தந்தை பெரியார் அவர்களின் 142 ஆம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவர் சிறப்புரை
சென்னை, அக். 12- இன்றைக்கு இளைஞர்கள், பெரியார் தான் தங்களுடைய தீர்வு - பெரியார்தான் தங்களுடைய ஆயுதம் - பெரியாருக்குப் பின் பல ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்து வளர்ந்த இளைஞர்கள் பெரியாரைத் தத்துவமாகப் பார்க்கிறார்கள். பெரியார் தந்த அறிவுச்சுடர் - அணையாத அறிவுச்சுடராக அவர்கள் தூக்கிப் பிடிக்கிறார்கள்
என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
பிறந்த நாள் விழா
செப்டம்பர் 17 ஆம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 142 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் காணொலி வாயிலாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய சிறப்பு வாய்ந்த அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய 142 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா என்ற சிறப்பான கொள்கை விளக்கப் பிரச்சார இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மிகச்சிறப்பான ஒரு தொடக்க உரையை நிகழ்த் திய கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதியும், எந்நாளும் சமூக நீதிப் போராளியாகவும் இருக்கக்கூடிய அய்யா ஜஸ்டிஸ் அரிபரந்தாமன் அவர்களே,
அதுபோல, சிறப்பான வகையில், ஆழமான கருத்து களை எடுத்து வைத்த, மாநில அரசின் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவரும், உண்மைகளைத் தவறாமல் மறைக்காமல் சமூகநீதிக் கண்ணோட்டத்தோடு எடுத்துச் சொல்லி உரையாற்றிய அருமை நண்பர் தனவேல் அய்.ஏ.எஸ். அவர்களே,
அதேபோல, நாடாளுமன்றத்தில் சிறப்பாக திராவிடத் தின் குரலை ஒலிக்கக்கூடிய டாக்டர் செந்தில்குமார் அவர்களே,
இந்நிகழ்வில் நம் அனைவரையும் வரவேற்ற திரா விடர் கழக வெளியுறவுச் செயலாளர் அருமைத் தோழர் கருணாநிதி அவர்களே,
நன்றியுரை கூறவிருக்கக்கூடிய கழகப் பொருளாளர் குமரேசன் அவர்களே,
மற்றும் இயக்கத்துப் பெருமக்களே, சான்றோர்களே, கொள்கைக் குடும்பத்தவர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். தந்தை பெரியார் அவர்களுடைய 142 ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆண்டு முழுவதும் பெரியாருக்குப் பிறந்த நாள் விழாக்கள் கொண்டாடுவது உண்டு!
இங்கே கவிஞர் அவர்கள் சொன்னதைப்போல, ஆண்டு முழுவதும் பெரியாருக்குப் பிறந்த நாள் விழாக்கள் கொண்டாடுவது உண்டு. அடுத்த ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி வரையில் கொண்டாடுவது உண்டு.
அப்படிப்பட்ட நேரத்தில், தந்தை பெரியார் அவர்கள், அந்தப் பாராட்டுரைகளையெல்லாம் கேட்டுக்கொண்டு, எவ்வளவு தனித்தன்மையோடு பேசினார்கள் என்பதை யெல்லாம் நினைத்துப் பார்த்தால், ஆச்சரியமாக இருக்கும்.
இரண்டு கருத்துகளை அய்யா சொன்னார்:
ஒன்று, இந்தப் பிறந்த நாள் விழாக் கொண்டாட்டம் ஏன் நடக்கிறது? இதில் நான் கலந்துகொள்கிறேன் என்றால், மகிழ்ச்சியோடுதான் கலந்துகொள்கிறேன்.
பிறக்காத கடவுள்களுக்கெல்லாம் பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள்; ஆனால், பிறந்த எனக்கு, பிறந்த நாள் கொண்டாடுவது ஒன்றும் அதிசயமல்ல.
