குருமூர்த்திகள்மீது சட்டம் பாயுமா?
‘துக்ளக்‘கில் ஆசிரியராக உள்ள திருவாளர் குருமூர்த்தி எழுதி வரும் கட்டுரைகளிலும், அளித்து வரும் பதில்களிலும் மத்தியில் உள்ளது தங்களின் ஆட்சி என்ற திமிரிலும், அ.இ.அ.தி.மு.க. ஆட்சி ‘நாம் எப்படி எழுதினாலும் கண்டு கொள்ளாது’ என்ற அசட்டுத் தைரியத்தாலும் அளவுக்குமீறி ஆட்டம் போடஆரம்பித்துவிட்டார்.
எழுத்துகளில் திமிர் தண்டத்தையும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதும் போக்கிரித்தனத்தையும் பார்க்கும் பொழுது - குடுமியோடு சேர்ந்து கொம்பு முளைத்து விட்டதோ என்று கருத வேண்டியுள்ளது.
மதுக்கடைகளைத் திறக்கச் சொன்ன கலைஞர், எம்.ஜி.ஆரையும், இவர்களுக்கு ஓட்டுப் போட்ட பொதுமக்களையும் செருப்பாலடிக்க வேண்டும் என்று ‘துக்ளக்‘கில் குருமூர்த்தி எழுதினார் (‘துக்ளக்‘ 22.7.2020)
அதை அலட்சியப்படுத்தியதன் விளைவு ‘ஓகோ நம்மை யார் என்ன செய்ய முடியும்?’ என்ற அகங்கார வெறியில் பெரியார் சிலையை அவமதிப்பது என்ன தப்பு? எம்.ஜி.ஆர். சிலையை அவமதிப்பது என்ன அவ்வளவுப் பெரிய குற்றமா என்று போக்கில் இன்று வெளி வந்துள்ள ‘துக்ளக்‘கில் (12.8.2020) குதியாட்டம் போட்டு எழுதியிருக்கிறார்.
கேள்வி: பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்டிருக்கிறதே? இதுபற்றி?
பதில்: காவி பூசியது பெரியாருக்கு அவமதிப்பு என்று பெரியார் பக்தர்கள் கூறினால் அவர் பழித்த காவியை அவருக்குப் பூசியது காவிக்கு அவமரி யாதை என்று காவி பக்தர்கள் கூறலாம். பெரி யாருக்கும் அவமரியாதை, காவிக்கும் அவமரியாதை, ஒரு கல்லில் இரண்டு மாங்காய் செய்தவர்கள் பலே ஆட்கள்தான்.
என்று இன்று வெளிவந்துள்ள ‘துக்ளக்‘கில்
எழுதி இருக்கிறார்.
பெரியார் சிலைக்கு காவி பூசினால் அது காவிக் குத்தான் அவமரியாதை என்று சொல்லுவதன்மூலம் காவியைப் பூசியவர்களைவிட, இந்தக் குரு மூர்த்தியின் இந்தப் பதில்மூலம் தந்தை பெரியாரை மிகவும் கேவலமாக அவமதிக்கும் குற்றத்தைச் செய்திருக்கிறாரா இல்லையா?
பெரியார் சிலைக்குக் காவி பூசியவர்கள் பலே ஆட்கள்தான் என்று பாராட்டியும் உள்ளார்.
பெரியார் சிலைமீது காவிச்சாயம் பூசியவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட் டுள்ளார்.
அப்படியென்றால், பெரியார் சிலைமீது காவிச் சாயம் பூசியது சரிதான் என்று பாராட்டியும் வரவேற்றும் எழுதியுள்ள குருமூர்த்தி குற்றவாளியில்லையா?
அந்த தேசியப் பாதுகாப்புச் சட்டமோ, குண்டர் சட்டமோ இந்த குருமூர்த்திகளின்மீது பாய வேண் டாமா - பாய்வதில் என்ன சிக்கல்-என்ன தயக்கம்?
அதோடு குருமூர்த்திகள் நின்றுவிடவில்லை. அதேபோல பாண்டிச்சேரியில் எம்.ஜி.ஆர். சிலைக்குக் காவித் துண்டு அணிவித்ததையும் வரவேற்று எழுதியிருக்கிறார்.
குருமூர்த்தி இன்று வெளிவந்த அதே துக்ளக்கில்.
கேள்வி: பாண்டிச்சேரியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு அணிவித்து அவமானம் செய்துள் ளார்களே?
பதில்: கருணாநிதியின் அடையாளமான மஞ்சள் துண்டு போட்டால் மட்டுமே எம்.ஜி.ஆருக்கு அவ மானம், காவி போட்டால் அல்ல. காவி கட்டி படங் களில் அவர் நடித்திருக்கிறாரே?
(‘துக்ளக்‘ 12.8.2020).
புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித் துண்டு அணிவித்தது குறித்து, துணை முதல் அமைச் சர் ஓ.பன்னீர் செல்வம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். ‘ஓட்டு அரசியலுக்காக மத அடை யாளத்தைப் பயன்படுத்தக் கூடாது’ என்று எச்சரித்
தும் இருந்தார்.
‘அதே போல முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ் ஒரு விவாத நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அவமதிப்பு நேர்ந்து விட்டதாகப் பேசிய போது ‘அதிமுகவினர் வீதியில் இறங்கி விட்டால் பா.ஜ.க.வினர் யாரும் தெருவில் நடமாட முடியாது’ என்று கூறி அதிர வைத்தார். இவரது இந்தக் கருத்தால் நாங்கள் மிரளப் போவதில்லை. ஆனால் அதிமுகவில் ஒரு கட்டுப்பாடு இருப்பதாகவே தெரியவில்லை’ என்று ஒரு முழு பக்கக் கட்டுரையும் எழுதப் பட்டுள்ளது.
தந்தை பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகள் அவமதிக்கப்படுவதுபற்றி பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன என்று தெளிவாகி விட்டது.
அதிமுக அரசு இப்பொழுது என்ன செய்யப் போகிறது? எம்.ஜி.ஆரை அவமதித்தாலும் கவலை இல்லை என்ற நிலையை எடுக்கப் போகிறதா?
தொடர்ந்து திராவிட இயக்கத் தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப்படுவதற்கு குருமூர்த்தி போன்றவர்கள் தூபம் போடுவதும், சபாஷ் போடுவதும், உற்சாகம் மூட்டுவதும் தான் காரணம்.
குற்றம் செய்பவரைவிட அதற்கு மூலமாக இருந்து துணைபோவோர்தான் மோசமான குற்றவாளி.
குற்றவாளி குருமூர்த்திமீது சட்டம் பாயுமா? முக்கியமான ஆசாமிகள்மீது சட்டம் பாய்ந்தால் தான் சில்லுண்டிகளின் செயல்பாடுகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி ஏற்படும்.
அதிமுக அரசு என்ன செய்யப் போகிறது?
- கருஞ்சட்டை
No comments:
Post a Comment