சமூகநீதிக் கருத்தரங்கத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்
மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அவர்களின் உரை
சென்னை, ஆக. 20- மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருப்பது பாசிஸ்ட் ஆட்சி. நம்முடைய நாட்டின் பிரதமர் ஒரு பாசிஸ்ட் என்பதை பகிரங்கமாகக் குற்றம் சாட்டி, அந்த பாசிஸ்ட்டுக்கு இங்கே இருக்கிற ஆட்சி துணை போய்க் கொண்டிருக்கிறது என்கிற இத்தகைய ஒரு சூழலில், இன்றைக்கு கலைஞர் அவர்களுடைய நினைவு நாளினை நாம் நினைவு கூறுகிறபொழுது, இதைச் சபதம் ஏற்போம் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள் உரை யாற்றினார்.
கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் சமூகநீதி கருத்தரங்கம்
கடந்த 7.8.2020 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற முத்தமிழ் அறிஞர் கலை ஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் சமூகநீதி கருத்தரங்கத்தில்' (காணொலிமூலம்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலா ளர் இரா.முத்தரசன் அவர்கள் நினைவுரையாற்றினார்.
அவரது நினைவுரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
தமிழ்நாடு அரசாங்கம் இன்னும்
தெளிவான முடிவிற்கு வரவில்லை!
ஆனால், இது வெறும் அறிவிப்பாக மட்டும் இருக்கக் கூடாது; அமைச்சரவையைக் கூட்டி, ஒரு தீர்மானம் நிறைவேற்றவேண்டும்; அத்தீர்மானத்தினை மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பவேண்டும் என்று நாம் கூறியிருக்கிறோம்.
நாம் அனுப்பிய கடிதத்தில், இருமொழி மட்டும் பிரச் சினையல்ல; மற்ற மற்ற பிரச்சினைகளைப்பற்றி, ரவிக் குமார் அவர்கள் இங்கே குறிப்பிட்டதைப்போல, பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அதுகுறித்து தமிழ்நாடு அரசாங்கம் இன்னும் தெளிவான முடிவிற்கு வரவில்லை.
திருவாரூரில் நடைபெற்ற விவசாயத் தொழிலாளர் சங்கத்தினுடைய மாநாட்டில் கலைஞர் அறிவிப்பு!
அதேபோல, இன்றைக்கு மத்திய அரசாங்கம், மின்சாரம் குறித்து ஒரு மசோதாவைக் கொண்டு வருகிறது. அது மிக ஆபத்தான மசோதாவாகும். கலைஞர் காலத்தில், ஏன் எம்.ஜி.ஆர். காலத்தில், விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டம் கொண்டு வரப்பட்டது. கலைஞர் காலத் தில், குடிசை இங்கே அழகிரி அவர்கள் மிக அழகாகக் குறிப்பிட்டதைப் போல, ‘‘வரப்பை தலையணையாகக் கொண்டு, வைக்கோலை மெத்தையாகக் கொண்டு'' குடிசை வீட்டில் வாழுகின்ற மக்களுக்கு ஒற்றை விளக்கு இலவசமாகத் தரவேண்டும் என்று, திருவாரூரில் நடை பெற்ற விவசாய தொழிலாளர் சங்கத்தினுடைய மாநாட் டிலே தீர்மானம் நிறைவேற்றினோம். அந்த மாநாட்டில் கலந்துகொண்ட முதலமைச்சர் கலைஞர் அவர்கள், அதே மாநாட்டில் அறிவித்தார், ‘‘குடிசை வீடுகளுக்கு ஒற்றை விளக்கு இலவசமாக வழங்கப்படும்'' என்று அறிவித்தார். இன்றுவரை அது அமலில் இருந்துகொண்டு இருக்கிறது.
இன்றைக்குத் தமிழ்நாட்டில் இருக்கின்ற அத்துணை வீடுகளுக்கும் நூறு யூனிட் வரை மின்சாரக் கட்டணம் கிடையாது. கைத்தறியைப் பயன்படுத்துகின்ற வீடுகளுக்கு 200 யூனிட் வரை மின்சாரக் கட்டணம் கிடையாது. அதேபோல, விவசாயிகளுக்கு முழுமையாக மின்சாரக் கட்டணம் கிடையாது. இந்த நடைமுறை இன்றுவரை தமிழ்நாட்டில் இருக்கிறது. இது நாளைக்குத் தொடருமா?
