சதீஷ் ஜார்கோளி கருநாடக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர். பெலகாவியைச் சேர்ந்தவர்.
சுடுகாடு/இடுகாடுகள் குறித்து மக்கள் கொண்டுள்ள மூடநம்பிக்கைகளைத் தகர்க்க விரும்பிய அவர், கடந்த ஜூலை 13 திங்கள் கிழமை அன்று, தான் புதிதாக வாங்கிய ‘டொயொடா ஃபார்ச்சுனர்’ காரை நேரே ஒரு சுடுகாட்டுக்கு ஓட்டிச் சென்றார். தன் ஆதரவாளர்கள் பலரையும் அழைத்துச் சென்றுள்ளார்.
சுடுகாடு/ இடுகாடு என்பனவும் மற்ற இடங்களைப் போல ஓர் இடம்தான் என்பதை மக்களுக்கு எடுத்துக் காட்டவே இப்படிச் செய்ததாக அவர் கூறினார்.
மக்களின் மூடநம்பிக்கைகளை உடைக்கும் பொருட்டும், அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் பொருட்டும் இவர் கடந்த ஆண்டு சுடுகாடு ஒன்றில், ஓர் இரவு தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தகது.
அதுமட்டுமல்லாமல், சந்திர, சூரிய மறைப்பு நிகழ்வுகளின் போது சுடுகாட்டுக்குச் சென்று சமையல் செய்தும் சாப்பிட்டவர் இவர்.
ஆனால், வண்டியைச் சுடுகாட்டுக்கு ஓட்டிச் சென்றதுடன் நின்றிருந்தால் 100க்கு 100 பாராட்டி இருக்கலாம்.
வேடிக்கை என்னவென்றால், அந்த வண்டியைச் சுடுகாட்டில் நிறுத்தி, பைஜாரிகா மடாதிபதி பசவராஜ் பண்டிட் தலைமையில் 10 பார்ப்பனர்களைக் கொண்டு சிறப்புப் பூசை நடத்தியுள்ளார்.
சுடுகாடு குறித்த மூடநம்பிக்கைகளை ஒழிக்க நினைத்த ஜார்கோளிக்கு, புதிதாக வாங்கிய காருக்குப் பூசை எதுவும் தேவையில்லை என்பது தெரியாமல் போனது ஏனோ புரியவில்லை.
அது மட்டுமல்லாமல், ஒரு புதிய வண்டியை விற்பனையகத்தை விட்டு எடுக்கும்போது, விற்பனைக் கூட ஊழியர்கள் பூசை போட்டுத்தான் அனுப்புகின்றனர். ஆயினும், நம் மக்கள் பலர், வீட்டுக்கு வரும் வழியிலேயே ஏதாவது ஒரு கோயிலில் நிறுத்திப் பூசை போடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். மூ டநம்பிக்கைகளுக்கு எதிரான ஜார்கோளியும் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். அதுவும் எப்படி?
ஒரு மடாதிபதி தலைமையில் பத்து பார்ப்பனர்களைக் கொண்டு!!!
முடை நாற்றத்தில் ஒன்றைப் போக்கி, மற்றவற்றைத் தக்க வைத்துக்கொள்ளும் போக்குப் புலனாகிறது.
- முத்துச் செல்வன்,
பெங்களூரு.
No comments:
Post a Comment