இராம நவமி என்கிறார்கள், கந்த சஷ்டி என்கிறார்கள், விநாயகர் சதுர்த்தி என்கிறார்கள், கிருஷ்ணனுக்கு ஜெயந்தி என்கிறார்கள், கோகுலாஷ்டமி என்கிறார்கள்.
ஆகவே, கடவுளுக்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை என்று அவர்களே சொல்கிறார்கள். ஆனால், கடவுள் பிறந்தார் என்று முரண்பாடாக சொல்கிறார்கள். பிறக்காத கடவுள்களுக்கு பிறந்த நாள் கொண்டாடு கிறார்கள்.
பிறந்த எனக்கு, பிறந்த நாள் கொண்டாடுவது என்பது நியாயமானதுதானே!
அறிவுக்குச் சுதந்திரம் கொடு என்று
சொன்ன தலைவர் தந்தை பெரியார்
எதற்காக பிறந்த நாள் விழா எனக்குக் கொண்டாடு கிறார்கள் என்றால், என்னைப் புகழ்வதற்கோ, பாராட்டுவ தற்கோ அல்ல. என்னுடைய கொள்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவேண்டும். மக்களை அறியா மையில் இருந்து வெளியே கொண்டுவரவேண்டும்; இருட் டிலிருக்கும் அவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும். அவர்கள் அடிமைகள் அல்ல; அந்த அடிமைத் தனத்திலிருந்து அவர்களை மீட்டு, ஒரு சுதந்திரமான நிலைக்கு அவர்களைக் கொண்டு வரவேண்டும்.
அறிவுக்குச் சுதந்திரம் கொடு என்று சொன்ன தலைவர் தந்தை பெரியார் அவர்கள். அறிவுக்குச் சுதந்திரம் கொடுக் காமல் இருப்பதற்குத்தான், இந்த நாட்டில், மதங்களும், புராணங்களும், கடவுள்களும், பல நம்பிக்கைகளும்.
தந்தை பெரியார் அவர்கள், தன்னுடைய கொள்கையில் கடைசிவரையில் சமரசம் செய்துகொள்ளாத ஒரு தலைவர் என்பது உலகறிந்த ஒன்றாகும்.
இன்றைக்கு இளைஞர்கள், பெரியார்தான் தங்களு டைய தீர்வு - பெரியார்தான் தங்களுடைய ஆயுதம் - பெரியாருக்குப் பின் பல ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்து வளர்ந்த இளைஞர்கள் பெரியாரைத் தத்துவமாகப் பார்க்கிறார்கள். பெரியார் தந்த அறிவுச்சுடர் - அணையாத அறிவுச்சுடராக அவர்கள் தூக்கிப் பிடிக்கிறார்கள்.
பெரியாரை அவர்கள் வெறும் தத்துவமாக மட்டும் பார்க்கவில்லை. பெரியாரை ஒரு போர்க் கருவியாகப் பார்க்கிறார்கள். இதுதான் தந்தை பெரியார் என்ற தத்துவம் வாழுகின்ற தத்துவமாகும்.
இங்கே அய்யா நீதிபதி அவர்களும் சொன்னார்கள்; மற்றவர்களும் சுட்டிக்காட்டினார்கள்.
பெரியார்தான் நமக்குப் பாதுகாப்பு அளிக்கிறவர்!
இன்றைக்கு இன எதிரிகள், பெரியார் வாழ்ந்த காலத்தைவிட - பெரியார் உடலால் மறைந்த பிறகுகூட, அவருடைய சிலையைக் கண்டு ஏன் பயப்படுகிறார்கள்? அந்த பயம் ஏன் இருக்கிறது? அவர்கள் பயப்படுகின்ற காரணத்தினால்தான், ''ஓகோ, பெரியார்தான் நமக்குப் பாதுகாப்பு அளிக்கிறவர்'' என்று இளைஞர்கள் வெகு சுலபமான முடிவிற்கு வந்துவிட்டார்கள்.
