கா(வி)லிகளின் கழிசடைத்தனம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 27, 2020

கா(வி)லிகளின் கழிசடைத்தனம்!

பங்காருபுரம் சமத்துவபுரத்தில் தந்தை பெரியார் சிலை மீது காவிச்சாயம் ஊற்றி அவமதிப்பு



திண்டுக்கல், அக்.27 தமிழகத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்த சங்-பரிவார் மற்றும் இந்துத்வா கும்பல்கள் முயற்சித்து வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் இந்துத்வா கும்பல்கள் தலைத்தூக்க முடியாததற்கு மிக முக்கிய காரணமாக தந்தை பெரியார் விளங்குகிறார்.


இதனால், தந்தை பெரியார் அவர்களின் உருவச் சிலைகள்  தாக்கப்படுவதும், சிதைக்கப்படுவதும், இழிவு செய்யப்படுவதும் தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது. நாடே போற்றும் தலைவரின் சிலையைச் சேதப்படுத்தி அதில் ஆனந்தம் அடையும் அற்ப நடவடிக்கை தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் தொடர்கதையாகியுள்ளது.


திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் பங்காருபுரம் சமத்துவபுரத்தில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்றி, சில நபர்கள் அவமரியாதை செய்துள்ளனர்.


பங்காருபுரம் சமத்துவபுரத்தில், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சிலை உள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் இரவு இரவு 11 மணியளவில், பெரியார் சிலையின் மீது சில சமூக விரோதிகள் காவிச் சாயத்தை ஊற்றி, அவமரியாதை செய்துள்ளனர்.


இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கழகத் தோழர்கள், அந்த காவிச் சாயங் களை அகற்றி தந்தை பெரியார் சிலையை தூய்மைப்படுத்தினர். நிகழ்விடத்திற்குவந்த வந்த பழனி சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் அய்.பி.செந்தில் குமார் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


இதனையடுத்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், பெரியார் சிலை மீது செய்யப்பட்ட அவமரியாதைக்கு தனது கண்டனங்களைப் பதிவு செய்தார். மேலும், தந்தை பெரியார் சிலையை அவமரியாதை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என காவல்துறையினரிடம்  புகார் அளித்தார்.


சில நாட்களுக்கு முன்புகோவை சுந்தராபுரம் பகுதியில், திராவிடர் கழகம் நிறுவிய தந்தை பெரியார் சிலை மீது காவி சாயத்தைப் பூசி சில சமூக விரோத சக்திகள் இழிவு செய்தன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள பெரியார் சிலை மீதும் காவி சாயம் பூசி, செருப்பு மாலை அணிவித்து அவமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


No comments:

Post a Comment