குக்கிராமங்களில் தெருவிளக்கு என்றைக்கு எரியத் தொடங்கியது தெரியுமா? திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு - கலைஞர் அவர்கள் முதலமைச்சராக வந்த பிறகு, தனியாரிடம் இருந்து மின் சாரத் துறை - பொதுத் துறையாக மாற்றப்பட்ட பிறகுதான் - குக்கிராமங்களுக்கு மின்சாரம் வந்தது - தெருவிளக்கு எரிந்தது. இது நாளை இருக்கப் போவதில்லை என்கிற மசோதா கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அந்த மசோதா விற்கு ஆதரவு கேட்டு, மத்திய அமைச்சர் தமிழ்நாட்டிற்கு வந்தபொழுது, தமிழ்நாட்டு முதலமைச்சர் மத்திய அமைச் சரிடம் கூறியபொழுது, ‘‘நான் ஏற்கெனவே கடிதம் எழுதி யிருக்கிறேன்; விதிவிலக்கு வேண்டு"மென கேட்கிறார்.
விதிவிலக்குக் கேட்ட
‘நீட்' தேர்வு என்னாயிற்று?
இதை நாங்கள் எதிர்க்கிறோம் - நிராகரிக்கிறோம் - அனுமதிக்க மாட்டோம் என்று சொல்வதற்கு மாறாக, தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு வேண்டும் என்று கேட்கிறார் முதலமைச்சர்.
விதிவிலக்குக் கேட்ட நீட் நுழைவுத் தேர்வு என்ன ஆனது என்பதை மறந்துவிட்டாரா? அல்லது எக்கேடு கெட்டாலும் போகட்டும் என்று நினைக்கிறாரா? என்று நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அதேபோல, விவசாயிகளுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டு இருக்கின்ற சட்டங்கள்; இன்றைக்குத் தமிழ்நாடு அரசாங்கம், நேரடிக் கொள்முதல் நிலையங்களைத் தமிழ்நாட்டில் திறந்திருக்கிறது என்று சொன்னால், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், கலைஞர் முதலமைச்சராக இருந்தபொழுதுதான், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, நேரடிக் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. அப்படி திறக்கப்பட்டதன் காரணமாக, அரசு நிர்ணயம் செய்கிற குறைந்தபட்ச ஆதார விலை என்பது இன்றைக்கு விவசாயிகளுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
ஆனால், எதிர்காலத்தில் இது கிடைக்காத வகையில், இன்றைக்கு மூன்று அவசரச் சட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
விவசாயிகள் உற்பத்தி செய்யக் கூடிய பொருள்களை, எவ்வளவு வேண்டுமானாலும் அவர்கள் இருப்பு வைத்துக் கொள்ளலாம் என்று சட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
வர்த்தக சூதாடிகள்தான் கொள்ளை விலைக்கு விற்று லாபம் சம்பாதிப்பார்கள்!
விவசாயிகளால் ஒருபோதும் இருப்பு வைத்துக் கொள்ள முடியாது. வர்த்தக சூதாடிகள், தேவையான அளவிற்கு, எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு இருப்பு வைத்து - விலையேறிய பிறகு, கொள்ளை விலைக்கு விற்று லாபம் சம்பாதித்துக் கொள்வார்கள்.
இந்தச் சட்டம் விவசாயிகளுக்கும் பயன்படாது; நுகர் வோருக்கும் நிச்சயமாக அது பயன்படாது.
அதேபோல, ஒரு பொருளை ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்குக் கொண்டு செல்வதற்கு, எந்தவிதமான தடையு மில்லை. எங்கே வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம்; அவ்வாறு கொண்டு சென்றால், விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் என்ற போர்வையில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. விவசாயிகளால் கொண்டு போக முடியாது. வர்த்தக சூதாடிகள்தான் இச்சட்டத்தின்மூலம் பயன்படுவார்கள்.