நாம் எந்த ஆயுதத்தை எடுப்பது என்பதை எதிரிதான் தீர்மானிக்கிறான். ஆகவே, எதிரி யாரைக் கண்டு பயப்படு கிறான்; எதிரியிடம், எதைச் சொன்னால் அவனுக்கு அச்சுறுத்தல் வருமோ, அவர்தான் பெரியார் என்று இளைஞர்கள் மிக சுலபமாக, அறிவுப்பூர்வமாக அந்தக் கருவியைப் பற்றிக் கொண்டிருக்கின்றார்கள் இன்றைக்கு.
புரட்சிக்கவிஞர் அவர்கள் முன்பே கணித்ததுபோல,
''மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார் பார்!''
என்று சொன்னார் அல்லவா! தொண்டு செய்து பழுத்த பழத்தை அடையாளம் காட்டுகின்ற நேரத்தில், அந்த மண்டைச் சுரப்பைத் தொழுவதற்கு அடையாளம் காட்டு கின்ற நேரத்தில் - மண்டைச் சுரப்பை உலகு தொழுகின்றது என்பதற்கு அடையாளம் - பின்பற்றுவது; தொழுகின்றது என்றால், கும்பிடு போடுவதல்ல. பின்பற்றுகிறது என்று அர்த்தம்.
பெரியார்தான் ஆயுதம்;
பெரியார்தான் போர் ஆயுதம்!
பின்பற்றுகிறது என்பதைத்தாண்டி ஆயுதமாக கைப் பற்றுகிறது, பெரியாரை! ஏனென்றால், பெரியார்தான் போர் ஆயுதம். அந்தப் போர் ஆயுதம் என்பது மிகவும் விசித்திரமானது.
அண்ணா அவர்கள் மிக அழகாக எடுத்துச் சொன்னதைப்போல, ''மூல பலத்தை முறியடிப்பதுதான் பெரியாருடைய போர் முறை'' என்று சொன்னார்.
கண்ணுக்குத் தெரிந்த எதிரியோடு போராடுவதைவிட, கண்ணுக்குத் தெரியாத கிருமிகளோடு போராடுவதுதானே விஞ்ஞானம். எனவே, பெரியார் ஒரு சமூக விஞ்ஞானம். அந்த அடிப்படையில் தந்தை பெரியார் அவர்கள் அவருடைய கொள்கைகளை மிகத் தெளிவாகத் தந்த காரணத்தினால்தான், இன்றைக்கு ஆழமாக இளைஞர்கள் அவரைப் பின்பற்றுகிறார்கள்.
ஒருமுறை திருவாரூரில் அய்யாவினுடைய பிறந்த நாள் விழாவினை நடத்துகிறார்கள். அந்த விழாவில், கவிஞர் கண்ணதாசன், சிவாஜிகணேசன் போன்றவர்கள் பங்கேற்று, தந்தை பெரியார் அவர்களைப் பாராட்டுகிறார் கள்; அய்யாவைப் பெருமிதமாகப் புகழுகிறார்கள். காங் கிரஸ் நண்பர்கள் பாராட்டுகிறார்கள்; மற்ற நண்பர்கள், தலைவர்கள் எல்லாம் பாராட்டுகிறார்கள்.
கடைசியாக அய்யா அவர்கள் ஏற்புரை ஆற்றும் பொழுது, ''நான் எவ்வளவு பேரைக் கண்டித்திருக்கிறேன்; எல்லோரையும் கடுமையாக விமர்சித்திருக்கின்றேன். தாட்சண்யப்படுவதேயில்லை நான்; அப்படிப்பட்ட என்னை இவர்கள் எல்லாம் இப்படிப் புகழுகிறார்களே!
எதிர்ப்புகளைச் சந்தித்துத்தானே பழக்கம்; வசவுகளைக் கேட்டுத்தானே இந்தக் காதுகளுக்குப் பழக்கம்
வழக்கமாக எனக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக செருப்பை வீசுவார்கள்; கல்லை போடுவார்கள்; மலத்தை நிரப்பி கோழி முட்டையை வீசுவார்கள். எனக்கு இதுவரையில் எதிர்ப்புகளைச் சந்தித்துத்தானே பழக்கம்; வசவுகளைக் கேட்டுத்தானே இந்தக் காதுகளுக்குப் பழக்கம். எதிர்ப்புகளைச் சந்திப்பதுதானே என் கண்க ளுக்குப் பழக்கம். அப்படி இருக்கின்றபொழுது, இது போன்ற புகழ் வார்த்தைகளையெல்லாம் கேட்கும்பொழுது, எனக்கு வித்தியாசமாக இருக்கிறது.
