மக்கள் மன்றம் மறந்துவிடும் என்ற நினைப்பு வேண்டாம்; மக்கள் மன்றம் தீர்ப்பு அளிக்கும் காலம் நெருங்குகிறது - எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 28, 2020

மக்கள் மன்றம் மறந்துவிடும் என்ற நினைப்பு வேண்டாம்; மக்கள் மன்றம் தீர்ப்பு அளிக்கும் காலம் நெருங்குகிறது - எச்சரிக்கை!

* மாநில அரசின் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை தமிழக ஆளுநர் கடைப்பிடிக்காதது ஏன்?


* மத்திய பி.ஜே.பி. அரசின் சமூகநீதிக்கு விரோத நிலைப்பாடே மூலகாரணம்!



ஒரு மாநில அரசு மசோதாவை நிறைவேற்றினால், அதற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் கடைப்பிடிக்க வேண்டிய முறையான வழிமுறைகளை 7.5 சதவிகித இட ஒதுக்கீடு விடயத்தில் தமிழக ஆளுநர் கடைப்பிடிக்கவில்லை - இதற்கு மூலகாரணம் மத்திய அரசின் சமூகநீதிக்கு எதிரான நிலைப் பாடே! இவற்றையெல்லாம் மக்கள் மறந்து விடுவர் என்று எண்ணவேண்டாம் - மக்கள் தீர்ப்பு அளிக்கும் காலம் நெருங் குகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.


அவரது அறிக்கை வருமாறு:


‘நீட்' தேர்வினால், தமிழக அரசுப் பள்ளிகளில் படித்து ‘நீட்'தேர்வு எழுதும் மாணவர்களுக்குக் கிடைக்கும் இடம் ஒரு சதவிகிதம்கூட இல்லை என்ற கொடு மையான நிலையை சுட்டிக்காட்டி நாமும், பலரும் தொடர்ந்து எழுதிவரும் நிலையில், ‘நீட்' தேர்வு எழுதும் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு தரும் வகையில் ஏற்பாடு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி ஜஸ்டீஸ் திரு.கலையரசன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு - ஆராய்ந்து 10 சதவிகித இட ஒதுக்கீடு தரலாம் என்று பரிந்துரை செய்துள்ளதை அமைச்சரவை ஏற்ற நிலையில், அதையும் அப்படியே செயல்படுத்தத் தயங்கி (என்ன காரணத்தால்... புரியாத புதிர்?) வெறும் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க வழி செய்யும் ஒரு தனி சட்டம் கொண்டுவர, கடந்த செப்டம்பர் மாதம் சட்டமன்றத்தில் மசோதாவாகக் கொண்டு வந்து நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதல் (Assent) பெற, முறைப்படி அனுப்பி ஏறத்தாழ இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இதற்கு ஒப்புதல் தராமல் - ‘நீட்' தேர்வு முடிவுகள் வெளியாகி, கலந்தாய்வு தொடங்கவேண்டிய காலகட்டம் நெருங்கி விட்ட நிலையில், முதல்வரும், அமைச்சர்களும், பிறகு அய்ந்து அமைச் சர்களும் தனியே சந்தித்தும்கூட, வற் புறுத்தியும்கூட அம்மசோதாவிற்கு ஒப்புதல் தராமல் உள்ளார்!


கண்டனத்திற்குரிய ஒன்று!


எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், ‘‘அதற்கு ஒப்புதல் அளிக்க மேலும் சில வாரங்கள் ஆகும். இதை அமைச்சர்களிடம் தெளிவுபடுத்தி ஏற்கெனவே கூறியுள்ளேன்'' என்று பதில் எழுதியதன்மூலம்தான், அமைச்சர்கள், தேவையின்றி அதனை மறைத்து, ‘‘விரைவில் ஒப்புதல் தருவார், தருவார்'' என்று, முன்பு ‘நீட்' தேர்வு மசோதாவை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பிய செய்தியை மறைத்துவிட்டு, பிறகு உயர்நீதி மன்றம்மூலமே அது வெளிப்பட்ட நிலை போல, இதிலும் ஏற்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியதாகும்!


எதிலும் இரட்டை வேடம்! இரட்டைக் குரல்!!


எதிலும் இரட்டை வேடம்! இரட்டைக் குரல்!! இந்நிலைதானா  எதற்கும் என்று எதிர்க்கட்சியினர் உள்பட பலரும் கேள்வி எழுப்பும் நிலையை, ஆளுங்கட்சியினர் தங்களது நடத்தையின்மூலம் உருவாக்கிக் கொண்டனர்!


