முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் சமூகநீதி கருத்தரங்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் உரை
சென்னை, ஆக.15 பெருந்தலைவர் காமராசர் வழியில் வந்த பல்வேறு திட்டங்களை கலைஞர் தொடர்ந்து செய்தார். கல்விக்கு அவர் மிகுந்த முக்கி யத்துவம் அளித்தார். அதனால்தான், தமிழகத்தில் இன்றைக்குக் கல்வி உயர்ந்த நிலையில் இருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் உரையாற்றினார்.
கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் சமூகநீதி கருத்தரங்கம்
கடந்த 7.8.2020 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் 'சமூகநீதி கருத்தரங்கத்தில்' (காணொலி மூலம்) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் நினைவுரையாற்றினார்.
அவரது நினைவுரை வருமாறு:
அனைவருக்கும் வணக்கம். கலைஞர் அவர்களு டைய இரண்டாம் ஆண்டு நினைவு நாளினை தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கின்ற அய்யா ஆசிரியர் அவர்கள் உள்பட இந்த அவையில் அமர்ந் திருக்கின்ற அனைத்துத் தலைவர்களுக்கும், தோழர் களுக்கும் தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பாக என்னுடைய வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள் கிறேன்.
உலகத் தமிழர்களுடைய
தலைவராக விளங்கினார் கலைஞர்
கலைஞர் அவர்கள் தமிழ்ச் சமூகத்தால் மறக்கப் பட முடியாத ஒரு மனிதர். ஒரு விதை எப்படி பூமியில் ஊன்றப்பட்டு, அது உறங்கிவிடாமல், பூமிக்குள் தன்னுடைய செயல்பாட்டை மிக வேகமாகச் செய்து, இந்த மண்ணைப் பிளந்துகொண்டு வெளியே வந்து, ஒரு விருட்சமாக வளருகிறதோ, அதேபோலத்தான், கலைஞர் அவர்கள் இந்த சமூகத்தின் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மண்ணுக்குள்ளிருந்து தகர்த்து, வெளியே வந்து, பல படிகளைக் கடந்து, இயக்கத்தில் வேரூன்றி, லட்சக்கணக்கான தோழர்களுடைய அன்பைப் பெற்று, இறுதியாக உலகத் தமிழர்களுடைய தலைவராக விளங்கினார் என்பதை எவரும் மறுத்து விட முடியாது.
அவர் ஏற்றுக் கொண்ட கொள்கைகளாக இருந் தாலும் சரி, அவரோடு மாறுபடுகிறவர்களிடம் அவர் பழகுகிற விதமாக இருந்தாலும் சரி, அது மிகவும் போற்றக் கூடியதாக இருந்தது என்பதனை நான் அறிவேன்.
எவ்வளவோ மாற்றுக் கருத்துகளைக் கலைஞர் அவர்கள் ஆற, அமர அமர்ந்து கேட்டு, அதற்குத் தன்னுடைய பதிலை மிகத் தெளிவாகச் சொல்லி, அவருக்கு எதிர்நிலை எடுத்தவர்களைக்கூட, தன்னு டைய கருத்து தான் சரி என்பதை ஒப்புக் கொள்ள வைத்திருக்கிறார்கள். சட்டமன்றத்தில் அதற்கு ஏராளமான நிகழ்வுகள் உண்டு.
அவற்றையெல்லாம் இங்கே சொல்வதற்கு நமக்கு இப்போது நேரமில்லை.
கலைஞர் அவர்கள் தன்னுடைய அரசியல் வாழ்விலும் சரி, தன்னுடைய அரசாங்க வாழ்விலும் சரி, ஏழை மக்களுக்கு உதவக் கூடிய பல்வேறு திட்டங்களை, பல்வேறு சிரமங்களும், எதிர்ப்புகளும் இருந்தபோதும்கூட, சட்டம் அதற்குக் குறுக்கே நின்றபோதும்கூட, அவற்றையெல்லாம் அப்புறப் படுத்தி வைத்துவிட்டு, அந்தக் காரியங்களை செய்து கொடுத்திருக்கிறார்.
தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு குடியிருப்பதற்கான இடத்தைக் கொடுத்தவர்
உதாரணமாக, நீர் நிலைகளில் ஏழை மக்களுக்குப் பட்டா கொடுப்பது என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்தது. மேம்போக்காகப் பார்க்கின்ற பொழுது அந்தத் தடை சரியானதாகக் கூட இருக்கும். ஆனால், இந்தப் பரந்த உலகில் தனக்கென ஒரு மூன்று செண்ட் நிலம்கூட குடியிருப்பதற்கு இல்லை என்று வாழ்கிற லட்சக்கணக்கான மக்களுக்கு, இப் போதைக்கு அந்த இடமாவது இருக்கட்டும் என்று சொல்லி, மிகப் பெருமளவில் தமிழகத்தில், குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் குடியிருப்பதற்கான இடத்தை அரசாங்க ரீதியாக, சட்ட ரீதியாகக் கொடுத்தவர் டாக்டர் கலைஞர் அவர் கள் என்று சொல்வதை யாராலும் மறுத்துவிட முடியாது.
நாம் ஏவுகணை விடலாம்; நம்மிடம் அணுகுண்டு இருக்கலாம். ஆனால், ஒரு கிராமத்தில் தன்னுடைய உடல் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்கிற ஒரு சாதாரண ஏழை, தன்னுடைய தந்தை காலத்திலும் சரி, தன்னுடைய பாட்டன் காலத்திலும் சரி, அதன் பிறகு அவன் காலத்திலும் சரி, யாருக்காவது பண்ணை வேலை செய்து வந்தானே ஒழிய, ஒரு மூன்று செண்ட் நிலம் அவனுக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் இந்த சமூகத்தின் உண்மையான சீர்கேடு. ஆனால், அதனை கலைஞர் அவர்கள் தகர்த்தெறிந்தார். குடியிருப்பு இடங்களை அவர், அவர்களுக்கு உரிமையாக்கினார். அந்த உரிமையைப் பெறுகின்ற ஒரு மனிதன் அடைகின்ற மகிழ்ச்சி இருக்கிறதே, அந்த மகிழ்ச்சி எல்லாவற்றிற்கும் மேம்பட்டது.
நமக்கு எவ்வளவு வல்லமை இருந்தாலும், ஒரு சாதாரண இந்தியக் குடிமகனுக்குக் குடியிருக்க ஒரு மூன்று செண்ட் நிலம் இல்லை. நம்முடைய அமைப்பில் அதற்கான வாய்ப்பில்லை. ஆனால், கலைஞர் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து, ஏராள மானவர்களுக்கு இடம் கொடுத்தார். என்னுடைய சொந்த கிராமத்தில்கூட நான் சிறுவயதில் படித்துக் கொண்டிருந்தபொழுது பார்த்திருக்கிறேன். ஏராள மான மக்கள் தங்களுடைய குடியிருப்பு இடங்களைப் பட்டா பெறுவதற்கு உதவி செய்தார்.
மேற்கு வங்காள சட்டப் பேரவைத் தலைவருடன்....
நான் ஒருமுறை அரசாங்கக் கமிட்டியில் மேற்கு வங்காளம் சென்றிருந்தேன். அங்கே இருக்கின்ற பேரவைத் தலைவரோடு பேசிக் கொண்டிருக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.
அவர் என்னிடம் இரண்டு விஷயங்கள்பற்றி கேட்டார்.
ஒன்று, கலைஞர் அவர்களுடைய ஏழை மக்களுக்கு நகர்ப்புறங்களில் அவர் கட்டிக் கொடுத்த குடிசை மாற்று வாரிய வீடுகள். அதைப் பற்றிய விஷயங்களை அவர் கேட்டறிந்தார்.