என்னை இவ்வளவு பாராட்டுகிறார்களே என்று எண்ணும்போது, எனக்கே, ஒரு சந்தேகம் வந்தது.
இவர்கள் எல்லாம் இவ்வளவு பாராட்டுகிறார்கள் என்றால், ஒருவேளை நாம், நம்முடைய கொள்கைகளி லிருந்து நழுவிவிட்டோமோ? பழைய மாதிரி கொள்கை யில் இல்லையோ? அதன் காரணமாகத்தான் இவர்கள் எல்லாம் இப்படிப் பாராட்டுகிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு உள்ளுக்குள் வந்தது.
கொஞ்ச நேரம் நிதானித்தேன், பிறகுதான் எனக்குப் புரிந்தது. நாம், நம்முடைய கொள்கையிலிருந்து நழுவ வில்லை. நழுவவும் மாட்டோம்; சமரசம் செய்துகொள்ள மாட்டோம்.
அறிவும், சிந்தனையும் வளர்ந்திருக்கிறது!
பிறகு என்ன?
இவர்களுடைய அறிவும், சிந்தனையும் வளர்ந்திருக் கிறது" என்றார் அய்யா அவர்கள்.
இதுபோன்று சொல்லக்கூடிய, உண்மையைப் பேசக் கூடிய தலைவர் தந்தை பெரியார் ஒருவராகத்தான் இருப்பார்.
எனவே, இன்றைக்கு மக்கள் மத்தியில், அவர் உடலால் மறைந்து 47 ஆண்டுகாலம் ஆன பிறகும்கூட, இன்றைக் கும் பெரியார் தேவைப்படுகிறார்; நாளைக்கும் தேவைப் படுவார் - ஏனென்றால், போர்க் கருவிகள் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருக்கும். அந்தப் போர்க் கருவி, படைக்கலன் தந்தை பெரியார் அவர்கள்.
மொழிகூட, அவருடைய கண்ணோட்டத்தில் ஒரு போர்க் கருவி போன்றதுதான். புதுமையாக அவ்வப் பொழுது மாறிக்கொண்டே இருக்கவேண்டும்.
என்னதான், ராமன் கோவிலுக்காகப் போராடி, நீதிமன் றத்திலும் தங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பைப் பெற்று, அதற்கு அடிக்கல் நாட்டக்கூடிய நிகழ்வில், மதச்சார்பின் மையைப்பற்றி கவலைப்படாத பிரதமர் பங்கேற்றாலும்கூட, அண்டை நாடுகள் நம்முடைய எல்லைகளை ஆக்கிர மித்துக் கொண்டிருக்கின்றன என்று, ஒரு பக்கத்தில் லடாக் பகுதியில் போர் மேகம் சூழ்ந்து கொண்டிருக்கிறது என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்தாலும்கூட, ராமன் கையாண்ட, வில்லும், வேலும் இன்றைக்கு நமக்குப் பயன்படாது என்று அவர்களுக்குப் புரிந்த காரணத் தினால்தானே, பிரெஞ்சு நாட்டு ரபேல் விமானங்களை வாங்கியிருக்கிறார்கள். நவீன ஆயுதங்களை, நவீன விஞ்ஞானத்தைத்தானே அவர்கள் பெறவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
ஆகவேதான், சனாதனம் என்ற பெயராலே, ராமன் பக்திக்கு மட்டும்தான் பயன்படுவாரே தவிர, நாட்டின் பாதுகாப்பிற்குப் பயன்படமாட்டார் என்பதை உணர்ந்திருக் கிறார்கள்.
