செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 7, 2020

செய்தியும், சிந்தனையும்....!

அறிவுறுத்தல்...


மாணவர்களை இணைய வழிவகுப்பில் பங்கேற்கக் கட்டாயப்படுத்தக் கூடாது. - பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்.


தொடக்கப்பள்ளிப் பிள்ளைகளைக் கூடக் கட்டாயப்படுத்தும் நிலை தொடரத்தான் செய்கிறது - அவர்களால் காணொலியில் பல மணிநேரம் ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்க முடியுமா என்பது உளவியல் ரீதியான கேள்வி.


வேளாங்கண்ணி


பெரிய தேர்?


வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா இன்று பெரிய தேர் பவனி - பக்தர்களுக்கு அனுமதியில்லை.


எந்த மதக் கடவுளின் அருளாலும், சக்தியாலும் கரோனாவைத் தடுக்க முடியாது என்பது உண்மை. வேளாங்கண்ணி கோவில் பாதிரியார்கள், பக்தர்கள்கூட அனுமதி தேவை என்று எந்த நீதிமன்றத்திற்கும் செல்லவில்லை. பிள்ளையார் பக்தர்கள் சிந்திக்கட்டும்!


‘மன் கி பாத்' இதுதானோ!


கர்ப்பிணி மனைவியை ஆசிரியப் பயிற்சி தேர்வு எழுதுவதற்காக 1200 கி.மீ. தூரம் ஸ்கூட்டரில் அழைத்துச் சென்ற கணவர் - இது ஜார்க்கண்டில்.


பழங்குடியினரின் பரிதாப நிலை இதுதான். 'மன் கி பாத்' - பிரதமருக்கு இது காணிக்கை!


இரண்டாம் பரிசோ!


கரோனா: 64 லட்சம் பேருடன் அமெரிக்கா முதலிடம். 41.60 லட்சம் பேருடன் இந்தியாவுக்கு உலகில் இரண்டாம் இடம்.


முதலில் சீனாவில் தொடங்கியது - பேரழிவாகக் காணப்பட்டது. ஆனால், முதல் 10 இடங்களில்கூட இல்லாமல், அங்குக் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், இந்தியாவிலோ நாளும் பெருகி வருகிறது - ஒருக்கால் அமெரிக்கா முதலிடம் - இந்தியா இரண்டாம் இடம் - இது சாதனையல்லவா என்று சொல்லப் போகிறார்களோ, என்னவோ!


''அதிகாரப் போதை!''


பெங்களூரு போதைப் பொருள் விற்பனை வழக்கில் ஓட்டல் அதிபர், பா.ஜ.க. நிர்வாகி உள்பட 15 பேர் கைது!


இதுபோன்ற பிரச்சினைகளில் அண்மைக்காலமாக பா.ஜ.க. பிரமுகர்கள் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது. அதிகாரம் என்பதுகூட ஒரு வகையான ''போதை வஸ்து''தானே!


அபச்சாரம்!


அபச்சாரம்!


காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.


எல்லாம் வல்ல (?) வரதராஜப் பெருமாள் கோவிலில் பேண்ட், ஷூட் அணிந்த ஓர் அய்.ஏ.எஸ். அதிகாரி ஆய்வு செய்வதா? அபச்சாரம்! அபச்சாரம்!! என்பாளே!


((அங்குதான் அக்கோவில் மேலாளர் சங்கரராமன் வெட்டிக் கொல்லப்பட்டதை மறப்பீர்களாக!)


தவிர்க்க முடியாதது!


கடைவீதிகளில் மக்கள் திரள் அதிகம்.


ஊரடங்கைத் தளர்த்தினால் இது தவிர்க்க முடியாதுதான். பேருந்துகள் இன்றுமுதல் தமிழகம் முழுவதும் தொடக்கம் என்பதால், மக்கள் நெருக்கம், புழக்கம் அதிகரிக்கவே செய்யும். கரோனா கவ்விப் பிடிக்க வாய்ப்புகளும் அதிகம். இதில் பொது மக்களுக்கும் பொறுப்பு இருக்கிறது - குறைந்தபட்சம் முகக்கவசம் அணிவதில் என்ன தயக்கம்?


No comments:

Post a Comment