குடிசை மாற்று வாரியம் எப்படி செயல்படுகிறது - ஏழை மக்கள் அதனால் எவ்வாறு பயன்பட்டு இருக் கிறார்கள்; சென்னையைப் போன்ற பெருநகரங்களில், சாக்கடை ஓரமாக வாழ்ந்தவர்களுக்குக் குடிசை மாற்று வாரியம் என்ற ஒன்றை அமைத்து, அவர் களுக்கென வீடுகளைக் கட்டிக் கொடுத்து, அந்த மக்கள் எவ்வளவு சுயமரியாதையோடு, மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள் என்பதைப்பற்றி நான் அவரிடம் சொன்னபொழுது, பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்த அந்தப் பேரவைத் தலைவர் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
தமிழகத்தில் கலைஞர் அவர்கள்
கைரிக்ஷாவை ஒழித்திருக்கிறார்
இரண்டாவதாக, கலைஞர் அவர்கள், கை ரிக்ஷாவை அவர் ஒழித்த விதம். அதைப்பற்றிய விவாதம் வந்தது.
நான் சென்றிருந்த நேரத்தில், மேற்கு வங்கத்தில் ஏராளமான கை ரிக்ஷாக்கள் இருந்தன. நான், பேரவைத் தலைவர் அவர்களிடம் சொன்னேன், தமிழகத்தில் கலைஞர் அவர்கள் கை ரிக்ஷாவை ஒழித்திருக்கிறார். ஏன் நீங்கள் மேற்கு வங்கத்திலும் அதனைச் செய்யக்கூடாது என்று நான் கேட்ட பொழுது,
அவர் சொன்னார், உத்தரப்பிரதேசத்திலிருந்து, பீகாரிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேர் இங்கே வந்து, கை ரிக்ஷா இழுக்கிறார்கள். அதில் அவர்களுக்கு ஓரளவிற்கு வருமானம் கிடைக்கிறது. அதுதான் அவர்களுடைய வாழ்க்கை நிலை. எனவே, அந்த வாழ்க்கை நிலையை அவர்களிடம் இருந்து பறித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், இங்கே கை ரிக்ஷாவை நாங்கள் அனுமதித்திருக்கிறோம் என்று சொன்னார்.
அப்பொழுது நான் சொன்னேன், நீங்கள் தமிழகம் வாருங்கள், கை ரிக்ஷா வைத்திருந்தவர்களுக் கெல்லாம் கலைஞர் அவர்கள், சைக்கிள் ரிக்ஷா கொடுத்திருக்கிறார். அது பார்ப்பதற்கு மேன்மையாகத் தெரிகிறது. ஒரு இழிநிலையிலிருந்து அவர்களை மேம்படுத்தியிருக்கிறார். மிகவும் புரட்சிகரமான ஒரு செயல் அது. நிச்சயம் நீங்கள் தமிழகம் வரவேண்டும், வந்து பார்க்கவேண்டும் என்று நான் அவரிடம் சொன் னேன்.
அதன் பிறகு, எனக்கும் அவருக்கும் தொடர் பில்லை. ஆனால், உண்மையாகவே அந்தப் பேர வைத் தலைவர் தமிழகத்திற்கு வந்து, சென்னைக்கும் வந்து, அன்றைக்குத் தமிழக சட்டப்பேரவைத் தலை வராக இருந்த பழனிவேல் ராஜன் அவர்களைச் சந்தித்து, கை ரிக்ஷா, சைக்கிள் ரிக்ஷா விஷயத்தைக் கேட்டறிந்து, என்னுடைய பெயரையும், நம்முடைய பேரவைத் தலைவரிடம் சொல்லியிருக்கிறார்.
அதன் பிறகு, திரு.பழனிவேல் ராஜன் அவர்கள், என்னிடம் அது சம்பந்தமாகக் கேட்டார்.