உறுதியான நிலைப்பாடு என்பது இருந்தால், இப்படி ஒரு ‘இரண்டும் கெட்ட நிலை' ஏற்படுமா? இது ஒருபுறம் -


இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 200 ஆவது பிரிவின்படி, ஒரு மாநில ஆளுநர் அந்த மாநில அரசு மசோதாக்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு (Assent) அனுப்பி விட்ட பிறகு - அது நிதிபற்றிய மசோதாவாக (Money Bills) இல்லையென்றால், என்ன செய்யவேண்டும் என்பதை அரசமைப்புச் சட்டப் பிரிவு 200 (Article 200) தெளிவாக விளக்குகிறது.


எந்த சட்டத் தடையும் இல்லை!


நான்கு வழிமுறைகள் ஆளுநருக்கு உண்டு.



  1. ஒப்புதல் அளிப்பது

  2. ஒப்புதலை மறுப்பது - நிறுத்துவது

  3. குடியரசுத் தலைவர் ஆய்வுக்கு அனுப்புதல்

  4. அம்மசோதாவை தனது கருத்துரை யுடன் மறுபரிசீலனை செய்ய திருப்பி அனுப்புவது


இதில் ஆழமாகப் பரிசீலித்து முடி வெடுக்க இத்துணை மாதங்கள் எடுத்துக் கொள்ள எந்த சட்டத் தேவையும் இல்லை.


ஆளுநருக்குப் போதிய சட்ட வெளிச்சத்தைத் தரக்கூடிய ஒன்று!


ஏற்கெனவே உள் ஒதுக்கீடு சமூகநீதியில் கொடுப்பதற்கு மாநில அரசுக்கு உரிமை உண்டு. உச்சநீதிமன்ற அரசமைப்புச் சட்ட அமர்வின் 5 நீதிபதிகளின் தீர்ப்புகள் வந்துள்ளன. தமிழக அரசு செய்த உள் ஒதுக்கீடு செல்லும் என்றும் தீர்ப்பு வெளி வந்துள்ளது ஆளுநருக்குப் போதிய சட்ட வெளிச்சத்தைத் தரக்கூடிய ஒன்று!


பின் எதற்காக தயக்கம்?


ஏழை, எளியவர்களின்


கல்வி வாழ்வு


இப்படியா பந்தாடப்படுவது?


‘நீட்' தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்கள், பெற்றோர்கள் மனநிலை கொதி நிலையில் - மிகப்பெரிய மன அழுத்தத்திற்கு ஆளாகிய நிலை ஒருபுறம்; சென்னை உயர்நீதிமன்ற நீதிபகளே, கண்ணீர் விட்டு இந்த ஏழை, எளியவர்களின் கல்வி வாழ்வு இப்படியா பந்தாடப்படுவது என்ற வேதனை நிறைந்த கேள்வி.


அதற்குப் பிறகும் ஆளுநர் அசைய வில்லை - தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுத்தும், ஆளுநர் நிலைப்பாடு கேளாக்காதாகவே தொடரும் அவலம்!


மத்திய அரசின் நிலைப்பாடுதான் இதற்கு மூல காரணம் என்பதை யாராலும் ஊகிக்க முடியும் -அதன் சமூகநீதிக்கு விரோதமான போக்கு உச்சநீதிமன்ற வழக்கில் அப்பட்டமாக வெளியாகிவிட்டது!


அரசமைப்புச் சட்டம், மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு ஜனநாயக மக்களாட்சி அரசின் மசோதா இப்படி ஊறுகாய் ஜாடியில் ஊறிக் கிடந்து, இப்படியா மாணவர் - பெற்றோருக்கு இரத்தக் கொதிப்பை ஏற்படுத்துவது?


மக்கள் மன்றம் மறந்துவிடும் என்ற நினைப்பு வேண்டாம்!


இந்தக் கொடுமைக்கும், இரட்டை வேடம் போடுவோரையும் அதற்குக் காரணமானவர்களையும் மக்கள் மன்றம் மறந்துவிடும் என்ற நினைப்பு ஒருபோதும் வேண்டாம்!


அரசமைப்புச் சட்ட உரிமை, மாநில உரிமை எல்லாம் காற்றில் பறக்கிறது தமிழ்நாட்டில் - குட்டக் குட்டக் குனிந்து கொடுக்கும் கொடுமை எவ்வளவு காலம் நீடிப்பது?


ஓர் அணியில் நின்று போராட ஆயத்தமாவீர்!


மக்கள் மன்றம்தான் இதற்கு தீர்ப்பளிக்க வேண்டிய கட்டம் நெருங்குகிறது!


ஒத்தக் கருத்துள்ளோரே, ஒதுங்கி நிற்காதீர் -


ஓர் அணியில் நின்று போராட ஆயத்தமாவீர்!


 


கி.வீரமணி


தலைவர்,


திராவிடர் கழகம்.


சென்னை


28.10.2020


No comments:

Post a Comment