புதுடில்லி, ஆக.10 காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவி முடிவடையும் நிலையில், சோனியா காந்தி தொடர்ந்து நீடிப்பார் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் இடைக் கால தலைவர் பதவியை சோனியா காந்தி வகித்து வரு கிறார். அவரது பதவி காலம் இன்றுடன் நிறைவடைகிறது. அவர் இந்த பதவியை ஏற்று ஓராண்டு முடிவடைய உள்ள நிலையில், தொடர்ந்து அவரே இடைக்கால தலைவராக பதவியில் நீடித்திடுவார் என காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதுபற்றி அக்கட்சியின் செய்தி தொடர்பு நிர்வாகி அபிஷேக் சிங்வி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவியேற்று, இன்றுடன் ஓராண்டு முடிவுக்கு வருகிறது என்பது உண்மையே. ஆனால் அதன்பின்பு அந்த பதவி காலியாக இருக்காது.
சோனியா காந்தி தலைவராக நீடித்திடுவார். முறையான நடவடிக்கை அமலாகும் வரை அவரே அந்த பதவியை தொடருவார். அந்த நடைமுறை அமலுக்கு வரும் காலம் தொலைவில் இல்லை. இதுபற்றி காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இந்த நடைமுறையானது காங்கிரஸ் கட்சியின் அரசியல் சாசனத்தில் எழுதப்பட்டு உள்ளது. அதனை கட்சி பின்பற்றும். ஆலோசனை இறுதியில் மேற்கொள்ளப்படும் முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படும்பொழுது அதுபற்றிய தகவல் உங்களுக்கு தெரிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
மூணாறு நிலச்சரிவு :
பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு
திருவனந்தபுரம், ஆக.10 மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய மேலும் 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, பலி எண்ணிக்கை 43 ஆக உயர்ந்து உள்ளது. கேரள மாநிலம், மூணாறு அருகே பெட்டிமுடி நிலச்சரிவில் சிக்கி 80க்கும் மேற்பட்ட தமிழகத் தோட்டத் தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். கடந்த 2 நாளாக காவல்துறை, தீயணைப்புப்படை, வனத்துறை, தேசிய பேரிடர் மீட்புப்படையினர் பொது மக்களின் உதவியுடன் 12 பேரை உயிருடனும், 26 பேரை சடலமாகவும் மீட்டனர்.
26 பேரின் சடலங்களும் உடற்கூராய்வுக்குப் பிறகு அருகில் உள்ள மைதானத்தில் தோண்டப்பட்ட 3 குழிகளில் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டன. இந்நிலையில், நேற்று 3ஆவது நாளாக மீட்புப் பணி நடந்தது. இதில், 200 பேர் ஈடுபட்டனர். இதில், 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, பலியானவர்கள் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
மொரீசியஸ் கடலில் 1,000 டன் பெட்ரோல் கசிவு
போர்ட்லூயிஸ், ஆக.10 மொரீசியசில் 3,800 டன் பெட் ரோலுடன் பாறை மீது சரக்கு கப்பல் மோதியதால் கப்பலில் இருந்த பெட்ரோல் கடலில் கசியத் தொடங்கியது. தற்போது வரை 1,000 டன் பெட்ரோல் கடலில் கசிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பான் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்.வி.வகாசியோ எனும் சரக்கு கப்பல் 3,800 டன் பெட்ரோலுடன் கடந்த மாதம் 25-ஆம் தேதி இந்தியப் பெருங்கடல் தீவு நாடான மொரீசியஸ் கடலில் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது சர்வதேச அளவிலான பாதுகாப்புத் தளமாக அறியப்படும் பாயிண்ட் டி எஸ்னி பகுதியில் எதிர்பாராத விதமாக ஒரு பாறையில் இந்த கப்பல் மோதி நின்றது. சேதமடைந்த கப்பலில் இருந்த குழுவினர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதே சமயம் பாறையில் மோதியதால் கப்பலில் இருந்த பெட்ரோல் கடலில் கசியத் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து கப்பலில் இருந்து பெட்ரோல் கசிவதைத் தடுக்கும் முயற்சியில் மொரீசியஸ் அரசு இறங்கியது. மேலும் நாட்டில் சுற்றுச்சூழல் அவசர நிலையை அரசு பிரகடனப்படுத்தியது. அதன்படி தற்போது வரை 1,000 டன் பெட்ரோல் கடலில் கசிந்து விட்டதாக தகவல் வெளி யாகியுள்ளது.
மேலும் வரும் நாட்களில் கப்பல் முழுவதுமாக உடைந்து ஒட்டுமொத்த பெட்ரோலும் கடலில் கலக்கும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் வல்லுனர்கள் கவலை தெரி வித்துள்ளனர். இதனிடையே கடலில் கசிந்துள்ள பெட்ரோலை அகற்றுவதற்கான தொழில்நுட்ப வசதிகள் தங்களிடம் இல்லாததால் பிரான்சிடம் அவசர உதவி கோரி மொரீசியஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.
No comments:
Post a Comment