அந்தோ, பெரியார் மணியம்மை பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் டாக்டர் நல்.இராமச்சந்திரன் (வயது 60) அவர்கள், தஞ்சையில் இன்று (13.9.2020) பகல் ஒரு மணியளவில் உடல்நலக் குறைவினால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு, மிகவும் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்தோம்.
கடந்த சில நாள்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், எப்படியும் நலம்பெற்று திரும்புவார் என்று நம்பிக்கையுடன் தொடர்ந்து நலம் விசாரித்து வந்தோம்!
அன்பும், பாசமும் நிறைந்த நம் குடும்ப உறுப்பினராகத் திகழ்ந்த ஒரு சகோதரரை இழந்த நிலையில், எப்படி இரங்கல் எழுதுவது நமக்கு யார் ஆறுதல் கூறுவது என்ற வேதனையுடன் எழுத முடியாமல், கண்ணீர் நம் கண்களை மறைக்கிறது!
உழைப்பும், அறிவும், ஆற்றலும் உள்ளவராக உயர்ந்த அவரை, நமது பெரியார் கல்வி நிறுவனம் நன்றாக செதுக்கி வளர்த்தது; என்றும் நம் வீட்டுப் பிள்ளையாக இருந்த அவரை இயற்கையின் கோணல் புத்தி இப்படி திடீர் மின்னல் கண்களைப் பறித்ததுபோல ஆக்கிவிட்டதே!
என்ன செய்வது - எது தவிர்க்கப்படாமல் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது இயற்கை நியதியோ, அதை ஏற்றும்கூட எளிதில் நம்மால் ஆறுதல் அடைய முடியவில்லையே! கொடுமை! கொடுமையிலும் கொடுமை!!
அவரை இழந்து வாடும் திருமதி பர்வீன் அவர்களுக்கும், அவரது சகோதரர்கள் நல்.பரமசிவம் உள்பட பல சகோதரர்கள், சகோதரிகள், குடும்ப உறுப்பினர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும் கூறுகிறோம் - வேதனையுடன்!
நமது கல்விக் குடும்பம் - கொள்கைக் குடும்பம் இப்படி ஒரு கொடுமைக்கு ஆளாவதா? நமது வீரவணக்கம்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
13.9.2020
No comments:
Post a Comment