்கு வேண்டாம், கன்னடம் தான் வேண்டும்” என்று ஒரு மாணவன் சொன்னால், மாநில அரசு அந்த மாணவன் விருப்பத்திற்காகத் தெலுங்கு மாநிலத்திடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முறித்துவிட்டுக் கன்னட மாநிலத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டுமா?
ஒரு மாநிலத்தில், கோடிக்கணக்கான மாணவர்கள் படிக்கையில் ஒவ்வொரு பள்ளி, வகுப்பிலும் விதவிதமாக மாணவர்கள், வேறு வேறு மாநில மொழிகளை விருப்பமாகக் கேட்டால், அத்தனை மாநில மொழிகளுடனும் ஒரு மாநில அரசு ஒப்பந்தம் கொள்ள வேண்டுமா? மேல்நிலைக் கல்வியை முடிக்கும் முன், மூன்று மொழிகளிலும் ஒரு மாணவன் தேர்ச்சி பெற வேண்டும் என்பது தேசிய ஒருமைப்பாடா? மொழி ஆதிக்கத் திணிப்பா? ஒவ்வொரு மாணவரும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல், தாய்மொழி, ஆங்கில மொழியை முழுமையாக படிப்பதற்கே வாய்ப்புகளும், வசதிகளும் இல்லாத சூழலில், இன்னொரு மொழியையும் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று வற்புறுத்துவது என்பது அதிகாரத்தில் இருப்பதால், எந்த அடக்குமுறையையும் செய்யலாம் என்கிற மனநிலையையே காட்டுகிறது. ஒரு மாணவன் தாய்மொழி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளுடன், பிற முதன்மைப்பாடங்களையும் 100 சதவிகித மதிப்பெண் பெற்றுவிட்டு நிறைய நேரத்தை வீணாக்குவதாகவும், எனவே இன்னொரு மொழியைக் கற்றுக் கொள்வதில் என்ன தவறு என்பது போலவும், தேசியக் கல்வி கொள்கை வரைவாளர்கள் முடிவு செய்திருப்பதை அறியாமை எனலாமா? திட்டமிட்ட சூழ்ச்சி எனலாமா?
4.14 அறிவியல், கணிதப் பாடங்களைத் தாய்மொழியிலும், ஆங்கிலத்திலும் சிந்திப்பதற்கும், பேசுவதற்கும் ஏற்ப bilangual முறை கொண்டு வரப்படும் என்பது தாய்மொழி வழிக் கற்றலுக்கான அனைத்து முயற்சிகளையும் தடுத்து நிறுத்திவிடும்.
4.15 உலகம் முழுவதும் உள்ள மக்கள், தங்கள் சொந்த மொழியில், கலாசாரத்தில், பாரம்பரியத்தில் நன்கு கற்றவர்களாக உள்ளனராம். இந்தியாவில், அனைத்து மொழிகளிலும் உள்ள பல்வேறுபட்ட கலாச்சாரத்தையும், இலக்கியத்தையும், தேசிய ஒருமைப்பாட்டையும் கற்றவர்களாக அனைத்து மாணவர்களும் இருக்க வேண்டுமாம். “உலகம் முழுவதிலும் உள்ளோர் தங்களது சொந்த மொழியில் மட்டும், தங்கள் கலாச்சாரத்தைக் கற்றவர்களாக உள்ளபோது, இந்தியர்கள் மட்டும் எதற்காக அனைத்து மொழிக் கலாச்சாரங்களையும் கற்றவர்களாக இருக்க வேண்டும்?” அப்படியெனில், இந்தியாவில் உள்ள எல்லோரும் அனைத்து மதக் கலாச்சாரங்களையும் கற்றுக் கொள்பவர்களாக இருக்கலாமா? அப்படியெனில், இந்துக்கள் எல்லோரும் இஸ்லாமிய, கிருஸ்துவ, பௌத்த, சீக்கியக் கலாச்சாரங்களைக் கற்றுக் கொண்டு அதைப் பின்பற்ற தயாரா? மொழிக்கு ஒரு கொள்கை, மதத்திற்கு ஒரு கொள்கையா ?