இப்படியெல்லாம் அண்மையில் அவசரச் சட்டமாக மூன்று சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றன. அதே போல, மின்சாரத்திற்கு ஒரு மசோதா கொண்டு வரப்பட விருக்கிறது. சுற்றுச்சூழல் மதிப்பீட்டு வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.
44 சட்டங்களை இன்றைக்கு மத்திய அரசாங்கம் 4 சட்டங்களாகச் சுருக்கிவிட்டது
இவையெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களைப் பாது காப்பதற்காகக் கொண்டுவரப்பட்டு இருக்கின்ற சட்டங்கள். கடந்த காலத்தில், தொழிலாளர்களுக்காகப் போராடிப் பெற்ற 44 சட்டங்களை இன்றைக்கு மத்திய அரசாங்கம் 4 சட்டங்களாகச் சுருக்கிவிட்டது.
பொதுத் துறை நிறுவனங்களில், இன்றைக்கு ஒரு சில வற்றைத் தவிர, மற்ற அனைத்தையும், ரயில்வே உள்பட, பாதுகாப்புத் துறை உள்பட அனைத்தையும் தனியார் மயமாக்குவதற்கான நடவடிக்கைகளை இன்றைக்கு மேற்கொண்டிருக்கிறார்கள்.
ஆசிரியர் அவர்கள், பல்வேறு பொதுக்கூட்டங்களில், மாநாடுகளில் தொடர்ச்சியாகக் கூறுவார்கள், தனியார் மயமாக்குவதன்மூலமாக, இட ஒதுக்கீடு கொள்கையை இல்லாமல் ஆக்குவதற்குரிய நடவடிக்கையை மேற் கொண்டு வருகிறார்கள். ஆகவே, தனியார் மயத்தை எதிர்ப்பது மட்டுமல்ல, தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்கிற கோரிக்கைக்காக நாம் போராட வேண்டும் என்று ஆசிரியர் அவர்கள் திரும்பத் திரும்ப பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.
ஆகவே, இட ஒதுக்கீட்டில் முதன்முதலாக தமிழ்நாடு தான் வெற்றி பெற்றது என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தொடங்கிய போராட்டத் தின் காரணமாக, அரசமைப்புச் சட்டம் முதன்முதலாகத் திருத்தியமைக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும்.
கலைஞர் அவர்களுடைய நினைவு நாளில்
சபதம் ஏற்போம்!
நாம் அடைந்த வெற்றிகள் அத்தனையையும் பின் னோக்கி இழுத்துச் செல்லுகிற, மிக மோசமான, மிகப் பிற் போக்குத்தனமான, வஞ்சகம் நிறைந்த காரியத்தை இன்றைக்கு மத்தியில் இருக்கின்ற ஆட்சி செய்துகொண்டி ருக்கிறது. நான் பகிரங்கமாகச் சொல்லுவேன், அதற்காக எத்தகைய தண்டனையைக் கொடுத்தாலும் ஏற்பதற்குத் தயாராக இருக்கிறேன். மத்தியில் நடைபெற்றுக் கொண் டிருப்பது பாசிஸ்ட் ஆட்சி. நம்முடைய நாட்டின் பிரதமர் ஒரு பாசிஸ்ட் என்பதை பகிரங்கமாகக் குற்றம்சாட்டி, அந்த பாசிஸ்ட்டுக்கு இங்கே இருக்கிற ஆட்சி துணை போய்க் கொண்டிருக்கிறது என்கிற இத்தகைய ஒரு சூழலில், இன்றைக்கு கலைஞர் அவர்களுடைய நினைவு நாளினை நாம் நினைவு கூறுகிறபொழுது, இதைச் சபதம் ஏற்கிற நாளாக நாம் மேற்கொள்ளவேண்டும் என்று அனை வரையும் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கின்ற இந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி. பறிபோய்க் கொண்டிருக்கின்ற உரிமைகளைக் காப்பாற்ற - தமிழகத்தைக் காப்பாற்ற - இந்தியாவைக் காப்பாற்ற - மதச்சார்பின்மைக் கொள்கை யைக் காப்பாற்ற - அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற - அரசமைப்புச் சட்டம் உருவாக்கியிருக்கிற அமைப்பு களைக் காப்பாற்ற - தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க - தமிழர்களின் உரிமைகளைக் காக்க இரண்டாண்டு காலமாகப் போராடிக் கொண்டிருக்கின்றோம். அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதிதான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், இங்கே அழகிரி அவர்கள் குறிப்பிட்டதைப்போல, 40-க்கு 39 இடங்களில் புதுச்சேரி உள்பட நாம் வெற்றி பெற்றோம்.