இது, பார்ப்பவருக்குச் சாதாரணமாகத் தெரியும். ஆனால், அதைவிட ஒரு மேம்பட்ட காரியம், ஒன்றுமே வாழ்க்கையில் இல்லாத மனிதனுக்கு, ‘கை ரிக்ஷாவிற்குப் பதிலாக, சைக்கிள் ரிக்ஷா சொந்தம்’ என்பது இருக்கிறது பாருங்கள், அந்த சொத்தை, உடைமையை அவர் உருவாக்கிக் கொடுத்தார் - அதுதான் கலைஞர்.
வரப்பே தலையணை -
வைக்கோலே பஞ்சு மெத்தை!
இதைவிட எவ்வளவோ விஷயங்களைப் பல அரசுகள் செய்திருக்கலாம். ஆனால், வரப்பே தலையணை - வைக்கோலே பஞ்சு மெத்தை என்று வாழ்கின்ற ஒரு கூட்டத்திற்காகப் பார்த்து பார்த்து காரியங்களைச் செய்தவர் கலைஞர் என்பதை, அவரோடு எவ்வளவுதான் மாறுபடுகிறவர்களாக இருந்தாலும்கூட மறுத்துவிட முடியாது.
காலமெல்லாம் உழைத்து ஊருக்குக் கொடுத்து விட்டு, ஊருக்கு ஒதுக்குப்புறமாக வாழ்கின்ற மக்களுக் குப் பல்வேறு காரியங்களைச் செய்து கொடுத்தார்.
பெருந்தலைவர் காமராசர் வழியில் வந்த பல்வேறு திட்டங்களை அவர் தொடர்ந்து செய்தார். கல்விக்கு அவர் மிகுந்த முக்கியத்துவம் அளித்தார். அதனால் தான், தமிழகத்தில் இன்றைக்குக் கல்வி உயர்ந்த நிலையில் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிட முடியாது.
மாநிலங்களுக்கான உரிமைகளைப்பற்றி
மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்
கலைஞர் அவர்கள், அரசியல் அரங்கத்திலும் பல்வேறு சிறப்புகளைச் செய்தவர். உதாரணமாக அவருடைய மாநில சுயாட்சி என்பது ஒரு சாதாரண விஷயமல்ல - அது ஒரு பிரிவினைவாதமல்ல. ஒரு காலத்தில் அது கொச்சையாக பிரிவினைவாதம் என்றுகூட சொல்லப்பட்டது.
ஆனால், நாம் மிகவும் ஆழ்ந்து பார்த்தோம் என்று சொன்னால், மாநிலங்கள் அதிக உரிமையோடு இருக்கவேண்டும் என்பதற்கு, அதைவிட ஒரு சிறந்த ஜனநாயகப் பூர்வமான ஒன்றிருக்க முடியாது. பிரிவினை என்பது வேறு - மாநிலங்களுக்கு உரிமை என்பது வேறு. கலைஞர் அவர்கள் பல்வேறு நிகழ் வுகளில், மாநிலங்களுக்கான உரிமைகளைப்பற்றி மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்.
மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் தரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்கள்!
இந்திய அரசியலில், மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் தரவேண்டும் என்பதில், மூன்று பேர் மிக உறுதியாக இருந்தார்கள்.
ஒன்று, ஜவகர்லால் நேரு; இரண்டு கலைஞர்; மூன்றாவது மேற்கு வங்க முதலமைச்சராக இருந்த ஜோதிபாசு அவர்கள்.
இவர்களுடைய பெரிய முயற்சியால்தான், இந்தி யாவினுடைய ஜனநாயகம், இந்தியாவில் மாநிலங் களுக்கு உள்ள உரிமை இவை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுத்தப்பட்டன.
ஒரே நேரத்தில் இவை மேம்படுத்தப்பட்டன என்று சொல்ல முடியாது. ஆனால், பல்வேறு கால கட்டங்களில் இந்த மூன்று தலைவர்களுமே ‘மாநி லங்கள் உறுதியாக இருந்தால்தான், மத்திய ஆட்சி உறுதியாக இருக்கும்’ என்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். அதிலே, கலைஞர் அவர் கள் மிகமிக முக்கியமானவர்.
(தொடரும்)
No comments:
Post a Comment