4.16 ஒவ்வொரு மாணவரும் “ஒரே வளமான இந்தியா” என்ற திட்டத்தின் கீழ், இந்தியாவின் பெரும்பான்மையான முதன்மை மொழிகளுக்கு இடையே உள்ள வியக்கத்தக்க ஒற்றுமையைக் கற்றுக் கொள்ளலாம் என்கிறீர்கள், அப்படியெனில் “ஒரே வளமான இந்தியா” திட்டத்தின் கீழ், இந்து, பௌத்த, இஸ்லாமிய, கிருஸ்துவ, சீக்கிய, சமண, பார்சி மத ஒற்றுமை குறித்த திட்டம் வகுக்க, தேசியக் கல்விக் கொள்கை மறுப்பது ஏனோ?
இதில் உச்சரிப்பு, அறிவியல் பூர்வ, வரிசைபடுத்தப்பட்ட எழுத்துகள், வார்த்தைகள் என்று குறிப்பிடுகிற மொழிகளில் முதன்மையானதாக சமஸ்கிருதத்தைத் தேசியக் கல்விக் கொள்கை வரையறுத்திருப்பது ஏன்? அதன் பிறகு எந்தச் செம்மொழியையும் குறிப்பிடாமல், “பிற” என்று குறிப்பிட்டுத் தமிழைப் புறக்கணித்திருப்பது ஏனோ?
4.17 மும்மொழிக் கொள்கையில் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் பிற மாநில மொழிகளில் ஒன்று இருக்கும் என்று 4.11 முதல் 4.16 வரை பிரிவுகளில் குறிப்பிட்டுள்ள சூழலில், திடீரென 4.17-ல் மும்மொழித் திட்டத்தின் ஒரு மொழியாக பள்ளிக் கல்வித் திட்டத்தில் எல்லா நிலைகளிலும், கல்லூரிகளிலும் ஒரு முக்கியமான வளமூட்டக் கூடிய விருப்பப்பாடமாக சமஸ்கிருதம் என்கிறீர்கள்? அதுவும் சமஸ்கிருத்தைச் சுவைக்கத் தக்க வகையில் கற்றுத் தரப்போகிறோம் என்கிறீர்கள்? சமஸ்கிருதத்தில் நான்கு வர்ணாஸ்ரமத்தையும் வலியுறுத்தி, ஜாதிக் கட்டமைப்புகள் இருப்பதை எப்படிச் சுவையாகச் சொல்லித் தரப் போகிறீர்கள்?
4.18 சமஸ்கிருதத்துடன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா பாலி, பாரசீக, பிராகிருத மொழிப் பாடங்களை, விருப்பப்பாடங்களாக இணைய வழியில் நிறைய பள்ளிகளில் வழங்கப்பட சாத்தியங்கள் உருவாக்கப்படும் என்கிறீர்கள். சமஸ்கிருதம் மட்டும் மும்மொழிகளில் ஒன்றாக, விருப்பப் பாடமாக, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும். ஆனால், பிற செம்மொழிகளுக்கு அவ்வாறான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லையே! இதில் கவனிக்கத் தக்கது என்னவெனில், அவரவர் சார்ந்த தாய்மொழி கலாச்சாரங்களைப் படிப்பதும், அவற்றில் அறிவியல், ஒழுக்கம் சார்ந்த படைப்புகளை உருவாக்குவது மட்டுமே பயன் உள்ளதாக இருக்கும். அதைத் தவிர்த்து, சமஸ்கிருதம், பிற செம்மொழிகள் என்ற அடிப்படையில், வேறொரு தாய்மொழியினர் மீது திணிப்பது என்பது தாய்மொழிச் சிந்தனைக்கு விடுக்கப்படும் சவாலாகவே தோன்றுகிறதே?