மதச்சார்பற்ற முற்போக்கு அணியைப் பலகீனப்படுத்த முயற்சி!
இந்த வெற்றிக்குப் பிறகு, இன்றைக்கு மத்தியில் இருக் கின்ற ஆட்சி, ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் - மதச்சார்பற்ற முற்போக்கு அணியை, அதற்குத் தலைமை தாங்குகின்ற கட்சியை அல்லது அதில் அங்கம் பெற்றிருக்கின்ற கட்சிகளில் குழப்பம் ஏற்படுத் தவும், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பலவீனப்படுத் தவும், மதச்சார்பற்ற முற்போக்கு அணியில் அங்கம் பெற் றிருக்கின்ற கட்சிகளைப் பலகீனப்படுத்தவும் எல்லா முயற் சிகளையும் உளவுத் துறை மூலமாக மேற்கொண்டிருக் கிறார்கள் என்பதை பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறோம்.
எங்கள் அணியினுடைய
முதலமைச்சர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின்!
இந்தக் குற்றச்சாட்டைக் கூறுகிறபொழுது, பயந்து அல்ல, அஞ்சி அல்ல - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்ட ணியை பலப்படுத்தவேண்டிய அவசியம் அனைவருக்கும் இருக்கிறது. காரணம், வெறும் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் என்கிற எண்ணிக்கைக்காக அல்ல. மாறாக, நாடு காப்பாற்றப்பட வேண்டும் என்று சொன்னால், மதச்சார்பின்மை கொள்கை காப்பாற்றப்பட வேண்டும் என்று சொன்னால், தமிழகம் காக்கப்படவேண்டும், தமிழக மக்களின் நலன் காக்கப்படவேண்டும், தமிழக மக்களின் உரிமைகள் காக்கப்படவேண்டும் என்று சொன்னால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந் திருக்கின்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பலப் படுத்தப்பட வேண்டும். வருகிற சட்டப்பேரவை தேர்தலில், பாரதீய ஜனதா கட்சியும், அதோடு இணைந்திருக்கின்ற அண்ணா தி.மு.க.வும் துடைத்தெறியப்பட வேண்டும். நமது அணி வெற்றி பெறவேண்டும். நமது அணிக்குத் தலைமை தாங்குகிற தகுதியைப் பெற்றிருக்கிற மரியா தைக்குரிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு.ஸ்டாலின் அவர்களை நாம் ஏற்கெனவே அறிவித் திருக்கிறோம் - எங்கள் அணியினுடைய முதலமைச்சர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் என இரண்டாண்டு காலத்திற்கு முன்பாகவே அறிவித்திருக்கிறோம்.
ஆகவே, அந்த வெற்றியை நோக்கி நாம் செல்வதின் மூலமாக இந்த மதச்சார்பின்மைக் கொள்கையைக் காப்பாற்ற முடியும். மதவெறி பிடித்த கும்பலுக்கு நல்ல பாடத்தைப் புகட்ட முடியும். அத்தகையப் பாடத்தைப் புகட்டுவதற்கு, கலைஞர் அவர்களுடைய நினைவு நாளில், நாம் அனைவரும் சபதம் ஏற்கவேண்டும் எனக் கேட்டு,
இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மதிப்புமிக்க ஆசிரியர் அய்யா அவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைக் கூறி நிறைவு செய்கிறேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள் உரையாற்றினார்.
No comments:
Post a Comment