எதிர்ப்பது ஏன்?
செய்தி: இத்தனை ஆண்டுகளில் முதல் முறையாக விவசாயிகள் பயன் அடைவதற்கு புதிய சட்டங்கள் - பிரதமர் மோடி.
அப்படியெனில் பா.ஜ.க. தொழிற்சங்கமான பாரதீய மஸ்தூர் சங்கம் ஏன் எதிர்க்கிறது?
வழங்கி விட்டால்....
செய்தி: ரஃபேல் போர் விமான தொழில் நுட்பத்தை இந்தியாவில் அந்நிறுவனம் வழங்கவில்லை.
தொழில் நுட்பத்தை வழங்கி விட்டால், தொடர்ந்து வியாபாரம் செய்ய முடியாதே. 'நான் உமி கொண்டு வாரேன் நீ நொய் கொண்டு வா. ஊதி ஊதித் தின்போம்!' என்ற கதைதான் போலும்!
பாதிப்பு யாருக்கு?
செய்தி: அக்டோபர் முதல் ரேஷன் கடைகளில் மண் எண்ணெய் விலை உயர்வு - தமிழ்நாடு அரசு உத்தரவு.
இதனால் பாதிக்கப்பட போவது பணக்காரர்களும், மாடி வீட்டுக்காரர்களும்தான் - கண்டிப்பாகக் குடிசைப் பகுதி மக்கள் அல்ல - இதனை நம்பித் தொலையுங்கள்!
எல்லாம் அவாள் மயமே!
செய்தி: இந்தியப் பத்திரிகையாளர் சங்கத்துக்கு - கோவை 'தினமலர்' வெளியீட்டாளர் ஆதிமூலம் தேர்வு.
அகில இந்திய அளவில் ஊடகத் துறையில் மதவாத பிஜேபிக்கு எதிரான ஊடகவியலாளரை வெளியேற்றியாகி விட்டது. இப்பொழுது ஊடக சங்கத்துக்கு அகில இந்தியத் தலைவராக 'தினமலர்க்காரர்' நாடு எங்கே போகிறது? புரிந்து கொள்ளுங்கள்.
கருநாடகாவில் வெள்ளம் வரட்டும்!
செய்தி: தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை உடனடியாக வழங்க வேண்டும். - தமிழ்நாடு அரசு கோரிக்கை
கருநாடகத்தில் கடுமழை பொழிந்து, இனி கருநாடக அணை தாங்காது என்ற நிலையில் வடிகாலாக தமிழ் நாட்டுக்கும் தண்ணீர் கிடைக்கும் - அவசரப்பட வேண்டாம் - வேளாளண் சட்டங்கள் வருகின்றன. விவசாயிகளின் கண்களைக் கடப்பாரை போட்டுத் துடைக்கும். ஆறுதல் பெறுக!
ஞானோதயமோ!
செய்தி: 'நீட்' தொடர்பாக மெடிக்கல் கவுன்சில் எந்த முடிவையும் எடுக்க முடியாது. மத்திய அரசுதான் முடிவு செய்யும். உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் மருத்துவக் கவுன்சில் வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தில் தகவல்.
'நீட்'டைக் கொண்டு வந்த போது இந்தப் புத்தி எங்கே போனதாம்?
முசுலீம் நாடு முந்துகிறது
செய்தி: அய்க்கிய அரபு அமீரகத்தில் ஆண் - பெண் இருவருக்கும் சம ஊதியம்.
விவசாயத் தொழிலில் ஆண்- பெண்களுக்கிடையே ஊதிய வேறுபாடு கூடாது என்று திராவிட விவசாய சங்கம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வந்தும் இங்கு செயல்பாட்டுக்கு வரவில்லை. அனேக துறைகளிலும் இந்த நிலைதான்! 'இந்து'யாவில் இது நடக்குமா?
No comments:
Post a Comment