4.19 குழந்தைகளின் மேம்பாட்டிற்காகவும், வளமான மொழிகளும், அவற்றின் கலைப் புதையல்களும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக 6 முதல் 12 வரை ஏதாவது இரண்டு ஆண்டுகள் மேற்படி “வளமான” மொழிகள் கற்பிக்க வாய்ப்புகள் வழங்கப்படுவது ஏற்புடையதா? இது எப்படி குழந்தைகளின் மேம்பாட்டிற்குப் பயன்படும்? ஒருவரின் மொழி வளமானதாக இருக்கலாம், அதற்காக அதைத் தூக்கி இன்னொரு மொழிக் குழந்தையின் மூளையில் சுமத்த வைக்க வேண்டிய தேவை என்ன? இந்துக் கோயில்களில் சமஸ்கிருதம் இருப்பது போல் அனைத்துக் குழந்தைகள் மூளையிலும் சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
4.20 இந்திய மொழிகளோடு, ஆங்கிலம் மற்றும் பிற நாட்டு அயல்மொழிகள் மேல்நிலைப் பள்ளிகளில் கற்றுத் தரப்படும் என்கிறீர்கள். இப்போது கவனித்துப் பார்த்தால் இது வரை நீங்கள் குறிப்பிட்ட 4.11 முதல் 4.19 வரையிலான பிரிவுகளில் 4.14 தவிர்த்து, ஆங்கிலம் இல்லவே இல்லை. அதாவது மேல்நிலை வகுப்பு வரை ஆங்கிலம் இருக்காதோ என்றே சந்தேகப்பட வைக்கிறது. இதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டியது இந்திய மாணவர்கள் தாய்மொழி, பிறமொழி, சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளை உயர்நிலைப் பள்ளி வரை படிக்கலாம். மேல்நிலை வகுப்பு வந்த பிறகே ஆங்கிலம் படிக்கலாம் என்கிறீர்களா? ஆங்கிலத்தை இந்தியாவின் இணைப்பு மொழியாகக் கருதாமல், அயல்நாட்டு மொழிகளோடு சேர்த்திருப்பது ஏனோ? ஒரு மாணவனுக்கு ரஷ்யா, கொரியா, ஜப்பானியம் உள்ளிட்ட அயல்நாட்டு மொழி தேவையென்றால், அதற்குரிய நேரத்தில் அவனால் படித்துக் கொள்ள முடியும்? அதைப் பள்ளிக் கல்வியில் சேர்க்க வேண்டிய தேவை என்ன?
4.21 அனைத்து மொழிகள் பயிற்றுவித்தலில், விளையாட்டு முறையும், செயலிகளும் மேம்படுத்தப்படும் என்பது வரவேற்கத் தக்கது. ஆனால் அனைத்து மொழிகளையும், அனைவரும் கற்க முடியும் என்பது ஏற்புடையதா?
4.22 கேட்கும் திறன் குறைபாடுடைய மாணவர்கள், இனி தேவைப்படுகிற இடத்தில் மட்டும் தான் மாநில மொழிகளில் சைகை மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், மற்ற வகையில் இந்தியா முழுவதும் உள்ள கேட்கும் திறன் அற்றவர்களுக்கு ஒரே மாதிரியான தேசிய இந்திய சைகை மொழி உருவாக்கப்படும் என்கிறீர்கள். இதன் மூலம் கேட்கும் திறன் அற்றவர்கள் கூட, தங்கள் தாய்மொழியில் கவனம் செலுத்த முடியாத சூழலுக்கு உட்படுத்தியுள்ளீர்கள். செவியுள்ளவர்களே உங்களைக் கேள்வி கேட்க முடியாது என்கிறபோது, செவியற்றவர்கள் என்ன கேட்டுவிடப் போகிறார்கள், என்ற ஆதிக்க மனநிலைதான் இதற்குக் காரணமோ?
- செந்தமிழ் சரவணன்
No comments:
Post a Comment