சட்டப் படிப்புக்கான தகுதித் தேர்வு மதிப்பெண்ணில் குளறுபடி: சட்டப் பல்கலை. கூட்டமைப்பு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 26, 2020

சட்டப் படிப்புக்கான தகுதித் தேர்வு மதிப்பெண்ணில் குளறுபடி: சட்டப் பல்கலை. கூட்டமைப்பு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, அக். 26- சட்டப் படிப்புக்கான தகுதித் தேர்வில் மதிப் பெண் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களின் கூட்டமைப்பு நவ.5க்குள் பதில்அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக ஓசூரை சேர்ந்த பாண்டியராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:


2020-21 ஆண்டுக்கான சட்டப் படிப்புக்காக தேசிய சட்டப் பல்கலைக்கழகம் நடத்திய தகுதித் தேர்வு (க்ளாட்) முடிவுகள் கடந்த அக்.5ஆ-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் என் மகள் சத்யா 67.5 மதிப்பெண்களுடன், தேசிய அளவில் ஓபிசி பிரிவில் 5,744ஆ-வது இடம் பெற்றார். அதன் பிறகு விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்ததில், 68 மதிப்பெண் கிடைத்தது.


அவரைவிட குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய் வுக்கான அழைப்பு வந்தது. ஆனால், என் மகளுக்கு மட்டும் வரவில்லை. இதுபற்றி தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, கலந்தாய்வுக்கான பட்டியல் வெளியிடப்பட்டு விட்டதாக தெரிவித்தனர்.


மீண்டும் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்தபோது, ஒருமுறை 22.75 மதிப்பெண், அடுத்த முறை 23.75 மதிப்பெண் பதிவாகியிருந்தது. விடைத் தாள் நகலை பதிவிறக்கம் செய்தபோது, அதுவும் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இவ்வாறு திடீரென மதிப் பெண்ணில் குளறுபடி நடந்துள்ளது.


இதுதொடர்பாக பெங்களூருவில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்புக்கு கடிதம் எழுதியும், எந்த பலனும் இல்லை. என் மகள் கூடுதல் மதிப்பெண் பெற்றும், சட்டப் படிப்பில் சேரும்வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர் 67.5 மதிப் பெண்கள் பெற்றதாக வெளியிடப்பட்ட முடிவின் அடிப்படை யில், தென்னிந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு தேசிய சட்டப் பல் கலைக் கழகத்தில் அவருக்கு இடம் வழங்க உத்தரவிட வேண்டும்.


இவ்வாறு அதில் கோரியிருந்தார்.


இந்த வழக்கை நீதிபதி சி.சரவணன் விசாரித்தார். இதுதொடர்பாக தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு வரும் நவ. 5-க்குள் பதில் அளிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment