செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 30, 2020

செய்தியும், சிந்தனையும்....!

முடியைப் பிய்த்துக் கொள்ளலாம் போலிருக்கு!


முதலில் வரும் தடுப்பூசி சரியான பலன் தராது: - நிபுணர்கள் எச்சரிக்கை


எல்லாவற்றையும் தீர சிந்தித்து, ஆய்வு செய்து ஒரு சரியான முடிவைச் சொல்லக் கூடாதா? கரோனா தொற்று மற்றும் தடுப்பூசிபற்றி வரும் பல்வேறு முரண்பட்ட தகவல்களைப் படிக்கும் பொதுமக்கள் முடியைப் பிய்த்துக் கொள்ளாததுதான் பாக்கி!


‘கூடுதல் தகுதியே!'


மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சண்முகம் சுப்பையாபற்றி சர்ச்சை எழுந்துள்ளது.


ஏற்கெனவே பெண் சீண்டல்பற்றிய புகார்மீது  - தலைவர்களும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். பா.ஜ.க. ஆட்சியில் இது எல்லாம் கூடுதல் தகுதி என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உண்டே!


தேவையற்ற அச்சம்!


சென்னை புதுவண்ணையில் பிரசவவலிக்குப் பயந்து கர்ப்பிணி தீக்குளித்துச் சாவு!


இந்த 2020-லுமா? வீட்டில் உள்ளவர்கள் கர்ப்பிணிப் பெண்களிடம் மனம் விட்டுப் பேசவேண்டும். ஒரு காலம் இருந்தது - கர்ப்பிணிப் பெண்களைப்பற்றிச் சொல்லும்போது, சாவைத் தலையில் வைத்துக் கொண்டு இருக்கா(ள்) என்பார்கள்.


இப்பொழுது அந்த நிலை இல்லையே!


மனம் விட்டுப் பேசுங்கள் - தயவு செய்து - ஓருயிர் அல்ல - ஈருயிர் அல்லவா தீயில் கருகியிருக்கிறது.


நலப் பணியிலும் அரசியலா?


சென்னையில் ரூ.5 ஆயிரம் கோடியில் புதிய இரண்டு அடுக்கு மேம்பாலம்: - மத்திய அமைச்சர் அறிவிப்பு


சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை அமைக்கப்படும் இந்த மேம்பாலம்- பணிகள் தொடங்கப்பட்டு, தூண்களும் நிறுவப்பட்டு, ஆங்காங்கே அரைகுறையாகப் பழுதுபட்டு நிற்கிறது பல்லாண்டுகளாக! ஏனிந்த முடக்கம்? அரசியல்தானே! மக்கள் நலப் பணியில் அரசியல் என்பது ஆபத்தானதே! எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், மறக்கவேண்டாம்!


மூன்றாவது பாலினம்!


திருநங்கைகள்மீது தொடர்ந்து நடைபெறும் படுகொலைகளைக் கண்டித்து திருநங்கைகள் சென்னை சேப்பாக்கம் அருகில் ஆர்ப்பாட்டம்.


மூன்றாவது பாலினம் என்று கூறப்படும் - முத்தமிழ் அறிஞர் கலைஞரால்  திருநங்கைகள் என்று பெயர் சூட்டப்பட்ட அவர்கள் மனிதரில் ஓர் அங்கம் - அவர்கள்மீதான படுகொலைகள் அதிகரிப்பு மனிதன் மிருகமாகிறானோ என்று நினைக்கத் தோன்றுகிறது.


மீண்டு(ம்) வருகிறதா?


இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருகிறது: - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்


பொருளாதார வீழ்ச்சி மீண்டும் வருகிறதா - மீண்டு வருகிறதா?


தகுதி - திறமை?


'ஆரோக்கிய சேது' செயலியை உருவாக்கியது யார்? என்று தெரியவில்லை: - மத்திய அரசு விளக்கம்


கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசால் உருவாக்கப்பட்டதுதான் இந்த செயலி. ஆனால், இதனை உருவாக்கியது யார் என்று மத்திய அரசுக்கே தெரியாதாம் - ஆனால், தகுதி- திறமைபற்றிப் பேசும் இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்களின் தகுதியைத் தெரிந்துகொள்ள இதுபோதும்!


அவ்வளவு சுலபம் இல்லை!


கடலுக்கு அடியில் குமரிக் கண்டம் குறித்து அகழாய்வு நடத்தப்படுமா?: - மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு


நடந்தால் நல்லதுதான். பூமிக்கு அடியில் நடத்தப்படும் அகழ் ஆய்வே அந்தரத்தில் தொங்குகிறது... அதில் ஆயிரம் ஆரிய அரசியல்! இதில் கடலுக்கு அடியிலா - அவ்வளவு சுலபத்தில் விட்டு விடுவார்களா?


வாலைப் பிடிக்க வேண்டாம்!


வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் தொடங்கியது.


இயற்கையில் கிடைக்கும் இந்த மழைநீர் வீணாகக் கடலில் கலக்காமல் சேமித்து வைக்க வழி செய்யுங்கள்!


தும்பை விட்டு வாலைப் பிடிக்கவேண்டாம்!


பேச நா இரண்டுடையார்!


நீதிபதிகள் பலர் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியில் சேர்ந்திருப்பதாக தரமற்ற வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் தகவல் பரிமாறப்படுகிறது- இதற்கு நீதிபதிகள் கண்டனம்.


ஜாதியின் அடிப்படையில் தொழில் என்கிற பிறப்பின் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்த கூட்டம்தான் இட ஒதுக்கீட்டைக் கேலி செய்கிறது. இப்பொழுது 10 சதவிகித இட ஒதுக்கீட்டையும் (EWS) அனுபவித்துக் கொண்டும் உள்ளது - 'பேச நா இரண்டுடையாய் போற்றி' என்று அண்ணா சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.


No comments:

Post a Comment