மூலபலத்தை முறியடிக்கின்ற போர் பலம்!
அதுபோலத்தான், நவீன போர்க் கருவிகள் தேவை என்று சொன்னால், பெரியாருடைய அமைப்பு, நவீன போர்க் கருவியாகும். அவருடைய போர் முறை என்பது இருக்கிறதே, மூலபலத்தை முறியடிக்கின்ற போர் பலம் மட்டுமல்ல நண்பர்களே, இன்னும் வேகமாக செல்லக் கூடிய நிலையில் வித்தியாசமானது.
தங்களைத் தாங்களே வருத்திக் கொள்பவர்கள்தான் பெரியார் தொண்டர்கள்!
அந்தப் போர் முறையில், ரத்தம் சிந்தாத அறிவுப் புரட்சியை உண்டாக்குவார். பொதுச் சொத்துக்கு நாசம் உண்டாக்கமாட்டார்; பொது அமைதிக்குப் பங்கம் உண்டாக்க மாட்டார். பின் என்ன என்றால், தங்களைத் தாங்களே வருத்திக் கொள்வார்கள் அவருடைய தொண் டர்கள். இது பெரியாரின் போர் முறையாகும்!
பெரியாருடைய, அந்த ரத்தம் சிந்தாதப் புரட்சி-
ஆயுதம் ஏந்தா புரட்சி -
அறிவு ஆயுதத்தை மட்டுமே ஏந்துகின்ற புரட்சி என்றால், உலகத்தில், இந்தத் தலைவருக்கு, இந்த அணுகுமுறைக்கு ஈடாக எவரையாவது நீங்கள் காட்ட முடியுமா?
இன்னுங்கேட்டால், வேறு எந்தத் தலைவருக்கும் இல்லாத சிறப்பு - அண்ணா அவர்கள் சுட்டிக்காட்டி யதைப்போல,
தன்னுடைய கொள்கை வெற்றியை, அதனுடைய அறுவடையை, அது பூத்துக் காய்த்து, கனிந்ததை, அவரே அந்தப் பழத்தை கையில் எடுத்துச் சுவைத்திருக்கிறார்.
பல நேரங்களில் தோட்டக்காரர்கள், அவர்கள் விளை வித்த கனியைச் சுவைத்ததில்லை. ஆனால், பெரியார் என்ற தோட்டக்காரர், அவருடைய உழைப்பினால் விளைந்த கனியை சுவைத்திருக்கிறார்.
சுயமரியாதைத் திருமணம் என்ற சட்டம் போன்ற எத்தனையோ சட்டங்களைச் சொல்லலாம்.
கடைசிவரையில், போராளியாக நின்றவர், இங்கே சுட்டிக்காட்டியதைப்போல.
ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு என்பது மனித நேயம், மனுதர்மம் என்று சொன்னால், அது தீண்டாமையை வலியுறுத்துவது.
குலதர்மமா? சமதர்மமா?
மனுதர்மமா? மனிதநேயமா?
எனவே, இப்பொழுது தத்துவப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குலதர்மமா? சமதர்மமா? மனுதர்மமா? மனிதநேயமா? அதுதான் சமூகநீதி - அதுதான் நீட் தேர்விற்கு எதிரான போராட்டம். அதனுடைய வடிவங்கள் மாறுகின்றன.
புதிய தேசியக் கல்விக் கொள்கை என்று "பழைய கள் புதிய மொந்தை" என்று சொல்லக்கூடிய - குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கின்றார்கள்.
எனவேதான், வடிவங்கள் மாறினாலும், தத்துவங்களை மிகத் தெளிவாக அடையாளம் கண்டு, தமிழகத்தை, இந்த மண்ணைப் பக்குவப்படுத்தி இருக்கின்ற காரணத்தினால் தான், இன்னமும் அந்த ஆயுதம், முனை மழுங்க முடியாத ஓர் ஆயுதமாக இன்றைக்கு இளைஞர்களின் கைகளில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
- தொடரும்
No comments:
Post a Comment